தொகுதி 48 · கடிதம் 3723
வாடிக்கையாகிவிட்ட பித்தலாட்டம்!
2013-03-28
உடன்பிறப்பே,
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து வேட்டையாடுவதைப் பற்றி நேற்றையதினம் (26-3-2013) தமிழகச் சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா பதிலளித்தபோது, தேவையில்லாமல் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு, 1974ஆம் ஆண்டு கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டதாகவும், அப்போது தமிழக முதல்வராகக் கருணாநிதிதான் இருந்தார் என்றும் கூறியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்து நான் பலமுறை விளக்கமளித்த போதிலும் ஜெயலலிதா என்ன காரணத்தாலோ ஏற்கனவே சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கிறார்.
1974ஆம் ஆண்டில் கச்சத் தீவை இலங்கைக்குத் தருவதென்ற முடிவை மத்திய அரசு எடுத்தபோது, அன்றைய தமிழகத்திலே இருந்த மாநில அரசான திராவிட முன்னேற்றக் கழக அரசு, அதற்குப் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தது. அதையும் மீறி, சில காரணங்களைச் சொல்லி கச்சத் தீவு இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவிட்டது. அப்படி வழங்கப்பட்ட நேரத்திலேகூட, கச்சத் தீவிலே மீன் பிடிக்கும் உரிமை, யாத்திரை செல்கின்ற உரிமை, மீன் வலைகளைக் காயவைப்பதற்கான உரிமை இவைகள் எல்லாம் மீனவ மக்களுக்கு உண்டு என்கிற ஷரத்து அதிலே சேர்க்கப்பட வேண்டுமென்று அன்றைய தமிழக தி.மு.க. அரசு வலியுறுத்தியதின் பேரில், அந்த ஷரத்து அதிலே சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நெருக்கடி நிலை காலத்தில் தமிழகத்திலே கவர்னர் ஆட்சி நடைபெற்ற நேரத்தில், அந்த ஷரத்துக்கள் எப்படி அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கப்பட்டன என்றே தெரியாத அளவிற்கு அந்த ஷரத்துக்கள் பறி போய்விட்டன. ஆனால் அதற்காக நமது எதிர்ப்பைத் தெரிவிக்காமல் இருந்திருக்கிறோமா?
1974ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோதே கழகப் பொதுக் குழுவில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதுமான கச்சத்தீவின் மீது இலங்கைக்கு அரசுரிமை வழங்கும் வகையில் இந்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தைக் கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சிக்கு எதிராக இந்த ஒப்பந்தம் அமைந்துவிடக் கூடாது என்று தமிழக தி.மு.க அரசு பலமுறை ஆதாரங்களுடன் மத்திய அரசை அணுகித் தடுத்தும்கூட, அதனை அலட்சியப்படுத்திவிட்டு மத்திய அரசு கச்சத் தீவை இலங்கைக்கு அளித்த செயல் வேதனை தருவதாகும். கச்சத்தீவு பிரச்சினையை முடிந்துவிட்ட பிரச்சினையாகக் கருதாமல், மத்திய அரசு மறுபரிசீலனை செய்து அந்தத் தீவின் மீது இந்திய அரசுக்கு அரசுரிமை இருக்குமாறு ஒப்பந்தத்தைத் திருத்த வழிவகை காண வேண்டுமென்று பிரதமர் இந்திராகாந்தியை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.”
தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்ல, 14-7-1974 அன்று தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் “கச்சத் தீவு ஒப்பந்தக் கண்டன நாள்” நடத்தப்பட்டது. கச்சத் தீவு ஒப்பந்தம் கூடாதென்றும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே என்றும் பல்வேறு ஆதாரங்களோடு முதலமைச்சர் என்ற முறையில் 6-1-1974 அன்று பிரதமர் இந்திராகாந்திக்குக் கடிதம் எழுதினேன்.
திருமதி இந்திராகாந்தி பிரதமராக இருந்த நேரத்திலேதான் கச்சத் தீவினை இலங்கைக்குத் தர வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சரையும், அதிகாரிகளையும் என்னிடம் அனுப்பி விவாதிக்கச் செய்தபோது, தமிழக அரசின் சார்பில் நாங்கள் எங்கள் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த பிறகும், கச்சத் தீவினை மத்திய அரசு இலங்கைக்கு வழங்கியது.
23-7-1974 அன்று கச்சத் தீவு பற்றிய பிரச்சினை நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட போது, “கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்” என்று கழகத்தின் சார்பில் மக்களவையில் இரா.செழியனும், மாநிலங்களவையில் எஸ்.எஸ். மாரிசாமியும் கருத்துத் தெரிவித்தார்கள்.
அதன் பிறகு ஜெயலலிதா ஒருமுறை விடுத்த அறிக்கையில், “கச்சத் தீவு பிரச்சினை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்சினை. அதை மீட்கக் கூடிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. மாநில முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்திருந்தால் அன்றைக்கே கச்சத் தீவு மீட்கப்பட்டிருக்கும்” என்று அவரே தனது அறிக்கையில் தன்னையும் மறந்து கூறியிருக்கிறார். கச்சத் தீவைப் பொறுத்தவரை மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் என்று கூறிய ஜெயலலிதா, “கச்சத் தீவை நான் தாரைவார்த்து விட்டேன்” என்று திரும்பத் திரும்பச் சொல்கிறாரே, அப்போதெல்லாம் இது மத்திய அரசுக்கான அதிகாரம் என்ற நினைவு வரவில்லையா?
கச்சத் தீவு குறித்து பிரதமர்களாக இருந்தவர்களுக்கெல்லாம் ஜெயலலிதா கடிதம் எழுதி பல முறை வலியுறுத்தியிருப்பதாகச் சொல்லுகிறார். ஆனால் நான் பிரதமருக்குக் கடிதம் எழுதினால், கடிதம் எழுதினால் மட்டும் போதுமா, ஏன் நேரில் செல்லவில்லை என்பார்.
கச்சத் தீவு பிரச்சினையைப் பற்றி ஜெயலலிதா அடிக்கடி குறை கூறிக் கொண்டுள்ளார். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த நடவடிக்கையை கண்டித்துத் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாமல்; கச்சத் தீவு தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாத நிலை இருந்தால் தமிழக மீனவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாதவகையில் அந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றுகூட மத்திய அரசைத் தி.மு. கழகம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது.
1991இல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி வைத்து முழங்கியபோது “கச்சத் தீவை மீட்பேன்” எனச் சபதமிட்டாரே அந்த சபதத்தை நிறைவேற்றிட அதன்பின் ஆட்சி செய்த ஐந்தாண்டு காலமும் அதற்காக ஒரு சிறு துரும்பையேனும் கிள்ளிப் போட்டிருப்பாரா? கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் கோவிலுக்குச் செல்வதற்குக்கூட அவர் ஆட்சியில் வழிவகை செய்யவில்லை. தி.மு. கழக ஆட்சியிலேதான் அதற்கொரு வழி பிறந்தது.
20-4-1992 அன்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேசும்போது “கச்சத் தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.
தி.மு. கழகத்தைப் பொறுத்து மாத்திரமல்ல, தி.மு. கழக ஆட்சியைப் பொறுத்தும் பல நேரங்களில் கச்சத் தீவு பிரச்சினையை எழுப்பிக் கச்சத் தீவை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்கத் தவறியதும் இல்லை. கச்சத் தீவிலே மீனவர்களுக்கு உள்ள உரிமை பாதிக்கப்படுவதை எடுத்துக்காட்டி அந்தப் பாதிப்பை நிவர்த்திக்க வேண்டுமென்று கேட்கவும் கழக அரசு தவறியது இல்லை.
ஒன்றைச் சொல்ல வேண்டுமேயானால் - 30-9-1994இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த திரு. நரசிம்ம ராவ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் அவர் “The ceding of this tiny island to the Island Nation had been done by the Government of India in the interest of better bilateral relations” அதாவது “தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ்சிறிய தீவினை (கச்சத் தீவை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான்” என்று ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். அதே பாடத்தைத்தான் இன்னமும் மத்தியிலே உள்ள அமைச்சர்கள் கூறி வருகிறார்கள்.
கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா வழங்கப் போகின்ற செய்தி, அதற்கு முன்பு பல ஆண்டுகளாகச் செய்தி அளவிலேதான் இருந்தது. இன்னும் ஆதாரத்தோடு சொல்ல வேண்டுமென்றால் தமிழகச் சட்டமன்றத்தில் 29-3-1972 அன்று கச்சத் தீவு பற்றிய ஒரு கேள்வியே இடம்பெற்று, அதற்கு நான் பதிலும் கூறியிருக்கிறேன். அந்தப் பதிலில் “நாம் கச்சத் தீவைக் குறித்த நியாயமான விவகாரங்களை மத்திய அரசிற்குத் தெரிவித்திருக்கிறோம். கச்சத் தீவு பிரச்சினை இந்திய அரசு தலையிட்டுச் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை” என்று தெரிவித்திருக்கிறேன்.
அதனைத் தொடர்ந்து மதுரையில் நான் பேசும்போது, “கச்சத் தீவு தமிழ்நாட்டிற்கே சொந்தம், இந்தியாவிற்கே சொந்தம் என்ற ஆதாரங்களை எல்லாம் பிரதமருக்கு எடுத்துவைத்தேன். எதையும் லட்சியம் செய்யாமல் என்னை அழைத்து இதுபற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாமல், கச்சத் தீவை இலங்கைக்குத் தானம் செய்திருக்கிறார் பிரதமர்” என்றும்; திருச்சியில் நான் பேசும்போது, “கச்சத் தீவு தமிழகத்தின் உரிமை. கச்சத் தீவு பிரச்சினையில் நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதைக் கேளாமல் இலங்கைக்குத் தூக்கிக் கொடுத்துவிட்டு, ஒப்பந்தம் ஆகிவிட்ட செய்தியை உலகுக்கு அறிவிக்கிறார்கள். நாம் பத்திரிகையைப் பார்த்து தெரிந்துகொள்கிறோம்” என்றும் பேசியிருக்கிறேன்.
கழக ஆட்சிக் காலத்தில், கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்கான தீர்மானத்தை ஆளுங்கட்சியான தி.மு.க. கொண்டு வந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. அதனை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1974ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி திடீரென்று மத்திய அரசின் அறிவிப்பு வந்தது. அதே ஆண்டு ஜூன் 29ஆம் தேதியன்று சென்னை தலைமைச் செயலகத்திலே அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து அவர்களோடு பேசி, அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. அந்தத் தீர்மானத்தை ஆதரித்துக் கையெழுத்திட மறுத்து விட்டது.
அந்தக் கூட்டத்திற்குப் பிறகு, அன்றைய பிரதமருக்கு நான் எழுதிய கடிதம் வருமாறு :-
“On behalf of the Government of Tamil Nadu and on behalf of the people of Tamil Nadu, I am constrained to express our deep sense of disappointment over the recent Indo-Sri Lanka Agreement, according to which, Sri Lanka’s claim to Kachativu has been conceded by the Government of India. May I express the hope that you will take into consideration the decision contained in the Resolution and take appropriate action?”
23-7-2003 அன்று ஜெயலலிதா அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நல்லுறவைப் பேணவும், தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமைகளைக் காப்பாற்றவும் உள்ள ஒரே வழி என்று குறிப்பிட்டு மேலும் எழுதியிருக்கிறார். “The best possible solution is to get the island of Katcha Theevu and adjacent seas on lease in perpetuity solely for fishing, drying of nets and pilgrimage. Sri Lanka’s Sovereignty over Katcha Theeve could be upheld at the same time.” (அதாவது “கச்சத் தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காயவைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தரக் குத்தகைக்கு பெறலாம்; அதே நேரத்தில் கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்”). இப்படியெல்லாம் அன்றைக்கு எழுதியவர்தான் இன்றைக்கு நம்மைப் பார்த்துக் கேள்விக் கணை தொடுக்கிறார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி பகுதியைப் பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் பேசியிருக்கிறார். இதே கருத்தைத் தான் தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போதும் 21-6-2009 அன்று விடுத்த அறிக்கையிலே கூறிவிட்டு, கச்சத் தீவை மீட்க நான் ஆட்சியிலே இருந்தபோது என்ன செய்தேன் என்று அப்போதும் கேட்டார், இப்போதும் கேட்டிருக்கிறார். என்னைக் கேள்வி கேட்கும் ஜெயலலிதா 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும், 2011 முதல் இதுவரையிலும் ஆட்சியிலே இருக்கிறாரே, இவர் என்ன செய்து கிழித்து விட்டார்? கச்சத் தீவை வாங்கித் தந்து விட்டாரா? ஆனால் நான் செய்த பாவத்திற்கு விமோசனமாக ஏதாவது செய்திருக்கிறேனா என்று கண்ணியத்தை மறந்து பேரவையில் ஜெயலலிதா கேட்டிருக்கிறார். அதனால்தான் நான் ஆட்சியிலே இருந்தபோது என்ன செய்தேன் என்பதை விளக்கியிருக்கிறேன்.
“கச்சத் தீவை மீட்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது” என்றும்; “இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத்தான் கச்சத் தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது” என்றும் “கச்சத் தீவில் இலங்கைக்கு உள்ள இறையாண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் பேசிய, அறிக்கை விடுத்த ஜெயலலிதா அதை நான் தாரைவார்த்து விட்டேன் என்றும், அவர் அதை மீட்பேன் என்பதும் எப்படிப்பட்ட “கபட நாடகம்” என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா என்ன?
கச்சத் தீவு பற்றி ஜெயலலிதா உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது 2008ஆம் ஆண்டு. அதற்கு முன்பே தமிழர் தலைவர் கி.வீரமணி இதே கச்சத் தீவுக்காக 1997ஆம் ஆண்டே ஒரு வழக்கினைத் தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் ஒரு முடிவு காணப்படவில்லை என்பது தான் உண்மை. எப்படியோ தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் போதெல்லாம் ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும், நான்தான் கச்சத் தீவினை இலங்கைக்குத் தாரை வார்த்து விட்டதைப்போலக் கூறுவது என்பது வாடிக்கையாகப் போய்விட்ட பித்தலாட்டமாகிவிட்டது!
அன்புள்ள, மு.க. 28-3-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗