உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3728

அருந்ததியருக்கு கழக ஆட்சி ஆற்றிய கடமை!

2013-04-04

உடன்பிறப்பே,

1-4-2013 தேதிய “தீக்கதிர்” நாளிதழின் முதல் பக்கத்தில், “அருந்ததியர் வாழ்வில் விடியல்; மார்க்சிஸ்ட் கட்சிக்கே பெருமை” என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. சாகித்ய அகாடமி விருது பெற்ற “தோல்” நாவல் ஆசிரியர் செல்வராஜ் அவர்களுக்குத் திண்டுக்கல்லில் நடைபெற்ற பாராட்டு விழாவில், அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர், திரு. ஜக்கையன் பேசிய பேச்சுக்குத்தான் இவ்வாறு தலைப்பிட்டு “தீக்கதிர்” வெளியிட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது அந்த நாவலுக்குக் கிடைத்தது, தகுதியான ஒருவருக்குக் கிடைத்த உரிய விருது என்பதில் நான் அப்போதே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அந்தப் பேச்சில் திண்டுக்கல் நகரத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கான மாநாட்டைத் தோழர் என்.வரதராஜன் நடத்தியதுபற்றியும், இன்றைய அந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் சகோதரி பாலபாரதி கலந்துகொண்டது குறித்தும் தெரிவித்துவிட்டு, “இன்றைக்கு அருந்ததியர் சமூகம் 3 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கிறது என்றால், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்தான் காரணம்” என்றும் பேசியிருக்கிறார். அதிலே நமக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை. ஆனால் அந்தப் பேச்சாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த அந்த முக்கியமான வேண்டுகோள் எந்த ஆட்சிக் காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அருந்ததியர் சமுதாயத்தினர் இந்த உள் ஒதுக்கீட்டுப் பயனைப் பெற்றுவருகிறார்கள் என்பதைச் சொல்லாமலே விட்டுவிட்டாரே! அது ஏன் என்று புரியவில்லை. அவர் பேசாமல் விட்டுவிட்ட காரணத்தால், இந்தக் கடிதத்தின் மூலம் அருந்ததியர் சமுதாயத்திற்குக் கழக ஆட்சியில் என்னென்ன செய்யப்பட்டது என்பதை நினைவூட்டுவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.

ஆதி திராவிட மக்களுக்குள், அருந்ததியினர் சமூக மற்றும் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்தம் முன்னேற்றத்திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியமெனக் கருதி, ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் இருந்து 3 சதவிகிதம் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான முடிவு 27-11-2008 அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான் எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2009ஆம் ஆண்டில் “தமிழ்நாடு அருந்ததியர்கள் “தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில் இடங்களை மற்றும் அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளைப் பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டிற்குள்ளாகத் தனி ஒதுக்கீடு செய்தல் சட்டம்” இயற்றப்பட்டு, 29-4-2009இல் இது தொடர்பான விதிகளும் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.கழக ஆட்சியில் இவ்வாறு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் காரணமாக 2009-2010இல் அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த 56 மாணவ மாணவியர் மருத்துவக் கல்லூரிகளிலும், 1,165 மாணவ மாணவியர் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து, மொத்தம் 1,221 பேர் பயன்பெற்றனர். 2010-2011இல் இந்த எண்ணிக்கை மருத்துவக் கல்லூரிகளில் 70 என்றும், பொறியியல் கல்லூரிகளில் 1,813 என்றும் மொத்தம் 1,883 என்றும் மேலும் அதிகரித்தது. 2009-2010இல் முதன் முதலாக - அருந்ததியர்க்கு மூன்று சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டபின் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து பயனடைந்த அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக; “பெண் சிங்கம்” என்ற திரைப்படத்திற்கு நான் கதை வசனம் எழுதி, அதற்கு ஊதியமாகக் கிடைத்த 50 லட்சம் ரூபாயையும், மேலும் என் சொந்தப் பணத்திலிருந்து 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தம் 61 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கி, இந்த 1,221 பேருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் கல்வி வளர்ச்சி நிதியாக 5-12-2009 அன்று வழங்கினேன்.

வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்த ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் இறுதியில் தன்னையே மாய்த்துக்கொண்ட வரலாறு ஒரு புறம் என்றால்; மற்றொருபுறம்; வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே, நெல்லைச் சீமையின் நெல்கட்டும் செவல் மாவீரன் பூலித்தேவன் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டார். வெள்ளையருக்கு எதிரான பல போர்களில் பூலித்தேவனுக்கு முதன்மைப் படைத் தலைவராக இருந்தவர், அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த “ஒண்டி வீரன்”. கட்ட பொம்மனுக்கும், பூலித் தேவனுக்கும், சுந்தரலிங்கத்துக்கும் நினைவுச் சின்னங்களை எழுப்பிய கழக அரசு, அருந்ததிய சமுதாயத்தினரான விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவைப் போற்றும் வகையில் தக்கதோர் நினைவுச் சின்னம் ஒன்றினை நெல்லைச் சீமையில் எழுப்பும் என்று கழக ஆட்சியிலேதான் நிதிநிலை அறிக்கையிலேயே 19-3-2010 அன்று அறிவிக்கப்பட்டது.

அருந்ததியர்களுக்கு அவர்தம் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நிதிஉதவி வழங்குவதற்கென தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில் 8.6.2007 அன்று தொடங்கப்பட்டு, 22 ஆயிரத்து 811 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு, அவர்களுள் 1,133 உறுப்பினர் குடும்பங்களுக்கு 17 இலட்சத்து 86 ஆயிரத்து 440 ரூபாய் நிதிஉதவி வழங்கப்பட்டதும் தி.மு. கழக ஆட்சியிலேதான்.

மேலும், மனிதக் கழிவை அகற்றித் தூய்மைப்படுத்தும் பணிகளில் முன்னர் ஈடுபட்டிருந்தோருக்கு மாற்றுத் தொழிலில் ஈடுபட உதவுவதற்காக 22 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மறுவாழ்வுத் திட்டம் ஒன்றும் கழக அரசால் செயல்படுத்தப்பட்டது. இப்பணியாளர்கள் கழிவுநீர்க் குழாய்களில் இறங்கிப் பணிபுரிவதைத் தவிர்க்க, மாநகராட்சிகள் அனைத்திலும் அடைப்புகளை அகற்றும் இயந்திரங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டு; சென்னை மாநகரைப் பொறுத்தவரை 3 கோடியே 97 இலட்சம் ரூபாய்ச் செலவில், 47 தூர்வாரும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன; மற்ற 9 மாநகராட்சிகளுக்கும் தேவையான அடைப்பு நீக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. மாநகராட்சிகள் அனைத்திலும் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்காக மனிதர்களை ஈடுபடுத்தும் அவலநிலையை அகற்றி, இயந்திரங்கள் மூலம் தூய்மை செய்யும் பணி தொடங்கப்பட்டது. சென்னை சாந்தோம் கலைவிழா மன்றம் சார்பில் 2008ஆம் ஆண்டுக்கான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டபொழுது நான் ஆற்றிய உரையில், “தமிழ்நாட்டில் சிறுபான்மையோருக்கு, ஏழை, எளியோருக்கு, பிச்சைக்காரர்களுக்கு, ஊனமுற்றோர்க்கு எல்லோர்க்கும் ஒருவர் பாக்கி இல்லாமல் அரசின் சார்பிலே நன்மைகள் பலவற்றைச் செய்திருந்தாலும்கூட, ஒரு பகுதி விடப்பட்டுள்ளது. ஒரு பகுதி கண்ணிருந்தும் குருடர்களாக - வாயிருந்தும் பேச முடியாதவர்களாக - வாழ முடியாதவர்களாகவே, மதிக்கப் படாதவர்களாகவே ஒரு சமுதாயம் தமிழ்நாட்டிலே இருக்கிறது. இன்னமும் இருந்து வருகின்றது. அந்தச் சமுதாயத்தின் பெயர்தான் அருந்ததியர் சமுதாயம். அந்த அருந்ததியர் சமுதாயம் தங்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டுமெனக் கேட்டார்கள். அதற்காக நீதியரசர் ஜனார்த்தனம் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அரசுக்கு அறிக்கையைத் தந்தது. அந்த அறிக்கையை இன்னும் இரண்டொரு நாளில் கூடுகின்ற எங்களுடைய அமைச்சரவைக் கூட்டத்திலே ஆலோசித்து விவாதித்து அந்தச் சமுதாயத்திற்குத் தேவையான சலுகையை இந்த அரசு அளிக்கவிருக்கிறது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், மலம் தூக்குகின்ற மனிதவர்க்கம் அது; தலையில் மலத்தைத் தூக்கிச் செல்லுகின்ற மனிதவர்க்கம்; நாகரிக காலத்தில் மலத்தை அகற்ற - கழிவறைகளைச் சுத்தப்படுத்த - பல வழிமுறைகள் வந்திருந்தும்கூட இன்னமும் கிராமப் பகுதிகளில் அந்த மலத்தைத் தூக்குகின்ற மகா கொடிய நிலை இன்னும் மாறவில்லை. மனிதனை மனிதனாக ஆக்க வேண்டும். மனித மலத்தை மனிதனே தூக்குவது நமக்கெல்லாம் பெருமையாகாது. வெட்கக்கேடு. நமக்கு அதைவிட அவமானம் வேறில்லை. அவர்கள் அவமானச் சின்னங்கள் அல்ல. அவர்களை அப்படி ஆக்கி வைத்து அரசு நடத்திக் கொண்டிருக்கிறோமே நாம்தான் அவமானச் சின்னங்கள் என்ற எண்ணத்தோடு, அந்த அவமானத்தைப் போக்க எடுத்திருக்கின்ற நடவடிக்கைதான் என்னைப் பொறுத்தவரை முக்கியம்.

அரசுச் செயலாளர்கள் என்னிடம் பேசும்போது இப்போதே இதைச் செய்ய வேண்டுமா என்றார்கள். அப்போது நான் சொன்னேன். கீழான மக்கள் கேவலப்படுத்தப்படும் மக்கள், புழுக்களாய் நெளிந்து கொண்டிருக்கின்ற மக்கள், மனிதனைப் பார்த்து மனிதனே மதிக்காத அளவிற்கு மட்டரகமாக ஆக்கப்பட்ட மக்கள் - அந்த மக்களைக் கைதூக்கி விடுவதுதான் இந்த கருணாநிதியின் வேலை - இதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். அந்தச் சாதனையிலே, சரித்திரத்திலே, இதுவரையில் இடம்பெறாமல் இருப்பது இந்த அருந்ததியர் மக்களுக்கு நாம் அன்பு காட்டி அவர்களைக் கைதூக்கிவிடாமல் இருப்பதுதான் - நான் என்னுடைய சரித்திரத்தில் கடைசியாகவாவது - கடைசிப் பக்கத்தில் எழுத வேண்டிய - அச்சடிக்கப்பட வேண்டிய செய்தி அருந்ததியர்களுக்குச் சமூக நீதி அளித்தேன் என்ற அந்தச் செய்தி இடம்பெற வேண்டும்” - என்று தெரிவித்தேன்.

இன்னும் கூற வேண்டுமேயானால், அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கான மசோதா பேரவையிலே நிறைவேற்றப்படவிருந்த நாளன்று இராமச்சந்திரா மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்த நான் 26-2-2009 அன்று என் கைப்பட பேரவைத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அவை முன்னவர் அருமைப் பேராசிரியர் அவர்களே, சட்டப்பேரவை அனைத்துக் கட்சி அன்பு உடன்பிறப்புகளே, இன்று வந்து உங்களைச் சந்திப்பதாக இருந்தும்கூட டெல்லி மருத்துவரும் சென்னை மருத்துவ நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன். நிமிர முடியாமலும், திரும்ப முடியாமலும் “நங்கூரம்” போட்டது போல நரம்பிணைந்து முதுகுத் தண்டில் வலி! வலி!

ஒன்று உடல் வலி - பிறிதொன்று நீங்கள் வழங்கியுள்ள மன வலி! கருத்து மாறுபாடுகளுக்கிடையிலேயும் நீங்கள் காட்டும் கனிவு - அரசியல் மாச்சரியங்களை மீறி நீங்கள் காட்டும் அன்பு - இன்று நம்மை மீண்டும் இணைக்கிறது - தமிழ்த் தாயின் கரம் நம்மை ஒரு சேர அணைக்கிறது. அறிவியக்கம் - ஆன்மிகம் - நாத்திகம் - ஆத்திகம் - இந்த வேறுபாடுகள் மாறுபாடுகள் கடந்த நன்றியுணர்வும் நன்மனித நேயமும் வளர்த்திடுவோம். ஆரம்பகால பொதுவுடைமைவாதி என்ற முறையிலும் அய்யா, அண்ணா, காமராஜர், அண்ணன் ஜீவா போன்றோரின் அருமைத் தொண்டர்களில் ஒருவன் என்ற முறையிலும் - அடி மட்டத்துக்கெல்லாம் அடி மட்டமாகக் கிடந்து அவதியுறும் “மனித ஜீவன்கள்” - “அருந்ததி” மக்கள், புதிய உலகம் - புரட்சியுகம் - காண்பதற்காக; இன்று அவையில் நான் முன் வைக்கும் சட்ட முன்வடிவை; உங்கள் ஆதரவு வழங்கி; நிறைவேற்றித்தர வேண்டுகிறேன். இங்ஙனம், உங்கள் அன்பு நதியில் - என்றும் நனைந்திடவே விரும்பி வாழும்; உடன்பிறப்பு - உங்களில் ஒருவன், அன்பு மறவாத (மு. கருணாநிதி) 26.2.2009” - என்று எழுதியிருந்தேன். அருந்ததியர் சமுதாயத்தின்பால் எனக்கு எந்த அளவிற்கு ஈடுபாடு உண்டு என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு கூறவேண்டுமேயானால், என்னுடைய அணுக்கத் தொண்டராக - என்னை அன்றாடம் பராமரிப்பதிலே தன்னை முழு அளவிலே ஈடுபடுத்திக் கொண்டவராகப் பணியாற்றும் தம்பி நித்யாவே அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஏன், கழகத்தின் மூன்று துணைப் பொதுச் செயலாளர்களிலே ஒருவரே அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்!

அன்புள்ள, மு.க. 4-4-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗