தொகுதி 48 · கடிதம் 3743
கனவா? நனவா? கழுதையே சும்மா இரு என்ற கதையா?
2013-04-28
உடன்பிறப்பே,
24-4-2013 அன்று திருவண்ணாமலையில் “தமிழகச் சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும்பாடு” என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், “தமிழ்நாடும் தற்போது நடக்கும் கேலிக்கூத்தும்” என்றுதான் தன் பேச்சைத் தொடங்கினார். பேராசிரியர் சொன்ன கருத்தைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நாள் தவறாமல் மெய்ப்பித்து வருகிறார். சட்டப்பேரவையில் இந்த ஆட்சிக்கு எதிராகக் கருத்து தெரிவிக்க யாருக்குமே உரிமை இல்லை என்ற அளவிற்கு, பேரவை நடைபெறுவதை ஏடுகளில் காணலாம். அம்மையாரைப் புகழ்ந்து பேசிட வேண்டும்; எல்லா அறிவிப்புகளுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்; அவர் அவையிலே படிப்பதையெல்லாம் அனைவரும் தலைவணங்கிக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று போற்றிப் புகழ்பாடும் மன்றமாக பேரவை உருமாறி வருகிறது.
தமிழகத்திலே இதுவரை எத்தனையோ முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் தற்போது நடைபெறுகின்ற அளவிற்கு அன்றாடம் 110வது விதியின் கீழ் முதலமைச்சருக்குரிய துறைகள் அல்லாத வேறு துறை அமைச்சர்களுக்குரிய அறிவிப்புகளையும் முதலமைச்சரே படிக்கிறாரே, அதைப் போலச் செய்ததில்லை. முதல் அமைச்சரே அனைத்து அறிவிப்புகளையும் படிப்பதால், அதனை வரவேற்றும் பாராட்டியும் மற்றக் கட்சித் தலைவர்களும், பேரவைத் தலைவரும் பேசுகிறார்கள். அந்த அறிவிப்புகளிலே உள்ள குற்றம் குறைகளைச் சொல்ல யாராவது விரும்பினால்; 110வது விதியின் கீழ் படிக்கப்படும் அறிக்கை மீது குறை சொல்ல அனுமதி கிடையாது என்று கூறி, மீறிப் பேச முற்பட்டால் உடனே அவையிலிருந்து பேரவைத் தலைவர் வெளியேற்றி விடுவார், நான்கு தடவை அவ்வாறு வெளியே அனுப்பிவிட்டு, பிறகு தொடர் முழுவதற்கும் வரக் கூடாது என்றும் கூறிவிடுவார். அப்படிப்பட்ட ஜனநாயகம்தான் அன்றாடம் தமிழகச் சட்டப் பேரவையிலே கொடிகட்டிப் பறக்கிறது.
25-4-2013 அன்று ஒரு நாளில் மட்டும் மின்துறை மீது அந்தத் துறையின் அமைச்சர் கூற வேண்டியதை எல்லாம் முதல் அமைச்சரே படித்திருக்கிறார். பிறகு எதற்காக மின்துறை அமைச்சர்? அவருக்காக வேறு தனி “பணி” எதுவும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதா? அந்தப் “பணி”யை மட்டும்தான் அவர் கவனிப்பாரா? எத்தனை, எத்தனை அறிவிப்புகள்? அந்த அறிவிப்புகள் எல்லாம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையவை ஆயிற்றே? நிதி நிலை அறிக்கையிலே அந்த அறிவிப்புகள் ஏன் செய்யப்படவில்லை? அந்த அறிவிப்புகளின் கீழ் செலவழிக்கப்படவிருக்கும் நிதிக்குப் பேரவையின் ஒப்புதல் தேவையில்லையா? உண்மையாக நடைமுறைப் படுத்தினால்தானே, அந்தக் கவலை? அன்றாடம் ஏடுகளிலே வெளிவர வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்டவைகளா அவைகள்? முதலமைச்சரின் இந்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகளின் மதிப்பைக் குலைத்து விடாதா?
உதாரணத்திற்காக ஒன்றைக் கேட்கிறேன். கடந்த 3-5- 2012 அன்று பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா காவல்துறை சம்பந்தமான சில அறிவிப்புகளைச் செய்தார். 2012ஆம் ஆண்டு காவல்துறை மீதான விவாதம் நடைபெற வில்லையா? முதலமைச்சர் அதற்குப் பதில் சொல்லவில்லையா? சொன்னார்; காவல்துறை மீதான விவாதத்திற்கு நீண்ட நேரம் 24-4-2012 அன்று பதில்களைப் படித்தார்; அறிவிப்புகளைச் செய்தார். இருந்தாலும் பத்து நாட்களுக்கெல்லாம் 3-5-2012 அன்று ஒரு மிகப்பெரிய அறிவிப்பினைச் செய்தார். அந்த அறிவிப்பினைக் காவல்துறை மானியத்திற்குப் பதிலளித்த போதே செய்திருக்கலாம் அல்லவா? ஆனாலும் செய்யவில்லை! ஏன் செய்யவில்லை? அப்போது செய்திருந்தால், பத்தோடு பதினொன்றாவது அறிவிப்பாக ஆகியிருக்கும். தனியாக 110வது விதியின் கீழ் படித்தால்தான், அதை முதல் பக்கத்தில் வெளியிடக் காத்திருக்கும் ஏடுகளில் எல்லாம் மிகப் பெரிதாக வெளிவரும்; பேரவையில் உள்ள கட்சித் தலைவர்கள் எல்லாம் “அம்மா”வைப் பாராட்டுவார்கள் என்பதுதான்? என்னவோ தெரியவில்லை. 3-5- 2012 அன்று முதலமைச்சர் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கை என்ன? இதோ அது :-
“உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவல்துறையில் காவலர்கள் முதல் துணைக் கண்காணிப்பாளர்கள் வரையிலான பதவிகளில் உள்ளவர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்போர் முதல் கோட்ட அலுவலர்கள் வரையிலான பதவிகளில் உள்ளவர்களுக்கும் சொந்த வீடு கட்டித்தர தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் நடவடிக்கை எடுக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 36,000 குடியிருப்புகள் கட்டப்படும். ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் 10 ஏக்கர் நிலமும், காஞ்சிபுரம் மாவட்டம், மேலக் கோட்டையூர் கிராமத்தில் 100 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய்து தரப்படும்” என்றெல்லாம் முதல் அமைச்சர் பேரவையிலே 110வது விதியின் கீழ் இந்த அறிவிப்பைச் செய்ததும், மாண்புமிகு உறுப்பினர் செ.கு.தமிழரசன் ஆரம்பித்து, கொங்கு தமிழர் கட்சி சார்பில் உ. தனியரசு, புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, மனித நேய மக்கள் கட்சி சார்பில் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ம.கலையரசு, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆ.நாராயணன், காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.விஜயதாரணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம். ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அ. சவுந்தரராசன் ஆகியோர் முதல் அமைச்சருக்குப் பாராட்டு தெரிவித்துப் நன்றி கூறினார்கள்.
அவர்களையெல்லாம் மீறி, அன்றைய தினம் பேரவைத் தலைவராக இருந்த அருமை நண்பர் ஜெயக்குமார் அவர்களோ ஒரு கவிதையே அவையில் பாடினார். “உடலுக்கு உயிர் காவல், உடைமைக்கு நம் தாய் காவல் - உலகுக்கு ஒளி காவல், உயிருக்கு நம் தாய் காவல் - கடலுக்கு கரை காவல், களவு போகாமல் இருப்பதற்கு நம் தாய் காவல்” என்றெல்லாம் தொடங்கிக் கவிதைபாடினார். இன்றைய பேரவைத் தலைவர் அல்ல - அப்போதிருந்த பேரவைத் தலைவர் பாடினார்.
முதலமைச்சர் அந்த அறிவிப்பினைச் செய்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. அந்த 36 ஆயிரம் குடியிருப்புகளில் இந்த ஓராண்டு காலத்திற்குள் காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் மூலமாகக் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகள் எத்தனை? அந்தத் திட்டத்திற்காகக் காவல் துறை நண்பர்கள் பணம் எல்லாம் கட்டினார்களே, அந்தக் குடியிருப்புகள் கட்டித் திறக்கப்பட்டு விட்டதா? நேரில் முதலமைச்சர் சென்று திறந்து வைத்தார்களா? வீடியோ கான்பரன்சிங் மூலமாகவே திறக்கப்பட்டு விட்டதா?
இதுபோன்றொரு மிகப்பெரிய அறிவிப்பினைத்தான் 25-4- 2013 அன்று பேரவையில் முதலமைச்சர் படித்திருக்கிறார். அதற்கு ஏடுகளில் எல்லாம் மிகப் பெரிய முதல் பக்கத் தலைப்புகள்?
ஏ நீலகிரி மாவட்டத்தில் 7000 கோடி ரூபாயில் புனல் மின் திட்டம்! ஏ மின் கட்டமைப்பையும் தொடரமைப்பையும் வலுப்படுத்த 5000 கோடி ரூபாய்த் திட்டம்! ஏ 3572 கோடி ரூபாயில் 19 புதிய 400 கிலோ வோல்ட் துணை மின்நிலையங்கள்! எதிர்காலத்தில் 1000 கோடி ரூபாயில் துணை மின்நிலையம் - மின்தொடர்கள்! ஏ தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மீண்டும் மாற்றிட 30,602 கோடி ரூபாய்த் திட்டங்கள்!
சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கான மின் திட்டங்களை தமிழக முதலமைச்சர் 110வது விதியின் கீழ் அறிக்கையாகப் பேரவையில் படித்திருக்கிறார். அந்தத் திட்டங்கள் பற்றிப் பேரவையிலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அந்தத் திட்டங்கள் சாத்தியக் கூறான திட்டங்கள்தானா? அந்த அறிவிப்புகள் எல்லாம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதா? அல்லது அதிகாரிகள் மையத்திலாவது பேசப்பட்டதா? யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை; ஏனென்றால் கேட்பதற்கு விதிப்படி அனுமதி கிடையாது.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழக ஏடுகளில் எல்லாம் எந்த அளவிற்குப் போற்றப்பட்டிருக்கிறது தெரியுமா? 7 ஆயிரம் கோடியில் புதிய நீர் மின் திட்டம் - “தினத்தந்தி”; வீடுகளில் சூரிய சக்தி மின் சாதனங்கள் பொருத்த 20 ஆயிரம் ரூபாய் - “தினமலர்”; 8 ஆயிரம் கோடியில் துணை மின் நிலையங்கள், 7 ஆயிரம் கோடியில் புனல்மின் திட்டம் - “தினமணி”; ரூ.16,350 கோடியில் ஜெயலலிதா திட்டங்கள் - “மாலை முரசு”; 30,602 கோடி ரூபாய் திட்டம் - “நமது எம்.ஜி.ஆர்.”; என்று மிகப்பெரிய அளவிற்கு வெளியிடப்பட்டுள்ளது.
கிராமங்களில் இன்றுவரை 15 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு! கோடைக் காலம் தொடங்கிவிட்டது. குழந்தைகள் இரவிலே காற்று இல்லாமல் தூங்குவதில்லை. அவரவர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு தெருக்களிலே அலைகிறார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சோற்றுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி யெல்லாமா இந்த ஆட்சியாளர்கள் கவலைப்படுகிறார்கள்? ஆம், கவலைப்பட்டுத்தான் சிந்தித்து-சிந்தித்து இந்தத் திட்டங்களை எல்லாம் நமது முதல் அமைச்சர் தீட்டி வெளியிட்டிருக்கிறார்.
கிராமங்களிலே மின்வெட்டு காரணமாக அவதியுறும் தாய்மார்களிடம் எல்லாம் தமிழக அமைச்சர்கள் முதல் அமைச்சரின் இந்த 110வது விதியின் கீழான அறிவிப்புகளையெல்லாம் துண்டு நோட்டீஸ்களாக அடித்து, எடுத்துக்கொண்டுபோய் விநியோகிக்கலாம். அதிலும் இந்தத் திட்டங்கள் எல்லாம் நிறைவு பெற சுமார் 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என்ற வரிகளை அடிக் கோடிட்டுக் காட்டவேண்டும். “முதலமைச்சர் அறிவித்துள்ள இந்தத் திட்டங்கள் பத்தாண்டுகளில் நிறைவு பெற்றுவிடும்; அப்போதே மின்வெட்டு தளர்த்தப்பட்டு உங்கள் குழந்தைகளுக்கு ஏராளமாகக் காற்று கிடைக்கும். அப்போது தூங்க வைத்து விடலாம்” என்று கூட்டம் போட்டுப் பிரச்சாரம் செய்யலாம்.
ஏற்கனவே திட்டமிட்ட கூடங்குளம் மின் நிலையத்திலிருந்தே மின்சார உற்பத்தி தொடங்கப்படுமா? மின்சாரம் கிடைக்குமா? கிடைத்தால் தமிழகத்திற்கு எவ்வளவு கிடைக்கும்? அந்த ஆலையையே தொடங்கக் கூடாது என்று போராட்டம் ஒரு பக்கம்! அந்தப் போராட்டக்காரர்களை முதலில் உசுப்பி விட்டுவிட்டுப் பின்னர் அவர்களைப் பார்க்கக்கூட மறுத்த படலம் ஒரு பக்கம்! போராட்டக் குழுத் தலைவர் உதயகுமாரன் “ஆனந்தவிகடன்” இதழுக்கு இந்த வாரம் அளித்த பேட்டியில் முதலமைச்சர் ஜெயலலிதா முதலில் அவர்களுக்கு வாக்குறுதி அளித்ததையும், பின்னர் கைவிட்டதையும் பற்றி வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் எப்படிப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் பேரவையில் அறிவித்திருக்கிறார் தெரியுமா? நீலகிரி மாவட்டத்தில் 7000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 மெகாவாட் மின்திறன் கொண்ட புனல் மின் திட்டம் உருவாக்கப்படுமாம்; இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படுமாம்; இத்திட்டம் நிறைவு பெற சுமார் 8 முதல் 10 ஆண்டுகள் ஆகுமாம்; மின் கட்டமைப்பையும், தொடரமைப்பையும் வலுப்படுத்த 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாம்; இது மட்டுமல்லாமல், 822 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 230 கிலோ வோல்ட் திறன் கொண்ட 14 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுமாம்; திருவள்ளூரில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய 400 கிலோ வோல்ட் துணை மின்நிலையமும், அதற்கான மின் தொடர்களும் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு துவங்கப்படுமாம்; (அப்படியென்றால் மற்ற திட்டங்கள் எல்லாம் எந்த ஆண்டில் தொடங்கப்படும் என்று யாரும் கேட்கக் கூடாது; ஏனென்றால் முதல் அமைச்சர் சொன்னது 110வது விதியின் கீழான அறிக்கை) 2,300 கோடி ரூபாய்ச் செலவில் கயத்தாறிலிருந்து சென்னைக்கு மின் தொடர் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறதாம்; 1,230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படுமாம்; நெல்லை மாவட்டம், கானார் பட்டியில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமாம்; 11 புதிய 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளும் இந்த ஆண்டு துவங்கப்படுமாம்; மொத்தம் 56 துணை மின்நிலையங்கள் 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுமாம். மேற்கூறிய சாதனங்களைப் பொருத்தி மின் உற்பத்தி செய்யும் வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு 20,000 ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப் போகிறார்களாம்; இறுதியான அறிவிப்பைப் பார்த்து யாரும் சிரிக்கக் கூடாது. ஆமாம், இந்த ஆண்டு 11 லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்கப் போகிறார்களாம்! எப்படி அறிவிப்புகள்? ஓராண்டு நிதிநிலை அறிக்கையே சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு என்கிற போது, முதலமைச்சர் ஒரே நாளில் 110வது விதியின் கீழ் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை அறிவிக்கிறார் என்றால் “மலைக்கே வாழ்க்கைப்படப் போகிறேன்; கழுதையே சும்மா இரு” என்று கிராமத்தில் சொல்வார்களே; அதைப் போலத்தான் இருக்கிறது.
சிறுவர்களுக்குப் பாடப் புத்தகத்தில் ஒரு கதை வரும். கிளாடியஸ் என்ற ஒரு கண்ணாடி வியாபாரி, கண்ணாடிப் பொருட்களை வீதிகள் தோறும் விற்றுக் கொண்டே சென்றான். கடும் வெயில். அதன் கொடுமை தாங்கமுடியாமல், ஒரு மரத்தடியில் தனது கண்ணாடிப் பாத்திரங்கள் கொண்ட கூடையை கீழே இறக்கி வைத்துவிட்டு, நன்றாகப் படுத்து உறங்கிவிட்டான். தூக்கத்தில் ஒரு கனவு. கண்ணாடி வியாபாரி தனது பாத்திரங்களை விற்று அதிலே அதிக லாபம் அடைந்து கொஞ்சம் கொஞ்சமாகச் செல்வச் சீமானாக உயருகிறான். மிகப்பெரிய தொழில் அதிபராக அந்தஸ்தில் வளர்ந்துவிட்டான். அப்போது அவனது வேலைக்காரன் வந்து முதலாளியிடம் ஏதோ கூற, உடனே கோபமடைந்த முதலாளி அந்த வேலைக்காரனை நோக்கி ஓங்கி ஒரு உதை உதைக்கிறான். கனவிலே உதைப்பதாக நினைத்துக் கொண்டு, உண்மையிலேயே தன் கால் பக்கம் இருந்த கண்ணாடிப் பாத்திரங்கள் நிறைந்த கூடையை நோக்கி அந்த வியாபாரி ஓங்கி உதைக்க, அந்தக் கண்ணாடிப் பாத்திரங்கள் எல்லாம் உடைந்து தூளாகின்றன என்பது கதை. அதைப்போல பகல் கனவு காண யாருக்கும் உரிமை உண்டு அல்லவா?
அன்புள்ள, மு.க. 28-4-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗