தொகுதி 48 · கடிதம் 3730
துரோகம் தொடர்கதையானது யாராலே?
2013-04-10
உடன்பிறப்பே,
தமிழகச் சட்டமன்றத்தில் நேற்றைய தினம் தென்பெண்ணையாற்றுத் தண்ணீரைக் கர்நாடக அரசு திருப்பிவிடுவதைப் பற்றி ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கழகச் சட்டப் பேரவை உறுப்பினர் தம்பி எ.வ.வேலு கொடுத்து, அதன் மீது உறுப்பினர்கள் பேசிப் பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் அளித்திருக்கிறார். அப்போது அந்த அமைச்சரும், அவையை அமைதியாக நடத்திச் செல்லும் பொறுப்புமிக்க அவை முன்னவரும் எழுந்து தேவையில்லாமல், காவிரிப் பிரச்சினை பற்றியும், முல்லைப் பெரியாறு பற்றியும், இலங்கைப் பிரச்சினை பற்றியும் பேசி, அதில் தி.மு. கழகமும், நானும் துரோகம் இழைத்து விட்டதாகப் பேசியிருக்கிறார்கள். அதற்குப் பதிலளிக்கத் தயாராக இருந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரான தம்பி துரைமுருகனையும் பேசவிடாமல் செய்திருக்கிறார்கள். அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரைப் பற்றியும் நான் குறை கூறவில்லை. ஆனால் ஒரு சில அமைச்சர்கள், அப்படிப் பேசினால்தான் தங்களுடைய தலைமை தங்களைக் கொண்டாடும் என்று கருதிக்கொண்டோ, தங்களுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவோ என்னவோ சட்டப்பேரவையில் பிரச்சினைகளை எழுப்புகிறார்கள். அதற்குப் பதில் சொல்ல எதிர்க் கட்சிகள் முயற்சி செய்தால், ஜனநாயகரீதியாக வாய்ப்பளித்திட மறுத்து மாற்றுக் கருத்தைச் செவிமடுக்கும் பொறுமையின்றி, வெளியேற்றவும் செய்கிறார்கள்.
தமிழகச் சட்டப்பேரவையில் மாத்திரமல்ல; 7-4-2013 அன்று டெல்லியில் பிரதமர் தலைமையில் மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாடு நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக, தமிழக அமைச்சர் ஒருவர், தமிழக முதலமைச்சரின் பேச்சினைப் படித்தபோது, “காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளுக்காகக் கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக நான் (ஜெயலலிதா) மேற்கொண்ட இடைவிடாத போராட்டத்தின் காரணமாகக் கடைசியில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது” என்று கூறியதாகத் தமிழக ஏடுகளில் வெளிவந்துள்ளது. இருபதாண்டுகளுக்கு மேலாகத் தமிழக முதல் அமைச்சர் மேற்கொண்ட இடைவிடாத போராட்டத்தின் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழிலே வெளியிடப்பட்டதாம்! “கேழ்வரகில் நெய் வடிகிறது” என்று கிராமங்களில்தான் சொல்வார்கள். அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. முதலமைச்சர் பேச்சுதான் அப்படி என்றால், தமிழகச் சட்டப்பேரவையில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், காவிரிப் பிரச்சினையில் தி.மு.க. துரோகம் இழைத்து விட்டது; இலங்கைப் பிரச்சினையிலே தி.மு.க. துரோகம் இழைத்துவிட்டது; முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தி.மு.க. துரோகம் இழைத்துவிட்டது; கச்சத் தீவில் தி.மு.க. துரோகம் செய்துவிட்டது என்று எந்தவித அடிப்படையுமின்றி, எதையும் முழுமையாக அறிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள்.
துரோகத்திற்குச் சொந்தக்காரர்கள் யார்? தமிழினத்திற்கு - தமிழர்களின் நலனுக்குத் தொடர்ந்து “துரோகம்” செய்தது யார்? என்பதை விளக்குவதற்காகத்தான் இந்தக் கடிதம்!
❖ இலங்கையில் போர் நிறுத்தம் நிரந்தரமாக ஏற்பட ஆவன செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்திட 23-4-2009 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று நான் அறிக்கை கொடுத்த நேரத்தில், “இலங்கையில் ராஜபக்ஷே இப்போது நடத்தும் யுத்தம் தமிழர்களை எதிர்த்து அல்ல; விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான்” என்று ஜெயலலிதா கூறினாரே; அதற்குப் பெயர் துரோகமா? அல்லவா?
❖ இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, “ஒரு போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்” என்று 17-1-2009 அன்று ஜெயலலிதா சொன்னாரே, அதைவிட ஒரு பெரிய துரோகம் இருக்க முடியுமா? என்ன?
❖ “பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்குக் கொண்டு வரவேண்டும்” என்று ஜெயலலிதாவே 16-4-2002 அன்று சட்டப் பேரவையில் தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்றினாரே, அதைவிடவா ஒரு பெரிய துரோகம் இருக்க முடியும்?
❖ இலங்கைப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து சென்னை தலைமைச் செயலகத்திலே கூட்டம் நடத்தியபோது அதைப் புறக்கணிப்பதாக ஜெயலலிதா அறிவித்தாரே, அது பச்சைத் துரோகமா? அல்லவா?
❖ ஈழத் தமிழர்களுக்காகச் சென்னை மாநகரில் மிகப் பிரமாண்டமான “மனிதச் சங்கிலி”யை 2009ஆம் ஆண்டு நடத்தியபோது அதை “கபட நாடகம்” என்று ஜெயலலிதா வர்ணித்தாரே, அது துரோகமா? அல்லவா?
❖ இலங்கையில் நிரந்தரப் போர் நிறுத்தம் காண, மத்திய அரசு முயற்சிக்கக் கோரித் தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் என் தலைமையில் டெல்லி சென்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தபோது, அதை ஜெயலலிதா புறக்கணித்தது துரோகமா? அல்லவா?
❖ விடுதலைப் புலிகளை இன்றைக்கும் விரோதிகள் என்று கூறுகிற ஜெயலலிதா துரோகியா? நான் துரோகியா?
❖ ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தது தி.மு.க., நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையே ராஜினாமா செய்தோம். ஏன் தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து கூட விலகினோம். இவை துரோகச் செயல்களா? அல்லது அவற்றை விமர்சிக்கும் ஜெயலலிதா போன்றவர்கள்
துரோகிகளா?
❖ தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று பேரவையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியது துரோகமா? அல்லவா?
❖ இலங்கையில் தமிழினப் படுகொலையைக் கண்டித்துப் போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோது, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் “அந்தத் தீர்மானத்தைப் பார்த்தால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள் நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை உள் நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படும்” என்று ஜெயலலிதா குறிப்பிட்டாரே, இதை விடவா ஒரு பெரிய துரோகம் இருக்க முடியும்?
❖ காவிரிப் பிரச்சினையில் “நடுவர்மன்றத் தீர்ப்பு வந்தால் கூட, கர்நாடகாவில் அவர்களாகவே அணையைத் திறந்தால் தான் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வரும். கர்நாடகம் சம்மதித்து ஒரு நியாயமான அனுகூலமான முடிவை மேற்கொண்டால் தான் நடுவர்மன்றத் தீர்ப்பு பயனுள்ளதாக அமைய முடியும்” என்று 21-3-1991இல் ஜெயலலிதா கூறியது துரோகமா? அல்லவா?
❖ “நடுவர்மன்றம் தீர்ப்பு வழங்கினால் கூட, அதை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம்; கர்நாடக முதலமைச்சர் பங்காரப்பாவுக்குக் கிடையாது” என்று ஜெயலலிதா கூறியது, தமிழ்நாட்டிற்கு அவர் செய்த துரோகமா? அல்லவா?
❖ 9-6-1992 அன்று மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் திரு.சுக்லா, நடுவர்மன்றத்தின் இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்தக் குழு அமைப்பது பற்றி ஒப்புதல் கேட்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்திற்கு 30-3-1993 அன்று ஒன்பது மாதங்கள் கழித்துத்தான் ஜெயலலிதா பதில் எழுதினார். இதைவிட ஒரு பெரிய துரோகம் இருக்க முடியுமா?
❖ 1991இல் நடுவர் மன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்தும்கூட, 1996ஆம் ஆண்டுவரை முதலமைச்சர் பொறுப்பிலே இருந்த ஜெயலலிதா ஒரு ஆண்டு கூட இடைக்கால உத்தரவுப்படி 205 டி.எம்.சி. தண்ணீரைப் பெற்றுத் தரவில்லை. அது அவர் செய்த துரோகமா? அல்லவா?
❖ காவிரி நதிநீர் ஆணையம் தி.மு.கழகத்தின் பெருமுயற்சியால் அமைந்த நேரத்தில், 2-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் ஜெயலலிதா “செயல்படாத ஆணையம், காவிரி ஆணையம். அந்த ஆணையத்தை நாங்கள் ஏற்காமல் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறினோம்” என்று கூறினார். இவ்வாறு காவிரி ஆணையத்தை, “பல் இல்லாத ஆணையம்” என்றும் “செயல்படாத ஆணையம்” என்றும் ஜெயலலிதா கூறியது துரோகமா? அல்லவா?
❖ ஜெயலலிதா 21-9-1998 அன்று ஆங்கிலத்தில் விடுத்த அறிக்கையில் “The Kaveri River Authority headed by the Prime Minister is a very big fraud perpetrated on the farmers of the kauveri Delta in Tamil Nadu” என்று குறிப்பிட்டார். இது தமிழகத்திற்கு மறைமுகமாக அவர் செய்த துரோகமா? அல்லவா?
❖ 21-6-2002 அன்று கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் காவிரி நதி ஆணையக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை என்று ஜெயலலிதா முடிவெடுத்தாரே, அது தமிழகத்திற்கு ஜெயலலிதா செய்த துரோகமா? அல்லவா?
❖ காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஜெயலலிதா கூறி, அதை உச்ச நீதிமன்றமே கண்டிக்கின்ற அளவிற்கு நிலை மாறி, பின்னர் ஜெயலலிதா அதற்காக வருத்தம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டதே, அது ஜெயலலிதா தமிழகத்திற்குச் செய்த துரோகமா? அல்லவா?
❖ பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்திருந்ததைப் பற்றி பிரதமராக இருந்த வாஜ்பாய், “அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருந்த காலம்தான் எனது அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலம்” என்றும், “அரசைக் கவிழ்க்கப் போவதாகச் சுதந்திரத் தினத்திற்கு முந்தையநாளன்று கூட ஜெயலலிதா அச்சுறுத்தினார், ஆனால் அவரது பிளாக் மெயில் தந்திரத்திற்கு நாங்கள் அடிபணியவில்லை என்றும் 22-8-1999 அன்று குறிப்பிட்டார் என்றால் அது ஜெயலலிதா செய்த நம்பிக்கை துரோகமா? அல்லவா?
❖ ஏன், எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்தி ஆளாக்கிய எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்குத் தன் கைப்பட எழுதிய கடிதத்திலேயே இவரது வளர்ச்சியைப் பார்த்து எம்.ஜி.ஆர். பொறாமைப்படுகிறார் என்றும், தனது வளர்ச்சியை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டாரே; அதைவிட ஒரு பெரிய பச்சைத் துரோகம் இருக்க முடியுமா? என்ன?
உடன்பிறப்பே, இந்த விவகாரங்களையெல்லாம்
எழுதுவதற்கோ, மற்றவர்களைச் சங்கடப்படுத்துவதற்கோ எனக்கு
உண்மையில் விருப்பம் இல்லைதான். ஆனால் அன்றாடம் தமிழகச்
சட்டப்பேரவையில் ஒரு சில அமைச்சர்கள் நம்மை இவ்வாறு
எழுதுவதற்கு அவர்களாகவே தூண்டுகிறார்களே என்பதுதான் வேதனையான உண்மை.
அன்புள்ள,
மு.க.
10-4-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗