உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3725

கூட்டுறவுத் தேர்தல்களில் அராஜகம்!

2013-03-31

உடன்பிறப்பே,

தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர 31 மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு - டெல்டா மாவட்டங்களிலே உள்ள விவசாயிகளில் 50 சதவிகிதத்திற்கு மேல் மகசூல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நிவாரணம் - அதுவும் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று முதலமைச்சர் பெரிதாக நினைத்து அறிவித்து, அந்தத் தொகை போதுமானதல்ல என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் எல்லாம் போராடி, நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும்போது முழு நிவாரணத் தொகை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து, அந்தச் சலுகையைக்கூட முதலமைச்சரே அறிவிக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருக்கின்ற நிலையில், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் - தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கி 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கூட்டுறவுச் சங்கங்களில் அ.தி.மு.க.வினரை உறுப்பினர்களாகச் சேர்க்கும் உள்நோக்கத்துடன் அ.தி.மு.க. அரசு கூட்டுறவுச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்திருத்தத்தின்படி, கூட்டுறவுச் சங்கங்கள் - தனி அலுவலர்களின் தலைமையில் நிர்வாகம் இருக்கும்போது, “பொதுக்குழு” மூலம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கக்கூடியதாகும். ஆட்சிப் பொறுப்பிலே இருப்போர் எதையும் ஆழ்ந்து எண்ணிப் பாராமல், தங்கள் கட்சியினரை மட்டும் உறுப்பினர்களாக்கிக் கொண்டு, உள்கட்சித் தேர்தல் நடத்துவதைப் போலக் கூட்டுறவுச் சங்கத் தேர்தலையும் நடத்தி நாடகமாடத் திட்டமிட்டு, அவசர அவசரமாகத் தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்த முற்பட்டிருப்பதில் இருந்தே, இந்தத் தேர்தலில் எந்த அளவிற்கு முறைகேடுகளைச் செய்யவும், கூட்டுறவு அமைப்புகளை ஜனநாயக நெறிமுறைகளுக்குப் புறம்பாகக் கைப்பற்றி ஆக்கிரமித்துக் கொள்ளவும், திட்டமிட்டுள்ளார்கள் என்பது நன்றாகப் புரிந்தது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமான முறையிலும், நேர்மை, நியாயம் ஆகியவற்றுக்கு இடமளிக்காத வகையிலும் நடைபெறவிருக்கின்ற கூட்டுறவு சங்கத் தேர்தல்களைத் தி.மு.கழகம் புறக்கணிப்பது என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டு விட்டது. கழகம் செய்த அந்த அறிவிப்பு எவ்வளவு நியாயமானது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் சில நாட்களாகக் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களை தமிழக அரசு எவ்வாறு நடத்துகிறது என்பதற்கு சில உதாரணங்கள் வருமாறு :-

❖ சேலம் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பாளர் மற்றும் உதவியாளர்கள் பெண்கள் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கத்திற்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சி.ஐ.டி.யு. சார்பு அமைப்பான தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆனால் அ.தி.மு.க. சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த அனைவரும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு பெற்றதாகச் சங்க அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

❖ தேனி மாவட்டம், க. புதுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தராததைத் தொடர்ந்து புகார் செய்யச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் திரு.ஜி.எம்.நாகராஜன் அ.தி.மு.க.வினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

❖ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. கோ. நீலமேகம் விடுத்துள்ள அறிக்கையில், கிராமப்புறங்களில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு முதல் கட்டத் தேர்தலுக்கு மார்ச் 29 அன்று வேட்பு மனுத் தாக்கல் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம் அன்றையதினம் திறக்கப்படவே இல்லை. ஒருசில இடங்களில் அலுவலகம் திறக்கப்பட்டாலும், வாக்காளர் பட்டியலைக் காட்ட மறுக்கிறார்கள். போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களையும் கொடுக்க மறுக்கின்றனர். கொடுக்கும் வேட்பு மனுக்களை மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு மேலிடம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது என்கிறார்கள் என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

❖ மதுக்கூர் ஒன்றியம், விக்ரமம் கிராமத்தில் உள்ள சொசைட்டியில் மனுதாக்கல் செய்யச் சென்றவரிடம், ஆளுங்கட்சி ஒன்றியச் செயலாளரைப் போய்ப் பாருங்கள் என்று கூறிவிட்டார்களாம்.

❖ மதுக்கூர், மண்டலக் கோட்டை, இரங்காடு, வேப்பங்குளம் போன்ற சொசைட்டிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

❖ கும்பகோணம் ஒன்றியம், தேவனாஞ்சேரி, சோழபுரம், திருப்புறம்பியம் சொசைட்டிகளில் வேட்பு மனுவினைக் கொடுக்க மறுத்ததோடு, ஆளுங்கட்சியினர் கும்பலாகச் சேர்ந்துகொண்டு தகராறு செய்துள்ளனர். கூட்டுறவு அலுவலர்கள் மதியத்திற்குப் பிறகு வேட்பு மனுவைத் தருவதாகக் கூறிவிட்டு அலுவலகத்தைப் பூட்டி விட்டனர்.

❖ திருவோணம் ஒன்றியம் பாதரங்கோட்டை சொசைட்டியிலும் வேட்பு மனுவைக் கொடுக்க மறுத்துள்ளனர்.

❖ தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகள் துணையுடன் ஆளுங்கட்சியினர் மோசடி தேர்தலை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

❖ கரூர் மாவட்ட அனைத்துச் சத்துணவுப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்கத் தேர்தலில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் அராஜகத்தில் ஈடுபடுவதாகச் சத்துணவுப் பணியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

❖ தாந்தோணிமலையில் உள்ள கரூர் மாவட்ட அனைத்து சத்துணவுப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணயச் சங்க அலுவலகத்திற்குச் சென்று வேட்பு மனுக்களைக் கேட்டபோது, அங்கே அமர்ந்திருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் இருவர், யாருக்கும் மனு கொடுக்கக் கூடாது, நாங்கள் போனில் கேட்டுச் சொன்னால்தான் மனு கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதிகாரிகளும் மனுக்களைக் கொடுக்க மறுத்துவிட்டார்களாம்.

❖ மதுரை மாவட்டம், சமயநல்லூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் வெள்ளியன்று காலை 11 மணிவரை, வேட்புமனு கொடுக்கப்படவில்லையாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பு மனுக்களைக் கேட்டதற்கு அதிகாரிகள் தர மறுத்து விட்டார்களாம். இதைத் தொடர்ந்து கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றுள்ளது. காவல் துறையினர் அங்கே வந்து, தாங்கள் வேட்பு மனுக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டுள்ளது. ஆனால் மனுக்களைத் தாக்கல் செய்யச் சென்றபோது, கூட்டுறவுச் சங்க அலுவலகத்தில் கூடியிருந்த 300க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் மனுக்களைத் தாக்கல் செய்ய விடாமல் தடுத்திருக்கிறார்கள். து.ராமமூர்த்தி என்பவர் கொடுத்த மனுவை, ஆளுங்கட்சியைச் சேர்ந்த மலையாளம் என்பவரின் தம்பி பறித்துக்கொண்டு போய்விட்டாராம். இந்த அராஜகங்களையெல்லாம் காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.

❖ வேலூர் சி.எம்.சி. கூட்டுறவு சங்கத் தேர்தலில் 240 தொழிலாளர்களின் ஓட்டுரிமையைப் பறித்ததால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது.

❖ தர்மபுரியில் உள்ள அரசு பொது நூலகத்தில் நூல் கட்டுநராகப் பணி புரிபவர் பெ. சரவணன். பார்வையில்லாத மாற்றுத் திறனாளியான இவர், சங்கத்தின் மாவட்டச் செயல் தலைவராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னணி ஊழியராகவும் விளங்குபவர். பல்வேறு பொதுச்சேவைகளிலும் ஈடுபட்டு வரும் இவர், அங்குள்ள பொது நூலகத் துறை கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் கடந்த இருபதாண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் இயக்குநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது நடைபெறவுள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலில் இயக்குநராகப் போட்டியிட 29-3-2013 அன்று வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். தேர்தல் அதிகாரி, லோகநாதன் என்பவர் இவருடைய வேட்பு மனுவைப்பெற முதலில் மறுத்ததோடு, பார்வையற்றவர் எழுதப் படிக்க முடியாது என்பதால், போட்டியிட முடியாது எனவும் கூறி வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் மிரட்டியிருக்கிறார். கடும் எதிர்ப்பிற்குப் பிறகு வேண்டா வெறுப்பாகக் காலதாமதம் செய்து வேட்பு மனுவை வாங்கிக்கொண்டிருக்கிறார்.

உடன்பிறப்பே, வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே தமிழகம் முழுவதிலும் நடைபெற்ற இத்தகைய சம்பவங்கள் பற்றி ஏடுகளிலே வெளிவந்துள்ள செய்திகளைத் தான் திரட்டி இங்கே தந்திருக்கிறேன்.

இப்படியெல்லாம் நடைபெறும் என்பதை முன்கூட்டியே உணர்ந்துதான், தெரிந்துதான் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு நடத்தும் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களையே புறக்கணித்தது. இன்னும் என்னென்ன வேடிக்கைகளை இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அரசும், ஆளுங்கட்சியினரும் நடத்தப் போகிறார்கள் என்பதைத் தமிழகம் காணத்தானே போகிறது!

அன்புள்ள, மு.க. 31-3-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗