தொகுதி 48 · கடிதம் 3742
ஈழத் தமிழர்க்கு இன்னமும் ஓயாத கொடுமைகள்!
2013-04-27
உடன்பிறப்பே,
இலங்கை ராணுவத்தினரிடமிருந்து தப்பித்து - தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கடல் கடக்கும் முயற்சியில் ஈடுபட்ட 45 ஈழத் தமிழர்கள் பிடிபட்டனர். துபாயில் இறக்கி விடப்பட்ட அவர்களில் 19 பேரை மீண்டும் இலங்கைக்கே திருப்பியனுப்ப ஐ.நா. உத்தர விட்டுள்ளது என்றும்; 8 பேரை ஸ்வீடன் அரசு ஏற்றுக் கொண்டது என்றும்; அமெரிக்கா 11 பேருக்குத் தஞ்சம் தருவதாக வாக்களித் துள்ளது என்றும்; ஏற்கனவே 7 பேரை கொழும்புவுக்குத் திருப்பி அனுப்பிவிட்ட நிலையில் எஞ்சியிருக்கும் 19 பேருக்குத் தஞ்சம் தர நாடுகள் எதுவும் முன்வரவில்லை என்றும்; அவர்களை துபாய் அரசு கொழும்புவுக்கே திருப்பி அனுப்பத் தயாராகி வருவதாகச் செய்திகள் நமக்கு வந்துள்ளன என்றும்; அவர்களின் துயரினைக் களைய உடனடியாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 23-4-2013 அன்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
23ஆம் தேதி “முரசொலி”யில் வெளிவந்த என்னுடைய இந்த வேண்டுகோளைப் படித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், அதை மத்திய அரசு பரிசீலித்ததாகவும், துபாயில் உள்ள அந்த 19 ஈழத் தமிழர்களும் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் தகவல் அனுப்பியுள்ளார். துபாயில் பிடிபட்டிருந்த அந்த ஈழத் தமிழர்களிடமிருந்தும் அதுபற்றி எனக்குத் தகவல் வந்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கும், நிதியமைச்சர் அவர்களுக்கும் ஈழத் தமிழர்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்றாலும், இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகின்ற ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன்னல்களைக் களைவதில் இந்திய அரசு இன்னமும் மெத்தனமாகவே இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
மேலும், 22ஆம் தேதியன்று மக்களவையில் இந்திய ராணுவ அமைச்சர் அந்தோணி அவர்கள், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, சர்வதேச கடல் எல்லைக்கு அருகே வரும் மீனவர்களைத் தாக்கக்கூடாது என்றும், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவும், இலங்கை ராணுவத்துக்கு உத்தரவிட இலங்கை அரசு இந்தியா அறிவுறுத்தியுள்ளது என்றும், இந்திய மீனவர்களின் நலன் காக்க இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் மக்களவையில் கூறும் போது, “இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஓர் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது; அதன்படி இந்திய மீன்பிடி படகுகள் மீது இலங்கைக் கடல் படையினர் துப்பாக்கியால் சுடக்கூடாது; இந்தியக் கடல் பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதைத் தடுக்கவும், நமது கடல் பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கவும் பாக் ஜலசந்தி பகுதியில் இந்தியக் கடற்படை கப்பல்களும், கடலோர பாதுகாப்புப் படை கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன” என்றும் தெரிவித்திருக்கிறார்.
எனினும், எந்த உடன்பாட்டையும் மதிக்காத சிங்கள அரசு, இந்த உடன்பாட்டையும் கொஞ்சமும் மதித்து நடக்கவில்லை என்பதை 2008ஆம் ஆண்டிற்குப் பிறகும்கூட தொடர்ந்து தமிழக மீனவர்கள் அங்கே தாக்கப்பட்டு வரும் கொடிய நிகழ்ச்சிகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
இவைகளையெல்லாம் மனதிலே கொண்டுதான் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக் கூடாது என்று “டெசோ” சார்பில் நாம் கூறி வருகிறோம். இதற்கிடையே 23-4- 2013 அன்று நான் விடுத்த அறிக்கையிலே கூட, “காமன்வெல்த்” சட்ட மாநாடு ஒன்று ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் உள்ள “கேப்டவுன்” நகரத்தில் நடைபெற்றது பற்றியும் அந்த மாநாட்டில் காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் கலந்து கொண்டு, ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில், “26-4-2013 அன்று லண்டன் மாநகரத்திலே நடைபெறும் காமன்வெல்த் அமைச்சர்கள் சார்ந்த நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை பற்றி பரிசீலனை செய்து காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்; தொடர்ந்து இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் காமன்வெல்த் போற்றி வரும் அடிப்படைக் கொள்கை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை நீக்குவது முக்கியத்துவம் பெறுகிறது; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றெல்லாம் காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக, இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதோடு காமன்வெல்த் நாடுகளின் தூதுவர்களைக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து அதற்கான வேண்டுகோளை விடுத்து வருகிறார்கள். நமது வேண்டுகோளுக்கு மேலும் வலிவு சேர்க்கும் வகையில், மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் என்பார், “இலங்கையில் தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டார்; பத்திரிகைகள் ஒடுக்கப்படுகின்றன; அடிப்படை சுதந்திரம் மறுக்கப்பட்டு, மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன; இப்படிப்பட்ட நாட்டில், காமன் வெல்த் மாநாடு நடந்தால், அது இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாகிவிடும். மனித உரிமை மீறல் விஷயத்தில், இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, அந்நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது, இது தொடர்பாக, லண்டனில் நடக்கும் கூட்டத்தில் விவாதித்து, இலங்கையை எச்சரிக்க வேண்டும். மனித உரிமையை மதிக்காத நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த முடியாது என்பதை உறுப்பு நாடுகள் பதிவு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் அளவுகடந்து போகின்றன என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக, இலங்கையிலே தமிழர்களுக்குச் சொந்தமாக இருந்த 6,381 ஏக்கர் நிலங்கள் சிங்கள ராணுவத்தினரால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு முதலே யாழ்ப்பாணத்தின் “வலிகாமம்” பகுதி சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது முதல் இந்த ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது. இலங்கையில் போர் முடிவுற்ற பிறகு, இந்த நிலங்கள் திரும்பவும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர் பார்த்திருந்த நிலையில், இந்த நிலங்களை சிங்கள ராணுவத்திற்கே சொந்தமாக ஆக்கிக் கொள்வதற்கான உத்தரவினை சிங்கள அரசு தற்போது பிறப்பித்திருக்கிறது.
இந்த மாதிரியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் யாழ்ப்பாணப் பகுதியிலே மட்டுமல்ல; தமிழர்களுக்குச் சொந்தமான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திரிகோண மலை, மட்டக் களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் தமிழர்களுக்குச் சொந்தமான இந்த நிலப்பகுதியில், யாழ்ப்பாண மண்டலத்திற்கான ராணுவ தலைமை அலுவலகத்தைக் கட்டுவதற்கும் இலங்கை அரசு திட்டமிட்டிருக்கிறதாம். தமிழர்கள் வழிபட்டு வந்த சுமார் 2,500 கோவில்களும், 400 கிறித்தவ தேவாலயங்களும் இடிக்கப்பட்டு, அங்கே சிங்கள வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டுவிட்டதாம். இதைப்பற்றியெல்லாம் அங்கிருந்து தகவல் அனுப்பியிருப்பதோடு, இதனைக் கண்டித்து தமிழர்கள் சார்பில் அங்கே அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈழத் தமிழர்களின் இந்தக் கோரிக்கை பற்றித் தான் ஏற்கனவே 12-8-2012 அன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற “டெசோ” மாநாட்டிலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. அந்தத் தீர்மானத்தில், “இன்றைய இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறைக்குப் பதிலாக இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இராணுவம், அதன் நடவடிக்கைகளுக்காக, தமிழர் பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகளை கையகப்படுத்திக் கொண்டுள்ளது. காலியாக உள்ள வீடுகளைத் தன் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளும் இராணுவம், அவற்றைக் காலி செய்ய மறுக்கிறது. இராணுவத்தின் அனுமதி யின்றி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழர்களின் வீடுகளில் எந்த சமூக நிகழ்ச்சிகளும் நடத்த முடியாது. இராணுவத்தினரே அங்கு மாவட்ட ஆட்சியராகவும் அரசு நிர்வாகிகளாகவும் நியமிக்கப்படுகின்றனர். இன்றையத் தமிழ் ஈழம் ஓர் இராணுவ முகாம் போலக் காட்சியளிக்கிறது. ஜனநாயக அடிப்படை யிலான உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் அங்குள்ள தமிழர்களுக்குத் தங்களது குறைகளை எடுத்துக் கூறவும், பேசவும், அமைதியான முறையில் போராடவும் வழியில்லை. அவர்கள் எப்போதும் பெரும் பீதியில் உறைந்து கிடக்கின்றனர். எனவே தமிழ் ஈழப் பகுதிகளிலிருந்து உடனடியாக இராணுவத்தைச் சிங்கள அரசு விலக்கிக் கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் அவையும் உலக நாடுகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இராணுவத்தைத் திரும்பப் பெறுவதை நேரடியாகக் கண்காணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் அவை ஒரு பன்னாட்டுக் குழுவை ஏற்படுத்தவேண்டும்” என்றும்;
“பன்னெடுங்காலமாகத் தமிழ் மீனவர்கள் வாழ்ந்து வந்த வடக்கு, கிழக்குக் கடலோரப் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாகத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வலிந்து குடியமர்த்தப்பட்டுள்ள சிங்களர்களை உடனே அப்பகுதிகளிலிருந்து திருப்பி அனுப்புவதோடு, மீண்டும் தமிழர்கள் தங்களின் தொழில், வணிக மற்றும் இயற்கை வள ஆதாரங்களின் மீது உரிமை கொண்டோராய் அறிவிக்கப்பட வேண்டும். தமிழர்களின் வாழ்வில் இயல்பு நிலை ஏற்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள, ஐ.நா. அவை இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்” என்றும் ஏற்கனவே கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இலங்கையில் இவ்வாறு தமிழர்கள் வாழ்ந்த அவர்களுக்குச் சொந்தமான நிலப் பகுதிகளை யெல்லாம் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து கைப்பற்றுகின்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில்; இந்தப் பிரச்சினையில் முக்கியமாக நமது இந்திய அரசும் மற்றும் உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் உடனடியாக தலையிட்டு, ஈழத் தமிழர்களுக்கு உரிய இந்த நிலங்களை மீட்டு, தொடர்ந்து அவர்கள் அங்கே வாழவும், தமிழர்கள் வாழ்ந்த இந்தப் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவம் வெளியேறவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
அன்புள்ள, மு.க. 27-04-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗