தொகுதி 48 · கடிதம் 3729
அந்த நாள் ஞாபகம் வந்ததே; அம்மையே!
2013-04-09
உடன்பிறப்பே,
4-4-2013 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின்கீழ்ப் படித்த ஓர் அறிக்கையில், “மதுரை மாவட்டத்தில், தற்போது பெருகிவரும் வீட்டு வசதித் தேவையைக் கருத்தில் கொண்டு, மதுரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் விமான நிலையத்திற்கு அருகில் மதுரை-திருநெல்வேலி நான்கு வழிப்பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த “துணைக்கோள் நகரம்” ஒன்று உருவாக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்படும்” என்றெல்லாம் அந்த அறிக்கை நீண்டு கொண்டே போகிறது.
இந்த மகத்தான அறிவிப்பினை முதலமைச்சர் அவையிலே படித்துவிட்டு அமர்ந்ததுதான் தாமதம். உடனே இந்தியக் குடியரசுக் கட்சியின் சார்பிலும், பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும், மனித நேய மக்கள் கட்சியின் சார்பிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் முதலமைச்சரின் அறிவிப்பினைப் பாராட்டி நன்றி தெரிவித்திருக்கிறார்கள். பிரச்சினை அதோடு முடியவில்லை. அறிவிப்புக்குரிய துறையின் அமைச்சர் எழுந்து தனது துறை பற்றிய அறிவிப்பினைச் செய்ததற்காக நன்றியை “அம்மா” அவர்களின் பொற்பாதங்களில் குவித்திருக்கிறார். அப்போதும் பிரச்சினை முடியவில்லை. பேரவைத் தலைவர் எழுந்து முதல் அமைச்சரின் அறிவிப்புக்காகத் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துக்களோடு தனது நன்றியையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டிலே உள்ள அனைத்து ஏடுகளும் இந்த அறிவிப்பினை வழக்கம்போல் பெரிதாக வெளியிட்டிருக்கின்றன.
இதைப் படித்தவுடன் என் மனதிலே சில எண்ணவோட்டங்கள்! 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 9-9-2011 அன்று இதுபோலவே தமிழகத்தின் அனைத்து ஏடுகளிலும் ஒரு தலைப்புச் செய்தி. அது என்ன தெரியுமா? “திருமழிசையில் 311 ஏக்கரில் குடியிருப்புகள் - சென்னை அருகே துணை நகர் - சட்ட சபையில் ஜெயலலிதா அறிவிப்பு” நம்மைப் பொறுத்தவரையில் திருமழிசையில் ஆகட்டும், மதுரையில் ஆகட்டும், துணை நகரம் வரப்போவதில் மகிழ்ச்சிதான். ஏனென்றால் திருமழிசையில் இவர்கள் துணை நகரம் அமைக்கவுள்ள இடம் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரியத்தினால் கையகப்படுத்தப்பட்ட இடம்! அப்போது அதிலே ஒரு வேடிக்கை! திருமழிசை துணை நகரத்தை 311 ஏக்கரில் உருவாக்கப் போவதாக ஜெயலலிதா பேரவையில் 9-9-2011 அன்று அறிவித்து அனைத்துக் கட்சியினரும் உடனடியாக எழுந்து அதைப் பாராட்டினார்கள் என்ற போதிலும், அதற்கு முன்பே 25-8-2011 அன்று பேரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் வைத்த கொள்கை விளக்கக் குறிப்பிலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. பாவம்; அவர் அறிவித்தால் அதை யார் பொருட்படுத்துவார்கள்? “ஜெ” அறிவித்தவுடன் தான் அதற்கு பெரிய “மவுசே” ஏற்பட்டது, வெளி உலகத்திற்கும் தெரிந்தது. எனவே கொள்கை விளக்கக் குறிப்பில் அதற்கு முன்பே அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தைத்தான் 9-9-2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா ஏதோ புதிதாக அன்றுதான் அத்திட்டத்தை உருவாக்கி அறிவிப்பதைப்போலப் பேரவையில் 110வது விதியின் கீழ் அறிவித்திருக்கிறார். ஆனால் அந்த அறிவிப்பு என்னவாயிற்று? திருமழிசையிலே துணைக்கோள் நகரம் அமைந்து விட்டதா? இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டது. இன்னமும் அடிக்கல் நாட்டு விழாவே நடைபெற்ற தாகத் தெரியவில்லை. சென்னையையொட்டி துணைக்கோள் நகரம் அமைக்கும் இந்த யோசனை அப்போதல்ல; தி.மு. கழக ஆட்சியிலும் வந்தது. அதாவது; 2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 1-9-2006 அன்று பேரவையில் செய்யப்பட்ட அறிவிப்பில், “வண்டலூர் - கேளம்பாக்கம் சாலைக்குத் தென் பகுதியில், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் 45ஆம் எண் தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உத்தேசமாகச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தேர்வு செய்துள்ளது. இப்பகுதியில் 13 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன. 270 சதுர கிலோ மீட்டரில் உள்ள இந்நிலப்பரப்பு மாசற்ற, நல்ல சுற்றுப்புறச் சூழலில் இருக்கிறது. புதிய நகர அமைப்பிற்கு இது உகந்த பகுதியாகும். இப்பகுதியில் பெரும்பாலான நிலங்கள் பயிரிடப்படாமல் தரிசாகவே உள்ளன. இவற்றைக் கையகப்படுத்தும்போது நீர்வளப் பகுதி, குடியிருப்புப் பகுதி, காடுகள் உள்ள பகுதி ஆகியவற்றை நீக்கிவிட்டுத் தரிசாகவும், புஞ்சையாகவும் உள்ள நிலங்கள் மட்டுமே கையகப் படுத்தப்பட உள்ளன. நிலங்களைக் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு நியாயமான மார்க்கெட் விலை வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இடப்பெயர்ச்சி செய்யப்பட மாட்டார்கள். அவர்கள் அந்தந்த இடங்களிலேயே தொடர்ந்து வாழலாம். புதிய நகரம் அமையும்போது உருவாகும் வேலைவாய்ப்புகள் இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்ல பலனை வழங்கி அவர்கள் பொருளாதாரரீதியாக உயர்வடைய வழிவகுக்கும்” என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டது. தி.மு.கழக ஆட்சியில் பேரவையில் இந்த அறிக்கை படிக்கப்பட்டதுதான் தாமதம் - மறுநாளே 2-9-2006 அன்று ஜெயலலிதா அவசர அவசரமாக ஓர் அறிக்கையினை வெளியிட்டார். அதில், “ஆணவம் கொண்ட அற்ப ஜீவராசிகளின் பொறுப்பில் ஆளும் அதிகாரம் சிக்கிக் கொண்டிருப்பதால், ஜனநாயக மக்கள் விரோத அலங்கோலங்கள், பாரம்பரியம் மிக்க தமிழகத்தில் தொடர் நிகழ்வுகளாகிக் கொண்டிருக்கின்றன என்பதற்கு, சென்னையை ஒட்டி அமைக்க இருப்பதாக மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருக்கும் துணை நகர அறிவிப்பும் ஓர் உதாரணமாகிவிட்டது. ஓர் முதலமைச்சருக்குத் தொலைநோக்குப் பார்வை இல்லாதபோது இது போன்று தான்தோன்றித்தனமாகச் செயல்படுகின்ற நிகழ்வுகள் நெஞ்சை நடுங்க வைக்கும் நீசச் செயல்களாக அமைந்து விடுகின்றபோது அதற்கான விலையைக் கருணாநிதியும் அவரது கட்சியும் கொடுத்துத்தான் ஆக வேண்டும். சென்னைமாநகரத்தில் உள்ள மக்களின் இட நெருக்கத்தைக் குறைப்பதற்காக இந்தத் துணை நகரம் ஏற்படுத்தவிருப்பதாகக் கருணாநிதி சொல்கிறார். முதலில் அவர் வீட்டில் உள்ள பெண்டு பிள்ளைகள், பேரன் பேத்திகள், மறைந்த முதல் மனைவியின் உறவினர்கள், அவர்கள் வழி வந்த உறவினர்கள், இருக்கும் மனைவியின் உறவினர்கள், ஏற்படுத்திக்கொண்ட துணைவியின்வழி வந்த உறவினர்கள் ஆகியோர் முதலில் கோபாலபுரத்தை விட்டும், சி.ஐ.டி. காலனியை விட்டும் வெளியேறி ஜனநெருக்கத்தை மேற்படி பகுதிகளில் குறைக்கட்டும். மக்கள் நெருக்கடியைப் பற்றி மிகவும் கவலைப்படும் கருணாநிதி தனது குடும்ப உறுப்பினர்களால் உருவாகியுள்ள ஜன நெருக்கடியை உணர்ந்து அவர்களை முதலில் சென்னை மாநகரத்தைவிட்டு வெளியிலே அனுப்பிவைக்கட்டும். கருணாநிதிக்கு “துணை” என்றால் மிகவும் பிடிக்கும் போலும், அதனால்தான் சென்னை மாநகருக்கும் ஒரு “துணை”யைத் தேடுகின்றார். துணை நகரம் பற்றிய அறிவிப்பு வந்தவுடனே அலறித் துடிக்கும் மக்களின் வேதனை சுகபோகத்தில் வாழ்ந்து கொண்டி ருக்கும் கருணாநிதிக்குத் தெரிய வாய்ப்பில்லை. தனது குடும்பத்தார், சுற்றத்தார் மற்றும் பேரன்கள் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் பயன்பெறவே சென்னை துணை நகரத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படவுள்ளது என்ற செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன”
என்றெல்லாம் அந்த அறிக்கையில் ஜெயலலிதா, நாகரிகம்- பண்பாடு என்பதற்கெல்லாம் எள்ளளவும் இடமளிக்காமல், அப்போது கூறியிருந்தார். இன்றைக்கும் பழைய ஏடுகளில் அவரது அறிக்கை இடம்பெற்றுள்ளது. ஆனால் அந்த அறிக்கையையே மறந்துவிட்டு, அவரே திருமழிசையில் “துணை நகரம்” அமைக்கப் போவதாக அறிவித்தார். தற்போது மதுரையிலே “துணை நகரம்” அமைக்கப் போவதாகக் கூறியிருக்கிறார்.
இதிலே இன்னும் வேடிக்கை என்ன வென்றால், ஜெயலலிதா தி.மு.க. அறிவித்த துணை நகரத்தை அப்போது எதிர்த்து அறிக்கை கொடுப்பதற்கு முன்பாகவே; எங்களுடன் தோழமைக்கட்சியாக இருந்த பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் இந்த துணை நகரம் வருவதால் விவசாய நிலங்கள் எல்லாம் பாதிக்கும், அங்கே வசிக்கின்ற மக்கள் சிரமப்படுவார்கள் என்று நாகரிகமாகச் சொன்ன தன் பேரிலேயே இரண்டே நாட்களில், அதாவது 2-9-2006 அன்றே நான் விடுத்த அறிக்கையில், “தி.மு. கழகத் தேர்தல் அறிக்கையிலும், ஆளுநர் உரையிலும் நிதிநிலை அறிக்கையிலும் அறிவிக்கப்பட்டு சென்னையை ஒட்டிய துணை நகர அமைப்பு உருவாக்கப்படுமென நான் குறிப்பிட்டிருந்த திட்டம்; நல்லெண்ண அடிப்படையிலும் தோழமைக் கட்சி வழங்கிய அறிவுரையை சிந்தித்துப் பார்த்தும்; சில சுயநலத் தீய சக்திகள் திட்டமிட்டுள்ள பகிரங்க வன்முறை வெறியாட்டத்துக்கு அப்பாவிப் பொது மக்கள் பலியாகிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடனும் கைவிடப்பட்டுள்ளது” என்று அறிவித்துவிட்டேன்.
ஆனாலும், ஜெயலலிதாவின் அந்த அறிக்கை பற்றி 3-9-2006 அன்றே பா.ம.க.வின் அதிகார பூர்வ ஏடான “தமிழ் ஓசை”யில், “ஜெயலலிதாவின் அறிக்கை -- அநாகரிகத்தின் உச்சக் கட்டம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார்கள்.
தற்போது அ.தி.மு.க.வுடன் தோழமைக் கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான “தீக்கதிர்”, 4-9-2006 அன்று எழுதிய தலையங்கத்தில்,
“சென்னை அருகே துணைநகரம் அமைக்கும் திட்டம்
ரத்து செய்யப்படுவதாக முதல்வர் கருணாநிதி
அறிவித்துள்ளார். நல்லெண்ண அடிப்படையில்
தோழமைக் கட்சியினரின் உணர்வுகளை மதித்து இந்த
முடிவை எடுத்திருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
ஆனால் ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு அந்த
இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட முந்தைய
(அ.தி.மு.க.) ஆட்சி முயன்றபோது மாணவிகள் போராடினர். அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் ஆணவத்தோடு அந்தத் திட்டத்தைக் கைவிட அடாவடியாக மறுத்த ஜெயலலிதா அரசின் செயலோடு முதல்வர் கலைஞரின் இந்த அறிவிப்பை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. துணை நகரத் திட்டம் கூடாது என்று ஜெயலலிதா விடுத்த அறிக்கை அரசியல் அநாகரிகத்தின் உச்சமாக இருந்தது வேதனையளிக்கிறது. அரசின் ஒரு திட்டத்தை எதிர்க்க எதிர்க்கட்சிகளுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அதில் அரசியல் நாகரிகம் பேணப்பட வேண்டும். ஆனால் ஜெயலலிதாவின் அறிக்கையில் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் குறித்து அருவருக்கத்தக்க, அநாகரிகமான வார்த்தைகளை ஜெயலலிதா பயன்படுத்தியுள்ளார். அவரது வன்மத்தையும், வக்கிரத்தையுமே இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. இதனால்தான் சட்டமன்றத்தில் இந்த அறிக்கையை முதல்வர் (கலைஞர்) படித்துக் காட்டியபோது, அ.தி.மு.க.வினரால் கூடச் சகித்துக் கொள்ள முடியவில்லை போலும். சட்டமன்றமும், அரசியல் அரங்கமும் நாகரிகமான விவாதம் நடைபெற வேண்டிய இடங்களேயன்றி ஆத்திரத்தையும் அவதூறையும் வெளிப்படுத்தும் இடங்கள் அல்ல. ஜெயலலிதாவோ, அவரது கட்சியினரோ மக்களின் தீர்ப்பிலிருந்து இன்னமும் பாடம் கற்றுத் திருந்தவில்லை என்பதையே அவர்களது வார்த்தைகளும் செயல்பாடுகளும் நிரூபிக்கின்றன” என்று எழுதியிருந்ததை இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நான் இதையெல்லாம் குறிப்பிட்டதால் ஜெயலலிதா உடனே “நான் மாமல்லபுரம் அருகே துணை நகரம் அமைப்பதைத்தான் எதிர்த்தேன், திருமழிசையில்தானே பிறகு அறிவித்தேன்” என்று சொல்லக்கூடும்! ஆனால் அதே திருமழிசையில் தி.மு.கழக ஆட்சிக் காலத்திலேயே ஒரு துணை நகரம் அமைப்பதற்கான முயற்சிகளில் 2006ஆம் ஆண்டு பொறுப்புக்கு வந்ததும் தொடங்கினோம். அந்தப் பகுதி மக்களும், விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும், தோழமைக் கட்சிகளும் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். எனவே அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, 21-12-2006 அன்று தமிழக அரசின் சார்பில் துணை நகரம் அமைக்கும் திட்டத்திற்காக நஞ்செய், புஞ்செய் நிலங்களை கையகப்படுத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு 2006ஆம் ஆண்டு தி.மு. கழகம்; துணை நகரத் திட்டத்தை அறிவித்தபோது ஜெயலலிதாவும், வேறு சிலரும் அதனை எதிர்க்காமல் இருந்திருந்தால் கழக ஆட்சியிலேயே துணை நகரமும் வந்திருக்கும், சென்னையின் இட நெரிசலும் ஓரளவு குறைந்திருக்கும். ஆனால் அன்றைக்குத் தி.மு.கழக அரசு துணை நகரத்தை அறிவித்தபோது எதிர்ப்பு கூறப்பட்டாலும், தற்போது ஜெயலலிதா அம்மையார் பேரவையில் 110வது விதியின் கீழ் மதுரையிலே துணை நகரம் அமைக்கப் போவதாக அறிவித்திருப்பதை அவருடைய தோழமைக் கட்சிகள் எல்லாம் வரவேற்றுப் பாராட்டியிருக்கின்றன. மதுரை துணை நகரமும், திருமழிசைபோல் காலதாமதமாகி விடாமல் விரைவில் நடைமுறைக்கு வருகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்! ஆனால் தி.மு.க. ஆட்சியில் “துணை நகரத்தை” அறிவித்தபோது, மறுநாளே அதுபற்றி “அநாகரிகமாக” “கொச்சைப்படுத்தி”; “துணை” என்ற வார்த்தையை வைத்து அறிக்கை விடுத்த ஜெயலலிதா அம்மையாரின் தற்போதைய “துணை” நகரத்தைப் பற்றி நான் அவர் “பாணி”யிலே அறிக்கைவிட விரும்பவில்லை. மாறாக அவர் விடுத்த அறிக்கையைத்தான் தற்போது ஞாபகப்படுத்தியிருக்கிறேன். “அந்த நாள் ஞாபகம் வந்ததே; அம்மையே! அம்மையே!” என்றுதான் பாடிடத் தோன்றுகிறது.
அன்புள்ள, மு.க. 9-4-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗