உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3711

கண்ணீரைக் கவசமாக்கும் நாள் - மார்ச் 5.

2013-02-27

உடன்பிறப்பே,

சிங்கள அதிபர் ராஜபக்ஷவின் ராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய செல்வன், 12 வயதே நிறைந்த பாலகன் பாலச்சந்திரனை எவ்வளவு கொடுமையாகச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பதைப் பற்றி 20-2-2013 அன்றே விரிவாக அறிக்கை வெளியிட்டிருந்தேன். நான் மட்டுமல்ல; இதயம் படைத்த அனைவரும் அந்த இளம் தளிர் பொசுக்கப்பட்டதற்காகக் கலங்கிக் கண்ணீர் சிந்தி, சிங்கள அரசுக்குத் தங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட அந்தக் கொடுமையான காட்சி லண்டனைச் சேர்ந்த “சேனல் 4” எடுத்த “நோ பயர் சோன்” (தாக்குதல்கள் நடத்தக் கூடாத பகுதிகள்) என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட ஆவணப் படத்தின் வாயிலாக டெல்லியிலே உள்ள “கான்ஸ்டிடியூஷன் கிளப்” என்ற அரங்கில் செய்தியாளர்களுக்குக் காட்டப்பட்டுள்ளது. “இலங்கையின் கொலைக்களம்” என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்து வெளியிட்ட டைரக்டர் “கெல்லம் மெக்ரே” தான் இந்தப் படத்தையும் தயாரித்து, இயக்கியிருக்கிறார். தாக்குதல்கள் நடத்தக் கூடாதென வரையறுக்கப்பட்ட பகுதிகளில், சிங்கள ராணுவம் அத்துமீறிக் கொடூரத் தாக்குதல்களை நடத்தி, ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை இரக்கமின்றிக் கொன்று குவித்ததை நினைவிலே கொண்டுதான் இந்த ஆவணப் படத்திற்கு “நோ பயர் சோன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. ராஜபக்ஷேயின் அரசு எந்த அளவிற்கு மன்னிக்க முடியாத போர்க் குற்றங்களைப் புரிந்திருக்கிறது என்பதற்கு, மேலும் பல சாட்சியங்கள் அந்த ஆவணப் படத்தின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

தாயும், குழந்தையும் ஒன்றாக வீழ்ந்து கிடக்கும் நெஞ்சை உறையச் செய்யும் காட்சி; மருத்துவமனைகளில் ஈழத் தமிழர்கள் உடலின் பல பாகங்களை இழந்த நிலையில் சிகிச்சை பெறுகின்ற காட்சி; அப்பாவிப் பெண்கள் ஆடைகள் நீக்கப்பட்டு, நிர்வாண நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் காட்சி; பெண் புலிகள் என்ற சந்தேகத்தில் ஏராளமான பெண்களை லாரியில் ஏற்றிக் கொண்டு செல்கின்ற காட்சி; சிங்கள ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கானல் ரமேஷ் கொல்லப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் பிணமாகக் கிடக்கின்ற காட்சி; பெண் புலிகளின் தளபதியாக இருந்த இசைப்பிரியா என்ற இளம் வயதுப் பெண்ணைச் சிங்கள ராணுவம் சீரழித்து, படுகொலை செய்த காட்சி; ஆண்களை நிர்வாணமாக்கி, கண்களைக் கட்டி, கைகளைப் பின்னால் கட்டி முதுகிலே சுட்டுக் கொல்லுகின்ற காட்சி; குண்டு வீச்சில் பலியானவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்த காட்சி; இவையனைத்தும் இந்த ஆவணப் படத்திலே இடம் பெற்றிருப்பதாக ஏடுகளும், தொலைக் காட்சி நிறுவனங்களும் விவரித்துள்ளன. இவற்றைப் படிக்கவே நம்முடைய உள்ளங்கள் பதறிப் பரிதவிக்கின்ற நேரத்தில், இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டால் என்னதான் ஆவோமோ? ஏன்தான் தமிழர்கள் இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தப்படுவதற்கு இலங்கைத் தீவிற்குச் சென்றார்களோ என்று எண்ணித்தான் துடிக்க வேண்டியிருக்கின்றது!

இதயம் படைத்த யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத போர்க் குற்றங்களைச் சிங்கள அரசு செய்துள்ளது என்பதற்கு, அடுக்கடுக்கான சான்றுகள் ஆவணப் படத்தில் மறைக்க முடியாத உண்மைகளாக வெளிவந்துவிட்டன.

குழந்தைகள் என்றுகூடப் பார்க்காது, விளையாட்டுப் பொருளை நீட்டுவதைப் போலத் துப்பாக்கியை நீட்டிச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் சண்டாளர்கள்! அப்பட்டமான மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

மனிதாபிமானமற்ற கொடுமைகள் இலங்கையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு மேலும் ஒரு சான்றாக - சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பு என்ற அமைப்பு இலங்கையிலே நேரடியாக விசாரணை செய்து தயாரிக்கப்பட்ட 140 பக்க அறிக்கை - அமைந்திருக்கிறது. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட 75 தமிழர்களிடம் நேரடியாக விசாரணை செய்த விவரங்கள் அந்த அறிக்கையிலே காணப்படுகின்றன. மனித உரிமைகள் அமைப்பின் ஆசியாவின் இயக்குநர் “ஆடம்ஸ்” என்பவர் அந்த அறிக்கையைப் பற்றிச் சொல்லும்போது “இலங்கை ராணுவத்தினர் கைது செய்யப்பட்டுப் பாதுகாப்பில் இருந்த தமிழ்ப் பெண்கள் மீதும், ஆண்கள்மீதும் நடத்திய பாலியல் வன்முறைகள் கணக்கில் அடங்காதவை; இவை போரின் போது நடைபெற்ற கொடுமைகள் மட்டுமல்லாமல் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வுகளாகும்” என்றே தெரிவித்திருக்கிறார்.

தமிழச்சிகளின் கற்பு ஈழத்திலே காற்றிலே பறக்க விடப்பட்டுள்ளது. கற்பு பறிக்கப்பட்டுத் தமிழ்க்குல மாதர்கள் நடுத் தெருவில் நிர்வாணப் பிணமாக வீசி எறியப்பட்டார்கள். தமிழீழத்தில் உலகில் எங்குமில்லாத அளவிற்கு ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் தங்கள் கணவரைப் பறிகொடுத்துவிட்டுக் கைம்பெண்களாகத் திரிகிறார்கள். சிங்களச் சிப்பாய்கள் அவர்களை வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்வதாகக் கூறிக் கேலி செய்கிறார்களாம்! தமிழனின் மாமிசம் விற்பனை என்ற விளம் பரங்கள் கடைகளில் எழுதிவைக்கப்பட வில்லையா?

மணந்தவனை மரத்தில் பிணைத்து விட்டு, அவன் மனைவியை அவன் கண்ணுக்கு நேராகவே மானபங்கப்படுத்தவில்லையா? ஈழத்திலே நடந்த நிகழ்ச்சி ஒன்றை நினைவு படுத்துகிறேன். பாஸ்கரன் ஒரு தமிழன் - அவனை ஒரு மரத்திலே கட்டி வைத்துவிட்டு, நடுவீதியிலே அவனுடைய மனைவியை நிர்வாணமாக்கிக் கற்பழிக்கிறார்கள். அதோடு விடவில்லை, மாபாவிகள்! நிர்வாணமாக்கப்பட்ட அந்தப் பெண்ணைத் தலைகீழாக இரண்டு பாக்கு மரங்களில் ஒரு காலை ஒரு பாக்கு மரத்திலும் - இன்னொரு காலை இன்னொரு பாக்கு மரத்திலும் கட்டி - பாக்குமரத்தின் நுனிகளை ஒன்றாகவும் கட்டி - பிறகு திடீரென அந்த பாக்கு மரங்களின் நுனிகளை வெட்டிவிடுகிறார்கள். பாக்கு மரம் “படார்” என்று தனித்தனியாகப் பிரியும்போது, அந்தப் பெண்ணின் உடல் இரண்டாகப் பிளவுபட்டுக் கிழிந்து கீழே விழுகிறது. அவ்வளவும் அவள் கணவர் பாஸ்கரன் கண்ணுக்கு முன்னாலே! நடைபெற்றதா இல்லையா இலங்கையில்! மறந்தா போய்விட்டது?

இலங்கையில் நடைபெற்ற கொடுமைகளை அறிந்த அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உண்மை நிலைமைகளை அறிய மூன்று பேர் கொண்ட குழு ஒன்றினை இலங்கைக்கு அனுப்பிவைத்தது. அந்தக் குழுவினர் அத்துமீறல் நடந்தது உண்மைதான் என்று அறிக்கை ஒன்றினை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தாக்கல் செய்தனர். அதன்மீது விவாதம் நடந்தபோது இலங்கை அத்தனைக் குற்றச்சாற்றுகளையும் மறுத்ததோடு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறியது.

அந்தச் செய்திகளாவது உண்மையா என்று அறிய அமெரிக்கா மேலும் ஒரு குழுவினை இலங்கைக்கு அனுப்பியது. அந்தக் குழுவும் நிவாரணப் பணிகளில் மன நிறைவு இல்லை என்று தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையிலே தான் அமெரிக்கா மேலும் ஒரு தீர்மானத்தைத் தயாரித்துள்ளது. அந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம்தான் மார்ச் திங்கள் இறுதியில் ஜெனீவா நகரில் நடைபெற்று, அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கு இறுதியில் வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது.

இலங்கையிலே இந்தக் கொடுமைகள் இன்று நேற்றா? தந்தை செல்வா அவர்களின் காலத்திலிருந்தே ஈழத்துத் தமிழ் மக்கள் பிஞ்சுகளாக - அரும்புகளாக - பூக்களாக - காய்களாக - கனிகளாக உதிர்ந்து அழிந்துகொண்டு தானே இருக்கிறார்கள்? தமிழன் என்றாலே அவனைத் தாக்கிக் கொன்று குவிக்கிற அளவுக்கு, சிங்கள வெறி அப்போதே தலைதூக்கிய காரணத்தால் தானே சிறைக்குள்ளிருந்த குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் போன்ற ஐம்பதுக்கு மேற்பட்டோரை சித்ரவதை செய்து அழித்தொழித்த நிகழ்ச்சியே இனப் படுகொலையின் “பிள்ளையார் சுழி”யாக அமைந்தது. 1978-79ஆம் ஆண்டுகளில் சென்னை - கடற்கரையில் தங்கதுரையுடனும், குட்டிமணியுடனும் மற்றும் சில விடுதலை வீரர்களுடனும் நானும் என்னுடன் சில நண்பர்களும் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களின் பாதங்களை “டார்ச்” விளக்கின் வெளிச்சத்தில் என்னிடம் காட்டுகிறார்கள். பாதம் முழுவதும் கொப்புளங்கள் ; ஏன் இப்படி? என்று கேட்கிறோம். தலை மறைவாக ஓடிவந்து தமிழகத்தைச் சேர்வதற்காகப் பதுங்கிப் பதுங்கி வரும்போது, செருப்பு சப்தம் தங்களை எதிரிகளுக்குக் காட்டிக்கொடுத்து விடும் என்பதால், வெறுங்காலுடன் வந்ததால் ஏற்பட்ட கொப்புளங்கள் என்கிறார்கள். அந்தக் குட்டிமணியும், தங்கதுரையும், ஜெகனும் மற்றும் 34 தமிழ் ஈழ விடுதலைக் காளைகளும் சிறைச்சாலைக்குள்ளேயே கொல்லப்பட்டார்கள்.

அந்தக் குட்டிமணிக்கும், தங்கதுரைக்கும், “உங்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது” என்று தீர்ப்பளிக்கப்பட்ட நேரத்தில், தங்கதுரை சொன்னார், “நாங்கள் இறந்து போய் விட்டால் எதிர்காலத்தில் உருவாக இருக்கின்ற தமிழ் ஈழத்தை உங்களுடைய சட்டதிட்டம் கட்டுப்படுத்த முடியாது” என்று! அதே நீதிமன்றத்தில்தான் குட்டிமணி சொன்னார், “நான் மரணத்திற்காகப் பயப்படுகின்ற கோழையில்லை! என்னை தூக்குமாட்டிக் கொன்றுவிட்ட பிறகு என்னுடைய கண்களை எடுத்து ஈழத்திலே இருக்கின்ற பார்வையற்ற ஓர் இளைஞனின் கண்ணுக்குப் பொருத்துங்கள்! வருங்காலத்தில் மலர இருக்கின்ற சுதந்திரத் தமிழ் ஈழத்தை நான் காண முடியாவிட்டாலும் - அந்த இளைஞனுக்குப் பொருத்தப்பட்ட என் கண்ணால் பார்த்து மகிழ்வேன்” என்று சொன்னார். அப்படிப்பட்ட இளைஞர்களை யெல்லாம் சிறைச்சாலைக் கொட்டடிக்குள்ளே கொலை செய்து, அவர்களின் கண்களைப் பிடுங்கி, “இந்தக் கண்களால் தானே ஈழத் தமிழகத்தைக் காண விரும்பினாய்”, எனக் கேட்டு அந்தக் கண்ணையே பிடுங்கிக் கீழே போட்டு மிதித்த கொடுமை இலங்கையிலே நடைபெற்றது.

இந்த வேதனைகளையெல்லாம் நமது இந்திய நாட்டு மக்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று நினைவுபடுத்தி, இலங்கை இனவாத அதிபர் ராஜபக்ஷே ஒரு சர்வதேசப் போர்க் குற்றவாளி என்று உணரச் செய்வதற்காகத் தான் வரும் மார்ச் 5ஆம் தேதியன்று சென்னையில் இலங்கைத் தூதரகத்தை “டெசோ” இயக்கத்தின் சார்பில் முற்றுகையிடுகின்ற அறப்போராட்டமும், அதே நாளில் இந்தியத் தலைநகரான டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஜனநாயக வழியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்துவதென்று 25-2- 2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் கூடிய “டெசோ” கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நடைபெறும் கொடுமைகளுக்கு எதிராக தி.மு. கழகத்தின் சார்பிலும், “டெசோ” இயக்கத்தின் சார்பிலும் இதுவரை எத்தனையோ வகைப் போராட்டங்களை நாம் நடத்தியிருக்கிறோம். ஒரேநாள் அறிவிப்பில் ஐந்து இலட் சத்திற்கும் மேற்பட்ட மக்களைத் திரட்டிப் பேரணி நடத்தியிருக்கிறோம். உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி, கறுப்புடை அணிந்து ஆர்ப்பாட்டங்கள் என்றெல்லாம் நடத்தியிருக்கிறோம். ஏன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையே நானும், பேராசிரியரும் ராஜினாமா செய்திருக்கிறோம். ஐ.நா. மன்றத்திற்கு ஒரு கோடி பேருக்கு மேல் கையெழுத்திட்ட மனுவினைக் கொண்டு போய்க் கொடுத்திருக்கிறோம். இலங்கைப் பிரச்சினைக்காக இருமுறை ஆட்சியையே இழந்திருக்கிறோம். ஒவ்வொரு போராட்டத்தையும் வெற்றிகரமான போராட்டமாக ஆக்கிய உடன்பிறப்புகள்தான், வரும் 5ஆம் தேதி நடைபெறும் முற்றுகைப் போராட்டத்தையும் முழுமையான வெற்றியாக ஆக்கித் தரவேண்டுமென்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். வழக்கம் போலவே இந்தப் போராட்டத்தில் கழக உறுப்பினர்கள் மாத்திரமின்றி, “டெசோ” அமைப்பிலே இடம் பெற்றுள்ள இயக்கங்களின் உடன்பிறப்புகளும் அணி அணியாக வந்து கலந்துகொள்ள வேண்டுகிறேன். மார்ச் 5 - இலங்கைத் தூதுவரகத்திற்கு எதிரே முற்றுகைப் போர் - மறவாமல் கலந்து கொள்வீர்; நமது உள்ளத்து வேதனையை மீண்டும் உலகத்தார்க்கு வெளிப்படுத்தும் நாள் மார்ச் 5 - ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக நம் கண்ணீரைக் கவசமாக்கும் நாள் மார்ச் 5.

அன்புள்ள, மு.க. 27-2-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗