உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3714

போர் நின்றுவிட்டதாகப் பொய் சொன்னது போர்க்குற்றமே!

2013-03-07

உடன்பிறப்பே,

2009ஆம் ஆண்டு இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் போர் நடைபெற்ற போது, இன்றைக்கு ஈழத் தமிழர்கள்பால் நாம் காட்டுகின்ற உணர்வுபூர்வமான அக்கறையை, அப்போதே காட்டவில்லை என்பதைப்போல ஒருசிலர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை; அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதை; தி.மு.கழகம் அப்போது ஆட்சியிலே இருந்த காரணத்தால் தடுத்து நிறுத்தியிருக்கலாம், ஆனாலும் தடுத்து நிறுத்தவில்லை என்பதைப்போல தெரிந்தோ, தெரியாமலோ கூறி வருகிறார்கள். 2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, தி.மு.கழகம் எதுவும் செய்யவில்லையா?

கழக அரசின் சார்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன் வராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும் என்று ஒரு தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அதையொட்டி, கழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை என்னிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டார்கள். அப்போது ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தம்பிகள் எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் காதர் மொய்தீன் ஆகியோர்கூட தங்கள் பதவி விலகல் கடிதங்களை என்னிடம் கொடுத்து விட்டார்கள். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றே பிரதமருக்கு அந்தத் தீர்மானம் தம்பி டி.ஆர். பாலு மூலமாக அனுப்பப்பட்டது. அதனை ஆய்வு செய்த பிரதமர், அரசியல் ரீதியான தீர்வு காண மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக எடுத்திடும் என்று பாலுவிடம் உறுதிகூறி, அது அப்போதே அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது. அதே நாளில் பிரதமர் அளித்த பேட்டியிலும் -

“இலங்கையில் ஏற்பட்டுள்ள இனப் பிரச்சினை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இப் பிரச்சினைக்கு ராணுவம் மூலம் தீர்வு என்பது சரியாக அமையாது. இலங்கையின் இறையாண்மையையும், அங்கு வசிக்கும் தமிழர்களின் மனித உரிமையையும் மதிக்கும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முழு ஈடுபாட்டுடன் மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும்” என்று கூறியிருந்தார்.

18-10-2008 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் நேரடியாகவே தொலைபேசியில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயுடன் பேசினார். 22-10-2008 அன்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்திலே குறிப்பிட்டார். 24-10-2008 அன்று சென்னையில் “பிரமாண்டமான மனிதச் சங்கிலி” ஒன்றினை நடத்தினோம். 26-10-2008 அன்று திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் சென்னை வந்து என்னிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நார்வே நாட்டின் முயற்சியின் பேரில் ஏற்பட்ட சண்டை நிறுத்தம் தொடருவதை உறுதி செய்ய வேண்டுமென்று கலைஞர் வலியுறுத்தினார் என்றும், போர்ப் பகுதிகளில் அவதிப்படும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் இந்திய அரசின் மூலமாக மனிதாபிமான உதவிகள் அளிக்க இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது என்றும் கூறினார்.

12-11-2008 அன்று இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றினை நான் முன்மொழிந்து அது நிறைவேற்றப்பட்டது. 4-12-2008 அன்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நான் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அதன் பின்னர் பிரணாப் அவர்கள் இலங்கைக்கு நேரிலேயே சென்று ராஜபக்ஷேயுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 27-12- 2008 அன்று நடைபெற்ற கழகப் பொதுக் குழுவிலே இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துத் தீர்மானம் நிறைவேற்றினோம்.

12-1-2009 அன்று தமிழர் தலைவர் கி. வீரமணி, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் என்னைச் சந்தித்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர். பாலுவையும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியையும் பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் நிலைமைகளை விளக்கச் செய்தேன்.

28-3-2009 அன்று இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இருவரும் உதவிட வேண்டுமென்று கேட்டுப் பிரதமருக்கும், திருமதி சோனியா அவர்களுக்கும் எழுதிய கடிதத்திற்கு, 31-3-2009 அன்று திருமதி சோனியா அவர்கள் எனக்கு எழுதிய நீண்ட கடிதத்தில், “நம்முடைய பிரதமர் அவர்கள் காங்கிரஸ் சார்பாக உங்களுக்கு எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரின் சார்பாக இலங்கையில் அண்மையில் நடை பெற்ற சம்பவங்கள் குறித்து ஐக்கிய முற்போக கூட்டணி அரசின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை விவரித்திருப்பதைப் பற்றி நானும் உங்களுக்கு உறுதி கூற விரும்புகிறேன்... தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் போர், அதன் காரணமாக அங்குள்ள தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவித் தமிழர்கள் அனுபவித்துவரும் பெரும் துயரங்கள், நம்மை மிகுந்த கவலைக்கு ஆளாக்கியுள்ளது. அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் நலன்களைப் பேணவும் தேவையான முயற்சிகள் அனைத்தையும் இலங்கையின் அதிகார வர்க்கம் மேற்கொள்ள வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். உள்ளபடியே அதற்கான முதல் கட்டமாகப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். நமது அரசு இலங்கை அரசுடன் போர் நிறுத்தத்தைப் பற்றித் தொடர்பு கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் ஏற்பட்டால் தான் அப்பாவி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர முடியும்” என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் 5-4-2009 அன்று என்னைச் செய்தியாளர்கள் சந்தித்தபோது, “இலங்கையில் விடுதலைப் புலிகளின் அனைத்து இடங்களையும் ராணுவம் கைப்பற்றி விட்டதாகவும், அவர்களது ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், பிரபாகரனும், அவருடைய புதல்வரும் தமிழர்கள் வாழ்கிற பகுதியில் மறைந்திருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கிறதே” என்று என்னைக் கேட்ட நேரத்தில் “போர் நிறுத்தம் வேண்டுமென்று கடந்த ஆறு மாத காலமாகத் தொடர்ந்து சொல்லிவருகிறோம். எங்கள் குரலை மதித்து வெளிநாடுகளிலே உள்ள அரசுகள், ஐ.நா. மன்றத்தினர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மூலமாக இலங்கைக்குச் சொல்லி வருகிறார்கள். போரை நிறுத்துங்கள் என்று இந்திய அரசினர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் ராஜபக்ஷே போரை நிறுத்தவில்லை. அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கூறினேன்.

7-4-2009 அன்று பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு நான் அனுப்பிய தந்தியில் “இலங்கையில் ஒட்டு மொத்த தமிழின மக்கள் கூண்டோடு அழிக்கப் படுவதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும், அங்குப் போர் நிறுத்தத்தை உறுதிசெய்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டேன். இறுதிப் போரிலே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக நான் மட்டுமல்ல, இந்திய அரசு மாத்திரமல்ல, பெரிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நார்வே போன்றவைகள் வெளியிட்ட அறிக்கையிலேயே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும், பாதுகாப்பான பகுதி மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசுவதை நிறுத்த வேண்டுமென்றும் தெரிவித்தன. இதற்கும் மேலாக ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர், பான்-கி-மூன் தொலைபேசி மூலமாகவே இலங்கை அதிபர் ராஜபக்ஷேயைத் தொடர்பு கொண்டு இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும், மனிதாபிமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

9-4-2009 அன்று சென்னையில் என் தலைமையில் “இலங்கை அரசே போரை நிறுத்து” என்று முழக்கமிட்டவாறு பிரம்மாண்டமான பேரணி ஒன்று நடைபெற்றது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே இலங்கையில் இரண்டு நாள் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவித்தார். விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சி எம்.பி.க்களை இந்தியாவிற்கு பேச்சு வார்த்தை நடத்த வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்தது.

மத்திய உள் துறை அமைச்சராக அப்போது இருந்த நண்பர் ப.சிதம்பரம் அவர்கள் 14-4-2009 அன்று விடுத்த அறிக்கையில் இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்ந்திட வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா தொடர்ந்து வற்புறுத்தும் என்றார். தமிழர் தலைவர் இளவல் கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் உலக நாடுகளின் வற்புறுத்தல்கள் காரணமாக 48 மணிநேர போர் நிறுத்தத்தை ராஜபக்ஷே அரசு அறிவித்துள்ளது. தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் கலைஞர் தரும் இடையறாத அழுத்தம்தான் இதற்கு முக்கியமான காரணம். இந்திய அரசும் இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

21-4-2009 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த

பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நான் அனுப்பிய தந்தியில், “இலங்கையில் போர் நிலைமை ஆபத்தானதாக உள்ளது. தமிழர்கள் அனுபவித்து வரும் சிரமங்கள் மிக அபாயமான நிலையை எட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட அனைத்து நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவிக்கும்படி இலங்கை அரசு மீது நிர்ப்பந்தம் செலுத்தியுள்ளன. இலங்கையிலுள்ள இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற இலங்கையில் உடனடியாகவும், நிரந்தரமாகவும் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடும்படி வலியுறுத்துகிறேன்” என்று கேட்டுக்கொண்டேன்.

“நாதியற்ற ஈழத் தமிழரைக் காத்திட நடுவணரசுக்கு வேண்டுகோள் ” என்ற தலைப்பில் உருக்கமிகு உடன்பிறப்பு கடிதம் ஒன்றை 21-4-2009 அன்று நான் எழுதியதோடு, இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற, மத்திய அரசு போர் நிறுத்தத் திற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி 23-4-2009 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டு அறிக்கை விடுத்தேன். அந்த வேலை நிறுத்தத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டுமென்று கேட்டு, காங்கிரஸ், அ.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., திராவிடர் கழகம், பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எம்.ஜி.ஆர். கழகம், புதிய தமிழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் கடிதம் எழுதினேன். அந்த வேலை நிறுத்தம் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

நான் அனுப்பிய தந்தியின் அடிப்படையில் 22-4-2009 அன்று இரவு டெல்லியில் பிரதமர் அவர்கள் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட அவசரக் கூட்டம் ஒன்றினைக் கூட்டி, அப்பாவித் தமிழர்கள் மீதான போரினை இலங்கை உடனடியாக நிறுத்தவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதனை இலங்கை அரசுக்கு நேரில் வலியுறுத்துவதற்காக பிரதமரின் சிறப்புத் தூதுவர்கள் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று கொழும்பு சென்றது. அந்தக் குழுவினர் கொழும்பில் ராஜபக்ஷேயை நேரில் சந்தித்து, உடனடியாகப் போரை நிறுத்த ஆவன செய்ய வேண்டுமென்ற இந்தியாவின் வேண்டுகோளைத் தெரிவித்தனர்.

24-4-2009 அன்றிரவு அண்ணா அறிவாலயத்திற்கு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள் வந்து, என்னைச் சந்தித்து விவரங்களையெல்லாம் விளக்கினார். அதே நாளில் பிரதமர் அவர்களும் தொலைபேசியில் என்னுடன் பேசி மத்திய அரசு எடுத்த முயற்சிகளையெல்லாம் கூறினார்.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா அவர்கள் சார்பில் வெள்ளை மாளிகையிலிருந்து 25-4-2009 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை அரசு ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும் தெரிவித்திருந்தது. 26-4-2009 அன்று இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, ஓரிரவு பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினேன்.

அதே 26-4-2009 அன்று விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா.சபை ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்றுப் போர் நிறுத்தம் செய்கிறோம். இந்தக் காலவரையற்ற போர் நிறுத்தம் உடனே அமலுக்கு வரும். இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது. இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

26ஆம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்குப் பின் அன்றிரவு முழுவதும் நான் தூங்கவில்லை. போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களைப் பலமுறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்புகொண்டார். வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் என்னைத் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசிக்கொண்டே இருந்தார்கள். அதிகாலை 4 மணி வரையிலே தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தேன். எந்தச் செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்திதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் என் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறிவிட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றேன். அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என் முதுகிலே இந்த வயதிலே செய்துகொண்டு, நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்த நான் என் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலைப் படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடுதான் யாருக்கும் கூறாமல், கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், நானாக முடிவெடுத்துச் சென்றேன். அதேநாள் காலையில் உண்ணாவிரதப் பந்தலில் என்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம், “சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய முன்வராத காரணத்தால், என்னையே நான் அர்ப்பணித்துக்கொள்ள, நம்முடைய தமிழர்களுக்காக என் உயிரையும் வழங்க, இலங்கை அரசு வாங்கிய பலிகளிலே ஒரு பலியாக நானும் அமைய, எல்லாத் தமிழர்களின் சார்பாக இந்த உண்ணா நோன்பை நான் மேற்கொண்டிருக்கிறேன்” என்றுதான் தெரிவித்தேன்.

நான் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அதே நாளில் பகல் 11 மணி அளவில் இலங்கை பாதுகாப்பு கவுன்சில் கூடி ஆலோசனை நடத்தியது. முல்லைத் தீவில் நடத்தப்பட்டு வரும் போர், அதன் தொடர்ச்சியாக நான் உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது என்றும், அதன் முடிவில் இலங்கை வடக்குப் பகுதியில் நடத்தப்பட்டு வந்த போரை முடிவுக்குக் கொண்டு வரத் தீர்மானிக்கப்பட்டு, 12 மணி அளவில் இலங்கை அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில் “இலங்கை வடக்கில் நடைபெற்று வந்த போர் முடிந்து விட்டது. வடக்கு பகுதியில் இனி கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என்று ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்து குண்டு வீசுவதும் நிறுத்தப்படுகிறது. வடக்கில் சிக்கியுள்ள பொதுமக்களைப் பாதுகாப்புடன் மீட்கும் பணிகளில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபடுவார்கள். இனி அப்பாவி மக்களைப் பாதுகாக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.

இலங்கை அரசு வெளியிட்ட அந்த அறிக்கையின் அடிப்படையில்; அன்றைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் 27-4-2009 அன்று வெளியிட்ட அறிக்கையில் போர் நடவடிக்கைகள் முற்றுப்பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களைப் பெருமளவிற்குக் கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. குடிமக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும் என்றும் குறிப்பிட்டதோடு, அதன் நகல் ஒன்றினையும் நான் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே அனுப்பி, உண்ணாவிரதத்தை என்னை முடித்துக் கொள்ளும்படி பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் கேட்டுக்கொண்டனர்.

அவர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும், மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நண்பர்களும் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத் தியதன் அடிப்படையிலும் மதியம் 1 மணி அளவில் நான் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டேன்.

இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மையென்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால் உண்ணாவிரதத்தை நான் திரும்பப் பெற்றேன். நாம் நம்பியது மாத்திரமல்ல, அமெரிக்க அரசே அதை நம்பி, அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட் இலங்கை அரசின் அறிவிப்பையும், விடுதலைப் புலிகளின் அறிவிப்பையும் வரவேற்பதாகத் தெரிவித்தார்.

ஆனால் அதற்குப் பின்னரும் இலங்கை சிங்கள அரசு ராஜபக்ஷேவின் சிங்கள பேரினவாதப் பிடிவாதத்தினால் களத்தில் நின்ற போராளிகளையெல்லாம் கொன்று குவித்தனர். போராட்டத்தை நிறுத்துவதற்கான எவ்வளவோ முயற்சிகளை நாம் மேற்கொண்டோம், அதற்கு உறுதுணையாக மத்திய அரசும், பிரதமரும், மத்திய அமைச்சர் பெருமக்களும் இருந்தும்கூட, சிங்கள ராணுவம் தன்னுடைய தாக்குதலைத் தொடர்ந்தது. இன்னமும் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. போர் நிறுத்தப்பட்டதாகச் சிங்கள அரசு பொய் சொன்னதே ஒரு போர்க்குற்றம்தானே?

இதற்கு வழி காணத்தான் தற்போது தி.மு.கழகம் ஆட்சியிலே இல்லாவிட்டாலும்கூட, “டெசோ” இயக்கத்தை மீண்டும் ஏற்படுத்தி அதிலே நானும், பேராசிரியரும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களும், தொல்.திருமாவளவன் அவர்களும், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும், சுப்புலெட்சுமி ஜெகதீசன் அவர்களும் உறுப்பினர்களாக இடம்பெற்று அதன் சார்பாகப் பல போராட்டங்களையும், மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறோம். அந்த வரிசையில்தான் நாளை டெல்லியில் “டெசோ” சார்பில் பல நாட்டுப் பிரதிநிதிகளும், இந்திய நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்துகொள்ளும் கருத்தரங்கினை நடத்துகிறோம். அது மாத்திரமின்றி வரும் 12ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, நான் இந்த வயதிலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் நோக்கோடு தான் யாரிடமும் கேட்காமல் உண்ணாவிரதத்தைத் தொடங்கினேன். அப்போது இலங்கை அரசு திடீரென்று கூடி போர் நிறுத்தம் என்று பொய்யாக அறிவிப்பினைச் செய்யுமென்று நான் எதிர்பார்த்தேனோ? அவர்கள் அவ்வாறு போர் நிறுத்தம் என்று அறிவித்து, அதனை இந்திய அரசும் நம்பி எனக்குத் தெரிவித்து, உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ளுமாறு கூறியதால்தான் நான் அதனை நிறுத்த நேரிட்டது. நம்புகிறார்களோ இல்லையோ இலங்கைத் தமிழர் பிரச்சினையில் என் மனச்சாட்சிக்கொப்ப நான் நடந்துகொண்டுதான் இருக்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்குமென்றால், அதற்காக நான் ஆட்சியை இழக்கவே தயாராக இருக்கிறேன் என்றே பேரவையில் சொல்லியிருக்கிறேன். ஏன் ஆட்சியிலே இருந்தபோது, இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே நான் அக்கறை காட்டியதற்காகவே இரண்டு முறை ஆட்சியை இழந்திருக்கிறேன். சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையே பேராசிரியர் அவர் களோடு சேர்ந்து ராஜினாமா செய்திருக்கிறேன். இதற்கு மேலும் விஷமத்தனமான பிரச்சாரங்களுக்கு விளக்கமளிக்கத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

இறுதியாக 12ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை எப்போதும் போல வெற்றிகரமாக ஆக்கித் தர வேண்டியது தமிழகத்திலே உள்ள அனைத்துச் சாராரையும் சேர்ந்ததாகும். தீர்மானத்தில் கேட்டுக்கொண்டவாறு கட்சி சார்பற்ற முறையில் அனைத்துத் தரப்பினரும், சங்கடங்களைப் பொறுத்துக் கொண்டு இந்த வேலை நிறுத்தம் என்பது நம்முடைய தொப்புள் கொடி உறவுகொண்ட ஈழத் தமிழர்களுக்காக நடைபெறுகிறது என்பதை உணர்ந்து, அதனை வெற்றிகரமான ஒன்றாக ஆக்கித்தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டு, மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஜெனிவா நகரத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலே இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை முழுமனதாக ஆதரிக்க முன்வர வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுத்து, அதற்கான அறிவிப்பினை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள, மு.க. 7-3-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗