தொகுதி 48 · கடிதம் 3712
இதற்கும் சேர்த்தா பாராட்டு விழா?
2013-03-03
உடன்பிறப்பே,
மத்திய அரசிதழில் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டதற்காகத் தஞ்சையில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து, பாராட்டு விழா நடத்தப் போகிறார்களாம்! கர்நாடகா காவிரி நீரை டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காகத் தரவில்லை என்பதற்காக, தமிழக முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்திலே ஒரு வழக்கு தொடுத்தார் - அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு நடுவே, தமிழக அரசின் முறையீடு இல்லாமலேயே நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை ஏன் வெளியிடவில்லை, மத்திய அரசு உடனடியாக அதனை வெளியிட வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தார் - உச்ச நீதிமன்றமே தானே முன் வந்து பிறப்பித்த உத்தரவுக்காக ஜெயலலிதாவுக்குப் பாராட்டு என்கிறார்கள். நன்றாகப் பாராட்டட்டும்.
ஆனால் எனக்கொரு சந்தேகம்! இந்த ஆண்டு காவிரி நீர் கிடைக்காமல் காவிரி டெல்டா விவசாயிகள் எல்லாம் சாகுபடி பொய்த்துப்போய் பல கோடி ரூபாய் நட்டத்தில் வேதனையில் மூழ்கிக் கிடக்கிறார்களே, இதுவரை 17 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்களே, அதற்காகவேகூட ஜெயலலிதாவைப் பாராட்டி விழா எடுக்கலாம்!
தற்கொலை செய்துகொண்ட பதினேழு விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தலா பத்து லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கிட வேண்டுமென்று கோரிக்கை வைத்துப் போராடிய நிலையில்; இறந்த 17 விவசாயிகளின் எண்ணிக்கையையே 9 பேர்தான் விவசாயிகள் என்று குறைத்துக் கூறி, அவர்களுக்கு மட்டும் வெறும் மூன்று இலட்ச ரூபாய் வீதம் தமிழக அரசு நிவாரண உதவி அளித்திருக்கிறதே; அதற்காகவும் ஜெயலலிதாவைப் பாராட்டலாம்!
ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் கேட்டதற்கு மாறாக வெறும் 15 ஆயிரம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதே; அதிலும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் தரப்படவில்லையே; 50 சதவிகிதத்திற்கு மேல் மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமே என்று முதல் அமைச்சர் அறிவித்திருக்கிறாரே; விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்திட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தும் - விவசாயத் தொழி லாளர்களுக்குத் தலா பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென்று பலமுறை கேட்டும் எதுவும் தரப்படவில்லையே; எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லையே; இப்படி விவசாயிகள் தொடர்ந்து கொடுத்த வேதனைக் குரலுக்கு விடை தராமல் இருப்பதற்காகவும் ஜெயலலிதாவைப் பாராட்டலாம்!
26-2-2013 தேதிய “தினமலர்” நாளிதழில் “டெல்டா விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு வழங்குவதில் குளறுபடி” என்ற தலைப்பில் வந்துள்ள செய்தி என்ன?
“பயிர் இழப்பீடு நிவாரணம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், மீண்டும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது” என்று எழுதிவிட்டு, மேலும் இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் கீழ்வேளூர் தனபாலன் கூறிய கண்டனத்தையும் விரிவாக வெளியிட்டுள்ளது. இந்தச் செய்திக்காகவே ஜெயலலிதாவைப் பாராட்டலாமே!
சென்னையைத் தவிர்த்து, மற்ற 31 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், “டெல்டா” மாவட்டங்களில் பயிர் பாதித்த விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரணத்தைக் கூட முறையாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது டெல்டா மாவட்டங்களில் எழுந்துள்ளது. இதைக் கண்டித்துப் போராட்டங்களும், சாலை மறியல்களும் நடக்க தொடங்கியுள்ளன. இப்படி விவசாயிகளிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி ஏமாற்றத்தைக் கொடுத்ததற்காக ஜெயலலிதாவைப் பலபடப் பாராட்டலாமே!
அ.தி.மு.க. அரசை, குறிப்பாக முதல் அமைச்சரை ஆதரிப்பதையே பிறவிப் பயனாகக் கருதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தா.பாண்டியன் தலைமையில் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் 26ஆம் தேதியன்றும், 27ஆம் தேதியன்றும் அந்தக் கட்சியின் சார்பாக வெளிவரும் “ஜனசக்தி” இதழின் முக்கிய செய்தியே என்ன தெரியுமா?
“விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தொடர்சாலை மறியல் - அனைத்துப் போக்கு வரத்தும் நிறுத்தம்” என்ற தலைப்பில் புகைப்படங்களோடு முதல் நாள் வெளிவந்த செய்தியில், “தமிழக அரசு குறுவை, சம்பாபருவத்தில் வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் முதல்வர் அறிவிப்பின்படி முழு அளவில் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று குறிப்பிட்டுவிட்டு, எங்கெங்கே யார் யாருடைய தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதெனச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கடுத்த நாளிலும் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் சாலை மறியல் நடத்தியிருக்கிறார்கள். அ.தி.மு.க. அரசைப் பாராட்டுவதையே பழக்கமாகக் கொண்டவர்கள்கூட, குறைகளை அடுக்கிக் குரல்கொடுக்க முன்வந்திருக்கிறார்களே: அதை எண்ணிக் குதூகலத்தோடு ஜெயலலிதாவைப் பாராட்டலாமே!
“காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால், தமிழக டெல்டா விவசாயிகளின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது” என்று செய்தியாளர்களிடம் தற்போது கூறியிருக்கின்ற ஜெயலலிதா, நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5-2-2007 அன்று வெளியிடப்பட்டபோது, அதனை நல்ல தீர்ப்பு என்று ஏற்றுக் கொண்டாரா? அது “தமிழகத்திற்குப் பாதகமான தீர்ப்பு” என்று அறிக்கை கொடுக்கவில்லையா? பாதகமான தீர்ப்பு, பயனளிக்கும் தீர்ப்பாக மாறியிருக்கும் வினோதத்திற்காகவே ஜெயலலிதாவைப் பன்னிப் பன்னிப் பாராட்டலாமே!
“நடுவர்மன்றத் தீர்ப்பு வந்தால்கூட கர்நாடகாவில் அவர்களாகவே அணையைத் திறந்தால்தான் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வரும். கர்நாடகம் சம்மதித்து ஒரு நியாயமான அனுகூலமான முடிவை மேற்கொண்டால்தான், நடுவர்மன்றத் தீர்ப்பு பயனுள்ளதாக அமைய முடியும்” என்று 21-3-1991இல் கூறிய ஜெயலலிதா; நடுவர்மன்றம், இடைக்காலத் தீர்ப்பினை வழங்கிய பிறகும், “நடுவர்மன்றம் தீர்ப்பு வழங்கினால்கூட, அதை நிறைவேற்ற வேண்டுமென்ற கட்டாயம்; கர்நாடக முதலமைச்சர் பங்காரப்பாவுக்குக் கிடையாது” என்று கூறியவர்தானே ஜெயலலிதா! அவர் தற்போது நடுவர்மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதை 22 ஆண்டுகால வெற்றி என்றும், 30 ஆண்டுகாலப் பெருமை என்றும் கூறும் ஜெயலலிதாவின் முரண்பாடான நிலைப்பாட்டுக்கு முழுமையான பாராட்டுரை வழங்கலாமே!
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்த மாவட்ட அமைச்சர் வைத்திலிங்கம் என்பவர் பேசியதைப்பற்றித் தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) தஞ்சை மாவட்டச் செயலாளர் சாமி நடராஜன் கூறும்போது, “தஞ்சை மாவட்டத்தில் 12,300 ஏக்கர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அதுவும் ஆளுங்கட்சியினர் மட்டுமே இதன்மூலம் பயன்பெறும் வகையில் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கொதித்துப் போயுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் அமைச்சர் வைத்திலிங்கம் விவசாயிகளைப் பார்த்து அறிவே இல்லையா? உணர்ச்சியற்ற பிண்டங்களா? நான் சொல்வதற்கு கைதட்ட மாட்டீர்களா? என்று பேசியது பொறுப்பற்ற தனமாகும். இதற்கு விவசாயிகள் சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார். வேறு பல விவசாயிகள் சங்கத் தலைவர்களும் அமைச்சரின் பேச்சினைக் கண்டித்திருக்கிறார்கள். அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் விவசாயிகளை அறிவற்றவர்கள் - உணர்ச்சி இல்லாத பிண்டங்கள் என்று பேசியதற்காகக்கூட, ஜெயலலிதாவைப் பெருமைப்படுத்தி - பாராட்டிப் பேசலாமே!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் கூறும்போது, “அறிவித்தது ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய், ஆனால் தருவது 3000 ரூபாய்தான்” என்றே சொல்லியிருக்கிறார். அறிவித்தது ஒன்று; தருவது வேறொன்று என்ற ஏமாற்று வித்தைக்காக ஜெயலலிதாவை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாமே! முதலமைச்சர் அறிவித்துள்ள டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளுக்கு 3.61 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு நிவாரணம் என்பது முறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல; ஏதோ எழுதிக்கொடுத்த ஒரு புள்ளி விவரத்தை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார் என்றும் நிவாரணத் தொகை போதாது என்றும்; அதனை உயர்த்த வேண்டும் என்றும்; விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட வேண்டுமென்றும்; மற்ற மாவட்டங்களிலே உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் தரப்பட வேண்டுமென்றும்; டெல்டா மாவட்டங்களில் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக மகசூல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி நிதி வழங்கப்பட வேண்டுமென்றும்; கோரிக்கைகளும், குறைகளும், குளறுபடிகளும் அடுக்கடுக்காக வெளிவந்துகொண்டே உள்ளனவே; இப்படிக் குமுறல்கள் ஒலிக்கக் காரணமான அரைகுறை நிவாரண அறிவிப்பைச் செய்ததற்காக ஜெயலலிதாவை அளவின்றிப் பாராட்டலாமே!
நெல் சாகுபடியை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்ற வேளாண் விஞ்ஞானிகளின் கருத்துக்கேற்ப பல லட்சம் விவசாயிகள் கரும்பு, உளுந்து, வாழை, நிலக்கடலை, தென்னை, எள் போன்ற மாற்றுப் பயிர் சாகுபடி செய்த விவசாயிகளும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனரே; மாற்றுப் பயிரை ஊக்குவிக்கவும், மாற்றுப் பயிர் விவசாயிகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறதே; ஆட்சியாளர்களால் சிறிதும் கவனிக்கப்படாத நிலையிலுள்ள இந்தக் கோரிக்கையை எண்ணி ஜெயலலிதாவிற்குப் பாராட்டு தெரிவிக்கலாமே?
எனவே தற்போது நிவாரணத் தொகை வழங்கிக் கொண்டிருக்கும்போதே, தமிழகம் முழுவதிலும் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகள் பற்றி மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த விவரங்களை ஒரு சில அமைச்சர்களை மட்டும் அனுப்பி அறிந்துகொள்ள முடியாது. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைக் கொண்டு குழு அமைத்து எவ்வித பாரபட்சமுமில்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழுமையான புள்ளி விவரங்களை அறிந்து, அதற்கேற்ப நிவாரணம் அறிவித்து, அந்தத் தொகையையும் முறையாக அனைத்துக் கட்சிக் குழு அமைத்து, அந்தக் குழுவின் முன்னிலையில் வழங்க வேண்டும்.
“மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும்” காட்டுவதைப் போல, அ.தி.மு.க. அரசிடம் பெரிதும் நட்புக் கொண்டாடி வரும் “ஜனசக்தி”யில், நிவாரண உதவிகள் சரியாகக் கிடைக்கவில்லை என்று சாலை மறியல் நடத்திக் கொண்டிருக்கும் செய்தியை ஒவ்வொரு நாளும் வெளியிட்டுக் கொண்டே, தமிழக அரசின் செயல்பாடுகளைப் போற்றி வரவேற்றுப் பாராட்டவும் தயங்கவில்லை. அந்த இதழிலே கூட, “உண்மைத் தன்மைகளை உயர் மட்டக் குழுவினர் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை என்பது தெரிகின்றது. பாதிக்கப்பட்ட பல ஊர்களில் பாதிக்கப்பட்ட நிலங்கள் கணக்கெடுப்பில் விடுபட்டுப் போயுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளும் பெரும் பகுதியினர் விடுபட்டுள்ளனர். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 3.61 லட்சம் ஏக்கர் பாதிப்பு என்றும், 1.75 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் என்றும் அறிவித்திருப்பது பாதிப்புக்குள்ளான நிலப்பரப்பும், விவசாயிகளின் எண்ணிக்கையும் சரியான கணக்கல்ல. விவசாயிகளிடம் கோபமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. மானாவாரி மாவட்டங்களிலும் பாதிப்புகள் பற்றி முழுமையான ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி, விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றும், மேலும் பல கோரிக்கைகளையும் முதல் அமைச்சருக்கே கடிதமாக எழுதியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த எச்சரிக்கைகளையெல்லாம் அப்படியே எடுத்தெறிந்துவிட்டு; புகழுரைகளிலும், போற்றிப் பாடல்களிலும், பாராட்டுப் பேச்சுகளிலும், தெருவோரங்களில் எல்லாம் “நீதித்தாயே”, “காவிரி அன்னையே” என்று “போர்டு” வைத்துக் கொள்வதிலும் கவனத்தைச் செலுத்தி; பலவகையான துன்ப துயரங்களில் உழன்று கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை மேலும் மேலும் “பாராட்டு விழா” என்றும், விவசாயிகள் “நன்றி விழா” என்றும் திசை திருப்புவதை; விவசாயிகளை ஏமாற்றுகின்ற ஏற்பாடாகத்தான் கருதுவார்கள்!
அன்புள்ள, மு.க. 3-3-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗