தொகுதி 48 · கடிதம் 3744
பெண் ஆளும் மாநிலத்தில் மண் ஆகும் சட்டம் ஒழுங்கு!
2013-04-29
உடன்பிறப்பே,
கடந்த 22-4-2013 அன்று பாராளுமன்றம் கூடியவுடனே மத்திய நிதிநிலை அறிக்கைமீதான இரண்டாவது கட்ட விவாதத்தைத் தொடங்கி மாண்புமிகு உறுப்பினர்கள் கடுமையாக விமர்சிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் - அங்கே என்ன பேசப்பட்டது தெரியுமா? அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டுக் குழுவின் அறிக்கை எவ்வாறு ஏடுகளுக்கும், ஊடகங்களுக்கும் முன் கூட்டியே கசியவிடப்பட்டது என்பது பற்றியும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றியும், டெல்லி மாநகரில் ஐந்து வயது குழந்தை மீது நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் பற்றியும்தான் எதிர்க்கட்சிகள் எல்லாம் தங்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்து அவையை நடத்த முடியாமல் ஒத்திவைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாம் அன்றையதினம் ஐந்து வயது சிறுமி மீதான பாலியல் பலாத்காரம் குறித்தும், அதற்குக் காரணமானவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் குழு விவாதங்களையெல்லாம் காரசாரமாக நடத்தினார்கள்.
டெல்லியில் பேருந்தில் கடந்த டிசம்பர் திங்களில் ஒரு மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலேயே பிரச்சினை எழுப்பப்பட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையைப் பெண்களே முற்றுகையிட முயற்சி செய்கிற அளவுக்கு நிலைமை முற்றியது. தமிழ்நாடு போலீஸ் பற்றிய வலைத்தளத்தில், 2011ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை தமிழகத்தில் 484 கற்பழிப்புக் குற்றங்கள் என்பதற்கு மாறாக; 2012ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 528 கற்பழிப்புக் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 528 குற்றங்களில், பெரும்பாலானவை அதாவது 75 கற்பழிப்புக் குற்றங்கள் சென்னை மாநகரில் மட்டுமே பதிவாகியுள்ளன.
திருவைகுண்டம் அருகில் பள்ளிக்குச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவி 12 வயதான புனிதா என்பவர் மர்ம நபரால் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதைப் பற்றிய செய்தி அறிந்து, அந்த மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி என். பெரியசாமியை அந்த வீட்டிற்கே அனுப்பி, அந்தப் பெண்ணின் தாயாருக்கு ஆறுதல் கூறி, நிதி உதவி அளிக்கச் செய்ததோடு, கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான கவிஞர் கனிமொழியை தூத்துக்குடிக்கே நேரடியாக அனுப்பி அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கச் செய்தேன். அதன் பிறகுதான், அ.தி.மு.க. அரசு விழித்துக்கொண்டு, அந்த மாவட்ட அமைச்சர் ஒருவரை அந்த வீட்டிற்கு அனுப்பி நிதி வழங்கச் செய்தது.
ஏதோ ஓர் இடத்தில் மாத்திரமன்றி இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக இத்தகைய கொடுமையான பாலியல் வன்முறைக்கு மாணவிகளும் ஏழைப்பெண்களும் உள்ளாக்கப்படும் செய்தி பரவலாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்குக் கடுமையான தண்டனை என்பது அவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பதுதான். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவு எடுத்து பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஆனால் தமிழக அரசைப் பொறுத்தவரையில் இந்தப் பாலியல் வழக்குகளில் நடவடிக்கை எடுப்பது என்பது, காவல் நிலையத்தில் பெயருக்கு ஒரு வழக்குப் பதிவு என்ற அளவிலேதான் உள்ளது.
ஆனால் 1-1-2013 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாடு புறப்பட்டுச் சென்ற பிறகு, அவர் பெயரால் ஒரு நீண்ட அறிவிப்பு வந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கிட 13 அம்சத் திட்டம் என்ற பெயரால் வெளியாகியுள்ள அந்த அறிவிப்புக்கு எப்போதும் போலப் பாராட்டுகள் -பளபளப்பான விளம்பரங்கள்! பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை முதலமைச்சர் ஆக்கிவிட்டார் என்றே மிகைப்படுத்தப்பட்ட செய்திகள்.
முதலமைச்சர் அறிவித்துள்ள 13 அம்சத் திட்டங்களில் முதல் மூன்று திட்டங்கள் பாலியல் வன்முறை வழக்குகளை - இனி நடப்பவை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை - யார் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றிய நிர்வாக அறிவிப்புகளாகும். நான்காவது அம்சம்தான் “குண்டர் தடுப்புச் சட்டம்” - ஏற்கனவே இந்த ஆட்சியில் இந்தச் சட்டம் முறை தவறிப் பயன்படுத்தப்பட்டுப் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறது. தங்களுக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் இந்தச் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து, அவர்கள் எல்லாம் நீதிமன்றங்களின் மூலமாக நியாயம் பெற்று வருகிறார்கள். அடுத்து, பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப் போகிறார்களாம். இது முதலமைச்சரின் அறிவிப்பில் ஒரு அம்சம். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்கான செலவை ஏற்பதும் ஒரு திட்டமாகும். இவ்வாறு அறிவிக்கப்பட்ட அந்த 13 அம்சத் திட்டங்கள் எல்லாம் பிறகு என்னவாயிற்றோ? மற்ற பல அறிவிப்புகளைப் போல, இந்த அறிவிப்புகளும் “ஏட்டுச் சுரைக்காய்” என்ற அளவிலே நின்றுவிட்டதோ; என்னவோ?
டெல்லியில் தற்போது ஒரு சிறுமியின் மீதான பாலியல் பலாத்கார -சம்பவம் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரம். பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவன், அந்தச் சிறுமிக்கு “சாக்லெட்” வாங்கித் தருவதாகச் சொல்லி அழைத்துப் போய்; அவளை ஒரு அறையிலே அடைத்து வைத்து, தன் நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்வது மட்டுமல்ல, அவளுடைய உடம்பு முழுவதும் கடிக்கப்பட்ட காயங்கள்! பூட்டப்பட்ட அறைக்குள் இருந்து அவளது அழுகுரலைக் கேட்டுப் பசியோடு கிடந்த அந்தச் சிறுமியை மீட்டிருக்கிறார்கள். 2001ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் 48,338 குழந்தைகள் மீதான பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.
டெல்லியில் நடைபெற்ற இந்தச் சிறுமி மீதான பாலியல் தொடர்பான வழக்கு நாடாளுமன்றம் வரை மிகவும் சூடாக விவாதிக்கப்படுகின்ற நேரத்திலே; தமிழகத்திலே என்ன நிலை?
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியன்று தொழில் நகரமான திருப்பூரில் ஒரு கொடுமை. எட்டு வயதான ஒரு மலையாளச் சிறுமி பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு, வீட்டிலே தனியாக இருந்த போது, ஒரு கும்பலால் அலற அலறக் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள்.
அந்தச் சிறுமியின் தாய் லலிதா; தந்தை உன்னிகிருஷ்ணன் சென்னையிலே பணியாற்றுகிறார். கணவன், மனைவியிடம் சில காலமாக நல்ல உறவு இல்லை. திருப்பூரில் உள்ள ஒரு தனி யார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறாள் அந்தச் சிறுமி. பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு, அந்தச் சிறுமி தன் தாயார் வேலை செய்கிற தொழிற்சாலையிலிருந்து திரும்புகிறவரை “டியூஷன்” படிப்பது வழக்கம். ஆனால் ஏப்ரல் 12ஆம் தேதி பள்ளி சீக்கிரம் முடிந்துவிட்டது. “டியூஷனும்” அன்று ரத்தாகிவிட்டது. எனவே சிறுமி வீட்டிற்கு வந்து சாப்பிட்டுப் போகும் நேரத்தில் கண்ணன் என்பவன் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். அவனும் வேறு மூவரும் சேர்ந்து அந்தச் சிறுமியைக் கற்பழித்த பிறகு, கொடுமையும் படுத்தியிருக்கிறார்கள்.
மாலையில் தாயார் இல்லம் திரும்பியபோது சிறுமி நினைவில்லாமல் கிடந்ததைப் பார்த்துவிட்டு, அங்கே உள்ள ஒரு மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறார். நினைவு திரும்பிய பிறகு சிறுமி நடந்ததையெல்லாம் விவரித்ததன் அடிப்படையிலேதான் காவல் துறையிலே புகார் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் காவல்துறை தொடக்கத்தில் சாதாரணமாக இதை எடுத்துக்கொண்டபோதிலும், உள்ளூர்வாசிகள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்த பிறகு வழக்கினைப் பதிவு செய்து, குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் நால்வரும் அங்கேயுள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுபவர்கள். காவல்துறையில் புகார் செய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள்.
தற்போது கோவையில் உள்ள “கங்கா மருத்துவமனை”யில் அந்தச் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறாள். கேரள முதலமைச்சர் உமன் சாண்டி விசாரித்தபோது சிறுமி நலம் பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கேரள முதலமைச்சர் சிறுமியின் குடும்பத்தினரிடம் பேசியதோடு, மருத்துவ உதவி போன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். மேலும் உள்ளூர் மலையாளச் சங்கங்கள் அதிர்ச்சியிலே இன்னமும் உறைந்து போயுள்ள ஜெயலலிதாவிற்கு ஆறுதல் கூறிவருகின்றன. இதற்கிடையே கேரள முதல்வரின் அறிவுரையின் பேரில், கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சி. சந்திரன் நேரடியாக வந்து சிறுமியின் உறவினர்களை விசாரித்திருக்கிறார். மேலும் அவர் தமிழகத்திலே உள்ள மலையாளச் சங்க நிர்வாகிகளிடமும் இதுபற்றிப் பேசியிருக்கிறார்.
இவ்வளவும் நடந்த பிறகும் கூட; இந்தப் பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெற்ற தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. அமைச்சர்களோ, உள்ளூரில் உள்ள ஆளுங் கட்சியினரோ அந்தச் சிறுமியைப் பார்க்கவோ, அவருடைய தாயாருக்கு ஆறுதல் கூறவோ, எந்த உதவியும் செய்யவோ முன்வரவில்லை என்பதுதான் சோகத்தின் உச்சக் கட்டம். கேரள மாநில முதல்வர் இந்தச் சம்பவத்திற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழகத்திலே உள்ள ஒரு பெண் முதலமைச்சர், இதுபற்றி ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை. மாறாக 23ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்று பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டு வந்து காவல் துறை மீதான விவாதத்திற்குப் பதிலளித்திருக்கிறார்.
முதலமைச்சர் மாத்திரமல்ல; தமிழகத்திலே உள்ள ஊடகங்களும்; பத்திரிகைகளும் டெல்லியிலே உள்ள சிறுமி கற்பழிக்கப்பட்டது பற்றி விவரங்கள் அனைத்தையும் விமர்சிக்கின்ற நிலையில், திருப்பூரில் நடைபெற்ற கற்பழிப்பு பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாதது ஏன்? அதைப்பற்றி எழுதினால், தொலைக்காட்சியிலே விமர்சனம் செய்தால், தமிழகத்திலே உள்ள முதல் அமைச்சரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம்தானே காரணம்! தமிழகத்திலே கற்பழிக்கப்பட்டது ஒரு மலையாளச் சிறுமி என்றதும், அந்த மாநில முதல் அமைச்சரே நேரடியாகத் தலையிட்டுக் கவனம் செலுத்துகின்றபோது, தமிழக முதலமைச்சர் இதிலே அலட்சியம் காட்டுவது சரியானதுதானா?
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நியாயம் வழங்கவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நண்பர் திருப்பூர் கே. சுப்பராயன் கோரிக்கை வைத்துள்ளார். இந்தக் கோரிக்கையைச் சுப்பராயன் தமிழக அரசுக்கு வைப்பதைவிட, அவருடைய கட்சியின் மாநிலச் செயலாளரான தோழர் பாண்டியனிடம் தெரிவித்தாலே போதும்; பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணம் கிடைத்திட வழி ஏற்படும்.
திருப்பூரிலே மாத்திரமல்ல; தேனி மாவட்டத்தில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக் கோம்பை கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி நதியா என்பவர் இந்த மாதத்தில் முதல் வாரத்திலே கற்பழிக்கப்பட்டு, கொலையே செய்யப்பட்டிருக்கிறார். இதைப் பற்றியெல்லாம் இங்கேயுள்ள அரசு கவனிக்கிறதா? சட்டப்பேரவை என்று ஒன்று அன்றாடம் நடைபெறுகிறதே, அங்கேயாவது இதுபற்றியெல்லாம் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
பாலியல் குற்றம் என்றால் டெல்லி மாநகரமே அல்லோலகல்லோலப்படுகிறது; பேரணி - முற்றுகைப் போராட்டம் என்று கொந்தளிப்பு ஏற்படுகிறது. கேரளச் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான செய்தி கேள்விப்பட்டதுமே கேரள முதலமைச்சரும், மலையாளிகள் சங்கத்தினரும் கவலை கொண்டு ஆறுதல் கரம் நீட்டுகிறார்கள். ஆனால் ஒரு பெண்மணி ஆளும் தமிழ் மாநிலத்தில், தட்டிக்கேட்க ஆளில்லாமல் பாலியல் குற்றங்கள் பரவலாக நடைபெறுகின்றனவே?
அன்புள்ள, மு.க. 29-4-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗