உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3718

உடன்பிறப்பே! உன்னை அழைக்கிறேன் வா!

2013-03-11

உடன்பிறப்பே,

“டெசோ” சார்பில் ஈழத் தமிழர்களுக்காக நாம் நடத்தவிருக்கின்ற பொதுவேலை நிறுத்தத்திற்கு இடையிலே இன்னும் ஒரே ஒரு நாள் இருக்கின்றது.

ஈழத் தமிழர் பிரச்சினை உலக நாடுகளின் கேந்திர மையமான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும், இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் பரபரப்போடு பேசப்பட்டு, பல்வேறு வகையான கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிற நிலையில், அதற்கு முன்பே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமே, 38 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையைத் தயாரித்து, அதன் தலைவர் திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் 11-2-2013 அன்று சமர்ப்பித்திருக்கிறார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கியமான விவரங்கள்:-

• இலங்கையில் போர் நடந்த நேரத்தில் பெரியவர்களும், சிறார், சிறுமிகளுமாகப் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் அவர்களது இடத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை சரியாகச் செயல்படுத்தவில்லை. எனவே காணாமல் போனவர்கள் பற்றிச் சர்வதேச விசாரணை தேவை. • தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இன்னமும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது; அவர்கள் ஏன் திரும்பப் பெறப்படவில்லை?

• ராணுவம் வாபஸ் பெறப்படாததுடன், மேலும் மேலும் குவிக்கப்படுவதால், அங்கு வசிக்கும் தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் மத்தியில் பாலியல் பலாத்கார அச்சம் நிலவுகிறது.

• உள்நாட்டுப் போருக்குப்பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்துதல் போன்றவை சரியாக நிறைவேற்றப்படவில்லை.

• மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதாகச் சொன்ன இலங்கை அரசு அது குறித்து

முழுமையான விசாரணை நடத்தவில்லை. புலம் பெயர்ந்தவர்களைக் குடியமர்த்தும் பணியைக் கூடச் செயல்படுத்தவில்லை.

• இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமே இந்த அளவிற்குக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கின்ற நிலையில் - ஈழத் தமிழர்களுக்காக - அவர்கள் தொடர்ந்து அனுபவித்துவரும் சோகங்களை எண்ணி, இரவும் பகலும் நாம் துடித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், நமக்கு ஆறுதல் அளித்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டிய மத்திய அரசின் ஒருசில நடவடிக்கைகள் நம்மை வேதனைத் தீயில் ஆழ்த்துபவையாக அல்லவா உள்ளன! குறிப்பாக நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்களுடைய ஈரமில்லாத உரைகளைக் குறிப்பிட்டாக வேண்டும்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் குறித்து, அமெரிக்காவுடன் இலங்கை அரசு பேச்சு நடத்திய பிறகு, அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து இந்திய அரசு முடிவு செய்யும்” என்று சொல்லியிருக்கிறார். மேலும் அவர், “அந்தத் தீர்மானம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சு நடத்திச் சுமூகத் தீர்வு எட்டும் வாய்ப்பை ஆராயும்படி இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸைக் கேட்டுக்கொண்டுள்ளேன். தனக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழியாமல் அமெரிக்காவைத் தடுக்கும் வாய்ப்புகளை இலங்கை அரசு ஆராய வேண்டும். அதுவரை சம்பந்தப்பட்டவர்கள் காத்திருக்க வேண்டும்” என்றெல்லாம் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. நமது படை வரிசையில் முன் நின்று நமக்காகப் போரிட வேண்டிய தளபதி, எதிரிப்படையின் முன் வரிசையில் நின்று அவர்களுக்கு ஆலோசனைகளை வாரி வழங்குவதைப் போலத்தான் இந்த அமைச்சரின் பதில் அமைந்துள்ளது.

செய்தியாளர்களிடம் மட்டுமல்ல; நாடாளுமன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற அகில இந்தியக் கட்சிகள் எல்லாம் இலங்கை அரசைக் கண்டித்துக் கடுமையாக வாதங்களை எடுத்துவைத்திருக்கிறார்கள். கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர். பாலு பேசும்போது “இலங்கையில் போரின் போது 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டனர்; சுமார் இரண்டு லட்சம் ஆண்களும், குழந்தைகளும் காணாமல் போயினர்: ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்; இரண்டாவது உலகப்போர், போஸ்னியா, ஈராக், தெற்கு சூடான் உள்நாட்டுப் போர்கள் ஆகியவற்றைவிட இலங்கை உள் நாட்டுப் போர் மிக மோசமானது” என்று வேதனைகளைக் கொட்டினார்.

தம்பி தயாநிதி மாறன் பேசுகையில், “ராஜீவ்காந்தி ஆட்சியின்போது இலங்கையில் தமிழர்களுக்காக இந்தியா உணவுப் பொட்டலங்கள் போட்டபோது, இந்தியன் என்பதற்காகப் பெருமைப்பட்டேன். இலங்கை ராணுவத்தினரின் போர்க் குற்றங்களை “சேனல் 4” தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது. இந்திய அரசின் நடவடிக்கைகளை இளைஞர்களும், வெளிநாடுவாழ் தமிழர்களும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ளனர். இந்தியா என்ன செய்யப் போகிறது என்று உலகமே பார்க்கிறது. இந்தியா இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உருக்கத்தோடு வேண்டிக் கொண்டார். பா.ஜ.க. சார்பில் பேசிய அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. யஷ்வந்த் சின்கா அவர்கள், இலங்கையில் வடக்கு மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை உடனே அகற்ற இலங்கை அரசை இந்தியா கேட்டுக் கொள்ள வேண்டும். இலங்கை இனப்படுகொலை தொடர்பாக வெளியில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் பாரபட்சமில்லாத சர்வதேச விசாரணைக்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும் நாடாக மட்டும் இந்தியா விளங்கக் கூடாது; இந்தியாவே அந்தத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்லும் நாடாக இருக்க வேண்டும்” என்றே பேசினார்.

ஏன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய நமது நண்பர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள், “இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குரல்கொடுத்து வருகின்றனர். அதை இந்தியாதான் செயல்படுத்த முடியும் என அவர்கள் நம்புகின்றனர். அதனால், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தம்பி தொல். திருமாவளவன் பேசும்போது, “நாம் நினைக்கிறபடி இலங்கை ஒரு நாளும் நட்பு நாடாக இருந்தது இல்லை. இலங்கைத் தலைவர்கள் இங்கே வருகிறபோது சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறோம், ஆனால் நமது தலைவர்கள் அங்கே சென்றால் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இந்தியாவை இலங்கை பல்வேறு கட்டங்களில் அவமதித்து இருக்கிறது. எனவே இந்தியா, இலங்கை மீதான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று முழக்கமிட்டிருக்கிறார்.

மேலும் அ.தி.மு.க.வின் சார்பில் திரு. தம்பிதுரையும், ராஷ்ட்ரீய ஜனதா சார்பில் திரு.லாலுபிரசாத்யாதவ் அவர்களும், சமாஜ்வாடி கட்சியின் சார்பில் திரு. முலாயம்சிங் யாதவ் அவர்களும், மார்க்சிஸ்ட் உறுப்பினர் திரு. பி.ஆர். நடராசன் அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் திரு.லிங்கம் அவர்களும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சவுக்கத்தாராய் அவர்களும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாராசிங் அவர்களும், இலங்கைத் தமிழர்களுக்காக அங்கே குரல் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் யாரிடமிருந்து ஒரு உறுதியான திடமான அறிவிப்பு கிடைக்குமென்று எதிர்பார்த் திருந்தோமோ, அவர்களிடமிருந்து ஏமாற்றம்தான் இதுவரை கிடைத்திருக்கிறது. விவாதத்திற்குப் பதிலளித்த சல்மான் குர்ஷித் பேசும்போது, “நட்பு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட்டு அங்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என நெருக்குதல் கொடுப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன. “பெரியண்ணன்” போலவும், “சூப்பர் போலீஸ்” போலவும் செயல்படுவது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு உகந்தது அல்ல” என்றெல்லாம் பேசியிருப்பதும்; காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், அபிஷேக் சிங்வி பெங்களூரில் அளித்த பேட்டியில், “இந்திய அரசு இந்தப் பிரச்சினையை நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்க்கிறது. நாங்கள் எந்த ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையிலும் தலையிடமாட்டோம். அதுவும், அண்டை நாடு, இந்தியாவின் மதிப்பு மிக்க நட்பு நாடான இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடமாட்டோம்” என்று கூறியிருப்பதும், உலகத் தமிழ் மக்களிடையே மிகப் பெரிய வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் உரைக்குப் பதிலளித்த பிரதமர் பேச்சிலும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து எந்தவிதமான உறுதியும் தரப்படவில்லை. இலங்கையிலே உள்ள தமிழர் தலைவர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது என்ற வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்திருந்தால் பண்டித நேரு அவர்கள் தென்னாப்பிரிக்காவின் நிறவெறிப் பிரச்சினையில் தலையிட்டிருக்க முடியுமா? வங்காளதேசத்தில் விடுதலை வீரர் முஜிபுர் ரகுமானுக்கு அன்னை இந்திராகாந்தி அம்மையார் உதவிக்கரம் நீட்டி விடுதலைக்கு உறுதுணை புரிந்திருக்க முடியுமா? என்ற கேள்விகளையெல்லாம் வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்து வரும் உலகத் தமிழர்கள் கேட்கமாட்டார்களா?

நாடாளுமன்றத்தில் அமைச்சரின் பதிலுரைக்குப் பிறகு, தி.மு.க. உட்பட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் அவையிலிருந்தே வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள்.

“இலங்கையின் போர்க் குற்றங்களுக்குப் போதுமான, நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் உள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் சுதந்திரமானதொரு விசாரணையை நடத்த வேண்டும்” என்று இந்தியாவில் உள்ள சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் தலைமை இயக்குனர் திரு. அனந்தபத்மநாபன் கூறியிருக்கிறார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகக் கொடுமைகள், மோசமாக தமிழர்கள் நடத்தப்படுதல், தமிழர்களைத் துன்புறுத்தல் ஆகியவை தொடர்ந்து நடப்பதாகப் பிரிட்டன் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர், திரு. டேவிட் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா இலங்கைக்கு இரண்டு முறை உண்மை கண்டறியும் குழுவை அனுப்பியும், அந்தக் குழு; “நிவாரணப் பணிகள் நிறைவளிப்பதாக இல்லை” என்றே கூறியுள்ளது.

இவ்வாறு சர்வதேச அமைப்புகள், விசாரணைகள், சாட்சியங்கள் ஆகியவை இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப் படுகொலை ஆகியவற்றிற்கு அதிபர் மகிந்தர் ராஜபக்சேவே பொறுப்பேற்றுப் பதிலளிக்க வேண்டியவர் என்றுதான் காட்டுகின்றன. இதையெல்லாம் முன் வைத்தும்; மத்திய அரசின் அணுகுமுறை மாற வேண்டும் என்பதற்காகவும், ஈழத் தமிழர்கள்பால் அக்கறை கொள்ள வேண்டுமென்பதற்காகவும், தேவையான அழுத்தத்தைத் தருவதற்காகத்தான் “டெசோ” இயக்கத்தின் சார்பில் வருகின்ற 12ஆம் தேதி - 12 மணி நேரம் - அதாவது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை - பொது வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம். அந்த வேலை நிறுத்தத்தில் தமிழர்கள் அனைவரும் ஒருமுகமாகப் பங்கேற்று வெற்றிகரமாக ஆக்கித் தரவேண்டுமென்று மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

உடன்பிறப்பே, உன்னைத் தவிர நான் வேறு யாரைப் போய்க் கேட்கப் போகிறேன்? நீ தொண்டனாக இருந்தாலும் - தொழிலாளியாக இருந்தாலும் - அல்லது ஆசிரியராக இருந்தாலும் மாணவராக இருந்தாலும் - விவசாயியாக இருந்தாலும் - அரசு அலுவலராக இருந்தாலும் - யாராக இருந்தாலும் “தமிழ்ச் சொந்தம்” என்ற உரிமையோடு தம்பி என்ற முறையில், தழுதழுத்தக் குரலில் - தமையன் நான் கேட்கிறேன்!

தமிழனாகப் பிறந்த நீ; ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டிய தருணமிது என்பதைத் தவறாமல் உணர்ந்து தடந்தோள் உயர்த்திப் புறப்படுக! அலுவலகம் செல்வோரை அறவழியில் கெஞ்சிக் கேட்டு - அமைதியாகக் கோரிக்கை விடுத்து - அவர்களும் நீயும் இணைந்து நின்று இந்த அறவழி, ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய முடியாதா? முடியும்! நிச்சயமாக முடியும்! எதிராகக் கப்பியிருக்கும் இருள் கிழித்து; வெளிக் கிளம்பும் உதய விடியலாக உன் பணி திகழட்டும்; ஒரு நாள் தான்! ஒரு நாள் கூட அல்ல; காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை; தமிழ் ஈழத்தில் ரத்தம் சிந்தியவர்களுக்கு - உயிர் இழந்தோர்க்கு - வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்போர்; ஆம்; நம் உடன்பிறப்புகளுக்கு உற்றுழி உதவிட நாம் இயற்றும் தவம்தான் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தம்! கோடிக்கணக்கான தமிழர்களில் - இங்கு வாழ்வோர் - அவர்கள் எங்கு வாழ்வோராயினும்; அவர்கள் இதயம் குளிர, நாம் இயற்றப் போகும் வேள்வி இது என்ற சங்கல்பத்தோடு விடியும், விடியும், இங்குள்ள தமிழர்க்கு மட்டுமல்ல; இலங்கை வாழ் ஈழத் தமிழர்களுக்கும் நல்ல பொழுது விடியும் என்ற நம்பிக்கையோடு நாளை நடைபெறும் அறவழி வேலை நிறுத்தத்தை - அன்பு வழி வேலை நிறுத்தத்தை - அமைதிவழி கடைப்பிடித்து வெற்றியடையச் செய்வோம்; வாராய் என்று என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே, உன்னை அழைக்கிறேன் வா!

அன்புள்ள, மு.க. 11-3-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗