உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3741

வலுவான காரணங்கள் குவிகின்றன!

2013-04-23

உடன்பிறப்பே,

இலங்கை ராணுவத்தினரிடமிருந்து தப்பித்துத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்து கடல் கடக்கும் ஈழத் தமிழர்கள் பல நாட்டு ராணுவத்தினரிடம் பிடிபடுகிறார்கள். அப்படிப் பிடிபட்டு துபாயில் இறக்கிவிடப்பட்ட 45 பேரில், 19 பேரை மீண்டும் இலங்கைக்கே திருப்பியனுப்ப ஐ.நா. உத்தரவிட்டுள்ளது. அவர்களில் ஒருவரான ரமணன் ஜூனியர் விகடன் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு :-

“கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஈழ அகதிகள் 102 பேர் ஆஸ்திரேலியா செல்வதற்காகத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிந்தலக்கரை வந்தோம். அங்குள்ள காளிகோயிலில் கூடினோம். அந்தக் கூட்டத்தில் நானும், என் மகளும், என் மனைவியும் இருந்தோம். முதலிலேயே படகில் ஏறிய நாங்கள் 45 பேர் போலீசில் சிக்காமல் ஆஸ்திரேலியா நோக்கிக் கிளம்பினோம். நானும் என் மனைவியும் படகில் வந்துவிட்டோம். என் குழந்தை பின்னால் வந்த குழுவினருடன் வருவதாக இருந்த நிலையில், குழந்தை காவலரிடம் சிக்கிக்கொண்டது. நானும், என் மனைவியும் இப்போது துபாயில் இருக்க, என் குழந்தை திருச்சியில் இருக்கிறது. அக்டோபர் மாதம் 9ஆம் தேதி சிந்தலக்கரையிலிருந்து கிளம்பிய படகு சர்வதேசக் கடல் எல்லையில் சென்றுகொண்டிருந்தபோது, படகில் ஓட்டை விழுந்துவிட்டது. படகில் இருந்த தண்ணீரை இறைத்துச் சோர்ந்துபோன நாங்கள் சேட்டிலைட் போன் மூலம் ஆஸ்திரேலிய நேவிக்குத் தகவல் கொடுத்தோம். கொஞ்ச நேரத்தில் சரக்குக் கப்பல் வந்து எங்களைக் காப்பாற்றியது. எங்கும் இருட்டு. மொழியும் தெரியவில்லை. நாங்கள் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்படுவதாக நம்பினோம். ஆனால் எங்களைத் துபாயில் இருக்கும் ஜபர் அலி என்ற துறைமுகத்தில் இறங்கச் சொன்னார்கள். சில தொண்டு நிறுவனங்களும் வந்தது. அவர்களிடம் “நாங்கள் தஞ்சம் தேடி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டோம். எங்களை இங்கே கொண்டு வந்துவிட்டனர். இலங்கையிடம் எங்களை ஒப்படைக்க மாட்டோம் என்ற உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கப்பலை விட்டு இறங்க மறுத்தோம். “துபாய் அரசு உங்களை இலங்கைக்கு அனுப்பாது” என்று அவர்கள் உத்தரவாதம் கொடுத்ததன் பேரில் இறங்கினோம். ஆனால், இப்போது ஐ.நா. எங்களைக் கைவிட்டுவிட்டது. எங்களில் 19 பேரை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவினை ஐ.நா. எடுத்துவிட்டது”.

இந்தக் குழுவில் இடம்பெற்ற ஹரினி என்று அழைக்கப்படும் லோகினி ரதி மோகன் கூறியிருப்பதாவது :-

“புலிகளின் தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றினேன். 2009ல் நாங்கள் தப்பித்துத் தமிழகத்துக்கு வந்தோம். எங்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப மாட்டோம் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டதன்பேரிலேயே நாங்கள் தரை இறங்கினோம். ஆனால் இப்போது, அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு எங்களை இலங்கைக்குப் போகச் சொல்கிறது. எங்களைச் சுதந்திரமாக ஊடகங்களிடம் பேசவோ, வெளி உலகுடன் தொடர்புகொள்ளவோ அனுமதிக்காமல் அடைத்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் இசைப்பிரியாவுக்கு நடந்ததுதான் எனக்கும் நடக்கும். தவிர, என் கணவர் ஒரு நாட்டில், என் பெற்றோர், தங்கைகள் ஒரு நாட்டில் எனத் திசைக்கொருவராய் சிதறிக் கிடக்கிறோம். எங்காவது ஒரு நாட்டுக்குத் தப்பி அங்கிருந்து சிதறிக் கிடக்கும் எங்கள் குடும்பங்கள் ஒன்று சேர வேண்டும். நாங்களும் நல்ல வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத்தான் கடல் கடக்கிறோம். எந்த நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என நினைக்கிறோமோ, அந்த நாட்டுக்குப் போய்ச் சேர்ப்பதற்காகவா எங்களை நடுக்கடலில் இருந்து காப்பாற்றினார்கள் ?”

இவ்வாறு தங்கள் இதயத் துயரை வெளிப் படுத்தியிருக்கிறார்கள். துபாயில் கரை சேர்க்கப்பட்ட 45 பேரில் மிக முக்கியமாக புலிகளின் ராணுவப் பேச்சாளராக இருந்த இளந்திரையனின் மனைவியும், குழந்தைகளும், வேறு சில போராளிகளும் இருந்துள்ளனர். இவர்களில் எட்டு பேரை ஸ்வீடன் அரசு ஏற்றுக்கொண்டது. அமெரிக்கா 11 பேருக்குத் தஞ்சம் தருவதாக வாக்களித்துள்ளது. ஏற்கனவே ஏழு பேரைக் கொழும்புவுக்குத் திருப்பி அனுப்பிவிட்ட நிலையில் எஞ்சியிருக்கும் 19 பேருக்குத் தஞ்சம் தர நாடுகள் எதுவும் முன்வரவில்லை. அவர்களைத் துபாய் அரசு கொழும்புவுக்கே திருப்பி அனுப்பத் தயாராகி வருவதாகச் செய்திகள் நமக்கும் வந்துள்ளன. நாதியற்ற தமிழன் உலகின் பல பாகங்களில் எப்படியெல்லாம் அவதிப்படுகிறான் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேடிப்போகத் தேவையில்லை. அவர்கள் தமிழர்கள், ஈழத் தமிழர்கள். அவர்களுக்காக உதவிட நமக்குத்தான் முதல் கடமை உள்ளது. நமக்கென்று ஒரு நாடு இருக்கின்றது. அவர்கள் இந்த 19 பேருடைய துயரினைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த 19 பேரும் மீண்டும் இலங்கைக்குச் செல்ல விரும்பவில்லை. வேறு எந்த நாட்டிலும் அவர்கள் தஞ்சம் அடையத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் விளக்கேற்ற இந்திய அரசு உதவிட வேண்டாமா? இலங்கை சிங்களப் பேரினவாத அரசைப் பற்றிய வேறு சில தகவல்களும் செய்தித்தாள்களில் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. கடந்த வாரமே பிரிட்டன் அரசு இலங்கையில் மனித உரிமை மீறல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறை 2012ஆம் ஆண்டில் இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் தாக்குதலுக்கு ஆளாவது, காணாமல் போவது, கொலை செய்யப்படுவது எனப் பல்வேறு கொடுமைகளைச் சந்திக்கின்றனர். இலங்கைப் பாதுகாப்புப் படையினரும், ராணுவத்தினரும் இத்தகைய மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர். முக்கியமாக சமூக ஆர்வலர்கள், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகமாக உள்ளது. இவர்களை ஆட்சியாளர்கள் அச்சுறுத்துகின்றனர். அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் திடீரென மாயமாகி விடுகின்றனர். சமூக நலத்துறை அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் பகுதியில் பயமுறுத்தல், வழிப்பறி மற்றும் ஊழல் செயல்களை ஊக்குவித்து வருகிறார் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துகளை மனதிலேகொண்டுதான் 12-8-2012 அன்று சென்னை மாநகரில் “டெசோ” சார்பில் நாம் நடத்திய மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தில், “தமிழ் இளைஞர்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். பலர் சித்திரவதை முகாம்களில் சொல்லொணாத வேதனைக்கும், துயரத்துக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்ப் பெண்கள், இராணுவப் படையினரால் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தமிழ்க் குழந்தைகள் துப்பாக்கிகளைப் பார்த்துக்கொண்டு, இராணுவப் படையினர் கட்டவிழ்த்து விடும் வன்முறையால் பாதிக்கப்பட்டு, முடிவில்லாத அச்சத்துடன் வாழ்கின்றனர்” என்று சுட்டிக் காட்டியிருக்கிறோம். இத்தகைய மனித உரிமை மீறல்களையும், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளையும் விசாரிப்பதற்காகச் சுதந்திரமான நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச அளவிலான விசாரணைக் கமிஷன் அமைத்திட வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 250 பேருக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தியக் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த “சுஜாதா, தரங்கிணி, வருணா” ஆகிய மூன்று கப்பல்கள்தான் இந்தப் பயிற்சியை அளித்துள்ளன என்றும் செய்திகள் வருகின்றன. இலங்கைக் கடற்படை துணைத் தளபதி ஒருவர் இலங்கைக் கடற்படையினரில் 80 சதவிகிதம் பேருக்கு இந்தியாதான் பயிற்சி அளிக்கிறது என்றே கூறியிருக்கிறார். இந்தச் செய்திகள் எல்லாம் நம்முடைய வேதனையை நாளும் நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இலங்கை ராணுவத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களானாலும் அவர்களுக்கு இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்று நாமும் ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ள அத்தனை பேரும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தும்கூட, இன்னமும் அத்தகைய பயிற்சிகள் தொடர்வது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. மத்திய அரசின் இத்தகைய செயலைத் தமிழகத்தின் சார்பில் கண்டிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

இதற்கிடையே இன்று ஆங்கில நாளேடு ஒன்றில் வந்துள்ள செய்தியின்படி, “காமன் வெல்த்” சட்ட மாநாடு ஒன்று ஏப்ரல் 14 (முதல் ஏப்ரல் 18 ஆம் தேதிவரை தென்னாப்பிரிக்கா வில் உள்ள “கேப்-டவுன்” நகரத்தில் நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டில் காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒருமனதாக அந்த மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தில், காமன்வெல்த் அமைச்சர்கள் சார்ந்த நடவடிக்கைக்குழுவின் கூட்டம் 26-4- 2013 அன்று லண்டன் மாநகரத்திலே நடைபெறவுள்ளது; அந்தக் கூட்டத்தில் முக்கியமாக இலங்கைப் பிரச்சினை பற்றிப் பரிசீலனை செய்து காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்; தொடர்ந்து இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் காமன்வெல்த் போற்றி வரும் அடிப்படை கொள்கை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை நீக்குவது முக்கியத்துவம் பெறுகிறது; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றெல்லாம் காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள், இலங்கையின் தலைமை நீதிபதி திருமதி ஷிரானி பண்டாரநாயகே இலங்கை அதிபரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட தற்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

25-3-2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், “இனப் படுகொலையை நடத்தி, தமிழ் ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் நியாயமானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன்வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் 6-4-2013 அன்று நான் விடுத்த அறிக்கையிலும், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்பது குறித்து 26-4-2013 அன்று இலண்டன் மாநகரில் அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறேன்.

அன்றையதினம் நாம் வலியுறுத்திய அந்தக் கோரிக்கையைத்தான் இன்றையதினம் காமன் வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகளும் எதிரொலித்திருக்கிறார்கள். எனவே இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற முடிவினை காமன்வெல்த் நடவடிக்கைக் குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகள் எல்லாம் ஆதரிக்க வேண்டுமென்றும், அதற்கு நமது இந்திய அரசு தேவையான அழுத்தத்தைத் தர வேண்டுமென்றும் மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள, மு.க. 23-4-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗