உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3726

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?

2013-04-01

உடன்பிறப்பே,

கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டு பேர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளாவில் நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள் எந்தக் காரணமுமின்றி, அவர்களைச் சுட்டுக் கொன்றனர். கடற்கொள்ளையர்கள் என்று நினைத்து அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகப் பின்னர் இத்தாலி தரப்பினர் கூறினர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, இத்தாலி கப்பலில் பாதுகாவலர்களாக வந்த கடற்படை அதிகாரிகள் இரண்டு பேரைக் கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசும் கேரள அரசும் திட்டவட்டமாகத் தெரிவித்தன.

ஆனால் அவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க ராஜ்ய ரீதியில் இத்தாலி அரசு பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்தது. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை. இது தொடர்பாக இத்தாலி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. வழக்கு நிலுவையிலே இருந்த போதே, இத்தாலி கடற்படை அதிகாரிகள் இருவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு இத்தாலி சென்று வர நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவர்கள் நாடு சென்று திரும்பினர். கடந்த மாதம் மீண்டும் ஒரு முறை தேர்தலில் வாக்களிப்பதற்காக தாய்நாடு செல்ல அனுமதி கோரி, உச்ச நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்தது. அதன்படி இத்தாலி சென்ற அவர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பவில்லை.

அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப முடியாதென்று இத்தாலி அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த இடதுசாரி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை டெல்லியிலே 12-3-2013 அன்று தனித்தனியே சந்தித்து, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், இத்தாலி அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அம்மையாரும் இத்தாலி அரசு துரோகம் இழைத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டினார். உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்து, இரு வீரர்களுக்கும் உத்தரவாதம் அளித்த இத்தாலி தூதர் வெளிநாடு செல்வதற்கு அதிரடியாகத் தடை விதித்தது. இத்தனைக்கும் பிறகு இத்தாலி அரசு பணிந்தது. இரண்டு கடற்படை வீரர்களையும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிவைக்க முடிவுசெய்தது.

இது இத்தாலி; இப்போது இலங்கைக்கு வருகிறேன்.

கடந்த மாதம் 27ஆம் தேதியன்று தூத்துக்குடி, தருவைகுளத்தைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்கள கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டார்கள். அவர்கள் மார்ச் திங்கள் இரண்டாவது வாரத்தில்தான் விடுவிக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் இந்த மாதம் 13ஆம் தேதியன்று மீன் பிடிக்கச் சென்றபோது சிங்களப் படையினர் கடத்திச் சென்று விட்டார்கள். இவர்கள் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 28-3-2013வரை அவர்களைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு, அவர்கள் அனுராதபுரம் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கே வைக்கப்பட்டனர்.

மீண்டும் 14ஆம் தேதியன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 34 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றார்கள். அப்போது தமிழக மீனவர்களை அவர்கள் இரும்புத் தடிகளாலும், துப்பாக்கியின் பின்புறத்தாலும் கடுமையாகத் தாக்கினார்கள். மீனவர்கள் வைத்திருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவிகளைப் பறித்துக் கொண்டனர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த ஏராளமான மீன்களையும் பறித்துக் கடலில் கொட்டினார்கள். மீனவர்களின் வலைகளையும் அறுத்தெறிந்தனர்.

18-3-2013 அன்று புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது, அவர்களில் மூன்று பேரை இலங்கைக் கடற்படையினர் மறித்துக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். பலத்த காயத்தோடு திரும்பிய அவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் இவ்வாறு சிறை பிடிக்கப்படும்போதெல்லாம் தமிழக அரசின் சார்பாக மத்திய அரசுக்கு உடனடியாக முதலமைச்சர் கடிதம் எழுதுவதும், மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் இலங்கையிடம் முறையிடுவதும் தொடர்கதையாக நீடித்து வருகிறது.

இந்த நிலையில் 13ஆம் தேதி சிறைபிடிக்கப்பட்டு அனுராதபுரம் சிறையில் 28ஆம் தேதி காவலில் இருந்த 19 மீனவர்களும், “ரிமாண்ட்” காலம் முடிவுற்றுத் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 28ஆம் தேதி இலங்கை நீதி மன்றம் ஏப்ரல் 11ஆம் தேதிவரை அவர்களின் “ரிமாண்ட்” காலத்தை நீடித்து உத்தரவிட்டுள்ளது. இதை அறிந்து அந்த 19 மீனவர் குடும்பத்தினரும் பெரும் வேதனையில் மூழ்கியுள்ளனர். சகோதர மீனவர்கள் இலங்கைச் சிறையிலே வாடுவதற்காக இங்கேயுள்ள மீனவர்கள்தான் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்களே, நேற்றுகூட ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்களே, அதெல்லாம் மத்திய-மாநில அரசுகளின் காதுகளில் விழுகிறதா?

இதற்கிடையே மற்றும் ஒரு செய்தி! இந்தியக் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரைத் தூத்துக்குடி கடலோரக் காவல் படை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் சிறை பிடித்து, வழக்கு தொடுத்திருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு இந்த ஐந்து சிங்கள மீனவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்றால், இலங்கை அதிகாரிகளும் அதற்கு மதிப்பளித்து இலங்கையில் கைதாகிச் சிறையில் உள்ள இந்திய மீனவர்களையும் விடுவிப்பார்கள் என்று எதிர்பார்த்து விடுதலை செய்திருக்கிறார்கள். வழக்கையே திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டார்கள். ஆனால் இலங்கை அரசு “ரிமாண்ட்” காலத்தை மேலும் நீடித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று மீனவர் சங்கத் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

கேரள மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் பிரச்சினை எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், “இத்தாலியின் நடவடிக்கை ஏற்க முடியாதது. இரு கடற்படை வீரர்களையும் திருப்பி அனுப்ப முடியாதென இத்தாலி கூறியிருப்பது, ஏற்கத்தக்கதல்ல என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. இத்தாலியின் நடவடிக்கை, நமது நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எல்லா விதிகளையும் அவர்கள் மீறிவிட்டனர். அந்த அரசின் அதிகாரப் பூர்வமான பிரதிநிதி என்ற வகையில் அளிக்கப்பட்ட வாக்குறுதி கேள்விக் குறியாக ஆகிவிட்டது. இந்தப் பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினை என்பதை உணர்ந்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

கேரள மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொலை செய்த இரண்டு இத்தாலி கடற்படையினர் குறித்து அகில இந்திய அளவில் பல்வேறு நிலைகளில் விவாதித்து இந்த அளவிற்கு வேகம் காட்டுகின்ற இந்திய அரசு, கடலில் மீன் பிடிக்கச் சென்ற பாவத்திற்காக 19 தமிழ் மீனவர்கள் இலங்கையிலே சிறையிலே அடைக்கப்பட்டு, தற்போது அவர்களின் “ரிமாண்ட்” ஏப்ரல் 11 வரை நீடிக்கப்பட்டிருக்கிறதே, அதற்காக என்ன சொல்கிறது?

கேரள மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் பாகுபடுத்திப் பார்ப்பது நியாயம் தானா? இதுவரை தமிழக மீனவர்கள் 600 பேருக்கு மேல் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்களே! ஒரு நிகழ்விலாவது கேரள மீனவர் - இத்தாலி கடற்படையினர் பிரச்சினையில் பின்பற்றப்பட்ட அணுகுமுறையும், காட்டப்பட்ட ஆர்வமும், வேகமும்; தமிழக மீனவர் - இலங்கைக் கடற்படையினர் பிரச்சினையில் கடைப்பிடிக்கப்பட்டதுண்டா? கைது செய்த இந்திய மீனவர்களை காவல் நீடிப்பு செய்து மேலும் 15 நாட்களுக்குச் சிறையிலே பூட்டிவைக்கப்படுகிறார்கள். ஆனால் கைது செய்யப்பட்ட சிங்கள மீனவர்களை அவசரம் அவசரமாக இங்கே விடுதலை செய்கிறார்கள். தமிழா! இதுதான் உன் கதியா? நாதியற்றவன் தமிழன் என்பதற்கு இதுதான் உதாரணமா?

அப்படித்தான் ஆகிவிட்டது நிலைமை! ஏனென்றால் தமிழர்களின் ஒற்றுமையில்லாத போக்குத்தான் இதற்குக் காரணம். பத்திரிகைகளில் இன்று ஒரு செய்தி வந்துள்ளது. “தமிழகச் சட்டமன்றத்தில் தமிழ் ஈழத் தீர்மானம் வந்தபோது தி.மு.க. வெளிநடப்பு செய்தது ஏன்? - கருணாநிதிக்கு

பழ. நெடுமாறன் கண்டனம்” என்று தலைப்பிட்டு அந்தச் செய்தி வந்துள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது இதே நெடுமாறன் “பொடா” சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் கடலூர் சிறைச்சாலையிலே கேள்வி கேட்பாரற்ற நிலையில் அடைக்கப்பட்டிருந்தபோது, நான்தான் அவருக்காகக் குரல் கொடுத்தேன். அதற்கு அவர் இப்போது நன்றி காட்டுகிறார். மீண்டும் தன்னை இந்த ஆட்சியில் உள்ளே வைத்து விடுவார்களோ என்ற பயம் அவருக்கு இருக்கலாம். அதற்காக ஆட்சியாளர் செய்கின்ற ஒவ்வொன்றையும் விழுந்து விழுந்து பாராட்டி அறிக்கைவிடலாம். அதைப் பற்றி நமக்கொன்றும் கவலை இல்லை. ஆனால் போகிற போக்கில் சும்மா நம் மீதும் விழுந்து பிறாண்ட வேண்டிய அவசியம் என்ன? “தமிழ் ஈழத் தீர்மானம் வந்தபோது தி.மு.க. வெளிநடப்பு செய்தது ஏன்?” என்று கேட்டு எனக்குக் கண்டனம் தெரிவிக்கிறாராம்.

பழ. நெடுமாறனை நான் கேட்க விரும்புவதெல்லாம், தமிழீழத் தீர்மானம் வந்தபோது தி.மு.க. வெளிநடப்பு செய்ததா? அல்லது அவர்கள் வெளியேற்றப்பட்டார்களா? தமிழீழத் தீர்மானம் அவையில் கொண்டுவரப் போவதாக ஏற்கனவே அவைக்கோ, உறுப்பினர்களுக்கோ தெரிவிக்கப்பட்டதா? கிடையாது. நடைபெற்றதெல்லாம் ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகத்தில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து விதி 55இன் கீழ் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது விவாதம். பலரும் பேசிய பிறகு, முதலமைச்சர் பதிலளித்தபோது தேவையேயில்லாமல் என்மீதும், கழகத்தின் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். பொதுவாகச் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளிக்கும் போது யார் மீதும் குற்றச்சாட்டு கூடாது. எனினும் தொடர்ந்து என் மீது பழி கூறப்பட்டதால் கழகத்தினர் அதை எதிர்த்துக் குரல் கொடுத்ததைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் தி.மு.க. உறுப்பினர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டார். அதற்குப் பிறகுதான், முதலமைச்சர் ஜெயலலிதா தனது பதிலின் இறுதிக் கட்டமாக எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று ஈழத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்து அது நிறைவேறியிருக்கிறது.

இந்தச் செய்தி ஏடுகளில் எல்லாம் வெளிவந்திருக்கிறது. ஆனால் நெடுமாறன் தமிழ் ஈழத் தீர்மானம் வந்தபோது தி.மு.க. வெளிநடப்பு செய்தது ஏன் என்று கேட்டு எனக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். “வெளியேற்றப்பட்டனர்” என்பதற்கும், “வெளியேறினர்” என்பதற்கும் உள்ள வேறுபாட்டை - நல்ல ஆசிரியர் ஒருவரை வைத்து அவர் கற்றுத் தெரிந்துகொள்வது நல்லது. வெளிநடப்பு செய்ததன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு தி.மு.க. துரோகம் செய்துவிட்டதாம். தமிழகத்திலே இப்படி சில அரசியல்வாதிகள்!! எங்கே இந்த ஆட்சியில் தங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்பதற்காக தேவையில்லாமல் ஓடிப்போய்ப் பாராட்டு தெரிவிக்கிறார்கள். தெரிவிக்கட்டும், பிழைத்துப் போகட்டும், ஆனால் நம்மைத் தாக்கினால்தான் அங்கே பிழைக்க முடியும் என்றெண்ணி இப்படியெல்லாம் இல்லாத பழியைச் சுமத்துகிறார்களே, இப்படிப்பட்டவர்களின் இத்தகைய போக்குகளினால்தான் - பொல்லாத அணுகுமுறைகளால்தான் தமிழ் மீனவன் தாக்கப்படுகிறான், நாதியற்றவனாக வாழ்கிறான்! ஆனால் இவர்கள் ஏதோ ஈழத் தமிழர்கள்பால் தாங்கள்தான் அக்கறை கொண்டவர்கள் போல நடித்து ஏமாற்றுகிறார்கள். நான் எழுதிய “மலைக்கள்ளன்” திரைப்படத்தில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். பாடிய “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” என்ற பாடல் வரிதான் ஞாபகத்திற்கு வருகிறது!

அன்புள்ள, மு.க. 1-4-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗