தொகுதி 48 · கடிதம் 3733
ஓங்கிக் குரல் கொடுப்போம்!
2013-04-14
உடன்பிறப்பே,
தமிழகத்திலே சட்டப்பேரவை கடந்த முறை எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்துக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு “தினமலர்”, “தினத்தந்தி” நாளேடுகள் எழுதியிருந்ததுதான் இப்போது என் நினைவுக்கு வந்தது.
“தினமலர்” எழுதியிருந்ததாவது:-
“தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பல முறை வெளி நடப்பு செய்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், இரு முறை வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சியும் இணைந்ததுதான் சட்டசபை. மிருக பலம் ஆளுங்கட்சிக்கு இருந்தாலும், சட்டமன்ற ஜனநாயகத்தைப் பின்பற்ற வேண்டும். எதிர்க் கட்சிகள் சட்டசபையில் தொடர்ந்து இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அ.தி.மு.க. அரசு இதைச் செய்யத் தவறுகிறது. விதி 110இன்கீழ் அனைத்து அறிவிப்புகளையும் முதல்வர் வெளியிடுவது முறையற்றது; விதிமீறலும்கூட. வாழ்த்தி மட்டுமே பேச வேண்டும்; விவாதங்களோ, விமர்சனங்களோ இருக்கக் கூடாது என்பதற்காக, விதி 110ன் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்புடையதல்ல. எவ்வளவுதான் விரோதங்கள் இருந்தாலும் பார்லிமெண்ட்டிலிருந்து இதுவரை ஒரு உறுப்பினர் கூட வெளியேற்றப்பட்டதில்லை. அப்படிப்பட்ட ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் சட்டசபையும். ஆனால் இங்கு ஜனநாயகப் படுகொலைகள் தான் அரங்கேறி வருகின்றன. இது நாட்டுக்கு நல்லதல்ல. எந்தப் பிரச்சினை குறித்தும் விவாதிக்க முடியாது; வெறும் அறிவிப்புகள் மட்டும் வெளிவரும் என்பது, ஜனநாயக முறையல்ல. தமிழகத்தில் மட்டும்தான், இப்படி நடக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில், இது வாடிக்கையும் ஆகிவிட்டது. விவாதமே இல்லாமல் அனைத்தையும் ஏற்க வேண்டும் என்பது என்ன நியாயம்?
இதனால் சட்டசபையில் என்ன நடக்கிறது என்பதே வெளியில் தெரிவதில்லை. இது போன்ற செயல்பாடுகள் ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல!”
“தினத்தந்தி” எழுதிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-
“மூன்று நாட்களுக்கு முன்பு முடிவடைந்த சட்டசபை குளிர்கால கூட்டத் தொடரின்போது ஒரே நாளில் 23 மசோதாக்கள் நிறைவேறியிருக்கின்றன. அதுவும் விவாதம் இல்லாமல் நிறைவேறியிருக்கின்றன. சட்டமன்றப் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மசோதாக்கள் மீது விவாதம் நடத்த வேண்டுமென்றுகோரி, விவாதத்திற்குப் பிறகே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதை “ரன்-த்ரூ” என்று சொல்வார்கள். அதுபோல் விவாதம் இல்லாமல் “ரன்-த்ரூ” வாக ஒரே மணி நேரத்தில் 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.”
இவையெல்லாம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடைபெறும் நாளேடுகளிலேயே வந்த விமர்சனம்! எதிர்க்கட்சிகளின் கருத்துக்களையே கேட்கமாட்டோம், இன்னும் சொல்லப்போனால் எதிர்க் கட்சி என்ற ஒன்றையே இருக்கவிட மாட்டோம், இல்லாமல் செய்வதற்குத் தேவைப்படும் எல்லாவிதமான முயற்சிகளிலும் ஈடுபடுவோம் என்பது ஒரு நல்ல ஜனநாயக அரசுக்கு அழகல்ல. தமிழகத்தில் 2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் பிரதான எதிர்க்கட்சியாக தே.மு.தி.க.தான் அமைந்தது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிதான் தே.மு.தி.க. தற்போது அந்தக் கட்சி இந்த ஆட்சியிலே என்ன பாடுபடுகிறது? தே.மு.தி.க.விற்கும், தி.மு.கழகத்திற்கும் தோழமை கிடையாதுதான். ஆனாலும் அ.தி.மு.க. அரசு தே.மு.தி.க. என்ற எதிர்க்கட்சியின் மீது எடுக்கும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றையொன்று உரிய முறையில் மதித்திட வேண்டும்.
தே.மு.தி.க.விலிருந்து திடீரென்று ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள், முதல் அமைச்சரைச் சந்திக்கிறார்கள். தொகுதி மக்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வதற்காகத்தான் முதலமைச்சரைச் சந்தித்தோம் என்கிறார்கள். எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களுக்காக முதலமைச்சரைச் சந்திக்கச் செல்வதாக இருந்தால், தங்கள் கட்சியின் தலைமையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டாமா? அந்தக் கட்சியும் சேர்ந்து கடந்த தேர்தலில் பாடுபட்டதால்தானே இவர்கள் ஆளுங்கட்சியாக வந்து அதிகாரம் செலுத்த முடிகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் செயலா இது?
தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்ற “தலித்” சமுதாயத்தைச் சேர்ந்த சட்டமன்றப் பெண் உறுப்பினர் ஒருவர் “பாதுகாப்பு இல்லாத சூழலில் வாழ்கிறேன்” என்று கதறியதாக “தினமலர்” செய்தி வெளியிடவில்லையா? “அரசு விழாவில் கலந்துகொள்ளச் சென்றால், தனக்கு ஆளுங்கட்சியினர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இங்கே உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது” என்றெல்லாம் பேசியதாக அந்தப் பத்திரிகையிலே செய்தி வெளியிட்டார்களே?
தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டம் 8-2-2013 அன்று நடைபெற்றபோது, தே.மு.தி.க. சார்பில் வெற்றிபெற்று, வெளியேறியதாகக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் (தமிழழகன்) பேரவையில் பேசும்போது, தான் கட்சியிலிருந்து வெளியேறிய காரணத்தால், ஆட்சியினர் தன் தொகுதிக்கு நன்மைகளைச் செய்கிறார்கள் என்றும், மற்ற தே.மு.தி.க. உறுப்பினர்களும் தன்னைப் போல் முடிவு எடுத்தால், அவர்களும் பயன்பெறலாம் என்றும் வெளிப்படையாகப் பேரவையிலே சட்டமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கிடும் அளவுக்கு அழைப்பு விடுத்தது முறையா? அவரது அந்தப் பேச்சுக்கு தே.மு.தி.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையில் எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு சாராருக்கும் இடையே தகராறு அப்போது ஏற்பட்டது. தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்குள் நடைபெற்ற விவகாரம் இது. இதில் தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்று அக்கட்சியின் கட்டுப்பாட்டுக்குப் புறம்பாகச் செயல்படும் உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறி, தே.மு.தி.க.விலே தொடர்ந்து உறுதியாக இருக்கின்ற ஆறு பேர் மீது பிரச்சினை எழுப்பப்பட்டு, ஆறு மாத காலத்திற்கு “சஸ்பென்ட்” செய்யப் பட்டிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் முன்பாகக் கடந்த ஆண்டு 3-2-2012 அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் அவர்கள் மீதே அவர் அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டார் என்று ஒரு காரணத்தைக் கூறி சட்டமன்றக் கூட்டத் தொடரில் இருந்து பத்து நாட்களுக்கு “சஸ்பென்ட்” செய்யப்பட்டார். மேலும் அந்த நாட்களுக்கு அவர் எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையிலோ, சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையிலோ வழங்கப்பட்டுள்ள எந்தவிதமான ஆதாயத்தையும், ஊதியத்தையும், சலுகைகளையும், தகுதிகளையும் பெற முடியாது என்ற நிலைக்கு உள்ளாக்கினார்கள். பேரவையிலிருந்து நடவடிக்கை எடுத்தது மட்டுமல்ல; அவர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அவர் மீது எத்தனை அவதூறு வழக்குகள். அவர் மீது மாத்திரமல்ல; பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், ஊடகங்கள் மீது இந்த ஆட்சியிலே எத்தனை வழக்குகள். சி.என்.என். ஐ.பி.என். மீது நேற்றுக்கூட ஒரு அவதூறு வழக்கு! அவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா? அவர்கள் வெளியிட்ட “கார்ட்டூன்” ஒன்றில் செய்தியாளர் முதல்வரிடம் ஆட்சியை எப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்க, அதற்கு “முதலாளியைப் போல” என்று பதில் கூறுவதாகக் காட்டினார்களாம். அதற்காக அவதூறு வழக்கு. “ஆனந்தவிகடன்” பத்திரிகையில் தமிழக அமைச்சர்களைப் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்தது. இவ்வாறு ஒரு கட்டுரை வந்திருக்கிறது என்று நான் எழுதினேன். உடனே அந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருந்த அத்தனை அமைச்சர்களும் தனித்தனியாக என் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளனர். தமிழகத்தில் என்ன நடைபெறுகிறது? நெருக்கடி நிலையா? தமிழக மக்களின் நலன் கருதி, ஆட்சியைப் பற்றியோ, முதலமைச்சரைப் பற்றியோ யாரும் எதுவும் விமர்சித்துப் பேசக் கூடாதா?
தே.மு.தி.க.வைச் சேர்ந்த திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ., மீது ஏதோ ஒரு புகாரைக் கூறி கடந்த ஆண்டு அவரைக் கைது செய்தார்கள். அவர் மறுநாளே ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். உடனே உயர் நீதிமன்றத்தில் “அப்பீல்” செய்து ஜாமீனை ரத்து செய்து, கடந்த மூன்று நாட்களாக அவரைக் கைது செய்ய நான்கு தனிப்படைகளாம். என்ன கொடுமை இது? இங்கே என்ன ராணுவ ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா?
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுப் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அனுமதி கேட்டதற்குக்கூட இந்த ஆட்சியில் மறுக்கப்பட்டு, அந்தக் கட்சியின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு, அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களே நீதிமன்றம் சென்று அசம்பாவிதம் எதுவும் நடக்காது என்று உறுதி அளித்தபின் உயர்நீதிமன்றம் அம்பேத்கர் பிறந்த நாள் பேரணி நடத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால் வேதனை என்ன தெரியுமா? தமிழக அரசின் சார்பில் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்கிறார்களாம். ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த அணுகுமுறை இந்திய அரசியல் சட்டத்திற்கும், அதை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கருக்கும் அ.தி.மு.க. அரசால் இழைக்கப்படும் அநீதியாகும். இதைப்போல இலங்கைத் தமிழர்களுக்காக “டெசோ” சார்பில் மாநாடு ஒன்றினை நடத்த இந்த அரசினால் அனுமதி மறுக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தின் கருணையினால் அந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இதெல்லாம் நல்லாட்சியின் நடைமுறைகளா அல்லது காட்டாட்சியின் கொடுமைகளா? 1989ஆம் ஆண்டு தி.மு.கழகம் 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பொறுப்புக்கு வந்தபோது, முதன்முதலாக நான் நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்கிய நேரத்தில், என் கையிலிருந்து நிதிநிலை அறிக்கையைப் பிடுங்கிக் கிழித்தெறிந்து என்னையும் தாக்குவதற்கு ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. வினர் முற்பட்டபோது, அவர்கள் ஒரு சில நாட்களுக்கு அவை நடவடிக்கையிலிருந்து “சஸ்பென்ட்” செய்யப்பட்டனர். அதையும் ரத்து செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்த நேரத்தில், நான் எழுந்து, “எதிர்க்கட்சிகள் இல்லாமல் இந்த அவை நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை எனக்கோ, இந்த அரசுக்கோ நிச்சயமாக இல்லை. நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்கிற அந்த எண்ணத்தின் அடிப்படையிலே இந்தப் பிரச்சினையை நான் அணுகுகிறேன். அன்றைய தினம் ஏற்பட்ட ஒரு உணர்ச்சியின் காரணமாக, கொந்தளிப்பின் எதிரொலியாக நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தைத் திரும்பப்பெற்று எதிர்க் கட்சித் தலைவரும், மற்றவர்களும் அவையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்புகூட பேரவையில் தி.மு.கழகம் எப்படியெல்லாம் பெருந்தன்மையாக நடந்து கொண்டது என்பதைப் பல்வேறு உதாரணங்களின் மூலமாக எடுத்துக்காட்டியிருந்தேன். 7-2-2011 அன்று சட்டப் பேரவை - ஓமந்தூரார் வளாகத்தில் கழக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய சட்டப்பேரவையிலே நடைபெற்றபோது, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் - பேரவை விதி 20(1)- ன்கீழ், “எதிர்க் கட்சித் தலைவர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து, அவரைப் பூரண ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், அவர் சட்டப்பேரவையின் இந்தக் கூட்டத்தொடருக்கு வராமைக்கான அனுமதி அளிக்கப்படவேண்டும்” என்று ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இத்தீர்மானத்தை அ.தி.மு.க. சட்டப்பேரவைக் கொறடா கே.ஏ.செங்கோட்டையன் வழிமொழிய, குரல் வாக்கெடுப்பின் மூலம் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் அதிகப் பெரும்பான்மையாக இருந்தாலும், எதிர்க்கட்சி கொண்டு வந்த அந்தத் தீர்மானத்திற்கு மனிதாபிமான அடிப்படையில், எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டன. அதெல்லாம் “அரசியல் நாகரீகம்”! ஆனால் தற்போது எதிர்க்கட்சி என்ற ஒன்றே இருக்கக் கூடாது; இருந்தாலும் அது தன் கடமையை ஆற்ற அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு, காரியங்கள் நடத்தப்படுகின்றன. அரசியலிலே, அடிப்படையில் ஒரு கண்ணியமும், பண்பாடும் நாகரிகமும் இருந்திட வேண்டுமென்பதற்காக இந்தக் கருத்துக்களை நான் தெரிவிப்பதற்கே உள் நோக்கம் கற்பித்து; ஒரு சிலர் விமர்சிக்கக்கூடும். ஜனநாயகத்தில் அரசியலை அரசியலாகச் சந்திக்க வேண்டுமே தவிர, இதுபோன்ற நாகரிகமற்ற செயல்பாடுகளின் மூலமாகச் சந்தித்துச் சாதிக்கலாம் என்று நினைப்பது சரியல்ல என்பதே என் கருத்து. ஜனநாயக மாண்புகளில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஓங்கிக் குரல் கொடுத்திட “வாரீர்” என்று அன்புடன் அழைக்கிறேன்.
அன்புள்ள, மு.க. 14-4-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗