தொகுதி 48 · கடிதம் 3713
முற்றுகைப் போருக்குத் தயாராகி விட்டாயா?
2013-03-04
உடன்பிறப்பே,
நாளை மார்ச் 5 - இலங்கைத் தூதுவரகத்திற்கு முன்னால் “டெசோ” சார்பில் நாம் நடத்த விருக்கும் முற்றுகைப் போராட்டம்! ஆம், இந்த நாளில்தான் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும், ஓட்டெடுப்பின்றியே அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் இன்று செய்தி வந்துள்ளது.
“கண்ணீரைக் கவசமாக்கும் நாள் - மார்ச் 5” என்ற தலைப்பில் 27-2-2013 அன்று நான் விரிவாக எழுதிய “உடன்பிறப்பு மடலை” நீ படித்து, அதற்கான முன்னேற்பாடு முயற்சிகளில் ஈடுபட்டிருப்பாய் என்பதை நான் நன்கறிவேன். அதற்கு முன்பே 20-2-2013 அன்று நான் விடுத்த அறிக்கையில் பிரபாகரனின் இளைய செல்வன், 12 வயதே நிறைந்த பாலகன் பாலச் சந்திரனை சிங்களக் காடையர் கொன்று குவித்த சோகச் சம்பவம் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் சிங்கள அதிபர் ராஜபக்ஷே அவர்கள் “இந்து” நாளிதழுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில், பாலச்சந்திரன் படுகொலையை சிங்கள ராணுவம் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். பாலகன் பாலச்சந்திரன் இலங்கையில்தான் கொல்லப்பட்டிருக்கிறான். அவனை சிங்கள ராணுவம் கொலை செய்யவில்லை என்றால் வேறு யார் கொன்றிருக்க முடியும் என்று கூட எண்ணிப்பாராமல் கொடூரமாகக் கொலையையும் செய்து விட்டு, தற்போது அதனை மறுத்துச் சர்வதேச அரங்கில் நல்லவராக நடிக்கப் பார்க்கிறார் ராஜபக்ஷே! ஏன், பிரபாகரனையும், ஆயிரமாயிரம் ஈழத் தமிழர்களையும் கொன்று குவித்ததையும், தமிழச்சிகளின் கற்பினைச் சூறையாடியதையும்கூட இல்லையென்று ராஜபக்ஷே மறுத்தாலும் மறுக்கக் கூடும்.
ராஜபக்ஷே இந்த அளவிற்கு பொய்களைக் கூறக் கூடும் என்பதால்தான் நடைபெற்ற சம்பவங்களையெல்லாம் உலக நாடுகளுக்கு நிரூபிக்கத்தக்க வகையில் வீடியோ ஆவணங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இலண்டன் மாநகரத்திலுள்ள சேனல்-4 நிறுவனம் இலங்கைக்கு எதிராக ஆவணப் படம் எடுத்து உலகத்திற்கு உண்மையைக் காட்டி உணர்த்திட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. இலங்கையில் நடைபெற்ற நிகழ்வுகளைக் காட்டும் ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்குத் திரையிடப்பட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. டெல்லியில் செய்தியாளர்களுக்கும், தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும் திரையிடப்பட்டுள்ளது. எந்தவிதமான காழ்ப்புணர்வும் இன்றி நடுநிலையோடு கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அப்போது அந்தத் தீர்மான வாசகம் நீர்த்துப் போக வைக்கப்பட்டது. எனவே தான் இந்த ஆண்டும் அமெரிக்கா சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படு கிறது. அமெரிக்காவை முந்திக் கொண்டு, இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்பதுதான் தமிழகத்திலே உள்ள ஒவ்வொரு தமிழனின் விருப்பமாகும். ஆனால் அமெரிக்காவின் தீர்மானம் இந்த மாதம் 21ஆம் தேதி வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று பேசப்படு கின்றது. இதுவரை இந்தியா தனது முடிவினை அறிவிக்காமல் இருப்பது தமிழகத்திலே உள்ள நம்மை ஆச்சரியமடையவைக்கிறது. அமெரிக்காவின் தீர்மானத்தை முறியடிக்க ராஜபக்ஷே தன்னால் இயன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற நிகழ்வுகள் பற்றிய ஆவணப் படத்தினைப் பார்த்த பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும், ராஜபக்ஷேவுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அந்த நாடுகளின் பட்டியலில் நமது இந்தியாவும் இருப்பதாக இதுவரை அறிவிக்கவில்லையே என்பதுதான் உலகத் தமிழர்களின் இதய வேதனை! நேற்று மாலையில் இதைப்பற்றி செய்தியாளர்களுக்கு, நம்முடைய இணை அமைச்சர், நாராயணசாமி அவர்கள் அளித்த பேட்டியில், “இலங்கைப் பிரச்சினையை மத்திய அரசு மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறது. அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் பற்றிய முழு விவரங்கள் தெரியவில்லை. இதனால் மத்திய அரசு முடிவு செய்யவில்லை. அதுபற்றிய முழு விவரமும் தெரிய வந்த பின்னர் மத்திய அரசு சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுக்கும். இந்திய அரசு, கடந்த முறை எந்த நிலைப்பாட்டைக் (தீர்மானத்திற்கு ஆதரவு) கொண்டிருந்ததோ, அதையே இந்த முறையும் பின்பற்றும்” என்று சொல்லியிருக்கிறார்.
இலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் நிலையை அறிய மாநிலங்களவையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தினை தி.மு.க. தாக்கல் செய்தது. இலங்கையில் நடந்த போர்க்குற்றங் கள் மீது சர்வதேச விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் 27-2-2013 அன்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக கழகத்தின் சார்பில் பேசிய தம்பி திருச்சி சிவா, “கண்ணீர் பெருகும் கண்களுடன், இதயத்தில் வழியும் ரத்தத்துடன் இந்த அவையில் பேசுகிறேன். நாம் இன அழிப்பு மற்றும் மனிதப் பேரழிவுகளால் மனம் நொந்து போன உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து, அதற்குப் பரிகாரம் தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம் தாய்நாடு மட்டும் ஒதுங்கி நிற்கிறது. உங்களுக்கு இலங்கையின் நட்பு வேண்டுமா? அல்லது இதே நாட்டில் தென்பகுதியில் வாழும் மக்களின் உறவு வேண்டுமா என்பதை அறிவியுங்கள் ” என்று கேட்டிருக்கிறார்.
மேலும் இந்தப் பிரச்சினையில் மாநிலங்களவையில் அ.தி.மு.க. சார்பில் டாக்டர் வா. மைத்ரேயன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி. ராஜா, பா.ஜ.க. சார்பில் வெங்கய்ய நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே. ரெங்கராஜன் ஆகியோரும் மற்றும் சிவசேனை, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ வாதி கட்சி, லோக் ஜனசக்தி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் இலங்கைக் கொடுமைகளைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்கள்.
நாடாளுமன்ற மக்களவையில் கழகத்தின் சார்பில் தர்மபுரி தொகுதி கழக நாடாளுமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் இரா.
தாமரைச்செல்வன் இந்தியா தனித் தீர்மானமே கொண்டு வரவேண்டுமென்று பேசியிருக்கிறார்.
அரசின் சார்பில் இந்த விவாதத்திற்குப் பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்கள், “ஐ.நா. கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் தீர்மானத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தீர்வு காணப்படும்” என்று சொல்லியிருக்கிறார் எனினும், “இலங்கை யின் உள்விவகாரங்களில் மத்திய அரசால் தலையிட முடியாது, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானத்தைக் கொண்டு வரு கிறது என்பதற்காக இந்தியாவும் அதைப் பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது” என்றெல்லாம் கூறியிருப்பது மிகுந்த மன வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. அமைச்சரின் இந்தப் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி தி.மு.க., அ.தி.மு.க., இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் அவையிலிருந்தே வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். மனித உரிமை ஆர்வலரும், பாகுபாட்டுக்கு எதிரான சர்வதேச மக்கள் இயக்கத்தின் தலைவருமான கலாநிதிநிமல்கா பெர்னாண்டோ, “இலங்கையில் மனித உரிமை மீறலுக்கும், போர்க் குற்றத்திற்கும் எதிராக ஜெனிவா மாநாட்டில் கொண்டு வரப்படும் தீர்மானம் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும்” என்றே கூறியுள்ளார்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறுகுடியமர்வு செய்வதற்காக இந்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக நிதி உதவி அளித்து வருகிறது. இந்த ஆண்டு இலங்கைக்கு இந்தியா 500 கோடி ரூபாயை இலவசமாக 290 கோடி ரூபாயை இலங்கைக்கு வழங்கியது. அதற்கு முந்தைய ஆண்டில் 180 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதி உதவி இலங்கை யில் தமிழர்களின் நல்வாழ்வுக்காக செலவழிக்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் வழங்கப் படுகிறது. ஆனால் இலங்கை இந்த நிதியை தமிழர்களுக்காகப் பயன்படுத்துவதில்லை என்றும், சிங்களவர்கள் பயன்பெறும் வகையிலேதான் இந்த நிதி திருப்பி விடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிதி உதவி யைக் கொண்டு கட்டப்படும் வீடுகளில் பாதிக்கப்பட்ட தமிழர்களை குடியமர்த்துவதற்குப் பதிலாக, ஆக்கிரமிக்கும் சிங்களவர் களைத்தான் குடியேற்றுகிறார்கள் என்றும் சொல்லுகிறார்கள்.
இந்த வேதனைகளையெல்லாம் எதிரொலிப்பதற்காகத்தான் இலங்கை இனவாத அதிபர் ராஜபக்ஷே ஒரு சர்வதேசப் போர்க் குற்றவாளி என்று உலகம் உணரச் செய்வதற்காகத்தான்; நாளை மார்ச் 5ஆம் தேதியன்று சென்னையில் இலங்கைத் தூதரகத்தை “டெசோ” இயக்கத்தின் சார்பில் முற்றுகையிடுகின்ற அறப் போராட்டமும், அதே நாளில் இந்தியத் தலை நகரான டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஜனநாயக வழியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்துவதென்று 25-2-2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் கூடிய “டெசோ” கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வது என்பது - நம்முடைய தமிழ் இனத்தவர் இலங்கையிலே இன்னமும் நாதியற்றவர்களாகச் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக! அதற்கு நீ தயாராகி விட்டாயா? தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்று இன்னமும் நிமிர்ந்து நின்று “பேட்டி” கொடுத்துள்ள ராஜபக்ஷேக்கு, “தமிழினம் முற்றாக அழிந்து விடவில்லை” என்பதை மெய்ப்பித்துக் காட்டுவதற்காக நடைபெறும் முற்றுகைப் போராட்டம்தான் இது!
அன்புள்ள, மு.க. 04-03-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗