உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3727

தங்கள் “தகுதி”யை வெளிப்படுத்துவார்களா?

2013-04-03

உடன்பிறப்பே,

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மீது ஏடுகளில் புகார்கள் வருவதும், வேறு வழியின்றி அவர்கள் மீது முதலமைச்சரே நடவடிக்கை எடுத்துப் புகாருக்கு ஆளானவர்களை ஒதுக்கிவைத்து விட்டதாகக் காட்டிக்கொள்வதும், தவறு செய்த சில அமைச்சர்கள் மீது “ஏதோ” ஒரு “முக்கிய” காரணத்திற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீடிக்க அனுமதிப்பதும், தொடர்ந்து நாம் 2011ஆம் ஆண்டிலிருந்து நேரில் கண்டு வருகின்ற சம்பவங்களாகும். அவ்வாறு தவறிழைத்த பல அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். பல அமைச்சர்கள் மீதான புகார்கள் தொடர்ந்து எனக்குக் கிடைத்து வந்தபோதிலும், தனிப்பட்ட முறையில் அவர்கள்மீது குறை கூறுவதைத் தவிர்ப்பதற்காகவே, கேள்வி-பதில் பகுதியைக் கூட நான் எழுதாமல் கடந்த சில வாரங்களாகத் தவிர்த்துவந்தேன். ஆனால் போக்குவரத்துத் துறை அமைச்சர் மீது அடுக்கடுக்காகப் பல புகார்கள் கூறப்பட்ட போதிலும் இதுவரை மேலிடத்தால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏடுகளில் ஏற்கனவே வெளிவந்த சில தகவல்கள் வருமாறு :- கரூர் வெங்கமேடு, பெரியகுளத்துப் பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - தெய்வானை தம்பதியின் தத்துப்பிள்ளை காமாட்சி பெரியசாமி என்கிற கோகுல். கோவை இந்துஸ்தான் கல்லூரியில் படித்து கால்சென்டரில் வேலை பார்த்தார். படிக்கும்போது கோவையைச் சேர்ந்த கவுரி சாந்தினி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ராமலிங்கம் மறைவுக்குப்பின் தன் வளர்ப்பு மகன் கோகுலுடன் தெய்வானை வசித்து வந்தார். தெய்வானைக்கு கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் பல கோடி ரூபாய் மதிப்புடைய 3.5 ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது. இந்நிலையில் 2011 ஜூன் 3ஆம் தேதி, கோவையிலிருந்து கரூருக்கு புறப்பட்ட கோகுலை ஒரு கும்பல் காரில் கடத்தியது. அந்தக் கும்பல், அவரை மது குடிக்கவைத்து அவரிடம் வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிச் சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாகத் தெரிகிறது. கோகுல் 2011 செப்டம்பர் 19ந்தேதி கரூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். இதை அடுத்து நடராசன், கருப்பண்ணன், பிரபு, பெரியசாமி, மோகன்ராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின் எந்த விசாரணையும் நடக்கவில்லை.

கடந்த ஜனவரி 5ந்தேதி கரூர் நீதிமன்றத்தில் கோகுல் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், “2011 ஜூன் 3ந்தேதி என்னைக் கடத்திச் சென்றனர். அங்கே அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வந்தார். அமைச்சருக்கு போன் செய்த அவர், என்னிடம் கொடுத்தார். மறுமுனையில் பேசிய செந்தில் பாலாஜி “ஏன்டா அனாதைப் பயலே, உனக்கு இவ்வளவு சொத்து தேவையா? நான் சொல்வதைக் கேட்காவிட்டால், உன்னை ஆசிட் ஊற்றிக் கொளுத்திடுவேன்” என்றார். இரண்டு வாரம் என்னை அடைத்துவைத்துச் சித்ரவதை செய்தனர். கரூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டிக் கையெழுத்து வாங்கி என் சொத்துகளை அவர்களது பெயருக்குக் கிரயம் செய்து கொண்டனர். எனக்கு எந்தப் பணமும் தரவில்லை” என்று வாக்குமூலம் கொடுத்தபின் கோகுல் எங்குச் சென்றார், என்ன ஆனார் என்ற எந்த விவரமும் இல்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.

கோகுல் தனது ரகசிய வாக்குமூலத்தில், தன்னைக் கடத்திச் சென்றவர்கள் என்று போக்குவரத்து அமைச்சரையும், அவரது தம்பியையும் குறிப்பிட்டிருந்த போதிலும், வழக்கில் அவர்கள் பெயரைப் போலீசார் சேர்க்கவில்லை. அவர்களின் பெயர்களைச் சேர்க்க வேண்டுமென்று கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர், வழக்கறிஞர் மணிராஜ், கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கு பல மாதங்களாக நடைபெறுகிறது. வாக்குமூலம் கொடுத்த கோகுல் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஆளுங்கட்சியினர் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி, இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான முயற்சியிலே ஈடுபட்டு வருகிறார்களாம். அமைச்சர் பாலாஜிமீது சொல்லப்படும் இந்தக் குற்றச்சாட்டு பற்றி அரசின் சார்பில் இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை. இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளானவர்தான் தி.மு.க.

சட்டமன்றக் கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தகுதியைப் பற்றிக் கேள்வி கேட்டிருக்கிறார்.

இதே போக்குவரத்துத் துறை அமைச்சர் பெயரை எழுதிக் கொண்டு, ஈரோடு நகரில் நம்பர் பிளேட் இன்றி, அ.தி.மு.க. வர்ணம் பூசிய ஆட்டோ ஒன்று சுற்றி வருவதாகவும், போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அதுபற்றி நடவடிக்கை எடுக்க முடியாமல் திண்டாடுவதாகவும் ஒரு செய்தி ஏடுகளில் வந்தது. அதற்காவது விளக்கம் தரப்பட்டதா? கிடையாது.

பா.ஜ.க.வின் தமிழ் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி ஒன்று 12-3-2013 அன்று ஏடுகளில் வெளிவந்தது. அந்தப் பேட்டியில், “கரூரில் போலி மதுபானம் தயாரிப்பில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், சாராய வழக்கில் கைதானவர்களுக்கும், இந்தக் கும்பலுக்கும் தொடர்புள்ளது. சாராயம் காய்ச்சுவது மட்டுமல்லாமல், போலி பிராந்தி, விஸ்கி போன்றவற்றைத் தயாரிப்பதிலும் இவர்கள் ஈடுபட்டதாகப் புகார் கூறப்படுகிறது. அமைச்சரான செந்தில் பாலாஜிக்கும் இந்தக் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக இங்கு மக்கள் சந்தேகிப்பதைப் புறந்தள்ள முடியாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார். அதன்படி இந்த அரசு கவனம் செலுத்தியதா? கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுடன் அமைச்சர் பாலாஜியைத் தொடர்புபடுத்தும் அந்தத் தகவல் உண்மையா என்பதைப் பற்றி அரசினர் விளக்கமளித்துச் சந்தேகத்தைப் போக்கிட வேண்டிய பொறுப்பு உண்டா? இல்லையா?

இதெல்லாம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்த செய்திகள். ஆனால் 28-3-2013 தேதியிட்ட “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேட்டில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் ஒரு செய்தி வந்துள்ளது. அது வருமாறு :-

“போக்குவரத்துத் துறையின் சார்பில் பேருந்துகளில்

“டிக்கெட்” வழங்குவதற்கான “எலெக்ட்ரானிக்

மெஷின்”களை நிறுவுகின்ற 200 கோடி ரூபாய்க்கான

ஒரு பணி ஒரு கம்பெனிக்குத் தரப்பட்டுள்ளது. அந்தக்

கம்பெனிக்கு “டிக்கெட்” மெஷினைத் தயாரிப்பதற்கான

எந்த அனுபவமும் கிடையாது. கம்பெனிகளின் பதிவாளருடைய “வெப்சைட்” படி அந்தக் கம்பெனிக்கு தேவையான எந்த அருகதையும் இல்லை. இந்த இயந்திரத்தைப் பொருத்துகின்ற கம்பெனிக்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும். இந்த ஒப்பந்தம் ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கும். இதற்கான ஆவணங்கள் “டைம்ஸ் ஆப் இந்தியா”விடம் உள்ளன. தற்போது டெண்டர் வழங்கப்பட்டுள்ள கம்பெனி, டெண்டர் கோரப்பட்ட 24-1-2013 அன்றுதான் தொடங்கப்பட்டுள்ளது. டெண்டர் தேதி இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதலில் 31-12-2012 என்ற தேதிக்கு மாறாக 18-1-2013 என்றும், பிறகு 24-1-2013 என்றும் மாற்றப்பட்டுள்ளது.

டெண்டர் தாக்கல் செய்ய முக்கிய விதிகள் என்னவென்றால், அவர்கள் 25 கோடி ரூபாய்க்கான சொத்து உடையவர்களாக இருக்கவேண்டும். ஆனால் இந்தக் கம்பெனியின் சொத்து 8 லட்சத்திற்கும் குறைவு என்று ஆவணங்கள் கூறுகின்றன. இந்தக் கம்பெனியைப் பற்றி அதிகாரிகளின் ஆய்வுக் குழு சில குறைபாடுகளைத் தெரிவித்த போதிலும், இந்த டெண்டர் அவர்களுக்கே தரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கம்பெனி இணைத்து அனுப்பியுள்ள பல ஆவணங்கள் விதிமுறைகளுக்கு மாறாகக் கையினால் எழுதப்பட்டுள்ளதாம். இந்தக் கம்பெனியின் தகுதியின்மை குறித்தும் ஆய்வுக்குழு தெரிவித்திருக்கிறதாம்.

அரசு தற்போது டெண்டர் அளித்த கம்பெனியின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், ஏற்கனவே கறுப்புப் பட்டியலிலே இடம்பெற்றவர்கள் என்று இந்தப் பணிக்கான டெண்டர் விண்ணப்பம் செய்து கிடைக்காதவர்கள் இந்தத் துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இதுபற்றி விவரமாக எழுதியுள்ள “டைம்ஸ் ஆப் இந்தியா” ஏடு, துறை அதிகாரியிடம் இதைப்பற்றி விசாரித்ததாகவும், குறிப்பிட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க மறுத்த போதிலும், தவறு நடைபெறவில்லை என்று கூறியதாகவும் எழுதியுள்ளது.

அரசின் துறையினைப் பற்றி இந்த அளவிற்குப் பெரிதாக விவரங்களுடன் ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டிருப்பதால், இதிலே உள்ள உண்மை என்ன என்பதைப் பற்றி அரசின் சார்பில் விவரம் அளிக்க வேண்டுமென்று கழகத்தின் சார்பில் தளபதி மு.க.ஸ்டாலின் கழக சட்டமன்றக் கட்சியின் தலைவர் என்ற முறையில் 28ஆம் தேதியன்றே அவையிலே விளக்கம் கேட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு அங்கே இதைப்பற்றி பேசுவதற்கு அனுமதி வழங்கப்படாததால், கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்கள். அதற்குப்பிறகு நீண்ட நேரம் கழித்து, கழகத்தின் சார்பில் விளக்கம் கேட்டதையே அவைக் குறிப்பிலிருந்து நீக்கியும் விட்டார்கள். அ.தி.மு.க. அரசு செய்தது சரிதான் என்றால், நேற்றைக்குச் சொன்ன விளக்கத்தை அன்றைக்கே அவையிலேயே சொல்லியிருக்கலாம் அல்லவா? பேசுவதற்கே ஏன் அனுமதி மறுக்கவேண்டும்? அந்தப் பத்திரிகையிலே இந்தப் புகார் வந்து நான்கு நாட்களுக்குப் பிறகு அமைச்சர் விளக்கமளிக்கிறார். ஏன் இந்தத் தாமதம்? இந்தத் தாமதம் பற்றிப் பல வகையிலும் பொதுமக்கள் சந்தேகம் கொள்வார்கள் அல்லவா?

எப்படியோ? அரசு பற்றி ஒரு மிகப் பெரிய புகார் ஆங்கில நாளேட்டில் வெளிவந்துள்ளது. அவர்களுக்குக் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையிலே அதை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அரசு அதற்கான விளக்கங்களை உரிய முறையில் அளிக்க வேண்டுமே தவிர, எப்படி இதை வெளியிட்டீர்கள் என்று அவர்கள் மீதும் ஒரு அவதூறு வழக்குபோட முனைவது நல்லதல்ல. அரசு எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு போட்டுத் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களை முடக்கிவிடுவதன் காரணமாக அரசின் பல்வேறு தவறுகள் சுட்டிக்காட்டப்படாமலே நின்று விடுகின்றன. நேர்மையான அரசாக இருந்தால், உரிய குற்றச்சாட்டுகளுக்கு நிறைவளித்திடும் வகையில் பதிலளிக்க வேண்டியதுதான் கடமையே தவிர, வழக்குப் போட்டு மிரட்டுவது நல்லதல்ல.

இந்தியா முழுவதும் வெளியாகும் ஒரு முக்கியமான பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்த ஒரு புகாரைத் தி.மு.க. மாத்திரமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவற்றின் சார்பாக பிரச்சினை எழுப்பினால், பொறுப்புள்ள அமைச்சர் பதில் அளிக்க வேண்டுமே தவிர, “தகுதி இல்லை” என்று சொல்வதும், “யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததைத் திருவிளையாடலில் தருமி தன் பாட்டு என்று சொல்லிப் பரிசு கேட்டதைப்போல ஏதோ பத்திரிகையில் வந்த செய்தியைப் பிடித்துக் கொண்டு வந்து இங்கே வந்து குற்றம் சொல்கிறார்கள்” என்றும், “சில கிருமிகள் எழுதியதாகக் கூறுகின்ற குற்றச்சாட்டு” என்றும் பேசுவது ஒரு அமைச்சருக்கு உள்ள “தகுதி” அல்ல; பேரவையில் காப்பாற்றப்பட வேண்டிய கண்ணியத்திற்கும் இது துணை செய்யாது.

“தட்சணாமூர்த்தி கருணாநிதி என பெயர் மாறினால் பிறவி குணம் மாறி விடுமா?” என்று பேரவையில் அமைச்சர் பேசியதாக சில ஏடுகளிலே வெளிவந்துள்ளது. இதிலிருந்தே அ.தி.மு.க. அமைச்சரின் “தகுதி” என்ன என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே புரிகிறது!

இறுதியாக அமைச்சரிடம் ஒரே ஒரு விளக்கம்! இந்தக் குறிப்பிட்ட டெண்டர் “இன்ஜெனரி டெக்னாலஜீஸ் சொல்யூஷன்ஸ்” என்ற கம்பெனிக்குத் தரப்பட்டதை அமைச்சர் ஒப்புக்கொள்கிறார். இந்தக் கம்பெனி என்றைக்குத் தொடங்கப் பட்டது? எப்போது டெண்டர் கொடுக்கப்பட்டது? டெண்டர் நிபந்தனையாக மூன்றாண்டுகள் அனுபவம் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே? அது ஏன் புறக்கணிக்கப்பட்டது? ஆனால் ஏற்கனவே ஏதோ ஒரு பெயரில் இந்த நிறுவனம் இயங்கிவந்ததாக அமைச்சர் சொல்கிறார். ஏதோ ஒரு பெயரில் இந்த நிறுவனம் இயங்கிவந்தது என்றால், அந்த நிறுவனத்தின் பெயரால் டெண்டர் கோரியிருக்க வேண்டியதுதானே? ஏன் அரசின் நிபந்தனை தளர்த்தப்பட்டது? இந்தக் கேள்விக்கு அமைச்சரோ, முதல் அமைச்சரோ பதில் அளிப்பார்களா? தங்களுடைய தகுதியை வெளிப்படுத்துவார்களா?

அன்புள்ள, மு.க. 3-4-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗