உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3734

நாகரிகயுகத்தில் நரபலிக் கொடுமையா?

2013-04-15

உடன்பிறப்பே,

நரபலிக்காகக் குழந்தையைக் கொலை செய்த செய்தியை இன்று (14-4-2013) தமிழ் நாளேடு ஒன்றில் பார்த்தேன்.

சென்னை - வியாசர்பாடியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி செந்தில். அவருடைய மனைவியின் பெயர் கீதா. அவர்களுக்கு இரண்டரை வயதில் விஷ்ணு என்ற மகன் இருந்தான். 9-4- 2013 அன்று குழந்தை விஷ்ணு, பக்கத்து வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் பேரலுக்குள் மூழ்கிக்கிடந்தான். அதைக் கண்ட உறவினர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் குழந்தை வழியிலேயே இறந்துவிட்டான்.

குழந்தை விஷ்ணு தண்ணீருக்குள் தவறி விழுந்து இறந்துவிட்டதாகப் பெற்றோர் நினைத்து, உடலை எரித்து விட்டனர். இதற்கிடையே அந்தப் பகுதியில் உள்ள ஜோசியர் என்பவர், குழந்தையை அவருடைய சின்ன பாட்டியான மகேஸ்வரி என்பவர்தான் தண்ணீர்த் தொட்டியில் அமுக்கிக் கொலை செய்ததாக அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். காவல்துறையினருக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் மகேஸ்வரியை அழைத்து விசாரித்தபோது, அவர் குழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருக்கிறார். அந்த வாக்குமூலத்தில், “செந்தில் குடும்பத்திற்கும், எனக்கும் இடையே மன வேறுபாடு இருந்து வந்தாலும், செந்திலின் மகன் விஷ்ணு எப்பொழுதும் என்னுடன்தான் விளையாடுவான். 7-4-2013 அன்று இரவு எங்கள் தெருவுக்கு வந்த ஒரு குடுகுடுப்பைக் காரனிடம் என் கையை நீட்டி ஜோசியம் பார்த்தேன். அப்போது எனக்கும், எனது குடும்பத்திற்கும் யாரோ “செய்வினை” வைத்ததாகத் தெரிவித்து, 2000 ரூபாய் கொடுத்தால் அந்தச் செய்வினையை அகற்றிவிடுவதாக அந்தக் குடுகுடுப்பைக்காரன் தெரிவித்தான். மறுநாள் அந்தக் குடுகுடுப்பைக்காரன் மந்திரித்த எலுமிச்சம் பழம், 2 தாயத்து, குங்குமம் போன்ற பொருள்களைக் கொடுத்து தாயத்தை என்னையும் என் குழந்தையையும் கட்டிக் கொள்ளுமாறு கூறினான். குடுகுடுப்பைக்காரன் என்னிடம் இருந்து 1000 ரூபாய் பெற்றுக்கொண்டான். தாயத்தைக் கட்டிய சிறிது நேரத்திலேயே நான் சுயநினைவை இழந்தேன். குழந்தை விஷ்ணுவைப் பார்க்கும் போது எனக்கு ஆத்திரமாக இருந்தது. குழந்தையைக் கொலை செய்துவிடலாம் என்று தோன்றியது. 9-4-2013 அன்று நான், குழந்தையை அழைத்து வந்து, வீட்டில் இருந்த தண்ணீர்த் தொட்டிக்குள் அமுக்கிக் கொலை செய்ய முயற்சித்தேன். குழந்தை மூச்சுத் திணறி உயிருக்குப் போராடினான். உடனே குழந்தையைத் தூக்கிக்கொண்டு பக்கத்து வீட்டு மாடிக்குச் சென்று, அங்கிருந்த தண்ணீர் பேரலில் குழந்தையைத் தலைகீழாகப் போட்டுவிட்டு, தவறி விழுந்துவிட்டதாக நாடகமாடினேன். அனைவரும் அதை நம்பினர். குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் குழந்தை விஷ்ணு இறந்துவிட்டான்” என்று தெரிவித்திருக்கிறார். மகேஸ்வரி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை விஷ்ணுவை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவன் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்ததாகப் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள். மகேஸ்வரி, “தோஷம்” கழிக்கும் நோக்கத்தில் குழந்தையை நரபலிக்காகக் கொலை செய்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கருதுகிறார்கள். இந்தச் செய்தியைப் படித்தபோது, நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம், என் எண்ணத்தைத் துளைத்தெடுத்தது. அறிவியல் மிகவும் முன்னேறியிருக்கும் காலம் இது. மனித அறிவுக்கு எட்டாதது எதுவுமே இல்லை என்ற நிலை உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. உயிர்களின் பரிணாம வளர்ச்சி, கோள்களைப் பற்றிய முழுமையான ஆய்வு, தகவல் தொழில்நுட்பம் எனும் அறிவியல், இவ்வுலகத்தையே ஒரு சிறு கிராமமாகச் சுருக்கியதோடு - உள்ளங்கையில் உலகம் என்ற நிலை; - இப்படி மனித அறிவு, ஆழமாகவும் அகலமாகவும், எல்லை இதுதான் என்று வரையறுத்திட முடியாத அளவுக்கு விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும், மனித அறிவின் அருமை பெருமைகளை வியந்து போற்றுகின்ற அதே வேளையிலேதான்; “செய்வினை - குடுகுடுப்பைக்காரன் - தாயத்து - தோஷம் - நரபலி” என்றெல்லாம் செய்திகள் செவிகளில் விழும்போது; வியக்கத்தக்க உயரத்திற்கு விஞ்ஞானம் சென்றதற்குப் பிறகும், மூடநம்பிக்கை எனும் பள்ளத்தாக்கில் இருந்து இன்னும் மனித இனத்தின் ஒரு பகுதி விடுபடவில்லையோ என்று தோன்றுகிறது.

உலகம் தோன்றிய நாள் தொட்டு, தந்தை பெரியாரும் அவரைப் பின்பற்றித் தன்மான இயக்கத்தினரும் ஆற்றி வரும் எவ்வளவோ பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குப் பிறகும், உடன்பிறந்தே கொல்லும் வியாதியாக மூடநம்பிக்கையும், நல்ல கழனியில் தோன்றும் களையைப் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சமுதாயத்தை அரிக்கத்தான் செய்கிறது. இந்த மூடநம்பிக்கைக்களையை முற்றிலுமாக அகற்றுவது என்பது மிகச் சிறந்த சமுதாயப் பணியாகும். அரசியலைக் கடந்து, கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், அனைவரும் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியப் பணியாகும் இது.

“நமது மக்கள் அனைவரும் மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து என்றைக்கு விடுபடுகின்றார்களோ, அன்றுதான் நம் நாட்டின் உண்மையான விடுதலையை நாம் அடைந்ததாக அர்த்தமாகும்” என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை, அனைவரும் நினைவு கூர்ந்து, அயராது செயலாற்றுவதே நமது சமுதாய முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும்.

அன்புள்ள, மு.க. 15-4-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗