தொகுதி 48 · கடிதம் 3731
“தலித்” மக்கள் தெரிந்து கொள்வதற்காக!
2013-04-11
உடன்பிறப்பே,
2013-2014ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பேரவையில் படிக்கப்பட்ட மறுநாளே, “தினமலர்” நாளிதழின் சிறப்பு நிருபர் - “பட்ஜெட்டில் பெரிய திட்டங்களோ, அறிவிப்புகளோ, இலவச மற்றும் சலுகை திட்டங்களோ என எதுவும் வெளியாகவில்லையே என, அலுத்துக் கொள்பவர்கள் ஏப்ரல் 1ஆம் தேதிவரை பொறுமை காக்க வேண்டும். ஏனெனில் முதல்வர் ஜெயலலிதா சபை விதி110ன் கீழ், தன் அதிரடி அறிவிப்புகளை சரவெடியாய் வெளியிடுவார் என கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்” என்று எழுதியிருந்ததற்கும், தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் சட்டப்பேரவை விதி 110இன் கீழ் ஒவ்வொரு துறை சம்பந்தமான அறிவிப்புகளையெல்லாம் அவரே படிப்பதற்கும் உள்ள ஒற்றுமையைப் பார்க்கும்போது, அ.தி.மு.க. ஆட்சியில் முதல் அமைச்சர் எந்த அளவிற்கு அறிவிப்புகளை வெளியிடுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறார் என்பதை “தினமலர்” நாளிதழ் முன்கூட்டியே யூகித்து எழுதியிருப்பதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
பேரவையில் முதல்வரையோ, அரசையோ குறை கூறிப் பேசினால் உடனடியாக வெளியேற்றம் - நேற்றையதினம் மானியக் கோரிக்கைமீது விவாதத்தைத் தொடங்கிவைக்கப் பிரதான எதிர்க்கட்சிக்கு வாய்ப்பில்லை என்ற தடை - நிலைமை இப்படியே போய்க் கொண்டிருக்கின்றது. அதைப் பற்றியெல்லாம் தமிழக நாளேடுகள் கண்டித்து எழுதுவதற்குப் பயப்படுகிறார்கள். நமக்கேன் வம்பு என்று எண்ணுகிறார்கள். இந்த நிலையில்தான் இன்று (10-4-2013) காலை “இந்து” நாளிதழில் “Atrocities against Dalits touched their peak in 2012, finds study” என்ற தலைப்பில் ஒரு செய்திக்கட்டுரை அதன் சிறப்பு செய்தியாளரால் தரப்பட்டுள்ளது. அதாவது 2012ஆம் ஆண்டில் “தலித்”களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதன் உச்சக்கட்டத்தை எய்தின என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரையில்,
“தலித்”கள் மீதான வன்கொடுமைகள் கடந்த
பதினைந்து ஆண்டுகளில் 2012ஆம் ஆண்டுதான்
உச்சக் கட்டத்தை எட்டியது. தமிழகத்தில் விழுப்புரம், விருதுநகர், தர்மபுரி, தேனி ஆகிய மாவட்டங்களில் அதிகப்பட்சமான வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆய்வினைச் செய்திருப்பது மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் “எவிடென்ஸ்” எனப்படும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். வன்கொடுமைக்கு ஆளான மக்களுக்குச் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு ஏற்பாடுகள் இதுவரை சென்றடையவில்லை. தர்மபுரி நிகழ்வில் மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 370 நிகழ்வுகளில் 2012ஆம் ஆண்டு மட்டும் 112 நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. அந்த நிகழ்வுகளில் “தலித்”கள்
மீது தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. மேலும்
28 நிகழ்வுகளில் மிகக் கடுமையான விளைவுகள்
“தலித்”களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. 36 நிகழ்வுகளில்
“தலித்”களுக்குச் சொந்தமான குடியிருப்புகள்
தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. கொலையில் முடிந்த
96 நிகழ்வுகளில் வழக்குகள் தொடரப்பட்டு அவை
நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.
மூன்று நிகழ்வுகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
62 நிகழ்வுகளில் பாலியல் குற்றங்கள் “தலித்” பெண்களின் மீது நடத்தப்பட்டிருக்கின்றன. அவை அனைத்திலும் வழக்குகள் தொடரப்பட்ட போதிலும், இதுவரையில் ஒரு நிகழ்வில்கூட தண்டனை அளிக்கப்படவில்லை”
என்று “இந்து” ஏட்டில் எழுதப்பட்டுள்ளது. அதாவது அ.தி.மு.க. ஆட்சியின் 2012ஆம் ஆண்டில்தான் “தலித்”களுக்கு எதிரான இத்தகைய வன்கொடுமைகள் அதிக அளவில் நடைபெற்றுள்ளன என்று ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆய்வு செய்து அறிவித்துள்ளது.
இந்த அரசுக்கு இவ்வாறு சான்றிதழ் அளித்துள்ள அந்தத் தொண்டு நிறுவனம் என்ன பாடுபடப் போகிறதோ? ஆனால் தி.மு. கழக ஆட்சி நடைபெற்றபோது “தலித்”களுக்கு எதிராக எங்கே வன்கொடுமை நடைபெற்றாலும் அங்கே உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பதற்கும், வன்கொடுமைகள் நடைபெறக் கூடும் என்பதை முன்கூட்டியே நுண்ணறிவுப் பிரிவின் மூலமாக அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட தற்கும் ஒரு சில உதாரணங்களை மட்டும் தருவதை என் கடமையாகக் கருதுகிறேன். மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் உத்தப்புரம் கிராமத்தில் வாழும் பிள்ளைமார் இனத்தவர்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் இடையே 1990ஆம் ஆண்டில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இரு சமூகத்தினரையும் சம்மதிக்கச் செய்து ஏற்கனவே, 1989இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இருபிரிவினரின் குடியிருப்புகளுக்கிடையே வெள்ளாளர் உறவின்முறை சார்பில் 103 மீட்டர் நீளமுள்ள பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்டது. இந்தச் சுவரை அகற்றுவது, வெள்ளாளர் சமூகத்தினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள நடைபாதைப் பகுதியில் தொடர்பு ஏற்படுத்தித் தருவது, 1989ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கோவில் மற்றும் அரச மரத்தினைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவரை அகற்ற வேண்டும் என்ற ஆதிதிராவிட சமுதாயத்தின் கோரிக்கையின் பேரில் எழுந்த பிரச்சினைகளைத் தீர்க்கச் சமாதானக் கூட்டம் 2.5.2008 அன்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒரு தீர்வு எட்டப்பட இருந்த நிலையில், ஆதிதிராவிட மக்கள் 1989ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஓர் எழுத்து மூலமான ஒப்பந்தத்தின்கீழ் மாரியம்மன்கோவில் பக்கத்தில் உள்ள சுற்றுச் சுவரை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். அது தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் தாவா நிலங்களைச் சார்நிலை அலுவலருடன் புலத் தணிக்கை செய்து, 4.5.2008 அன்று சட்ட வல்லுநரின் கருத்தையும் பெற்று, ஆதிதிராவிடர் அதிகமாக வசிக்கும் பகுதிக்குச் செல்லும் வண்ணம் 6.5.2008 அன்று சுவர் உடைக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள பஞ்சாயத்து சாலையை இணைத்திடப் பாதை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை குறித்து அரசு நியமித்த விசாரணைக் குழுவின் பரிந்துரைகள்படி, 191 பேருக்கு 10 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிட 12.9.2009 அன்று தி.மு.க. ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டு 15.9.2009, 16.9.2009 ஆகிய இரண்டு நாள்களில் வழங்கப்பட்டது. மேலும் உத்தப்புரம் கிராமத்தில் 4 குடும்பங்களுக்குத் திருமண நிதியுதவியாக 16 ஆயிரம் ரூபாய்; இயற்கை மரணம் மற்றும் ஈமச் சடங்குகளுக்காக 87 ஆயிரத்து 500 ரூபாய்; கணவனை இழந்த இரண்டு பெண்களுக்கு நலிந்தோர் உதவித் திட்டத்தின்கீழ் 20 ஆயிரம் ரூபாய்; முதியோர், விதவை மகளிர், கணவனால் கைவிடப்பட்ட மகளிர், உடல் ஊனமுற்றோர், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆகியோர்க்கும் இந்திராகாந்தி தேசிய முதியோர்க்குமாக மொத்தம் 113 பேருக்கு மாதம் 400 ரூபாய் உதவித் தொகை அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டது. 38 இலட்சத்து 41 ஆயிரத்து 255 ரூபாய் செலவில் 1655 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்; 2 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் 80 குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் ; 60 ஆயிரத்து 515 ரூபாய் மதிப்பீட்டில் 8 பேருக்கு 2.03 ஹெக்டேர் நிலம் ; 10 ஆயிரத்து 870 ரூபாய் மதிப்பீட்டில் 35 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவையல்லாமல், உத்தப்புரம் கிராமத்தின் வெள்ளாளர் சமுதாய மக்கள் வாழும் வடக்கு தெருவில் 39 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுபாலம், சிமெண்ட் சாலை, திருமண மண்டபம், இந்திரா நினைவு வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ஒரு குடியிருப்பு கட்டப்பட்டதுடன் தெரு விளக்குகள், சுடுகாட்டுச் சுற்றுச்சுவர், குடிநீர் வசதி, சாலை அமைத்தல், நூலகக் கட்டடம், விளையாட்டு மைதானம் அமைத்தல் முதலிய பல பணிகள் நடைபெற்றன.
அதேபோல, ஆதிதிராவிட சமுதாய மக்கள் வசிக்கும் தெற்குத் தெருவில் 73 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் சத்துணவு மையக் கட்டடம், தார், சிமெண்ட் சாலைகள், சுடுகாடுகளில் கூரை அமைத்தல், தானிய களம், அரசு நடுநிலைப் பள்ளிக்குச் சுற்றுச் சுவர் கட்டுதல், கழிவுநீர் வாய்க்கால், குடிநீர், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 40 குடியிருப்பு வீடுகள் மற்றும் 14 கச்சா வீடுகள் கட்டுதல், நாடக மேடை அமைத்தல், குளிக்குமிடத் தொட்டி, சமுதாயக் கூடம், சாலை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்றன. விழுப்புரம் மாவட்டம் காங்கேயனூர் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் 7.8.2009 அன்று நடைபெற்ற தீ மிதித் திருவிழா தொடர்பாக, மேலந்தல் கிராம ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் 8.8.2009 அன்று காலை தாக்கப்பட்டதாகக் கூறி மேலந்தல் காலனி மக்கள் ஏறத்தாழ 90 பேர் மூங்கில்துறைப்பட்டு சாலையில் முள் மற்றும் மரங்களைப் பரப்பிச் சாலை மறியல் செய்தனர். இது தொடர்பாக இரு பிரிவினரிடையே பிரச்சினை ஏற்பட்டு, திருக்கோவிலூர் வருவாய்க் கோட்டாட்சியரால் விசாரணைக்கு ஆணையிடப்பட்டது. விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் அமைதிக் குழுக் கூட்டம் நடத்தியதன்பயனாக, 7.10.2009 அன்று கோவில் திறக்கப்பட்டு, காங்கேயனூர், மேட்டுச்சேரி, மேலந்தல் ஆகிய கிராம மக்கள் அனைத்துத் தரப்பினரும் சென்று வழிபட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செட்டிபுலம் கிராமத்தில் பூட்டியிருந்த அருள்மிகு காமாட்சி அம்மன் கோவிலுக்குள் ஆதி திராவிடர்கள் சென்று வழிபடுவது குறித்த பிரச்சினையில், கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவானதைத் தொடர்ந்து, 8.10.2009 அன்று நாகை வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் 14.10.2009 காலை 11 மணிக்கு கிராமப் பொதுமக்கள் அனைவரும் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வதென ஏற்றுக் கொள்ளப்பட்டது. காவல் துறையினர் உதவியோடு நிலைமை அங்கே கட்டுப்படுத்தப்பட்டு, அந்த கிராமத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் பந்தப்புலி கிராமம் கண்ணநல்லூர் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக, சாதி இந்துக்களுக்கும், தேவேந்திர குல வேளாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் இரு சமூகமும் தொடுத்த வழக்கில் சங்கரன்கோவில் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் இந்தக் கோவில் எந்தத் தனிப்பட்ட இனத்திற்கும் உரிய கோவில் அல்ல என்று 11.8.2008 அன்று தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 23.9.2008 அன்று கோடை விழா நடத்த அனுமதி கேட்டனர். அப்பொழுது கிராமத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அமைதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. பிறகு என்னுடைய அறிவுரைகள் படி அனைத்து சமுதாயத்தினரும் கூடி வழிபாடு செய்வதற்கேற்ப மிகுந்த பாதுகாப்புடன் 24.12.2008 அன்று கோவில் திறக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி, நாட்டாரமங்கலம், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொட்டக்கச்சியேந்தல் ஆகிய நான்கு ஊராட்சிகளிலும் இட ஒதுக்கீட்டின்படி “தலித்” சமுதாயத்தினரே போட்டியிட முடியும் என்ற காரணத்தால், பல ஆண்டுகளாகத் தேர்தல்கள் நடைபெறாமல் உள்ளாட்சி ஜனநாயக நடைமுறைகள் செயல்படாமல் இருந்தன.
2006இல் கழக அரசு அமைந்தபின், அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் போலவே இந்த நான்கு கிராம ஊராட்சிகளிலும் அனைத்து சமூகங்களின் ஒத்துழைப்புடன் அமைதியான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு, உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சமுதாய நல்லிணக்க உணர்வுகளை வளர்ப்பதில் அங்கு ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டது.
அன்று மகத்தான இந்தச் சாதனை நிகழ்வதற்கு ஒத்துழைப்பு நல்கிய பெருமக்களையும், பொதுமக்களையும் மதித்துப் போற்றும் வகையில் கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகிய நான்கு ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அந்தக் கிராமங்களில் வாழும் பல்வேறு சமுதாயங்களையும் சேர்ந்த தலைவர்கள் அனைவருக்கும் 13.11.2006 அன்று சென்னையில், “சமத்துவப் பெருவிழா” எனும் பெயரில் மிகப் பெரிய ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவில் நான் உரையாற்றும்போது இந்த நான்கு ஊராட்சிகளிலும் வாழும் மக்களுடைய அடிப்படை வசதிகளைப் பெருக்குவதற்காகத் தமிழக அரசின் சார்பில் ஓர் ஊராட்சிக்கு 20 இலட்சம் ரூபாய் வீதம் 80 இலட்ச ரூபாயும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஓர் ஊராட்சிக்கு 5 இலட்சம் ரூபாய் வீதம் 20 இலட்ச ரூபாயும் வழங்கப்படுமென அறிவித்து, அவ்வாறே வழங்கப்பட்டது.
“தலித்” சமுதாய மக்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகள் கழக ஆட்சியில் எவ்வாறு பேசித் தீர்க்கப்பட்டன என்பதற்கும், தற்போது அந்தச் சமுதாய மக்கள் எந்த அளவிற்கு அ.தி.மு.க. ஆட்சியில் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஆதாரப் பூர்வமாக வெளிவந்துள்ள ஒரு செய்திக் கட்டுரையையும் இங்கே எடுத்துக்காட்டியிருக்கிறேன். இரண்டு ஆட்சியிலும் நிலைமைகள் எவ்வாறு கையாளப்பட்டது என்பதை “தலித்” சமுதாய மக்களே நன்கு புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அன்புள்ள, மு.க. 11-4-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗