தொகுதி 48 · கடிதம் 3724
“இந்து” ஏடே சுட்டிக்காட்டும் இரட்டை வேடம்!
2013-03-29
உடன்பிறப்பே,
கடந்த சில நாட்களாகத் தமிழகச் சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருப்பதையும், அங்கே தி.மு.கழகத்தினரை வாய் திறந்து ஜனநாயக ரீதியாகக் கருத்து தெரிவிக்க விடாமல் ஆளுங்கட்சி தங்களது “மெஜாரிட்டி”யைக் கொண்டு தங்கள் விருப்பம்போல் பேசியும் வெளியேற்றியும் வருவதையும், முதல் அமைச்சர் பதிலுரை என்ற பெயரால் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், முழுக்க முழுக்க என்னைத் தனிப்பட்ட முறையில் எப்படியெல்லாம் தாக்கித் தரக்குறைவாகப் பேச முடியுமோ அந்த அளவிற்குத் தாக்கி உரையாற்றுவதையும் கண்டு வருகிறாய்!
அந்த வரிசையில் நேற்றையதினம் (27-3-2013) ஈழத் தமிழர்களுக்காகத் தமிழக மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தை நசுக்கிடத் தமிழகக் காவல் துறையினர் முயற்சிப்பது குறித்து ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம். அதற்குப் பதிலளிக்க வேண்டிய முதல் அமைச்சர் தன் பேச்சு முழுவதிலும் இலங்கைப் பிரச்சினையிலே நான் “கபட நாடகம்” ஆடுவதாகவும், “இரட்டை வேடம்” போடுவதாகவும் பல பக்கங்கள் பேச்சினைத் தயார் செய்துகொண்டு வந்து அவையிலே படித்துவிட்டு, ஏடுகளுக்கும் விநியோகம் செய்திருக்கிறார். இலங்கைப் பிரச்சினையிலே நான் கபட நாடகம் ஆடுவதாக ஜெயலலிதா பழி சுமத்துவது இது எத்தனையாவது முறை என்றே ஞாபகம் இல்லை. மேலும் கச்சத் தீவு பிரச்சினையாக இருந்தாலும், இலங்கைப் பிரச்சினையாக இருந்தாலும், காவேரி பிரச்சினையாக இருந்தாலும் அரைத்த மாவையே அரைப்பதைப்போல், ஜெயலலிதா சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். அந்தப் பேச்சினை ஏடுகள் பெரிதாக வெளியிடுகின்ற காரணத்தால், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமையாகிறது.
ஜெயலலிதா தன் பேச்சின் துவக்கத்திலேயே தமிழர் நலன் கருதி மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. வெளியேற வேண்டுமென்று அவர் 2009ஆம் ஆண்டே கூறியதாகவும், ஆனால் நானோ அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இரண்டு வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன் வராவிட்டால், தமிழகத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் ராஜினாமா செய்வார்கள் என்ற அளவில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும், பின்னர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, என்னைச் சந்தித்த பிறகு, மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்து ராஜினாமா நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா இதிலே எதை நாடகம் என்கிறார்? இலங்கையிலே போர் கடுமையாக நடக்கிறது என்று கேள்விப்பட்டதும் உடனடியாக 14-10-2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது நாடகமா? (அவரது அகராதியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றாலே “அலர்ஜி” ஆயிற்றே?) அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் போர் நிறுத்தம் செய்ய முன்வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றியது நாடகமா? அந்தத் தீர்மானத்தை உடனடியாகப் பிரதமருக்கு அனுப்பி, பிரதமர் அரசியல் ரீதியான தீர்வுகாண மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக எடுத்திடும் என்று கூறியது அப்போதே ஏடுகளிலே வெளிவந்ததே, அது நாடகமா?
அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றி ஜெயலலிதா அப்போது விடுத்த அறிக்கையில், “தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழகமக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை ஐந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது” என்றே ஜெயலலிதா தெரிவித்திருந்ததை தற்போது வசதியாக மறந்துவிட்டுப் பேசுவதற்குப் பெயர்தான் “இரட்டை வேடம்”.
நமது வேண்டுகோளினை ஏற்று இந்தியப் பிரதமர் 18-10-2008 அன்று இலங்கை அதிபருடன் பேசியதும், 22-10-2008 அன்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்திலேயே இலங்கைத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளதாகக் கூறியதும், அதற்குப் பிறகும் 24-10-2008 அன்று சென்னையில் பிரமாண்டமான “மனிதச் சங்கிலி” ஒன்றினை நாம் நடத்தியதும்; 26-10-2008 அன்று பிரணாப் முகர்ஜி அவர்கள் சென்னைக்கே வந்து என்னைச் சந்தித்துவிட்டு, செய்தியாளர்களிடம் கூறும்போது, போர்நிறுத்தம் தொடருவதை உறுதி செய்ய வேண்டுமென்று அவரிடம் நான் வலியுறுத்தியதை எடுத்துக் கூறியதும்; 12-11-2008 அன்று இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றினை நான் முன்மொழிந்து நிறைவேற்றியதும்; 4-12-2008 அன்று தமிழகத்திலே உள்ள அனைத்துக்கட்சித் தலைவர்களையும் பிரதமரிடம் அழைத்துச் சென்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை இலங்கைக்கு அனுப்பிப் பேச்சுவார்த்தை நடத்தச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டதும், அவ்வாறே பிரணாப் அவர்கள் இலங்கைக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதும், 27-12-2008 அன்று தி.மு. கழகப் பொதுக்குழுவிலே இலங்கைத் தமிழர்களுக்காகத் தீர்மானம் நிறைவேற்றியதும்; என ஈழத் தமிழர் பாதுகாப்புக்காக நான் சங்கிலித் தொடர் போல எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே நாடகமா? இரட்டை வேடமா?
அதற்குப் பிறகும் தி.மு.கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி ஏற்கனவே நான் விரிவாகவே எழுதிவிட்டேன். ஆனால் ஜெயலலிதா தன் பேச்சில் “அனைத்துக் கட்சிக் கூட்டம்” - “சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்” - “மனிதச் சங்கிலிப் போராட்டம்” - “நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களைத் திரு. கருணாநிதியே பெற்றுக் கொள்ளுதல்” - “எல்லோரும் பிரதமருக்குத் தந்தி அனுப்புங்கள்” - “டெல்லியில் பிரதமருடன் சந்திப்பு” - “வேலை நிறுத்தம்” - “பேரணி” - “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்” என பல்வேறு “கண்துடைப்பு” நாடகங்கள்தான் அப்போது நடந்தன என்று சொல்லியிருக்கிறார் என்றால், தி.மு.கழகம் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது “கண்துடைப்பு” என்றால், நேற்றையதினம் ஜெயலலிதா பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஓரங்க நாடகமா?
ஜெயலலிதா போன்ற ஒருசிலரின் “அபிலாஷை”யின்படி, தி.மு. கழகம் மத்திய அரசிலிருந்து தற்போது வெளியேறிவிட்டது. இதனால் என்ன நடந்துவிட்டது? ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா? அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களைக் கொண்டுவந்து விட்டதா? நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை திருத்தங்களோடு நிறைவேற்றிவிட்டதா? மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறியது மட்டும்தான் நடந்தது. ஆனால் அதற்காக தி.மு.க. சிறிதும் கவலைப்படவில்லை. 2009இல் தி.மு.க. மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தாலும் இதே நிலை தான் என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்ப்பவர்கள் உணர்வார்கள். அப்போதே வெளியேறியிருந்தால் இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், தி.மு.கழகத்தின் மீது பழியைப் போடுகின்ற ஒரு செயலே தவிர வேறல்ல என்பதுதான் உண்மை. அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை உறுதி செய்வதை, வரலாற்றை அறிந்தவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அதுமாத்திரமல்ல; தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோதும், இல்லாதபோதும் ஈழத் தமிழர்களுக்காக இத்தனைப் போராட்டங்களையும் நடத்தியது; அரசியல் ரீதியாகப் பல்வேறு இழப்புகளுக்கும் ஆளானது. ஆனால் ஜெயலலிதா நேற்று பேசும்போது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்யாமல், ஆட்சி அதிகாரத்தை இழந்தபின், திடீரென்று ஞானோதயம் பிறந்ததுபோல இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அதிக அக்கறை செலுத்துவதுபோலக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறேன் என்றெல்லாம்; ஏதோ ஈழத் தமிழர்களுக்காக இழப்பைச் சந்தித்தவரைப் போலக் குறிப்பிட்டிருக்கிறார். ஆட்சிக்கு வருவதைப் பற்றியே கற்பனை கூடச் செய்து பார்க்காத 1956ஆம் ஆண்டிலேயே, சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க.
பொதுக் குழுவில் ஈழத் தமிழர்களுக்காகத் தீர்மானத்தை முன்மொழிந்த எனக்குத் திடீரென்று ஞானோதயம் என்று கூறுகின்ற ஜெயலலிதாவிற்கு இலங்கைத் தமிழர்கள் மீது எத்தனை நாட்களாக அக்கறை? தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா? 1956ஆம் ஆண்டிலிருந்து நடந்து வரும் நிகழ்வுகளையும், ஜெயலலிதா அரசியலுக்கு வந்தபின் நடக்கும் நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்களா?
16-4-2002 அன்று இதே சட்டசபையில்; ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபட்ட விடுதலைப் புலிகளின் தலைவர், பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டுமென்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதை தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரமாகவா மறந்துவிட்டார்கள்?
17-1-2009 அன்று இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று ஜெயலலிதா கூறியதை மறக்க முடியுமா என்ன? இதையெல்லாம் அப்படியே மறைத்துவிட்டு நான் இரட்டை வேடம் போட்டேன் என்று பேரவையில் “மெஜாரிட்டி” உள்ளது என்ற கித்தாப்பில் எதைவேண்டுமென்றாலும் பேசுவதா?
அடுத்து ஜெயலலிதா தன் பேச்சில் என்மீது சாற்றியுள்ள குற்றச்சாட்டு, நான் இருந்த உண்ணாவிரதத்தைப் பற்றிப் புது விளக்கத்தைச் சமீப காலமாகக் கூறுவதாகவும், இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அரசு மத்திய அரசுக்குத் தெரிவித்ததாகவும், அதனை மத்திய அரசு நம்பி தனக்குத் தெரியப்படுத்தியதாகவும், அதனை நான் நம்பியதாகவும் எந்தத் தமிழரும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சமீபகாலமாக நான் இதைக் கூறவில்லை. இதோ 28-4-2009 தேதிய “தினத்தந்தி”. தலைப்பு : “மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார் - கருணாநிதி உண்ணா விரதம் வெற்றி - போரை நிறுத்தி விட்டதாக இலங்கை அறிவிப்பு”. இதைத் தவிர இரண்டாம் பக்கத்தில் “போர் நடவடிக்கை முடிவுக்கு வந்தது - இலங்கை ராணுவம் அறிவிப்பு” என்ற தலைப்பில் இலங்கை அதிபர் ராஜபக்சே அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே நான் சமீபகாலமாக இதைக் கூறவில்லை. ஜெயலலிதா பேரவையிலே கூறியுள்ள உண்மைக்கு மாறான தகவல்களுக்கு இதுவும் ஓர் உதாரணம்!
கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.கழகம் விலகிய போதிலும், மத்திய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சியில் யாராவது ஈடுபட்டால் அதற்கு தி.மு.க. துணை போகாது என்று பேசியதை எடுத்துக்காட்டி, அது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம் என்று ஜெயலலிதா பேரவையில் கூறியிருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எப்படியாவது மத்திய ஆட்சி கவிழாதா? சந்தடி சாக்கில் தான் பிரதமராக ஆகிவிட முடியாதா? என்ற நப்பாசை! அதன் காரணமாக நாங்கள் செய்வதெல்லாம் துரோகமாகத் தெரிகிறது போலும்!
எதற்கெடுத்தாலும் நான் இரட்டை வேடம் போடுவதாக ஜெயலலிதா அடிக்கடி கூறுகிறார்.
சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமென்று தேர்தல் அறிக்கையிலே கூறிவிட்டுத் தற்போது அதை வேண்டாமென்று ஜெயலலிதா கூறுகிறாரே, அதற்குப் பெயர்தானே “இரட்டை வேடம்”!
காவிரி ஆணையத்தை “பல் இல்லாத வாரியம்” “செயல்படாத வாரியம்” என்றெல்லாம் கூறிவிட்டு, தற்போது அதை ஆதரிப்பதற்குப் பெயர்தானே “இரட்டை வேடம்”!
யார் “இரட்டை வேடம்” போடுகிறார்கள் என்பதற்கு இன்று (28-3-2013) வெளிவந்துள்ள “இந்து” நாளிதழில் உள்ள தலைப்பையும், அதன்கீழ் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளையும் படித்தாலே புரிந்து கொள்ளலாம். அதாவது “From a bitter critic of LTTE to a champion of Tamil Eelam (விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சித்தவர், தமிழ் ஈழத்தின் ஆதரவாளராகியுள்ளார்) என்பதைப் படித்துப் பார்த்தால் யார் இரட்டை வேடம் போடுபவர், யார் இரட்டை முகம் கொண்டவர் என்பதை ஐயம் திரிபற அறிந்துகொள்ளலாம்!
அன்புள்ள, மு.க. 29-3-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗