தொகுதி 48 · கடிதம் 3717
மதுரவாயல் திட்டமும் அரோகரா! ஏன்? ஏன்?
2013-03-10
உடன்பிறப்பே,
2006 தமிழகச் சட்டசபைத் தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகியுள்ள பகுதிகளில் “பறக்கும்சாலைத் திட்ட”த்தை (Elevated Highway) செயல்படுத்துவோம்” என்று வெளியிட்டிருந்ததை அடுத்து, தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்திற்கு உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டேன்.
தம்பி டி.ஆர். பாலு போன்றவர்கள் தொடர்ந்து முயற்சியெடுத்து, சென்னைத் துறைமுகத்தையும், மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கும் மேம்பாலச் சாலை ஒன்றினை 1,655 கோடி ரூபாய்ச் செலவில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே நேரில் வந்து 8.1.2009 அன்று முதலமைச்சராக இருந்த என் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தத் திட்டத்தின் மதிப்பு பின்னர் 1,815 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதில் பெரும்பகுதி நிதி ஒதுக்கீடு மத்திய அரசின் நிதியாகும். இது, இந்தியாவிலே மிக நீளமான உயர்மட்டச் சாலையாக அமையும் என்றும் அப்போதே அறிவிக்கப்பட்டது.
சென்னைத் துறைமுகத்திலிருந்து தங்கு தடையற்ற சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கு வழிவகை செய்வதற்காக கூவம் ஆற்றின் ஒரு கரையோரமாகப் பறக்கும் விரைவுச் சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குத் தமிழக அரசு 22-6-2007 அன்று கொள்கை அளவில் அனுமதி வழங்கியது. இந்த மேம்பாலச் சாலை அமைப்பதற்குத் தேவைப்படும் நில எடுப்புக்கான செலவுத் தொகையையும், மற்றும் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்வு அளித்தல், மறு குடிஅமர்வுக்கு வகை செய்தல் ஆகியவற்றுக்காக ஏற்படும் செலவினத்தையும் சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகமும், தமிழ்நாடு அரசும் 50க்கு 50 என்கிற விகிதாச்சார அடிப்படையில் ஏற்பதற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு 130 கோடி ரூபாய் செலவாகும்.
இதைத் தவிர, இந்த உயர்மட்ட பறக்கும் சாலை அமைப்பதையொட்டி இப்பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் அனுமதி பெறுதல், குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர்க் குழாய்கள் மற்றும் மின்கம்பங்கள் ஆகியவற்றை இடமாற்றம் செய்தல் போன்ற பணிகளுக்காக இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட அல்லது நிறைவேற்றப்பட்ட இது போன்ற மிகப் பெரிய திட்டங்கள் என்றால், இன்றைய தமிழக முதல் அமைச்சருக்கு எப்படித்தான் இருக்குமோ, அவற்றுக்கு மூடு விழா நடத்துவதற்கு என்ன வழி என்றுதான் பார்ப்பார்! ஒரு முக்கியமான உதாரணம் புதிய தலைமைச் செயலகம் போதாதா? தலைமைச் செயலகமும், பேரவையும் நடத்துவதற்காகவே ஆழ்ந்து சிந்தித்துத் திட்டமிட்டு, அமைச்சர்களுக்கான அறைகள் எல்லாம் வரிசையாகக் கட்டப்பட்டுப் பிரதமரையும், சோனியா காந்தி அம்மையார் அவர்களையும் அழைத்து வந்து முதலமைச்சராக இருந்த என் தலைமையில் திறப்பு விழாவும் நடத்தி, பார்த்தவர்கள் எல்லாம் வியந்து பாராட்டிய கட்டிடத்தை, மருத்துவமனையாக மாற்றப் போகிறார்களாம்! தலைமைச் செயலகமாக அது இயங்கக்கூடாதாம்; ஆனால் மருத்துவமனையாக மட்டும் இயங்கலாமாம்! மருத்துவமனையாக இயங்குவதற்குத் தகுதியான கட்டிடம், தலைமைச் செயலகமாக ஏன் இயங்கக் கூடாது? எப்படிப்பட்ட மனோபாவம் கொண்டவரை தமிழகம் முதலமைச்சராகப் பெற்றிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா என்ன?
தலைமைச் செயலகத்தைப் போலவேதான் தமிழர்களின் நெடுங்காலக் கனவான சேது சமுத்திரத் திட்டம்; பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் மதுரைவரை நேரில் வந்து, என் தலைமையில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள். அ.தி.மு.க.வும் தேர்தல் அறிக்கையில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று குறிப்பிட்ட திட்டம்தான். ஆனால் இப்போது அ.தி.மு.க. அரசு, அந்தத் திட்டத்திற்கு எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போட எண்ணுகிறது. அந்த வரிசையிலேதான், இந்த மதுரவாயல் சாலைத் திட்டத்தை பிரதமரே நேரில் வந்து அடிக்கல் நாட்டினார் அல்லவா? அம்மையாரால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? இந்தத் திட்டத்திற்கு நீதிமன்றத்தின் மூலம் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் அவர்களும், நீதிபதி சிவஞானம் அவர்களும் இந்தத் திட்டத்தைத் தொடரலாம் என்று தீர்ப்பளித்ததையும் தற்போதைய தமிழக அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நேரத்தில், 2012ஆம் ஆண்டு மார்ச் திங்களில் அ.தி.மு.க. ஆட்சியினர் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லித் தடுத்து நிறுத்திவிட்டார்கள். 29-1-2013 தேதிய “இந்து” நாளிதழில் தமிழக அரசு இந்தத் திட்டத்தை தொடருவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருப்பதாகவும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்த தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திற்கு அதுபற்றிக் கடிதம் எழுதியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த செய்திக் கட்டுரையை முடிக்கும்போது, “The Tamil Nadu Government is yet to complete its share of the work in terms of relief and rehabilitation of dwellers along the Cooum River and acquisition of the land” என்றும் எழுதியிருந்தது. இந்த சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் திட்டத்திற்கான பணிகள் பற்றி, 6ஆம் தேதிய “இந்து”, 7ஆம் தேதிய “டைம்ஸ் ஆப் இந்தியா”, 8ஆம் தேதிய “தினத்தந்தி” நாளேடுகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அவற்றில் வந்துள்ள தகவல்படி, கடந்த ஓராண்டாக மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறிகூடத் தெரியவில்லை. இந்தத் திட்டத்தை நிறுத்திவைத்தத் தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், இந்தத் திட்டத்திற்கான வழித்தடத்திற்குப் புதிதாக அனுமதியும், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் ஒப்புதலும் பெற வேண்டுமென்று கூறியிருந்தது. அதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், திட்டத்தின் வழித் தடத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாததால், புதிதாக அனுமதியும், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் ஒப்புதலும் பெறத் தேவையில்லை என்று தெரிவித்துவிட்டது.
மேலும், இந்தத் திட்டத்தால் கூவம் ஆறு தூர் வாரப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்; கூவம் ஆற்றின் கொள்ளளவு அதிகரிக்கும்; எதிர்காலத்தில் கூவம் ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தடுக்கப்படும்; கூவம் ஆற்றங்கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்றெல்லாம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இந்தத் திட்டத்தைத் தொடரவிடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்துவிட்ட காரணத்தால், இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்த “சோமா” நிறுவனம், தனக்கு நஷ்ட ஈடாக 668 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கோரியுள்ளது. அந்தக் கடிதத்தில், “தமிழக அரசு இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தி, கூவம் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் 6,100 குடும்பத்தினரையும், சிந்தாதிரிப் பேட்டையில் 458 வணிகக் கட்டிடங்களையும் அப்புறப்படுத்தித் தருவதாக இருந்தது. ஆனால் அதைச் செய்து நிலத்தை ஒப்படைக்காததால் திட்டப்பணிகள் தாமதமாகின்றன. இந்தத் திட்டத்தால் தமிழக அரசும், சென்னைத் துறைமுகமும்தான் பெரிதும் பயனடைய உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்திற்குத் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால், திட்டப் பணிகள் கடுமையாகப் பாதிக்கும். அதன் காரணமாகக் கட்டுமானப் பணிக்கான செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே கழக அரசில் திட்டமிட்டபடி இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், வரும் செப்டம்பர்த் திங்களில் பணிகள் முடிந்து, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே 4 வழி அதிவிரைவு பறக்கும் சாலையில் போக்குவரத்து தொடங்கியிருக்கும். ஆனால் இதுவரை 500 கோடி ரூபாய்ச் செலவு செய்து 20 சதவிகிதப் பணிகளே முடிந்துள்ளன. இந்த நிலையில் மதுரவாயல் அதிவிரைவு பறக்கும் சாலைப் பிரச்சினை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படப் போவதாக ஏடுகளில் செய்திவந்துள்ளது. ஏற்கனவே இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டிருக்கும் தடைகளை அகற்றித் திட்டம் வேகமாகக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிவடைவதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்று தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. இதற்கிடையே, இதே பிரச்சினைக்காக இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும், “திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்து நிறைவேற்றுவதற்குச் சட்ட ரீதியான வழி முறையைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தோன்றவில்லை” என்று அந்த ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழக அரசின் அணுகுமுறையால் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளது. இது போன்ற மிகப் பெரும் கட்டமைப்புக்கான திட்டங்கள் மற்ற மாநிலங்களில் எவ்விதத் தடையுமின்றி மாநில அரசுகளின் மனப்பூர்வமான ஒத்துழைப்போடும், உதவியோடும் வேகமாக நிறைவேறி வருகின்ற நிலையில் தமிழகத்தில் மட்டும்தான் மாநில அரசின் எதிர்மறை அணுகுமுறையின் காரணமாகத் திட்டம் தாமதமாகி வருகிறது. மாநில அரசின் சார்பில் அடுக்கடுக்காக ஐயப்பாடுகள் எழுப்பப்பட்ட போதெல்லாம் தேவையான விளக்கங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்தும்கூட, ஏற்கனவே ஏற்பட்ட தாமதம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மத்திய அரசின் சார்பில் துறையின் அதிகாரி திரு. எ.கே. உபாத்யாய் அவர்களும், பிரதமரின் ஆலோசகர் திரு. டி.கே.ஏ. நாயர் அவர்களும் தமிழகத்தின் தலைமைச் செயலாளரைச் சந்தித்து திட்டம் விரைவுபடுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தேவையான விளக்கங்களையெல்லாம் அளித்தும்கூட, தாமதம் தடுக்கப்படவில்லை.
“சென்னைத் துறைமுகத்திற்கு இந்தத் திட்டத்தின் மூலம் தனிச் சிறப்பு மேம்பாலச்சாலை உருவாக்கப்படாவிட்டால் சென்னைத் துறைமுகத்தையே மூட வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாக ஆகிவிடக் கூடும்” என்றே “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்தப் பணிகளை மேற்கொண்டுவந்த “சோமா” நிறுவனம் தமிழக அரசினால் ஏற்பட்ட தாமதம் காரணமாகத் தங்களுக்கு நஷ்ட ஈடாக 668 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று தற்போது நிர்ப்பந்தம் செய்கின்ற நேரத்தில், இவ்வளவு பெரிய தொகையை யார் கொடுப்பது? காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட தமிழக அரசின் தலையில் அல்லவா இந்த நட்டம் வந்து விழும்! அ.தி.மு.க. அரசின் இந்த “வெறுப்பு அரசியல்” காரணமாகத் தமிழகத்திற்குப் பொருள் இழப்பு மாத்திரமல்ல; இந்தத் திட்டத்தின் காரணமாகத் தமிழக மக்கள் அடையவிருந்த நன்மைகளும் சேர்ந்து பாதிக்கப்படுகின்றன என்பதை இப்போதாவது தமிழக மக்கள் புரிந்து கொள்வார்களானால், இனியாவது தமிழகம் உருப்படும்!
அன்புள்ள, மு.க. 10-3-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗