உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3739

மறக்க முடியாத மாமணிகள் - இருவர்! கலைஞர் இரங்கல் கடிதம்!

2013-04-21

உடன்பிறப்பே,

கடந்த மாதம் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம், 23-3-2013 அன்று அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தையொட்டி வேறு ஒரு நிகழ்ச்சிக்கு தேதி வாங்குவதற்காக தொ.மு.ச. பேரவையின் தலைவர் செ. குப்புசாமி, சண்முகம், ரெத்தினசபாபதி மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் என்னைச் சந்தித்துக் கேட்ட போது உடனடியாக ஒப்புக் கொண்டேன். பொதுக் குழுவின் சிறப்புக் கூட்டத்திலும் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு அருகே அமர்ந்திருந்த அந்த உருவம், செ. குப்புசாமி இன்று இல்லையாம்! நேற்றிரவு அந்தச் செய்தி என்னிடம் தெரிவிக்கப்பட்ட போது துடித்துப் போய்விட்டேன். அவரைப் பற்றி எத்தனை எத்தனையோ நினைவுகள்.

மத்திய அரசில் ரயில்வே துறையில் வேலை கிடைப்பது என்பது அந்தக் காலத்தில் மிகவும் அரிது. ஆனால் குப்புசாமி அவர்கள் மத்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். கழகத்தின் மீதுள்ள பற்றுக் காரணமாக அந்த அரசுப் பணியை உதறிவிட்டு; பிற்காலத்தில் தொ.மு.ச. பேரவைக்கு தலைவராக வருவார், நாடாளுமன்ற உறுப்பினராக வருவார், என்றெல்லாம் எதிர்பார்க்காத நிலையில் அந்தப் பொறுப்புகளுக்கு வந்தவர். அவர் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த காலத்திலிருந்து அவரை நான் நன்கறிவேன். பண்ருட்டியில் கழகக் கூட்டம் எங்கே நடந்தாலும், அதிலே கலந்து கொள்ளும் சிறப்புப் பேச்சாளர்களுக்கு குப்புசாமி தன் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு வருவார்.

தொ.மு.ச. பேரவைப் பொதுக்குழுவில் அண்மையில் நான் பேசிய போது, குப்புசாமி அவர்கள் இவ்வளவு விரைவில் நம்மை விட்டுப் பிரிந்து விடுவார் என்று நினைக்க முடியாத நிலையில், கூட்டத்தின் தொடக்கத்தில் அவரைப் பற்றித்தான் நீண்ட நேரம் பேசினேன். மத்திய அரசில் ஸ்டேஷன் மாஸ்டராக அவர் பணியாற்றிய அந்தக் காலத்திலும், அதற்குப் பிறகும், திராவிட இயக்கத்திலே தந்தை பெரியாருடைய கொள்கைகளிலே ஈடுபாடு கொண்டு தொடர்ந்து அறிஞர் அண்ணா அவர்களிடத்திலே பற்றும் பாசமும் கொண்டு - அதே வழியில் என்னிடத்திலும் அன்பு கொண்டு பணியாற்றி வந்தவர். அவருக்கும் எனக்கும் ஏறத்தாழ ஓரிரு வயதுதான் வித்தியாசம் இருக்க முடியும்.

கழகத்தின் தலைமை அலுவலகம் ஓமந்தூரார் வளாகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த போது, குப்புசாமி தலைமைக் கழகத்தின் செயலாளர்களில் ஒருவர். அரசு அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பதாலோ என்னவோ காலை 9 மணிக்கெல்லாம் அலுவலகத்திற்கு வந்து விடுவார். அவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கும், நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கும் நீண்ட தூரம். எனினும் அன்றாடம் இருபது தடவைகளாவது அதற்கும் இதற்கும் நடந்து வந்து கொண்டே இருப்பார். நான் அலுவல் காரணமாக எவ்வளவு கடிந்து கொண்டாலும், எதுவுமே நடக்காத மாதிரி பொறுமையாக அடுத்த கணமே பதில் சொல்லுவார்.

குப்புசாமி அவர்களுடைய வாழ்க்கையில் - அவருடைய சொந்த வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி, எத்தனையோ சோதனைகள்! அந்தச் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக ஆக்கிக் கொண்டு, அதுபற்றி எந்த விதமான “லவலேசம்” என்று சொல்வார்களே, அதாவது எந்தவிதமான கவலையும் கொள்ளாமல், தன்னுடைய பணியைத் தொடர்ந்து ஆற்றிக் கொண்டே இருப்பவர் அவர்.

இந்த இயக்கத்திலேயே அவர் உருவாக்கி, இன்றளவும் பாடுபட்டு, பணியாற்றிக் கொண்டிருந்த தொழிற் சங்கப் பாசறையிலே கூட, அவரைப் பற்றிய கருத்து மாறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. அதையெல்லாம் அவர் எப்படிச் சமாளித்தார், எப்படித் தாங்கிக் கொண்டார், எப்படி அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இதுவரைப் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்பதையெல்லாம் நான் எண்ணும்போது, அவர் எனக்குத் தோழர் அல்லவா? எனக்கு நண்பர் அல்லவா? ஆகவே எனக்குள்ள சோதனைகளை நான் எண்ணிக் கவலைப்படுவதா அல்லது குப்புசாமி போன்றவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளைப் பற்றிக் கவலைப்படுவதா என்று சீர்தூக்கிப் பார்க்கும்போது, அந்தச் சோதனை பெரிதா? இந்தச் சோதனை பெரிதா என்ற கேள்விக்கே இடமில்லாமல் இரண்டு சோதனைகளும் பொதுவாக உள்ள சோதனைகள்தான், இந்த இயக்கத்திலே உழைப்பவர்களுக்கு உருவாகிற சோதனைகள்தான் என்றுதான் அவரும் எண்ணி, இந்த இயக்கத்தைக் காத்து வந்தார். 1977ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தொ.மு.ச. பேரவையின் தலைவராக பொறுப்பேற்றுப் பணியாற்றியவர் தோழர் செ.குப்புசாமி. தொ.மு.ச. பேரவை ஒரு மத்தியத் தொழிற்சங்கமாக 1970ஆம் ஆண்டு முதல் செயல்பட்டாலும், மத்திய அரசின் மத்தியத் தொழிற்சங்கத்துக்குரிய தகுதியைப் பெற முடியாமல் இருந்த நிலையை மாற்றியமைத்து குப்புசாமி அவர்கள் எடுத்து வந்த தொடர் முயற்சிகளினாலே 2008ஆம் ஆண்டில் அந்த “தகுதி” தொ.மு.ச. பேரவைக்குக் கிடைத்தது. அதனாலேதான் தொ.மு.ச. பேரவை இந்தியத் தொழிலாளர் நிலைக் குழு, இந்தியத் தொழிலாளர் மாநாடு மற்றும் சர்வதேசத் தொழிலாளர் மாநாடுகளிலும் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. தொ.மு.ச. பேரவை 13 மாநிலங்களில் இணைப்புச் சங்கங்களைத் தொடங்குவதற்கும், சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை 15 லட்சத்திற்கும் மேல் உயர்த்துவதற்கும் காரணகர்த்தாவாக இருந்து அரும்பணியாற்றிய அருமை உடன்பிறப்பு குப்புசாமி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்தி வேதனையை அளிக்கின்றது. நம் விழி நீரைப் பெருக்குகின்றது! உழைப்பே உலகத்தின் உன்னதமான மூலதனமாகும். உழைப்பு விற்பனைக்குரிய பொருளல்ல. உழைப்பைத் தருபவன் ஒரு மனிதன். பெறுபவனும் மனிதன். மனிதர்கள் அனைவரும் சம நிலையிலே உள்ளவர்கள். யாரும், யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை - என்ற உயரிய எண்ணங்களோடு வாழ்நாள் முழுதும் பணியாற்றி மற்றவர்களுக்கும் அந்த எண்ணத்தை ஏற்படுத்தியவர்தான் குப்புசாமி. வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி என்ற காரணத்தால் கழகத்தின் சார்பில் குப்புசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். அதற்கடுத்த முறை, அவர் உடல் நிலை கருதி, அந்தத் தொகுதியை வேறொருவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது, அதைப் பெருமனதோடு ஏற்றுக் கொண்டு, எந்தவிதமான மனக்கிலேசமும் கொள்ளாமல், வடசென்னை நாடாளுமன்றக் கழக வேட்பாளரின் அறிமுகக் கூட்டத்திலேயே கலந்து கொண்டார். அவருக்குக் கழகத்தின் சார்பில் தரப்பட்ட எல்லாப் பணிகளையும் கழகத்தின் வளர்ச்சிக்காகவே ஆற்றினார். மறைகின்ற நாள் வரை, கழகம், கழகம், கழகம் என்றே பாடுபட்ட மறக்க முடியாத மாமனிதர்தான் மறைந்த நண்பர் செ.குப்புசாமி. அவர் மறைந்தாலும், கழகம் இருக்கின்ற வரையில், தொ.மு.ச. பேரவை இருக்கும் வரையில் செ. குப்புசாமியின் நினைவுகள் நீடிக்கும். வாழ்க குப்புசாமி. ★ ★ ★

அடுத்து, “துன்பம், துணையோடு வரும்” என்பார்களே, அது போல நேற்றையதினம் நமக்குக் கிடைத்த மற்றொரு துன்பச் செய்தி, “தினத்தந்தி” நாளிதழின் அதிபரும், இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவருமான டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் அவர்கள் நேற்றிரவு 10 மணி அளவில் மறைந்துவிட்டார் என்ற செய்தியாகும்.)

தமிழகத்திலே “நாம் தமிழர் இயக்கம்” கண்டு, தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பெரிதும் பாடுபட்டவரும், தமிழகத்திலே உள்ள சாதாரண, சாமான்யர்களுக்கு நாளேடுகளைப் படித்து நாட்டின் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற விழைவினை ஏற்படுத்தியவரும், பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டு தமிழகத்திலே ஆட்சி அமைத்த போது, பேரவைத் தலைவராகப் பணியாற்றியவரும், அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969இல் என் தலைமையிலான அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை, வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்து சீரியப் பணிகளை ஆற்றியவருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் இளைய மைந்தர்தான் நண்பர் சிவந்தி ஆதித்தன். எனக்கு வாய்த்த உயிர் நண்பர்களில் ஒருவராக சிவந்தி அவர்கள் திகழ்ந்தார்கள்.

இன்னும் சொல்லப்போனால் நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை என்னைச் சந்தித்து தமிழகத்தின் அரசியல் நிலை, இந்தியாவின் அரசியல் நிலை ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்வதோடு, அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கை, குடும்பம் பற்றியெல்லாம் என்னிடம் அளவளாவிடுவார். அவர் கடந்த சில வாரங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையிலே நினைவில்லாத நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியினை அறிந்ததும், எனக்குத் தெரிந்த பிரபல மருத்துவர் தேவராஜ் அவர்களைத் தொடர்பு கொண்டு, உடனே சிவந்தி அவர்களைப் பார்த்து விட்டு, நான் வந்து காண முடியுமா என்று கேட்கச் சொன்னேன். மேலும் கழகப் பொருளாளர் தம்பி தளபதி ஸ்டாலினையும் நேரில் அனுப்பி பார்த்து வரச் செய்தேன் ஆனால் சிவந்தி அவர்கள் நினைவிழந்த நிலையில் இருப்பதாகவும், யாரையும் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறிய காரணத்தால், நான் நேரில் சென்று மருத்துவமனையில் பார்க்க இயலவில்லை. எப்படியும் உடல் நலம் ஓரளவுக்குத் தேறி நினைவுக்கு வந்து விடுவார், நேரில் சென்று காணலாம் என்று எண்ணியிருந்த நிலையில், அவருடைய மறைவுச் செய்தி கிடைத்து திடுக்கிட்டுப் போனேன். அவரை இழந்து வாடும், அவருடைய அருமை மைந்தன், அன்புத் தம்பி பாலசுப்ரமணியத்திற்கும், அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், “தினத்தந்தி” உள்ளிட்ட அவரது நிறுவனங்களில் பணியாற்றும் அருமைத் தோழர்களுக்கும், குறிப்பாக அவரைப் பெரிதும் நம்பியிருந்த அந்தச் சமுதாயப் பெருமக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறக்க முடியாத மாமணிகள் இருவரின் மறைவுக்கு என் கண்ணீர் அஞ்சலி!

அன்புள்ள, மு.க. 21-04-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗