உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3719

இதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்களா?

2013-03-12

உடன்பிறப்பே,

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தஞ்சையில் பாராட்டு விழா நடைபெற்று - விவசாயிகள் எல்லாம் மன நிறைவோடு (?) விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்துள்ளார்கள். குறுவை, சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் கிடைக்காமல், பயிர் கருகி அதனால் விவசாயிகள் உள்ளம் கருகி, 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு - முதலமைச்சர் அறிவித்த நிவாரணம் யார் யாருக்குக் கிடைக்கவில்லை என்று பட்டியல் இட்டுக்காட்டி, அவர்களுக்கெல்லாம் தஞ்சை பாராட்டு விழாவில் முதலமைச்சர் நிவாரணங்களை அறிவிக்கப் போகிறார், “வாருங்கள், வாருங்கள்” வண்டியிலே ஏறுங்கள், இதோ கையிலே பிடியுங்கள் ஐநூறு ரூபாய் என்று கிராமம் கிராமமாக எட்டு அமைச்சர்கள் படையெடுத்துச் சென்று திரட்டி வந்த கூட்டத்திற்கு முன்னால், நிவாரணங்களை அறிவிக்கவில்லை! மாறாகக் கடந்த காலத்தில் தனித்தனியாக அறிக்கைகள் மூலம் என்னைத் திட்டியதையெல்லாம் தொகுத்துச் சேகரித்து வந்து, அந்தக் கூட்டத்திலே மணிக் கணக்கிலே படித்து விட்டுத் திரும்பியிருக்கிறார் ஜெயலலிதா!

அவர் படித்த முதல் குற்றச்சாட்டு, நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு 5-2-2007 அன்றே வெளியிடப்பட்டது; அப்போது அதனை மத்திய அரசிதழில் வெளியிட, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாகும். 5-2-2007 அன்று இறுதித் தீர்ப்பு வெளிவந்தவுடன், அதிலே பல சாதக பாதகங்கள் இருந்ததால், தன்னிச்சையாக நாங்கள் முடிவெடுக்காமல், 5-2-2007 அன்றும் 15-4-2007 அன்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, அதிலே பெரும்பான்மையானவர்கள் என்ன முடிவெடுத்து, எப்படிச் செயல்பட வேண்டுமென்று கருத்து அறிவித்தார்களோ அதன்படி தான் நடந்து கொண்டோமே தவிர, ஜெயலலிதா கூறுவதைப் போல நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிடவில்லை.

முதலமைச்சர் ஜெயலலிதா தஞ்சையில் பேசும்போது, “வென்றவர் சொல்வது எல்லாம் வேதம் ஆகுமா?” என்ற தலைப்பிலே நான் ஓர் அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவும், அதிலே உண்மைக்குப் புறம்பான செய்திகளைச் சொல்லியிருந்தாலும், என்னையும் அறியாமல் இந்தப் பிரச்சினையில் தலைப்பின் மூலம் “வென்றவர்” என்று அவரைக் குறிப்பிட்டிருப்பதாகக் கூறிக்கொண்டு தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். காவிரிப் பிரச்சினையில் ஜெயலலிதா கூறிய அடுக்கடுக்கான பொய்களை எல்லாம் அந்தக் கடிதத்தில் வரிசையாக எடுத்துக்காட்டி, தேர்தலிலே வெற்றி பெற்ற ஒருவர் சொல்வதெல்லாம், அதாவது காவிரிப் பிரச்சினையில் பேட்டியிலே கூறியிருப்பதெல்லாம் “வேதம்” ஆகி விடுமா - “வேதம்” என்பதைக்கூட “உண்மை” என்ற பொருளிலேதான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இது எல்லாம் இலக்கிய ரசனையோடு வெளியிடப்படும் தலைப்புகளாகும். அம்மையாருக்கு அது புரியாவிட்டால் அங்கே யாராவது இலக்கியம் தெரிந்தவர்கள் இருப்பார்களானால், அவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறலாம். அதை விட்டு, எழுதியிருப்பதையெல்லாம் அப்படியே மணிக் கணக்கிலே மேடையிலே படித்துக் காட்டினால் அது சரியல்ல. காவிரிப் பிரச்சினையில் அவர் வென்றதாக நான் எந்த இடத்திலும் கூறவில்லை. கூறவும் மாட்டேன். நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதற்கு தான்தான் காரணம் என்று சொல்லும் ஜெயலலிதா, அந்த இறுதித் தீர்ப்பு 5-2-2007இல் வெளியானபோது, அதை 6-2-2007 அன்று பாதகமான தீர்ப்பு என்று அறிக்கை விடுத்தாரா இல்லையா என்று தேதி குறிப்பிட்டு என் அறிக்கையிலே கேட்டதும், தஞ்சைக் கூட்டத்தில்; இறுதித் தீர்ப்பில் ஒரு சில பாதகமான அம்சங்கள் இருந்தன, இருந்தாலும் அரசிதழில் அதை வெளியிட வேண்டுமென்று கூறினேன் என்பதை ஜெயலலிதா ஒப்புக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதா அப்போது தெரிவித்த “பாதகமான அம்சங்கள்” நிறைந்த நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புதானே தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது! அவரே குறிப்பிட்ட அந்த பாதகங்கள் நிறைந்த அறிக்கை அரசிதழில் வெளிவந்ததற்காகப் பாராட்டு உண்மையிலேயே தேவைதானா?

“6-7-1986இல் நடுவர்மன்றத்தை உருவாக்க வேண்டுமென்று ஒரு கடிதம் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டது. இந்தக் கடிதத்தின் மீது, பல ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் மத்திய அரசு இதனைக் கிடப்பில் போட்டது” என்று ஜெயலலிதா, தனது தஞ்சைப் பேச்சிலே எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சியிலே பல ஆண்டுகளாக இதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டு, எம்.ஜி.ஆர். அவர்களையும் தாக்கிடத் தவறவில்லை.

அதன் பின்னர் விவசாயிகள் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்திலே நடுவர்மன்றம் அமைக்குமாறு வழக்கு தொடுத்ததாகவும், உச்ச நீதி மன்றம் நடுவர்மன்றத்தை அமைக்குமாறு 4-5-1990 அன்று உத்தரவிட்டதாகவும், அதற்குப் பிறகுதான் 1986இல் எம்.ஜி.ஆர். எழுதிய கடிதத்தை அடிப்படையாக வைத்து 2-6-1990இல் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது என்றும், நடுவர்மன்றம் அமைந்ததில் கருணாநிதியின் பங்கு ஏதுமில்லை என்றும் ஜெயலலிதா தஞ்சையிலே பேசியிருக்கிறார்.

நடுவர்மன்றத்திலே மட்டுமல்ல; காவிரிப் பிரச்சினையில் எனக்கு என்ன பங்கு என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்; அதிலும் தஞ்சை மாவட்ட மக்கள் நன்றாகவே அறிவார்கள். அங்கே போய் நின்று கொண்டு என்னைப் பற்றிப் பேசியபோது, அந்த மக்கள் தமிழ்நாட்டிற்கு எப்படிப்பட்ட முதல் அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள்!

நடுவர்மன்றம் அமைக்க 6-7-1986இல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் என்று சொல்கிற ஜெயலலிதா அவர்களே, அதற்கு முன்பு 17-2-1970 அன்று, நான் முதலமைச்சராக இருந்தபோதுதான், நடுவர்மன்றம் அமைத்திட வேண்டுமென்று, தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு முதன் முதலாகக் கடிதம் எழுதப்பட்டது என்பதை மறந்து விட்டீர்களா என்ன?

8-7-1971 அன்று நடுவர்மன்றம் அமைத்திட வேண்டுமென்று தி.மு. கழக ஆட்சியில்தான், நான் முதலமைச்சராக இருந்த போதுதான், மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதெல்லாம் 1986ஆம் ஆண்டிற்கு முன்பு நடைபெற்றதா? இல்லையா? என்பதைப் படிப்பவர்களே புரிந்துகொண்டு, முதலமைச்சர் பேசியிருப்பதைப் பற்றி உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். 4-8-1971இல் தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்றும், அன்றைய பிரதமர் அவர்களின் வற்புறுத்தலால் அப்போது தமிழக முதல்வராக இருந்த நான் அந்த வழக்கைத் திரும்பப் பெற்றதால் பெருத்த பின்னடைவு ஏற்பட்டதாகவும் தஞ்சைக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை என் மீது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சொல்லி, அதற்கு நான் தஞ்சை மண்ணிலேயே பதிலும் கூறிவிட்டேன். இருந்தாலும் மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்துகிறேன். 1971ஆம் ஆண்டு ஒரு வழக்கு ஹேமாவதி அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதை முரசொலிமாறன், கோ.சி. மணி, ஜி.கே. மூப்பனார் மற்றும் தஞ்சை மாவட்டத்திலுள்ள பல்வேறு விவசாயச் சங்கங்கள் எல்லாம் முன்னின்று நடத்தினார்கள். அப்போதுதான் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்கள் என்னை அழைத்து, பேச்சு வார்த்தை மூலம் காவிரி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம், இடையிலே நீங்கள் வழக்கு போட்டிருக்கிறீர்களே, வழக்கு இருக்கும்போது எப்படி பேச முன்வருவார்கள், என்னை நம்பி இந்த வழக்கைத் திரும்பப் பெறுங்கள் என்று சொன்னார்கள். நான் உடனே தன்னிச்சையாக வழக்கைத் திரும்பப் பெற்று விடவில்லை. அனைத்துக் கட்சித் தலைவர்களைத் தலைமைச் செயலகத்திற்கு அழைத்துப் பேசிவிட்டுத்தான் அந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுவது என்று முடிவு செய்தபோதுகூட, மீண்டும் எப்போது விரும்பினாலும் அந்த வழக்கைத் தொடரலாம் என்று அதற்கு வழி வைத்துக்கொண்டு அந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது. இதைத்தான் ஜெயலலிதா தஞ்சை மண்ணிலே - சென்று, நான் ஏதோ செய்ததால், காவிரிப் பிரச்சினையிலே பின்னடைவு ஏற்பட்டது என்று புலம்பியிருக்கிறார். நடுவர்மன்றத்தை உருவாக்கிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, அதன் காரணமாக 2-6-1990இல் நடுவர்மன்றத்தை உருவாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது, ஆனால் அப்போது கருணாநிதி முதல்வராக இருந்தாரே தவிர, அவருக்கு அதில் எவ்வித பங்கும் இல்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். இந்த வரலாற்றையும் நான் தெளிவாக்குகிறேன்.

1990ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் மத்தியில் பிரதமராக இருந்த திரு. வி.பி. சிங் அவர்களிடம் தொடர்புகொண்டு நடுவர்மன்றம் அமைக்க ஒத்துழைப்பு தாருங்கள் என்று கேட்டோம். தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணையில் இருந்த காரணத்தால், மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவர்களுடைய கருத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டார்கள். அதுபற்றி பிரதமர் வி.பி. சிங் அவர்கள் தொலைபேசி மூலமாக, தமிழக முதல் அமைச்சராக இருந்த என்னைத் தொடர்பு கொண்டு உச்ச நீதிமன்றம் அறிக்கை கேட்டிருப்பதைப் பற்றிக் கூறினார். அப்போது நான் அவரிடம், இனிமேல் தமிழ்நாடு பேச்சு வார்த்தைக்குத் தயாராக இல்லை, நீங்களும் தயவுசெய்து மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் அதைத் தெளிவாக்கி விடுங்கள், அப்போதுதான் எங்களுக்கு நடுவர்மன்றம் கிடைக்கும் என்று சொன்னேன்.

சொன்னதோடு மாத்திரமல்ல; அப்போது சட்டப்பேரவை நடந்து கொண்டிருந்ததால், 24-4-1990 அன்று தமிழகச் சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி, உடனடியாக அதைப் பிரதமருக்கு அனுப்பிவைத்தோம். பிரதமரும் முறைப்படி மத்திய அரசின் வழக்கறிஞர் மூலமாக உச்ச நீதிமன்றத்திற்கு அதனைத் தெரிவித்தார். அதற்குப் பிறகுதான் இனி பேச்சுவார்த்தை இல்லையென்றால், நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிடுகிறோம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

நடுவர் மன்றம் அமைந்த பிறகுகூட, இடைக் காலத் தீர்ப்பு ஒன்றினை வழங்கிட வேண்டுமென்று நாம் கேட்டபோது, 5-1-1991இல் தங்களுக்கு இடைக்காலத் தீர்ப்பு அளிக்க அதிகாரம் இல்லை என்று நடுவர்மன்றம் தெரிவித்தது. அதற்காக 10-1-1991 அன்றே தி.மு. கழக ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தில் நாம் மனு தாக்கல் செய்து; அதன் மீது 26-4-1991இல் நடுவர் மன்றத்திற்கு இடைக் காலத் தீர்ப்பு அளிக்க அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளித்தது.

இதுதான் உண்மை. நடுவர்மன்றம் அமைய கருணாநிதிக்குப் பங்கு உண்டா இல்லையா என்பதைத் தஞ்சை மாவட்டத்து மக்களே, நீங்களே சொல்லுங்கள்.

“காவிரி நடுவர்மன்றத்தின் இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்தும் வகையில் ஒரு திட்டத்தினை வரையறுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்தி 14-5-1992 அன்று எனது தலைமையிலான தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, இதற்காக 1993ஆம் ஆண்டு நான் நான்கு நாட்கள் உண்ணாநோன்பு மேற்கொண்டேன்” என்று ஜெயலலிதா தஞ்சையில் பேசியிருக்கிறார்.

தஞ்சைக் கூட்டத்திலே பேசிய ஜெயலலிதா தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்ற எண்ணம் அவருடைய ரத்தத்தில் ஊறிய ஒன்று என்று கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட எண்ணம் ரத்தத்தில் ஊறிய ஒருவர் ஏற்கனவே ஆட்சியிலே இருந்தபோது எப்படிச் செயல்பட்டார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறுகிறேன்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இந்தக் காவிரி பிரச்சினையில் மத்திய அமைச்சர் சுக்லா அவர்கள் எழுதிய கடிதத்திற்கு எத்தனை மாதங்கள் கழித்துப் பதில் அனுப்பினார் என்பதைப் பற்றி நான் சில நாட்களுக்கு முன்பு எழுதிய குற்றச்சாட்டுக்குத் தஞ்சை கூட்டத்திலே ஜெயலலிதா ஏன் பதிலளிக்கவில்லை? அதாவது 9-6-1992 அன்று மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த சுக்லா அவர்கள், “காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை மனதிலே கொண்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பினை மத்திய நீர்க் குழுமத்திடம் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒத்துழைப்போடு விடலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது, இந்த ஏற்பாட்டிற்கு உங்களின் ஒப்புதலை உடனடியாகத் தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும், குழுக்களை அறிவித்து ஆணைகளைப் பிறப்பிக்க இயலும்” என்று எழுதிய கடிதத்திற்கு, ஒன்பது மாதங்கள் கழித்துத்தான், 30-3-1993 அன்று ஜெயலலிதா பதில் எழுதினார் என்றால், எப்படிப்பட்ட எண்ணம் அவருடைய ரத்தத்திலே ஊறியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாமே! இதற்காகவே தனியாக ஒரு “பொன்னியின் செல்வி” பட்டத்தினைத் தஞ்சை விவசாயிகள் அளித்திருக்கலாமே!

இந்தக் குழு அமைக்கப்படவில்லை என்பதற்காகத்தான் 18-7-1993 அன்று ஜெயலலிதா உண்ணாவிரதத்தைத் தொடங்கினார், கர்நாடகா 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டுமென்று, பிரதமர் நரசிம்மராவ் கர்நாடக முதல்வருக்கு, கட்டளையிட வேண்டும், அப்படிக் கட்டளையிட்டால்தான் நான் உண்ணாவிரதத்தை நிறுத்துவேன், இல்லாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் என்றார். பிரதமர் அப்படியொரு கட்டளை பிறப்பிக்காமலேயே, மத்திய அமைச்சர் சுக்லா உண்ணாவிரத இடத்திற்கே வந்து, ஒரு குழு அமைப்பதாகச் சொன்னவுடன், இப்போது போலவே அப்போதும் வெற்றி, வெற்றி என்று கூறி உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றார்.

அவர் உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றது பற்றி நான் குறை கூறவில்லை. இருந்தாலும் அப்போது அதை வெற்றி விழாவாகக் கொண்டாடினார்கள். நம்முடைய நாவலர் “காவிரி தந்த கலைச்செல்வி, இப்போது காவிரி தண்ணீரை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அண்ணா சமாதிக்கும், புரட்சித் தலைவர் சமாதிக்கும் சென்றுவிட்டு இல்லம் திரும்புவார்” என்று அப்போது அறிவித்தார். ஜெயலலிதா செய்தியாளர்களிடம் மகத்தான வெற்றி கிடைத்துள்ளது என்றார். ஆனால் 1996ஆம் ஆண்டுவரை அ.தி.மு.க. ஆட்சியிலே நீடித்தபோதும் எதுவும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. தஞ்சை ஜெயலலிதா பாராட்டு விழாவிற்கு இப்போது தலைமை தாங்கிய மன்னை ரெங்கநாதன் அப்போது “இதன் மூலம் வெற்றி கிடைத்தது என்று கூற முடியாவிட்டாலும், பிரச்சினையில் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார். ஜெயலலிதா அவர்களே பிறகு 27-7-1993இல் பிரதமருக்குத் தனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டுமென்று கடிதம் எழுதினார் என்பதில் இருந்தே, உண்ணாவிரதப் பந்தலில் அவர்கள் கூறிய “வெற்றி” முழக்கம் எவ்வளவு தவறானது என்பதை அப்போதே தமிழ் மக்கள் புரிந்து கொண்டார்கள்.

தஞ்சைக் கூட்டத்திலே ஜெயலலிதா 1998ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்த கர்நாடக அரசும் ஏற்றுக்கொண்ட ஒரு முடிவினைப் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் தீவிர முயற்சியால் நான் ஒப்புக்கொண்டு, அப்போது காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டதை மிகப் பெரிய துரோகம் என்று பேசியிருக்கிறார். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தி.மு. கழக ஆட்சியிலேதான் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைக்குக் கொண்டுவரும் ஒப்பந்தமே ஏற்பட்டது. பாரதப் பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. கண்காணிப்புக் குழு அமைந்தது.

1998இல் வாஜ்பாய் அவர்கள் பா.ஜ.க. பிரதமராக இருந்தார். நான் தமிழகத்தின் முதல் அமைச்சர். ஜெயலலிதா தமிழகத்திலே எதிர்க் கட்சியாக இருந்தாலும் பா.ஜ.க. கூட்டணியிலே மத்தியிலே இருந்தார். அப்போது பிரதமர் வாஜ்பாய் அவர்கள் என்னிடம், 12ஆம் தேதி உச்சநீதிமன்றம் மத்திய அரசின் கருத்தினைக் கேட்டிருக்கிறது, அதற்குள் அனைவரும் பேசி ஒரு நல்ல முடிவெடுக்கலாம், வாருங்கள் என்று அழைத்தார். நான் தன்னிச்சையாக அப்போதும் முடிவெடுக்கவில்லை. 40க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசினேன். அதில் 30 பேர் நான் டெல்லி கூட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்றனர். 10 பேர் போகக் கூடாது என்றார்கள். ஜனநாயகத்தில் எதைக் கேட்பது? ஒன்பது மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரதமர் வாஜ்பாய் அவர்களே அமர்ந்து ஒப்பந்தம் கண்டார். காவிரி நதிநீர் ஆணையமும் அமைந்தது. அதைத்தான் தற்போது ஜெயலலிதா நான் செய்த துரோகம் என்கிறார். பா.ஜ.க.வின் பிரதமர், தமிழகத்திலே தி.மு. கழக ஆட்சி நடைபெற்றபோது, அவ்வாறு ஒப்பந்தம் கண்டார் என்பதற்காக ஜெயலலிதா அந்தக் கூட்டணியிலிருந்தே விலகினார். ஆனால் அவர் விலகியது பற்றி அப்போது அந்த மூத்த மனிதர், வாஜ்பாய் அவர்கள் எவ்வளவு நொந்துகொண்டு அறிக்கை விடுத்தார் என்பதை நான் இந்தக் கடிதத்திலே குறிப்பிட விரும்பவில்லை.

தற்போது முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குத் தஞ்சை மாவட்ட விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா எப்படி நடைபெற்றிருக்கிறதோ, அதைப் போலவேதான் 1998ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையில் ஒப்பந்தம் ஏற்பட்ட போது, முதல் அமைச்சராக இருந்த எனக்கு இதே தஞ்சையில் காவிரிப்பாசன விவசாயிகள் சார்பில் 23-8-1998 அன்று நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெற்றது. காலையில் திருச்சி கல்லக்குடியில் சமத்துவபுரத்தைப் பார்வையிட்டு, புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு, அங்கிருந்து பகல் ஒரு மணி அளவில் காரிலே புறப்பட்டுக் கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாகத் தஞ்சைக்கு வந்தேன். வழியிலே 45 கிலோ மீட்டர் தூரமும் விவசாயப் பெருமக்களும், தாய்மார்களும், குழந்தைகளும் கூடி நின்று என்னை வரவேற்றார்களே, அந்தக் காட்சி இன்னமும் என் நினைவிலே உள்ளது.

ஜெயலலிதா விழாவிற்கு எட்டு அமைச்சர்கள் ஒரு வாரம் முகாமிட்டு, ஊருக்கு ஊர் சென்று கூட்டம் திரட்டினார்களே, அதைப்போல அப்போது இல்லை. தம்பி கோ.சி. மணி மட்டும்தான் அப்போது அமைச்சர். தம்பி பழனி மாணிக்கம், தம்பி உபயதுல்லா ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்தனர். கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் யார் தெரியுமா? அப்போதும் விவசாயச் சங்கத் தலைவராக இருந்த சாட்சாத் இந்த மன்னை ரெங்கநாதன் அவர்கள்தான்.

அப்போது அந்த விழாவில் மன்னை ரெங்கநாதன் பேசியது என்ன தெரியுமா? “இந்தக் கூட்டம் தஞ்சை விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றியைத் தெரிவிக்கும் கூட்டம், பாராட்டுக் கூட்டம் என்று சொன்னாலும் முதலில் நன்றியைத்தான் தெரிவிக்க வேண்டும். இந்தச் சங்கம் ஆரம்பித்துப் பதினைந்து ஆண்டுகளில் இப்போது ஒரு நிறைவு காணப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், அரசியல் துணிவுடன் நமது முதல்வர் கலைஞர் செயல்பட்டிருக்கிறார். அதே அளவில் நமது பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் அந்தத் துணிவு இருக்கின்றது. இரண்டு பேருடைய அந்த அரசியல் துணிவு காரணமாக இந்த காவிரிப் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்பட்டிருக்கிறது என்று நான் கூறுகிறேன். இந்த ஆரம்பத்தை ஆரம்பித்துவைத்த நாயகரைப் பாராட்டவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவரை மனமுவந்து பாராட்டுகிறோம். என்றென்றும் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றெல்லாம் பேசினார்.

தஞ்சையில் ஜெயலலிதாவிற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் பாராட்டியிருக்கிறாரே, அப்போது எனக்கு நடைபெற்ற தஞ்சைப் பாராட்டு விழாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள்தான் கலந்துகொண்டு என்னைப் பாராட்டினார். தற்போது பொன்னியின் செல்வி சிலையைப் பரிசாகக் கொடுத்த ரெங்கநாதன் அப்போது காவிரித் தாய் சிலையை எனக்குப் பரிசாக வழங்கினார்.

1998ஆம் ஆண்டு கழக ஆட்சியில் நான் முதல்வராக இருந்த போது ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து 7-8-1998 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்று, அந்தக் கூட்டத்திலேயே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “நடுவர்மன்ற இடைக் காலத் தீர்ப்பை அமலாக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு, மிகக் கடுமையான பிரச்சினையாக இருந்துவரும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் அனைத்துத் தரப்பினர்களின் கருத்தறிந்து, இடைவிடாத முயற்சி மேற்கொண்ட தமிழக முதல்வர் கலைஞரின் அக்கறையும், தமிழ்நாடு அரசின் செயல்பாடும் இந்த உடன்பாடு ஏற்பட முக்கியக் காரணமாகும். இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வரவேற்கிறது” என்றெல்லாம் பாராட்டியிருக்கிறார்கள். அவர்கள் மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலே அ.தி.மு.க.வைத் தவிர ஏனைய அத்தனை கட்சிகளும், அனைத்து நாளேடுகளும், சி. சுப்பிரமணியம், மூப்பனார் முதற்கொண்டு அத்தனை அரசியல் தலைவர்களும் பாராட்டினார்கள்.

அப்போது தஞ்சைக் கூட்டத்தில் நான் உரையாற்றும்போது, “எனது தலைமையிலான அரசுதான் காரணம்” என்றோ, “நான்தான் எல்லாம்” “எனக்கே உரிய பாராட்டு” என்றோ சொல்லிக் கொள்ளவில்லை. மாறாக என்ன பேசினேன் தெரியுமா? “எல்லோரும் பாராட்டுகின்ற - எல்லோரும் வாழ்த்துகின்ற - ஒரு நல்ல தீர்வை - டெல்லிப் பட்டிணத்திலே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் நாம் இன்றைக்கு சாதித்திருக்கிறோம் என்றால், இது என்னுடைய தனிப்பட்ட ஒரு முயற்சியால் அல்ல. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நான் டெல்லிச் செல்லலாமா என்ற கருத்து வைக்கப்பட்டபோது, சென்றுதான் தீர வேண்டுமென்று என்னை வழியனுப்பி வைத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்குக் கிடைக்கக்கூடிய பெருமை, அவர்களுக்குத் தரப்பட வேண்டிய பாராட்டு, வழங்கப்பட வேண்டிய வாழ்த்து இது. அதைப் போலவே தஞ்சைத் தரணியின் விவசாயப் பெருங்குடி மக்கள் - தமிழக விவசாயப்பெருங்குடி மக்கள் - நண்பர் ரெங்கநாதனைப் போன்ற விவசாயிகளுக்காகப் பாடுபடக் கூடிய தலைவர்கள் - அத்தனை பேருக்கும் வழங்கப்பட வேண்டிய வாழ்த்து. இது தனி ஒருவனாகிய எனக்கு மாத்திரம் சொந்தமான பாராட்டு அல்ல. எனக்கு மாத்திரம் தெரிவிக்கப்பட வேண்டிய நன்றி அல்ல. நான் உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவிக்கின்றேன். தஞ்சைத் தரணியே! தாயே! உனக்காக நான் என்றைக்கும் உழைப்பேன். உழைத்துக் கொண்டே இருப்பேன். நூறாண்டு காலம் வாழ வேண்டுமென்று இங்கே எழுதி வைத்திருக்கிறீர்கள். நூறாண்டுக் காலமல்ல; ஓராண்டுக் காலம் வாழ்ந்தாலும் உங்களுக்காகவே வாழ்வேன்” - என்று பேசினேன். இது இன்னமும் “முரசொலி”யிலே இருக்கிறது. நான் இதைப் பேசி 15 ஆண்டுக் காலம் ஆகிறது. இன்னமும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்பதற்கு இந்த மடலே சான்று அல்லவா? நிவாரண அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்துத் தஞ்சைக் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் எல்லாம் தற்போது போராட்டம் நடத்துவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்! பேரவையில் முதலமைச்சர் நிவாரணம் அளித்தபோது கம்யூனிஸ்ட்கள் அதை வரவேற்றதாகத் தஞ்சை கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்கிறார். ஆனால் “ஜனசக்தி”யையும், “தீக்கதிர்” நாளேட்டையும் முதலமைச்சர் படித்திருந்தால் நிவாரணம் சரியாக அறிவிக்கப்படவில்லை என்பது பற்றி வந்த செய்திகளை அறிந்திருக்க முடியும். முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குத் தஞ்சையிலே பாராட்டு விழா என்றால் நன்றாகப் பாராட்டட்டும். நமக்குக் காழ்ப்பு கிடையாது. ஆனால் அங்கேபோய் நின்றுகொண்டு என்னை துரோகி என்றும், கர்நாடக வழக்கறிஞர் போலத் தொடக்கம் முதல் செயல்பட்டேன் என்றும் சரமாரியாகத் தாக்கியிருப்பது நியாயம் தானா? இதைத் தமிழ்நாட்டு விவசாயிகளும், அரசியல் தலைவர்களும், பத்திரிகைகளும் ஏற்றுக்கொள்கிறார்களா?

அன்புள்ள, மு.க. 12-3-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗