உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3722

சட்டப்பேரவையில் அன்றும், இன்றும்!

2013-03-27

உடன்பிறப்பே,

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டம் 8-2-2013 அன்று நடைபெற்றபோது, தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்று, பின்னர் அந்தக் கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல் வெளியேறியதாகக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் (தமிழழகன்) பேரவையில் பேசும்போது, தான் கட்சியிலிருந்து வெளியேறிய காரணத்தால், ஆட்சியினர் தன் தொகுதிக்கு நன்மைகளைச் செய்கிறார்கள் என்றும், மற்ற தே.மு.தி.க. உறுப்பினர்களும் தன்னைப் போல் முடிவு எடுத்தால், அவர்களும் பயன் பெறலாம் என்றும் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். அவரது அந்தப் பேச்சுக்குத் தே.மு.தி.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு சாராருக்கும் இடையே தகராறு அப்போது ஏற்பட்டது. தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்குள் நடைபெற்ற விவகாரம் இது. இதில் தே.மு.தி.க. சார்பில் வெற்றிபெற்று அக்கட்சியின் கட்டுப்பாட்டுக்குப் புறம்பாகச் செயல்படும் உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறி, தே.மு.தி.க.விலே தொடர்ந்து உறுதியாக இருக்கின்ற ஆறு பேர் மீது பிரச்சினை எழுப்பப்பட்டு, உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.

உரிமைக் குழுவும் ஒரு மாதத்திற்குள் இந்தப் பிரச்சினை பற்றி ஆய்வு செய்து தனது அறிக்கையினைத் தாக்கல் செய்துவிட்டது. அதன்படி அந்த ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஓராண்டு காலத்திற்குப் பேரவைக்கு வர முடியாத அளவிற்குத் தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஓராண்டு காலத்திற்கு அவர்களுக்கு ஊதியமும் கிடையாது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து, தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் தோழமைக் கொண்டு அவர்களின் வெற்றிக்காக உழைத்த தோழமைக் கட்சி ஒன்றுக்கு ஏற்பட்ட நிலை இது.

இதனையொட்டிக் கடந்த காலங்களில் தமிழகச் சட்டப்பேரவையில் நடைபெற்ற ஒரு சில சம்பவங்களை நினைவூட்டினால் பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.

24-11-1986 அன்று எம்.ஜி.ஆர். ஆட்சியில், மொழிப் போராட்டத்தின் ஒரு கட்டமாக இந்திய அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக, பேரவைத் தலைவர்; தி.மு.கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அவர்களையும், மற்றும் எஸ். பாலன், ஏ.செல்வராசன், பரிதி இளம்வழுதி, பி.பொன்னுரங்கம், கோவை எம்.ராமநாதன், தர்மபுரி ஆர். சின்னசாமி, ஆலந்தூர் ம. ஆபிரகாம், மதுராந்தகம் சி.ஆறுமுகம், அரக்கோணம் வி.கே. இராசு ஆகியோரையும் பேரவையிலிருந்து நிரந்தரமாக நீக்கித் தனது தீர்ப்பினைப் படித்தார். எதிர்க்கட்சிகள் சார்பில் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் கூட - அந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற அன்றைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கடைசிவரை முன்வரவில்லை.

★

28-12-1988 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் நடைபெற்றது என்ன? “ஜா” அணியினரும், “ஜெ” அணியினரும் அவையிலே உள்ள “மைக்கு”களைக் கையிலே பிடுங்கிக் கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு, சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாத மிகப் பெரிய ரகளையைச் செய்ததைத் தமிழகம் மறந்துவிட்டதா என்ன? உள்கட்சி விவகாரம் சட்டப்பேரவைக்கு வந்து ஊர் சிரித்ததைப் பார்த்து நாடே சிரித்தது.

★

மற்றொரு உதாரணம் - 1991ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியிலே ஜூலை 4ந்தேதி ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையாற்றத் தொடங்கியபோது, பா.ம.க. உறுப்பினராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு அறிக்கையை அவையிலே ஆங்கிலத்திலே படிக்கத் தொடங்கினார். அப்போது அ.தி.மு.க. உறுப்பினராக இருந்த தாமரைக்கனி, பண்ருட்டி ராமச்சந்திரனின் அருகில் வந்து தாக்கினார்.

இதைப்பற்றி 5-7-1991 அன்று பேரவைத் தலைவர்; அவை கூடியதும் - இரங்கல் உரை ஆற்றுவதற்கு முன்பாகவே - அவசர அவசரமாக ஒரு தீர்ப்பினைப் படித்தார். அந்தத் தீர்ப்பு வருமாறு :-

பேரவைத் தலைவர் :- “4-7-1991 அன்று ஆளுநர் உரை நிகழ்த்துகையில், பண்ருட்டி

ச.இராமச்சந்திரன் எழுந்து ஆளுநர் உரையாற்றுவதற்குக் குறுக்கீடு செய்தார். அப்போது உறுப்பினர் திரு.தாமரைக்கனி தன் இருக்கையை விட்டு எழுந்து வந்து பண்ருட்டி இராமச்சந்திரனின் இருக்கைக்குப் பின்னால் நின்று கொண்டு விரும்பத்தகாத வகையில் அவர் தோள் மீது ஓங்கித் தட்டினார். இவர்கள் இருவரது செயல்களுமே விதிகளுக்கு முரண்பாடானவை என்றும், எனவே இது குறித்துப் பேரவைத் தலைவர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல் அமைச்சர் ஜெயலலிதா 4-7-1991 அன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தின்போது என்னைக் கேட்டுக்கொண்டார். மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் பேரவையின் ஒழுங்கிற்குப் பெருத்த ஊறு விளைவிப்பனவாகவே நானும் கருதுகிறேன். எனவே, பண்ருட்டி இராமச்சந்திரன் மற்றும் இரா. தாமரைக்கனி ஆகிய இரு உறுப்பினர்களையும் இன்று முதல் மூன்று நாட்களுக்குப் பேரவையின் நடவடிக்கைகளில் இருந்து நீக்கிவைத்துத் தீர்ப்பு வழங்குகிறேன்” என்றார்.

★

22-3-1999 அன்று ஒரு சம்பவம்! சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அ.தி.மு.க. உறுப்பினராக இருந்த தாமரைக்கனி, அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்திலே குத்தினார். அவர் அணிந்திருந்த மோதிரம் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கிலே குத்தி ரத்தம் கொட்டியது. அதே தாமரைக்கனி பின்னர் அ.தி.மு.க.விலிருந்து விலகிக் கழகத்திலேயே சேர்ந்தார்.

★

இதோ மற்றொரு உதாரணம்:- 7-1-2011 அன்று தி.மு.கழக ஆட்சியில் ஆளுநர் உரையாற்றியபோது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டு, வெளியேற்ற வந்த அவைக் காவலர்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். அதிலே ஒருவர், அவைக் காவலர்களை எட்டி உதைத்து, தொப்பிகளைப் பறித்து அவர்கள் முகத்திலேயே அடித்தார். அந்தப் புகைப்படங்கள் எல்லாம் ஏடுகளிலே அப்போதே வெளிவந்தன. ஆளுநர் உரையாற்றியபோது அத்துமீறிச் செயல்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒன்பது பேரை மாதக் கணக்கிலோ, ஆண்டுக் கணக்கிலோ அல்ல; அந்தத் தொடர் முழுவதும் நீக்கம் செய்து பேரவைத் தலைவர் திரு. இரா. ஆவுடையப்பன் உத்தரவிட்டார். அதை எதிர்த்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால் அதற்கு அடுத்த நாள் என்ன நடந்தது தெரியுமா?

முதல் அமைச்சராக இருந்த நான் மறுநாள் பேரவையில் கூறும்போது, “பேராசிரியர் உள்ளிட்ட பத்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை - அ.தி.மு.க. ஆட்சியிலே நீக்கப்பட்டவர்களை மீண்டும் அந்த ஆட்சியில் அனுமதிக்கவில்லை. ஆனால் வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு வந்து ஒத்துழைக்க வேண்டுமென்று அண்ணா வழியிலே நடைபெறுகின்ற இன்றைய தி.மு. கழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தேன்.

★

மற்றொரு நிகழ்ச்சி. 18-10-2007 அன்று காலை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒரு உரிமை மீறல் பிரச்சினை குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவையில் இருந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து பயங்கரமாகக் கூச்சலும், குழப்பமும் விளைவித்து, அவரைப் பேச விடாமல் அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளைவிட்டுக் கும்பலாக எழுந்து, பேரவைத் தலைவரின் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து கண்ணியக் குறைவாக நடந்து கொண்டார்கள். பேரவைத் தலைவர் பலமுறை அவர்களை இருக்கைக்குத் திரும்புமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டும் அவர்கள் திரும்பாத காரணத்தினால், பேரவைத் தலைவர் அவைக் காவலர்களை அழைத்து, அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். அப்போது திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் தன்னை அப்புறப்படுத்த வந்த காவலர் பி.மதிவாணனின் தொப்பியைப் பிடுங்கி, பேரவைத் தலைவர் மீது தூக்கி எறிந்தார். அதை அவையின் உறுப்பினர்கள் அனைவரும் பார்த்தார்கள். பேரவைத் தலைவரையே தாக்கிய அந்தச் செயலுக்காகத் தி.மு.கழக ஆட்சியில் முதலில் ஆறு மாத காலத்திற்கு அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்ட போதிலும், நான் உடனடியாகத் தலையிட்டு இந்தக் கூட்டத் தொடர் தவிர அடுத்த கூட்டத் தொடரின் முதல் பத்து நாள்களுக்கு மட்டும் நீக்கம் செய்தால் போதும் என்று கூறி, அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டது. இது தி.மு. கழக ஆட்சியில் நடைபெற்ற மற்றொரு உதாரணம்.

★

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற விஜயகாந்த் அவர்களையே பத்து நாட்களுக்குப் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சி வேறு எப்போதாவது நடந்தது உண்டா? அதுவும் அ.தி.மு.க. ஆட்சியில் தான் நடைபெற்றது.

★

13-11-2008 அன்று தி.மு.கழக ஆட்சியில் நான் அவையிலே இல்லாத நேரத்தில் - பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியினை அறிந்து - “அவர்கள் மின்சார வாரியம் பற்றிய விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று அக்கறையோடு இருந்தார்களே, வெளியேற்றப்பட்டுவிட்ட காரணத்தால், அந்த விவாதத்தில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமே” என்று எண்ணி - நானே எதிர்க்கட்சித் துணைத் தலைவருடன் தொலைபேசியிலே பேசி - முயற்சித்து - அது கிடைக்காத காரணத்தால் - ஆளுங்கட்சியைச் சேர்ந்த தம்பிகள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு ஆகிய அமைச்சர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு - எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்கே சென்று அ.தி.மு.க.வினரைச் சமாதானம் செய்து மின்சாரம் பற்றிய விவாதத்திலே கலந்துகொள்ள வாருங்கள் என்று அழைக்கச் செய்தேன். மேலும் பேரவைத் தலைவரோடும் தொலைபேசியிலே பேசி, வெளியேற்றப்பட்ட ஆணையைத் திரும்பப் பெற்று, அவர்களை யெல்லாம் கலந்து கொள்ள வாருங்கள் என்று அவையிலேயே அழைப்பு விடுக்கவும் கேட்டுக்கொண்டேன். அவரும் அவ்வாறே அழைப்பும் விடுத்தார். ஆனால் இதனையும் பிறகு என்ன காரணத்தாலோ அவர்கள் அவைக்கு வரவும் இல்லை. மின்சார விவாதத்திலே கலந்து கொள்ளவும் இல்லை. ஆனாலும் அண்ணா கற்றுக் கொடுத்த அந்தப் பண்பாட்டுடன் நாம் நடந்து கொண்டோம் என்ற மன ஆறுதல் எனக்குக் கிடைத்தது. ஆனால் அண்ணா பெயரால் இன்னமும் கட்சி நடத்துபவர்களோ?

★

25-3-1989! 13 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்று, நிதியமைச்சர் என்ற முறையில் நான் நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்கியபோது நடந்தது என்ன? எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா எழுந்து, “முதல் அமைச்சர் ஒரு கிரிமினல் குற்றவாளி, அவர் நிதிநிலை அறிக்கையைப் படிக்கக் கூடாது” என்று கூறி, என் கையிலே இருந்த நிதிநிலை அறிக்கையைப் பிடுங்கிட முற்பட்டார். அவருக்குத் துணையாக அ.தி.மு.க. உறுப்பினர்கள், அவரைச் சூழ்ந்து நின்று கொண்டு “படிக்காதே, படிக்காதே” என்று கூச்சலிட்டனர். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என் கையிலிருந்த நிதிநிலை அறிக்கைப் புத்தகத்தைப் பிடித்திழுத்துக் கிழித்தெறிந்தார். அதைத் தடுக்க முனைந்தபோது என் முகத்தில் குத்தி, மூக்குக் கண்ணாடி கீழே நொறுங்கி விழுந்தது. அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் தலையில் ஒலிபெருக்கிக் கம்பியால் தாக்கி, ரத்தம் ஒழுகிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இவ்வளவு பெரிய சம்பவத்திற்கே அப்போது என்ன தண்டனை வழங்கப்பட்டது தெரியுமா? கலவரம் செய்த அ.தி.மு.க. உறுப்பினர்களை ஒரு வார காலம் தற்காலிக நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 27-3-1989 அன்று சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவராக இருந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், அந்தத் தற்காலிக நீக்கத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையொட்டி, நான்; “எதிர்க்கட்சிகள் இல்லாமல் இந்த அவை நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை எனக்கோ இந்த அரசுக்கோ நிச்சயமாக இல்லை. நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்கிற அந்த எண்ணத்தின் அடிப்படையிலே இந்தப் பிரச்சினையை நான் அணுகுகிறேன். அன்றையதினம் ஏற்பட்ட ஒரு உணர்ச்சியின் காரணமாக, கொந்தளிப்பின் எதிரொலியாக நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற்று எதிர்க்கட்சித் தலைவரும், மற்றவர்களும் அவையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டேன். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். இதனை அப்போது “பாரத ரத்னா” சி. சுப்ரமணியம் அவர்களே ஏடுகள் வாயிலாகப் பாராட்டியிருந்தார்.

★

உடன்பிறப்பே, சட்டமன்றத்தில் ஜனநாயகம் எவ்வெப்போது எப்படியெல்லாம் கடைப்பிடிக்கப்பட்டது என்பதற்காக இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் எழுதியுள்ளேன். இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போதே எனக்குக் கிடைத்த தகவல்படி தற்போது தே.மு.தி.க. உறுப்பினர்கள் மீதான நடவடிக்கையை ஓராண்டிலிருந்து ஆறு மாதமாகக் குறைத்திருக்கிறார்களாம். இதுவும் அதிகபட்சத் தண்டனைதான். என்னுடைய இந்த விளக்கங்களையெல்லாம் படித்துப் பார்த்த பிறகாவது, அ.தி.மு.க. ஆட்சியினர் தே.மு.தி.க. உறுப்பினர்கள் மீது தற்போது எடுத்திருக்கும் நடவடிக்கை பற்றி மறுபரிசீலனை செய்து, அதனை ரத்து செய்வதற்கோ அல்லது நாட்கள் கணக்கில் அல்லது வாரக் கணக்கில் குறைத்து அறிவிப்பதற்கோ முன்வருவார்கள் என்று நம்புகிறேன். முன் வர வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புள்ள, மு.க. 27-3-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗