தொகுதி 48 · கடிதம் 3735
இதற்கோர் அறிக்கை படிக்கலாமே?
2013-04-16
உடன்பிறப்பே,
புதுக்கோட்டை மாவட்டத்தில், கோட்டைப் பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதியில் விசைப்படகு மீன்பிடித் தளங்கள் உள்ளன. இந்த மீன்பிடித் தளங்களில் இருந்து நூற்றுக் கணக்கான விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவதைப்போல, நேற்று முன்தினமும் அங்கிருந்து 184 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருக் கிறார்கள்.
இதில் 182 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு நேற்று காலை கரைக்குத் திரும்பிய நிலையில், வீரன், வடிவழகன் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகள் மட்டும் கரைக்குத் திரும்பவில்லை. அதில் சென்ற 9 மீனவர்களும் கரைக்குத் திரும்பாததால், அப்பகுதி அனைத்து மீனவர்களும் துன்பத்திற்கு ஆளாயினர். அவர்கள் நேற்று மாலை திரும்பியபோது, அந்த மீனவர்கள் கண்ணீரோடு தங்களை இலங்கைக் கடற்படையினர் மடக்கி, கம்பி, பைப், போல்ட், ஸ்பானர் போன்றவற்றால் சரமாரியாகத் தாக்கியதாகவும், இரண்டு படகுகளின் கண்ணாடிகள், ஜி.பி.எஸ். கருவிகள், வயர்லெஸ் போன்கள் ஆகியவற்றை அடித்து உடைத்தனர் என்றும், செல்போன்களையெல்லாம் பறித்துக்கொண்டனர் என்றும், இவர்கள் படகுகளில் பிடித்துவைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்களை எடுத்து கடலில் கொட்டிவிட்டதாகவும்,
5 வலைகளை அறுத்து கடலில் வீசிவிட்டதாகவும், அதன் மதிப்பு இரண்டரை லட்சம் ரூபாய் என்றும் அதன் பின்னர் தான் துன்புறுத்தி விடுவித்ததாகவும் கூறியிருக்கிறார்கள். இது ஒரு நாள் நிகழ்ச்சி மட்டுமல்ல; காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வேளாங்கண்ணிக்கு அருகில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நமது மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டுள்ளது. இலங்கை மீனவர்கள் உடனடியாக இலங்கைக் கடற்படையினருக்குத் தகவல் அளித்து, இலங்கைக் கடற்படையினர் அங்கே விரைந்து வந்து இந்திய மீனவர்கள் 46 பேரையும் கைது செய்து, 5 படகுகளுடன் இலங்கைக்குக் கொண்டு சென்று விட்டனர். இதுபற்றி நாகை மாவட்ட மீனவர்கள் இந்தியக் கடற்படையினருக்குத் தகவல் தெரிவித்தவுடன், அவர்கள் தலையிட்டு இந்திய மீனவர்களை மீட்டு வந்திருக்கிறார்கள்.
12-4-2013 அன்று இலங்கைக் கடற்படை தாக்கி நாகை மீனவர்கள் எட்டு பேர் பெரிய அளவிற்குக் காயமடைந்த புகைப்படங்கள் எல்லாம் ஏடுகளில் வெளிவந்தன. இப்படி அண்மைக்காலமாகத் தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களாலும், இலங்கைக் கடற்படையினராலும் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகிவிட்டன. எனவே, தமிழக மீனவர்களின் துன்பத்திற்கு விடிவே இல்லை என்ற நிலைதான் நாளும் நாளும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. 1.1.1991 முதல் 1996வரை இலங்கைக் கடற்படை மேற்கொண்ட 79 துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் காரணமாக 38 மீனவர்கள் இறந்துள்ளனர். 99 மீனவர்கள் காயமடைந்தனர். 1996 முதல் 2001 வரை நிகழ்ந்த 58 துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளில், 34 மீனவர்கள் இறந்துள்ளனர். 68 மீனவர்கள் காயமடைந்தனர். 2001 முதல் 2006 வரை நிகழ்ந்த 17 துப்பாக்கிச் சூடுகளில் 7 மீனவர்கள் இறந்து, 21 மீனவர்கள் காயமடைந்தனர். 13.5.2006 முதல் இதுவரை நிகழ்ந்த 26 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில்
8 மீனவர்கள் இறந்து, 22 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். ஆக, 1991 முதல் 21-12-2006 வரை இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்கள் மீது மேற்கொண்ட 180 துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளில் மொத்தம் 87 தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். 210 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.
பல்வேறு நிகழ்வுகளில் தமிழக மீனவர்களின் 175 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கவர்ந்து செல்லப்பட்டன.
இதுவரை 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தொடர்ந்து மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளும், அவர்களின் குடும்பத்தினர் இன்றைக்கும் அடைந்து வரும் வேதனைகளும் எழுதி மாளாதவையாகும்.
கழக ஆட்சியில் மீனவர்களின் நலன்களைக் கவனிப்பதற்காக 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் நிறுவப்பட்டது. 1-3-2011 வரையில் எடுத்த புள்ளி விவரப்படி அந்த வாரியத்தின் சார்பில் 3 இலட்சத்து 85 ஆயிரத்து 756 மீனவர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு, அதுவரை 9 ஆயிரத்து 452 உறுப்பினர்களுக்கு 4 கோடியே 52 இலட்சம் ரூபாய் அளவிற்கு நிவாரணம் பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக வழங்கப்பட்டது.
மீனவர்களுக்கான இலவச வீடு கட்டித் தரும் திட்டம் தி.மு.கழக ஆட்சியிலே முடிவெடுக்கப்பட்டு, முதற்கட்டமாக இரண்டாயிரம் வீடுகள் கட்டுவதற்காக 7 கோடியே 40 இலட்ச ரூபாய் ஒப்பளிக்கப்பட்டது. மீண்டும் 2010-2011ஆம் ஆண்டில் “மா.சிங்காரவேலர் நினைவு வீட்டு வசதி திட்டத்தின்” கீழ் மொத்தம் 2 ஆயிரத்து 949 வீடுகள் 75 ஆயிரம் ரூபாய் என்ற அலகுத் தொகையில் 22 கோடியே 12 இலட்சம் ரூபாய் அரசால் ஒப்பளிக்கப்பட்டுப் பயனீட்டாளர்களுக்கு வீட்டின் கட்டுமானப் பணி களைத் தொடங்க பணி ஆணையும் வழங்கப்பட்டது.
மீனவர்களின் நலனில் கழக அரசு தனி அக்கறை கொண்டு, மீன் பிடிக்கச் செல்லும்போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தையும், கடலில் மீன் பிடிக்கச் செல்லத் தடை உள்ள காலங்களில் மீனவக் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தையும் தொடங்கிச் செயல்படுத்தி வந்தது.
இந்த மீன்பிடித் தடைக்காலம்தான் இன்று முதல் தொடங்குகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆய்வு நடத்தியதில், தடை செய்யப்பட்ட வலைகள், இயந்திரம் பொருத்திய படகுகள் பயன்பாடு காரணமாகக் கடல் உயிரின வளம் குறைந்து வருவது கண்டறியப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, இனவிருத்தி காலங்களைக் கண்டறிந்து, அந்த நாட்களில் மீன்பிடிக்கத் தடை விதித்தால், மீன் வளம் அதிகரிக்கும் என்பதால் இந்த ஏப்ரல் 15 முதல் மே 29ஆம் தேதிவரை 45 நாட்களுக்கு “மீன்பிடித் தடைக் காலம்” என்று அறிவித்து, ஒருசில ஆண்டுகளாக அது கடைப்பிடிக்கப்பட்டு வருவதின் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இன்று முதல் மீன் பிடித் தடைக்காலம். இந்த மீன் பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு கழக ஆட்சிக் காலத்தில் ஒரு திட்டம் தொடங்கப்பட்டு, அந்த நிவாரணத் தொகை படிப்படியாக உயர்ந்து தற்போது 2000 ரூபாய் அளவிற்கு வழங்கப்படுவது தற்போதுள்ள விலைவாசி நிலையில் மிகவும் குறைவான தொகை என்றும், இந்தத் தொகையை உயர்த்தித்தர வேண்டுமென்றும் மீனவர்கள் மிகவும் உருக்கமாக ஒரு கோரிக்கையினை இந்த அரசுக்கு விடுத்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமான கோரிக்கை. தற்போதுள்ள வாழ்க்கை நிலையில் 45 நாட்களுக்கு - நாள் ஒன்றுக்குக் குறைந்த பட்சம் 100 ரூபாய் என்ற அளவிலாவது கணக்கில் எடுத்துக் கொண்டு - ஒவ்வொரு மீனவருக்கும் 4,500 ரூபாயினை - வழங்கிட இந்த அரசு முன்வர வேண்டும். இந்த 4,500 ரூபாயைக் கொண்டு குடும்பம் நடத்துவதென்பதை எண்ணிக்கூடப் பார்க்க இயலாது. இருந்தாலும், இந்த உண்மை நிலையை உணர்ந்து தமிழக அரசு உடனடியாக மீனவர்களுக்கு இந்த உதவியினை நிச்சயம் நிறைவேற்றித்தர வேண்டுமென்று நான் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன். எது எதற்கோ 110வது விதியின்கீழ் அறிக்கை படிக்கின்ற தமிழக முதலமைச்சர், மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க உதவிடும் இதற்கான அறிவிப்பினையும்; ஒரு அறிக்கையினையும் நாளையே படிப்பார் என்று எதிர்பார்ப்போம்.
அன்புள்ள, மு.க. 16-4-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗