உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3740

வருமுன் காப்பதா? வந்தபின் தவிப்பதா?

2013-04-22

உடன்பிறப்பே,

சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பஞ்சம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அ.தி.மு.க. அரசு குடிநீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் குடிநீர்த்திட்டங்களை 110வது விதியின்கீழ் அறிவிப்பதிலேயே காலத்தைச் செலுத்தி வருகிறது. அது என்னவோ? அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகமே காணாத வகையில் மின்வெட்டு. கிராமங்களில் மக்களால் வாழ முடியவில்லை. இந்த ஆண்டு விவசாயிகள் சாகுபடியே செய்யவில்லை, செய்தவர்களும் மகசூலைப் பெற வில்லை. காரணம், காவிரியில் சாகுபடிக்கான தண்ணீரை இந்த ஆட்சியினரால் பெற்றுத்தர இயலவில்லை! இதோ குடிநீர்ப் பஞ்சம் வந்துவிட்டது. மேட்டூர் வரலாறு காணாத அளவிற்கு வறண்டு கிடக்கிறது. காவிரி ஓடையாகக் காட்சி தருவதை புகைப்படம் எடுத்து ஏடுகளிலே வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் இதையெல்லாம் மறைத்துவிட்டு, “நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்க ஆயிரம் கோடி ரூபாயில் புதிய குடிநீர்த் திட்டம்” ஒன்றை முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் அறிவித்திருக்கிறார்.

22-2-2013 அன்று முதலமைச்சர் திறந்துவைத்த நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் வரலாறு என்ன தெரியுமா?

சென்னை மாநகரின் குடிநீர்ப் பிரச்சினையைப் போக்கிட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒன்றைச் சென்னைக்கு அருகே அமைத்திட வேண்டுமெனத் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. 2004இல் மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டது. அதன்பயனாக, 2004-2005ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அளித்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர், “சென்னை மற்றும் கொரமண்டல் கடற்கரை நெடுகிலும் உள்ள நகரங்களுக்கு நாளொன்றுக்கு 300 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறனுடைய கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்” - என அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, மத்திய அரசின் நிதி உதவியைப் பெற்றுச் சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்துமாறு அன்றைய அ.தி.மு.க. அரசுக்குப் பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனினும், இத்திட்டத்தைச் செயல்படுத்தாமல் இறுதிவரை அ.தி.மு.க. அரசு இருந்துவிட்டது. 2006இல் தமிழகத்தில் கழக அரசு அமைந்த பின், தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்து 27.1.2008 அன்று மத்திய நிதியமைச்சர் அவர்களிடம் நானே நேரில் வழங்கி இத்திட்டத்திற்கான அனுமதியையும், நிதியுதவியையும் உடனே வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். இத்திட்டத்திற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் 908 கோடியே 28 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திடப் பரிந்துரை செய்தது. 2009 மார்ச் திங்களில் இத்திட்டத்திற்குரிய நிதியில் மத்திய அரசு தமிழக அரசுக்கு முதல் தவணையாக 300 கோடி ரூபாயை வழங்கியது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளை 23.2.2010 அன்று துணை முதலமைச்சராக இருந்த தம்பி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இத்திட்டத்திற்கான பணிகள் அனைத்தையும் 2011 டிசம்பருக்குள் நிறைவேற்றி முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 2011 டிசம்பருக்குள் முடிந்திருக்க வேண்டிய பணிகள் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக ஓராண்டுக்குப் பிறகு இப்போதுதான் தொடக்க விழா நடைபெற்றிருக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா படித்த அறிக்கையில் 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒன்றை மீஞ்சூரில் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் அவருடைய முந்தைய ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டதைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் திட்டம் பற்றிய ஒரு குறிப்பு வருமாறு :-

சென்னைப் பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரியம் மீஞ்சூர் நகரில் கடல்நீரைச் சுத்தப்படுத்தி, சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது கோரியது. இரண்டு கம்பெனிகள் மட்டுமே டெண்டர் கேட்டனர். ஒரு கம்பெனி ரஷ்ய அரசுக்குச் சொந்தமானதும், உலகத்தரமுள்ள முக்கியமான ஒருசில கம்பெனிகளில் ஒன்றுமாகும். இந்தக் கம்பெனியின் பெயர் “மெசர்ஸ் க்ருனிசேவ் மாநில ஆய்வு மற்றும் தயாரிப்பு ஸ்பேஸ் சென்டர்” என்பதாகும். மற்றொரு போட்டியாளர் “மெசர்ஸ் மார்சன் கம்பெனி”. இது ப்ரெஞ்சுக் கம்பெனியாகும். இந்த இரண்டாவது கம்பெனி முறையான ஒப்பந்தப் புள்ளி தாக்கல் செய்யாததால், ரஷ்யக் கம்பெனி மட்டுமே இறுதியான ஒப்பந்தக்காரராக மிஞ்சியது.

ரஷ்யக் கம்பெனி சார்பில் ரஷ்யாவிலிருந்து ஒரு குழு சென்னை வந்து தமிழக அரசின் இந்தத் துறை குறித்த அமைச்சர், அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தபோது, நேரடியாக வாய்மொழி உத்தரவாக இந்த டெண்டரில் முன்வைப்புத் தொகை செலுத்துவது குறித்து விதிவிலக்கு தரப்படும் என்றும், வற்புறுத்தப்பட மாட்டாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

செப்டம்பர் 2003இல் ரஷ்யக் கம்பெனிக்கு; இந்த ஒப்பந்தப் புள்ளி முன்வைப்புத் தொகை கட்டாததாலும், தாங்கள் ஒருவர் மட்டுமே இந்த ஒப்பந்தப் புள்ளியைக் கோரியிருப்பதாலும் கிடைக்காது என்ற தகவல் தெரிகிறது. ஒரேயொரு ஒப்பந்தப் புள்ளி என்பதைப் பொறுத்தவரையில் ஒப்பந்த ஆவணங்களிலோ அல்லது தமிழ்நாடு அரசின் ஒப்பந்தப் புள்ளி அளிப்பது குறித்த சட்டத்திலோ கொடுக்கக் கூடாது என்பதற்கான தடை எதுவும் இல்லை. இதையெல்லாம் குறிப்பிட்டுத் தனது மனுவை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று இந்தக் கம்பெனி குடிநீர் வாரியத்திடம் கேட்டுக்கொள்கிறது. இதற்கு எந்தவிதமான பதிலும் வராத காரணத்தினால், இந்தக் கம்பெனி தமிழக முதல் அமைச்சருக்கு 15.9.2003 அன்றும், 19.9.2003 அன்றும் நேரடியாக இந்தப் பிரச்சினையிலே தலையிட்டு உதவிட வேண்டுமென்று எழுதுகின்றது.

முதலமைச்சருக்கு எழுதிய 15.9.2003 தேதியிட்ட கடிதத்தில், குடிநீர் வாரியத்தின் தவறான முடிவிற்கு உண்மையான காரணம் வேறாக இருக்குமென்று தெரிகிறது என்றும், குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்குப் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு சில பேர் பலமுறை தங்களுக்கும் மாஸ்கோவிற்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 50 கோடி லஞ்சமாகக் கேட்டார்கள் என்றும், ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டபோது அவர்களும் மண்டபத்தின் வெளியே காத்திருந்ததோடு மீண்டும் அவர்களுடைய வேண்டுகோளை வலியுறுத்தினார்கள் என்றும் மாநில அரசு விரிவான விசாரணையை நடத்தினால் இது குறித்த விவரத்தைத் தரவும் தயாராக இருக்கிறோம் என்றும் எழுதியிருக்கிறார்கள்.

இந்தக் கடிதங்களுக்குப் பிறகு - எந்தவிதமான காரணமும் இன்றி இந்தக் கம்பெனிக்கு எந்தப் பதிலும் அளிக்காமல் திடீரென்று 22-9-2003 அன்று இதே பணிக்காகப் புதிய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யக்கம்பெனி சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து ரிட் மனு தாக்கல் செய்தது. அதனையேற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இப்பணிக்காக மறு ஒப்பந்தப் புள்ளி கோருவதற்குத் தடை விதித்தது. விசாரணையின்போது ரஷ்யக் கம்பெனியின் வழக்கறிஞர் 50 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதற்கான டேப்ரிகார்டர் ஆதாரம் தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்தார். விசாரணை தொடர்ந்து நடந்தது.

2006இல் கழக அரசு அமைந்தபிறகு, இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து இந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டிருந்த விலையில் ஓரளவுக்குக் குறைத்து, நிர்ணயம் செய்யப்பட்டு 25.2.2007 அன்று - உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுப், பல்வேறு தொழில் நுட்பக் காரணங்களினால் திட்டத்தை நிறுவுதலில் தாமதம் ஏற்பட்ட போதிலும், சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ள இத் திட்டத்தின் சோதனை இயக்கத்தினை இந்தத் துறையின் அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்த மு.க.ஸ்டாலின் 2.6.2010 அன்று தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில், பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டிருக்கிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது. மேட்டூர் அணையும் வறண்டு விட்டது. இவற்றைப் பற்றியெல்லாம் அ.தி.மு.க. அரசு கவலைப்படாமல், 110வது விதியின்கீழ்த் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கின்றது. அந்தத் திட்டங்கள் எப்போது நடைமுறைக்கு வருவது? எப்போது தமிழ்நாட்டு மக்கள் குடிநீரை அருந்துவதோ? எப்படிப் போனால் என்ன? தமிழ்நாட்டு மக்களுக்குக் குடிநீர் கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? வெறும் காகித அறிவிப்பு, தமிழ் மக்களின் தண்ணீர் தாகத்தைத் தணித்திடுமா?

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் கடும் வறட்சியில் சிக்கித் தவித்து வருகின்றன. குளங்களிலும், கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. தண்ணீர்த் தேவை அதிகரிப்புடன் மின்வெட்டுப் பிரச்சினையும் இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆங்காங்குக் குடிநீருக்காகத் தமிழகத்தில் பல இடங்களிலே போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. மக்கள் காலிக் குடங்களுடன் இரவுப் பகலாகக் கண்விழித்துத் திரிகின்ற நிலை காணப்படுகிறது. தண்ணீருக்காக கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களைத் தமிழகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அந்த மாநிலங்களோடு தமிழக அரசு சுமூக உறவு கொள்ளாமல் பகை நோக்குடன் நடந்து கொண்ட காரணத்தால், தமிழகத்தில் இருக்கின்ற நீர்நிலைகள் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டதாகச் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுக் கூறுகிறார்கள். காவேரி, வைகை, தாமிரபரணி போன்ற நதிகள் எல்லாம் மணல் திட்டுகளாகி விட்டன. மழை பெய்யாத நிலையில், மழை பெய்தபோது கிடைத்த நீரைப் பக்குவமாகச் சேர்த்து வைக்கும் பணியிலே அரசு அக்கறை காட்டவில்லை. ஆறுகளில் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதால் கடலோர மாவட்டங்களில் உள்ள நன்னீர் உப்பு நீராக மாறி, குடிநீருக்குப் பயனற்றதாக ஆகிவிட்டது.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை, மாநகரின் குடிநீர்த் தேவைக்கான செங்குன்றம், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி நீர்த் தேக்கங்களின் கொள்ளளவு 11.057 டி.எம்.சி. ஆகும். ஆனால் இந்த நீர்த் தேக்கங்களில் சுமார் 10 அடி வரை சேறும் வண்டல் மண்ணும் நிற்கிறது. இதனால் ஏரியின் முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீரைத் தேக்க இயலவில்லை. அதேபோல கண்டலேறுவிலிருந்து கிருஷ்ணா கால்வாயில்; வாய்க்கால் சீரமைக்கப்படாததால் வரும் நீர் வீணாகி ஆந்திராவில் உள்ள வயல்களிலும், வாய்க்கால்களிலும் தேங்கி விடுகிறது.

சென்னை மாநகர மக்களுக்குக் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நாள் ஒன்றுக்கு 831 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் 766 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீட்டு உபயோகத்திற்காகவும், 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் மொத்த நுகர்வோர்களுக்கும், 37 மில்லியன் லிட்டர் தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படுகிறது. இதைத் தவிர, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கிணறுகள் மற்றும் போர்வெல்களிலே இருந்து தண்ணீரைக் கொண்டு வந்து நகரிலே தனியார் லாரி உரிமையாளர்கள் பெரிய ஓட்டல்களுக்கெல்லாம் விற்பனைசெய்து வருகிறார்கள். தற்போது நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் லோடு நகரிலே விற்பனை ஆவதாகவும், போகப்போக இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

கிராமங்களிலே “தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது” என்பார்கள். ஆனால் இந்த ஆட்சியினர் அவ்வாறு வாலைப் பிடிக்கவும் முயற்சி செய்யாமல் காலத்தைக் கடத்திவிட்டார்கள். தமிழகத்தில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் என்பதைப் பற்றி முன்கூட்டியே கணித்து, வருமுன் காத்திட வேண்டிய அ.தி.மு.க. அரசு, தண்ணீர்ப் பஞ்சம் வருவதற்குமுன் காத்திடத் தவறி விட்டது. தண்ணீர்ப் பஞ்சம் தற்போது வந்ததற்குப் பின்னரும், அதிலிருந்து மக்களைக் காத்திடும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அதிகாரிகளை அழைத்துப் பேசுவதாகப் புகைப்படங்களை வெளியிட்டு, அன்றாடம் ஒன்றிரண்டு 110 அறிவிப்புகளைப் பேரவையிலே படித்துவிட்டு, ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும், விளம்பர உத்திகளிலும் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது. பாசனத்திற்குத் தண்ணீர் பெற்றுத்தராமல் விவ சாயிகளைக் கண்ணீரில் தவிக்கவிட்ட இந்த ஆட்சியினர், நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம், 18 மணி நேரம் என்று மின்வெட்டு செய்து தொழிற்சாலைகளை மூடவைத்து, தொழிலாளர்களை வாட விட்ட இந்த ஆட்சியினர், தற்போது குடிநீர்ப் பஞ்சத்திற்குக் காரணமாகிப் பெண்களைக் காலிக்குடங்களுடன் அலைக்கழிப்புக்கு ஆளாக்கியுள்ளனர். இன்னும் என்னென்ன கொடுமைகளோ?

அன்புள்ள, மு.க. 22-4-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗