உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3732

பயன்பெறும் மக்களுக்கு உண்மை தெரியத்தான் போகிறது!

2013-04-12

உடன்பிறப்பே,

21-3-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் அவர்களால் 2013-2014ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் 1-4-2013 அன்று பேரவையில் நடைபெற்று, அந்தத் துறையின் அமைச்சரும் பேரவையில் பதிலளித்துவிட்டார். ஆனால் நேற்றைய தினம் (10- 4-2013), முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின்கீழ் ஒரு நீண்ட அறிக்கையினை, குடிநீர் வழங்கல் துறைக்கான மானிய விவாதத்தின்போது சொல்லப்பட வேண்டிய அறிவிப்புகளை, இவரே பேரவையில் படித்திருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 450 கோடி ரூபாய்ச் செலவிலும், தஞ்சையில் 125 கோடி ரூபாய்ச் செலவிலும், கோவையில் 114 கோடியே 25 லட்சம் ரூபாய்ச் செலவிலும், திருப்பூரில் 76 கோடியே 44 லட்சம் ரூபாய்ச் செலவிலும், திருச்சியில் 797 கோடியே 69 லட்சம் ரூபாய்ச் செலவிலும், திருநெல்வேலியில் 227 கோடியே 26 லட்சம் ரூபாய்ச் செலவிலும், கூட்டுக் குடிநீர் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாகவும், தஞ்சை, திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக ஆக்கப் போவதாகவும், காரைக்குடி, சிவகாசி நகராட்சிகளைச் சிறப்பு நிலை நகராட்சிகளாக உயர்த்தப் போவதாகவும் 110வது விதியின்கீழ் வேறு சில அறிவிப்புகளோடு சேர்த்துப் படித்திருக்கிறார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவிக்க வேண்டிய இந்தத் திட்டங்களையெல்லாம் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது துறையின் அமைச்சரை அறிவித்திட அனுமதிக்காமல், ஒருசில நாட்கள் கழித்து முதல் அமைச்சரே 110வது விதியின்கீழ்ப் படிக்கிறார் என்றால், அந்தத் துறைக்கு என்று பிறகு எதற்காகத் தனியே ஒரு அமைச்சர்? பாதித் திட்டங்களை முதல் அமைச்சர் படித்துவிட்டுப் போகட்டும்; மீதி பாதியையாவது துறையின் அமைச்சர்களை விட்டுப் படிக்கச் சொன்னால்தானே; பாதிக் கடமையையாவது அவர்களுக்கும் நிறைவேற்றிய நிறைவு ஏற்படும்!

“முதல் அமைச்சர் அறிவிப்பு” என்று ஏடுகளில் வெளிவரவேண்டும் என்பதுதான் காரணமா? இந்த அறிவிப்புகளை நிதியமைச்சரோ, துறைகளின் அமைச்சரோ அறிவிக்கக் கூடாது என்பதுதான் எண்ணமா? இதே முதலமைச்சர் ஜெயலலிதா; முன்பு எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்குத் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் “எம்.ஜி.ஆரைத் தவிர மற்ற அனைவரும் இங்கே “ஜீரோக்கள்” என்று எழுதினாரே, அப்படித்தான் இப்போதும் மற்ற அமைச்சர்கள் எல்லாம் “ஜீரோ”க்களாகவே இருக்கிறார்களா?

முதலமைச்சர் இவ்வாறு இந்த ஒரு துறையின் அமைச்சர் குறித்த விவரங்களை மாத்திரமல்ல, ஒவ்வொரு துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்புகளையும் முதலமைச்சரே 110வது விதியின்கீழ்ப் படிக்கிறார் என்றால் பிறகு எதற்காக மானியத் துறையின்மீது விவாதம், பதில் உரை எல்லாம்? இனி மேல் ஒவ்வொரு ஆண்டும், நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வது, பொது விவாதம் நடத்துவது, மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவது, அமைச்சர் பதில் கூறுவது என்பதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை குறித்தும் முதலமைச்சரே 110வது விதியின் கீழ் அறிக்கையைப் படித்து, மற்றக் கட்சிகளின் தலைவர்களும், பேரவைத் தலைவரும் வரிசையாக அந்த அறிவிப்புகளுக்குப் பாராட்டுரை வழங்கலாம் என்று முடிவெடுத்து விடலாம் அல்லவா?

மேலும் முதலமைச்சர் தன் அறிக்கையின் தொடக்கத்திலேயே “ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 3.80 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் எனது (ஜெயலலிதாவின்) ஆட்சிக் காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. இதேபோன்று ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில்தான் வடிவமைக்கப்பட்டுப் பின்னர் நிறைவேற்றப்பட்டது” என்று சொல்லியிருக்கிறார்.

இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தி.மு. கழக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. “வீடியோ கான்பரன்சிங்” மூலமாக அல்ல, நானே பரமக்குடி நகருக்குச் சென்று அந்தப் பெரிய விழாவிலே கலந்து கொண்டேன்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, முதலமைச்சர் பொறுப்பையேற்றுப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்த நிலையில், நீலகிரியில் 21-5-1989 அன்று நடைபெற்ற மலர்க் கண்காட்சியைத் திறந்து வைக்கச் சென்றபோது, அந்த மலர்க் கண்காட்சியைப் பார்த்துவிட்டு - நீலகிரியில் பூத்துக் குலுங்கியிருந்த மலர் கூட்டத்தைப் பார்த்து விட்டு, துள்ளியோடிய அருவிகளைப் பார்த்துவிட்டு எண்ணிக் கொண்டேன்; அந்த எண்ணத்தையும் அப்போதே அந்த நிகழ்ச்சியில் வெளியிட்டேன். “நான் நீலகிரியைப் பார்த்து - இந்தச் செழிப்பைப் பார்த்து - இந்த மலர்வனத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்ற அதே நேரத்தில், வறண்டு கிடக்கின்ற ராமனாதபுரம் மாவட்டத்தையும் எண்ணிக் கவலைப்படுகிறேன்” என்று அப்போது அந்தக் கண்காட்சி விழாவிலே குறிப்பிட்டேன்.

குறிப்பிட்டதோடு இருந்து விடவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தையும் வளம் மிக்க நீலகிரி மாவட்டம் போல அப்படியே ஆக்கிட முடியாதென்றாலும் - ஓரளவு அவ்வாறு மாற்றிட வேண்டும் - அடிப்படைக் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேண்டும் என்ற முனைப்போடு ஆட்சிப் பொறுப்பிலே இருந்து செயல்பட்டேன். அதன் விளைவாகத்தான் 1996 ஆம் ஆண்டில் கழக அரசு அமைந்தபொழுது, இராமநாதபுரம் மாவட்டத்தில் 72 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் உவர் நீரை நன்னீராக்கும் 11 திட்டங்களைச் செயல்படுத்தினோம். அந்தத் திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் 11 கலன்கள் மூலம் மொத்தம் 237 கிராமக் குடியிருப்புகள் குடிநீர் வசதி பெற்றன.

2006 மே திங்களில் தமிழகத்தில் கழக அரசு மீண்டும் அமைந்த பிறகு, சட்டப்பேரவையில் 22.7.2006 அன்று அளித்த நிதிநிலை அறிக்கையில் “இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் பல ஆண்டுகளாக நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகக் காவிரி நீரைக் கொண்டு வந்து வழங்கும் 671 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பெரும் திட்டத்தின் பணிகள் இந்த ஆண்டு தொடங்கும்” என்று செய்யப்பட்ட அறிவிப்பினை உடனடியாகச் செயல்படுத்து வதற்காக; வகுக்கப்பட்ட திட்டம்தான் இந்த இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம். இத்திட்டப் பணிகளுக்கு, 30.1.2007 அன்று பரமக்குடியில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்ததும் நான்தான். மகத்தான இந்தத் திட்டத்தில், முதற்கட்டமாக இராமநாதபுரம், இராமேசுவரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும், மண்டபம், சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் 27-6-2009 முதல் குடிநீர் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தின் வழியோரப் பகுதிகளாகிய புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, ஆலவயல், பொன்னமராவதி பகுதிகளைச் சேர்ந்த 32 குடியிருப்புகளுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நகராட்சியுடன், திருப்பத்தூர், காளையார் கோவில், இளையான்குடி முதலிய பகுதிகளைச் சேர்ந்த 799 குடியிருப்புகளுக்கும் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு ஊரகப் பகுதிகளுக்கும் தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டது. இத்திட்டப் பணிகளை அடிக்கடிப் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி, ஊக்கப்படுத்தி இரண்டாண்டு காலத்திற்குள் நிறைவேற்றி முடித்த பெருமை துறையின் அமைச்சரும், துணை முதலமைச்சருமான தம்பி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களையே சேரும். மக்களுக்குக் குடிநீர் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தி.மு. கழக ஆட்சியிலே தான் 1971ஆம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கப்பட்டது. 1995-96ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் இறுதி ஆண்டிலே குடிநீர் வழங்கும் பணிகளுக்காகச் செலவிடப்பட்ட தொகை 213 கோடியே 82 லட்சம் ரூபாய். 2000-2001ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் இறுதி ஆண்டிலே குடிநீர் வழங்கும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 842 கோடி ரூபாய்.

இந்தப் புள்ளி விவரம் மூலமாகவே எந்த அளவிற்குந் தி.மு.கழக ஆட்சி; குடிநீர்ப் பிரச்சினைகளிலே அக்கறை கொண்டு செயல்பட்டது என்ற உண்மை உங்களுக்குப் புரியும்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய திட்டமாகிய கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 51 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு, 27.6.1999 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அது இன்றும் இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு நல்ல முறையில் பயனளித்து வருகிறது. இந்தத் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியிலே 1995ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போதிலும் அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. கழக ஆட்சியில் தான் நிதி ஒதுக்கப்பட்டுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

நரிப்பையூர் குடிநீர்த் திட்டமும் தனது ஆட்சிக் காலத்திலேதான் கொண்டு வரப்பட்டது என்று பேரவையில் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

1998ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நரிப்பையூர் கிராமத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஆசியாவிலேயே முதன் முதலாகத் துவக்கப்பட்டது. 46 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டம் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 296 கிராமங்களுக்குக் குடிநீர் வழங்கிடப் பயன்பட்டது. 1998இல் “பெல் நிறுவனம்” டெண்டர் எடுத்து, 5 ஆண்டு காலம் அவர்களது பராமரிப்பின்கீழ் இத்திட்டம் இயங்கியது. அதற்குப் பின், தோஷியன் நிறுவனத்தின் பராமரிப்பில் இத்திட்டம் செயல்பட்டு வந்தது. இத்திட்டம் தொடங்கியபோது நாள் ஒன்றுக்கு 38 லட்சம் லிட்டர் குடிநீர் தயாரித்து 296 கிராமங்களுக்குக் குடிநீர் வழங்கப்பட்டது.

சென்னைக் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, 1996ஆம் ஆண்டில் கழக அரசு அமைந்தபோது, ஆந்திர மாநில அரசோடு இணக்கமான உறவு முறையைக் கடைப்பிடித்து, பல ஆண்டுகளாகத் தடைபட்டு நின்ற கிருஷ்ணா குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றி முடித்து கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னைக்குக் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

அதுபோலவே, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையை முற்றிலும் போக்கிட ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதியுதவியுடன், 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் முழு வீச்சில் கழக ஆட்சியிலேதான் நிறைவேற்றப்பட்டன.

மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியிலே தொடங்கப்பட்ட போதிலும், நீதிமன்ற வழக்கு காரணமாகத் தாமதமாகி, திட்டத்தைச் செயல்படுத்துவதில் மேற்கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. அந்நிலையில் 2006இல் கழக அரசு அமைந்தபிறகு, பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இந்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் நீரை, ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டிருந்த - குடிநீரின் விலையை ஓரளவுக்குக் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 25.2.2007 அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த தம்பி மு.க.ஸ்டாலின் அவர்களால் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. சோதனை இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து 31.7.2010 அன்று இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைத் தொடர்ந்து நெம்மேலி - கடல்நீர் குடிநீராக்கும் திட்டம், இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட போதிலும், அந்தத் திட்டத்திற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு, மத்திய அரசிடம் கழக அரசுதான் கோரிக்கை விடுத்து நிதி பெற்றுப் பணிகளைப் பெருமளவுக்கு நிறைவேற்றித் தந்தது.

ஆனால் தமிழகச் சட்டப் பேரவையில் தி.மு. கழக ஆட்சியில் குடிநீர்த் திட்டங்கள் எதையுமே கொண்டு வரவில்லை என்பதைப் போலவும், ஜெயலலிதாதான் நரிப்பையூர் திட்டமானாலும், ராமனாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டமானாலும், மீஞ்சூர் குடிநீர்த் திட்டமானாலும், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டமானாலும், நெம்மேலி குடிநீர்த் திட்டமானாலும் அவைகளையெல்லாம் கொண்டு வந்ததைப் போலவும் பேரவையில் பெருமை பேசிக் கொள்கின்ற காரணத்தால், இந்த விவரங்களையெல்லாம் மக்களுக்குத் தெரிவிக்கின்றேன். போகிறபோக்கைப் பார்த்தால், கல்லணையைக் கட்டியதே கரிகாலன் அல்ல; தானேதான் என்று 110வது விதியின்கீழ் அறிவித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை; இது 110வது விதி அல்ல; தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி! அம்மையார் என்னதான் தனக்கே எல்லாப் பெருமைகளையும் தேடிக்கொள்ள முயன்றாலும், அந்தந்தப் பகுதிகளிலே அன்றாடம் இந்தத் திட்டத்தினால் பயன்களை அனுபவித்து வரும் தமிழக மக்களை ஜெயலலிதா இந்தச் செயற்கை அறிவிப்புகள் மூலம் ஏமாற்ற முடியாதல்லவா? பயன்பெறும் மக்களுக்கு உண்மை தெரியாமலா போய் விடும்?

அன்புள்ள, மு.க. 12-4-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗