உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3720

“டெசோ” கேட்பதால்; வலுவில்லை என்பதா?

2013-03-14

உடன்பிறப்பே,

ஈழத் தமிழர்களின் நலன் காப்பதற்காக என்னைத் தலைவராகவும் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், கி.வீரமணி, தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட “டெசோ” அமைப்பை மீண்டும் உருவாக்கி, இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், சிங்கள மயமாக்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி அவ்வப்போது விரிவாகக் கலந்தாலோசனை செய்து உரிய தீர்மானங்களை நிறைவேற்றி இந்திய அரசுக்கு அனுப்பிவைத்தோம். அத்தோடு நில்லாமல், தொடர்ந்து பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து வந்து, அவர்களுடைய ஆலோசனைகளையும் பெற்று 14 தீர்மானங்களை வடிவமைத்து 12-8-2012 அன்று சென்னையில் நடைபெற்ற “டெசோ”வின் மாபெரும் மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றினோம். அந்தத் தீர்மானங்களை இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களிடம் நமது நாடாளுமன்றக் கழக உறுப்பினர்கள் நேரடியாகக் கொடுத்து தேவையான விளக்கமளித்து வந்தனர். பின்னர் கழகப் பொருளாளர், தளபதி தம்பி மு.க.ஸ்டாலினும், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர்.பாலுவும் அந்தத் தீர்மானங்களை எடுத்துச்சென்று, நேரடியாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்தின் தலைமை அலுவலகத்திலும், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் கொடுத்துத் தேவையான விவரங்களையும், அடிப்படை ஆதாரங்களையும் வழங்கி வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக நமது நாடாளுமன்ற -மாநிலங்களவை உறுப்பினர்கள் கொண்ட குழுக்களை அமைத்து டெல்லியிலுள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்களில் “டெசோ” மாநாட்டுத் தீர்மானங்களை நேரடியாகக் கொடுத்து அவர்களின் ஆதரவையும் கோரினோம்.

டெசோ இயக்கத்தின் சார்பில், பெப்ரவரி திங்கள் 8ஆம் தேதியன்று கறுப்புடை அணிந்து என்னுடைய தலைமையில், சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். அந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கமே சிங்களப் பேரினவாத அதிபர் ராஜபக்ஷேயை சர்வதேசப் போர்க் குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும்; விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மைந்தன், பாலகன் பாலச்சந்திரனைச் சிங்கள ராணுவம் படுகொலை செய்த கொடுமையை உலகத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான். மார்ச் திங்கள் 5ஆம் நாளன்று சென்னையிலுள்ள இலங்கைத் தூதுவரகத்தின் முன்னால் “முற்றுகைப் போராட்டம்” டெசோ சார்பில் நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தோழர்கள் அந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டனர். மார்ச் திங்கள் 7ஆம் நாளன்று இந்தியத் தலைநகர் டெல்லியில் “டெசோ” சார்பில் ஈழத் தமிழர்கள் மீது ஏவப்பட்டு வரும் கொடுமைகள் குறித்த “கருத்தரங்கம்” ஒன்றினை நடத்தினோம்.

கழகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதம்கோரி, அந்த விவாதத்தின்போது அனைத்துக் கட்சித் தலைவர்களும் கழகத்தின் கருத்தினையொட்டிப் பெரிதும் வாதாடினர். ஆனால் மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்கள் பதிலளித்துப் பேசும்போது, “ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் குறித்து, அமெரிக்காவுடன் இலங்கை அரசு பேச்சு நடத்திய பிறகு, அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து இந்திய அரசு முடிவு செய்யும்” என்று சொன்னார்.

ஆனால் இந்தியாவின் இந்த யோசனையை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது. “அமெரிக்காவுடன் பேச்சு நடத்த எங்கள் நாடு உத்தேசிக்கவில்லை. அமெரிக்கத் தீர்மானத்தின் சாராம் சத்தை இலங்கை முற்றிலுமாக நிராகரிக்கிறது. ஒரு நாட்டுக்கு ஐ.நா. பார்வையாளர்கள் வருகை புரிவது என்பதைச் சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதல் அல்லது அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று இலங்கையின் சார்பில் ரவிநாதா ஆர்ய சின்ஹா அறிவித்துவிட்டார்.

இந்தியா வழங்கும் ஆலோசனையை இலங்கை ஏற்றுக் கொள்ளுமென்று மத்திய அரசிலே உள்ளவர்கள் எந்த அடிப்படையில் நம்பிக்கை கொண்டார்கள் என்று நமக்குப் புரியவில்லை. சிங்கள அரசு, இந்திய அரசுக்கு நீண்ட காலமாக கற்பித்து வரும் பாடத்தை மத்திய அரசிலே உள்ளவர்கள் எப்படித்தான் மறந்தார்களோ? பண்டாரநாயகா - செல்வநாயகம் உடன்பாடு, டட்லி - செல்வநாயகம் உடன்பாடு, ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனா உடன்பாடு என்று எந்த உடன்பாட்டையும் உதாசீனப்படுத்திய இலங்கை அரசை; பண்டித நேரு அவர்களையும், இளைய தலைவர் ராஜீவ்காந்தி அவர்களையும் அவமானப்படுத்திய சிங்கள அரசை இன்னமும் இந்தியா நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டு, அவர்களைக் காப்பாற்ற நினைக்கிறது என்பதுதான் நமக்குப் புரியாத வேதனையாக நீடித்து வருகிறது. எனினும் அமெரிக்காவின் தீர்மானத்தையாவது கடைசி நேரத்தில் இந்தியா ஆதரிக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இன்னமும் இருக்கிறது.

இப்படி இந்திய அரசு மிகுந்த நம்பிக்கையோடு வழங்கிய ஆலோசனையை இலங்கை அரசு அதனைப் பரிசீலித்துக் கூடப் பார்க்க மனமில்லாமல் நிராகரித்துவிட்ட நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தைப் பற்றிய நிலைப்பாட்டை மத்திய அரசு எப்போது உறுதியாக அறிவிக்கப்போகிறது என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே நீடித்து வருகிறது.

இத்தகைய சூழலில், ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்திருக்கும் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம், ஈழத் தமிழர்களுக்குப் பயனளிக்காது என்றும்; இலங்கையைத் தண்டிக்கும் அளவிற்கு அதிலே தீவிரமாக எதுவும் கூறப்படவில்லை என்றும்; தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வை விழுந்து விழுந்து நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கத் துடிக்கும் சில ஏடுகளைப்போல, “டெசோ” நடத்திய முழு அடைப்புப் போராட்டம் “பிசுபிசுத்துப் போனது” என்று சில அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு, தாங்களும் “இருக்கிறோம்” என்று காட்டிவருகிறார்கள். தி.மு.க. அங்கம் வகித்து வரும் “டெசோ” அமைப்பு, அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதன் காரணமாகவே; காழ்ப்புணர்வு கொண்டு, அமெரிக்கத் தீர்மானத்தில் எதுவுமே இல்லை என்பதைப்போல தமிழ்நாட்டிலே சிலர் பேசி வருவதை உலகத் தமிழர்கள் கவனித்து வருகிறார்கள். அமெரிக்காவின் தீர்மானமே உறுதியானது - இறுதியானது - தீவிரமானது என்று “டெசோ” அமைப்பு கருதி எப்போதும் அறிவிக்கவில்லை. எனினும் அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று “டெசோ” கோரிக்கை வைப்பதற்குச் சில அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. ஈழத் தமிழர்களை நசுக்கி நாசமாக்கி வரும் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகளின் கேந்திரமையமான ஐ.நா. அவையில் மற்ற எந்த நாடும் தீர்மானம் எதையும் முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்காத நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா தீர்மானம் ஒன்றினைக் கொண்டுவரும் வாய்ப்பினைப் பெற்றிருப்பதை நாம் வரவேற்க வேண்டும். அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்பதால்தான் சென்ற முறை அந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டது. இந்த முறையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள், அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. உலக நாடுகளுக்கெல்லாம் பொதுவானதொரு மன்றத்தில், இலங்கைக்கு எதிரான முதல் நகர்வை ஏற்படுத்தியது அமெரிக்க வல்லரசுதான். அந்த நகர்வுதான் உலகெங்கிலும் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிய அக்கறையையும், பரிவையும் - இலங்கைச் சிங்கள அரசுக்கு அதிர்ச்சியையும் பயத்தையும் உருவாக்கியிருக்கிறது. இதனை உலகத் தமிழர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள். “டெசோ” அமைப்பு நேரடியாக ஐ.நா.மன்றத்தில் இலங்கைக்கெதிரான தீர்மானம் எதையும் முன்மொழிந்திடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கவில்லை. இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதே நிலைதான் என்பதை உணர வேண்டும். அதனால்தான் தமிழினப் படுகொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்குப் பொறுப்பான ராஜபக்ஷேயின் போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத் தன்மையுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கான வலிமைமிக்க தீர்மானம் ஒன்றைக் கொண்டு செல்ல வேண்டும்; பொது வாக்கெடுப்பு குறித்த தனித் தீர்மானம் ஒன்றினை இந்தியாவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னெடுத்துச் சென்று, ஈழத் தமிழர் வாழ்வில் விடிவு காண வேண்டும்; குறைந்தபட்சம் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தையாவது உரிய திருத்தங்களுடன் இந்தியா ஆதரித்திட வேண்டும்; என்று “டெசோ” சார்பில் நாம் தொடர்ந்து குரலெழுப்பியும், கோரிக்கைகள் கொடுத்தும் வருகிறோம். இன்றைய சூழலில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதற்கும், இந்தியாவே தனியானதொரு தீர்மானத்தைக் கொண்டு செல்வதற்கும் அழுத்தம் தருவக சொன்னதன்னியில்; நாமே உலக நாடுகள் அவையில் தீர்மானத்தை முன்மொழிய முடியுமா; நாமே நேரடியாக இலங்கைக்குக் கெடு விதித்திட இயலுமா; நாமே படை திரட்டிக்கொண்டு, இலங்கையைப் போருக்கு அழைப்பது சாத்தியமா; என்பதையெல்லாம் இங்குள்ள சில அரசியல்வாதிகள் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கவேண்டும். “டெசோ” இப்போது மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டைவிட, உயர்ந்த - உகந்த நிலைப்பாட்டை ஈழத் தமிழர் குறித்து ஓயாமல் கருத்துகள் தெரிவித்து வரும் இந்தச் சில அரசியல்வாதிகள் வகுத்தளிப்பார்களேயானால், ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் உவகையோடு அதனை வரவேற்பார்கள்! அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை முன்மொழிய அவர்களாகவே முன் வருகின்ற நேரத்தில் - அந்தத் தீர்மானத்தை 30க்கு மேற்பட்ட உலக நாடுகள் ஆதரிக்கத் தயாராக இருக்கும்போது - குறைந்தபட்சம் அதையாவது நாம் வரவேற்க வேண்டாமா என்ற எண்ணத்தோடுதான்; ஈழத் தமிழர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களை முழுமையாகத் துடைத்திட உடனடியாக இயலாவிட்டாலும், அவர்களுக்கு ஆறுதல் வழங்கிடும் வகையிலேதான், “டெசோ” அமைப்பு, அமெரிக்கா, தீர்மானத்தை முன்மொழிவதை வரவேற்றும், அதை இந்திய அரசு உரிய திருத்தங்களோடு ஆதரிக்க முன் வர வேண்டுமென்றும் கேட்டுவருகிறோம். ஆனால் இங்கேயுள்ள சிலர் - ஏதோ தங்களையே பெரிய “வல்லரசுகள்” என்பதைப் போலக் கருதிக் கொண்டு - எதற்கெடுத்தாலும் “குந்தகம்” சொல்வது என்ற முறையில்; அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் அது சரியில்லை, இது சரியில்லை என்றெல்லாம் வேண்டாத விமர்சனம் செய்து குட்டையைக் குழப்பப் பார்க்கிறார்கள்!

அன்புள்ள, மு.க. 14-3-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗