உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3715

சேதுத் திட்டத்தைச் சீரழிக்க நினைப்பது நியாயமா?

2013-03-08

உடன்பிறப்பே,

“சேது சமுத்திரத் திட்டத்தின் பெயரால் ராமர் பாலத்துக்குச் சேதம் விளைவிக்க மத்திய அரசு முயற்சித்தால் அதை பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கும் என்றும், ராமர் பாலத்தைச் சேதப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் பா.ஜ.க. ஏற்காது என்றும், ராமர் பாலம் இல்லாமல் ராமாயணம் கிடையாது என்றும், இந்தியாவின் அடையாளமும் முழுமையாகாது என்றும்; அந்தக் கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் 3-3-2013 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கூட்டத்தில், “ராமர் பாலத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கத் தமிழக அரசு அளித்துவரும் ஒத்துழைப்பை பா.ஜ.க. பாராட்டுகிறது” என்றும் தீர்மானம் கூறுகிறது.

சேது சமுத்திரத் திட்டத்தில் பா.ஜ.க., மற்றும் அ.தி.மு.க.வின் நிலை குறித்தும், அவர்கள் இந்தத் திட்டம் பற்றிக் கடந்த காலத்தில் என்ன நிலைப்பாட்டினை மேற்கொண்டிருந்தார்கள் என்பது பற்றியும் ஏற்கனவே நான் பலமுறை விளக்கியிருந்த போதிலும்; பா.ஜ.க. தற்போது அதன் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் அதுபற்றி மேலும் ஒரு முறை தெளிவாக்குவது அவசியமென்று கருதுகிறேன்.

2004ஆம் ஆண்டு மே திங்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி அமைந்தது. அந்தக் கூட்டணியில் தி.மு.க.வும் இடம்பெற்றுச் சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது குறைந்தபட்சத் திட்டத்தில் சேர்க்கவேண்டுமென்று பெருமுயற்சி எடுத்துக்கொண்டது. அதனையொட்டி, 27-5-2004 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வைக்கப்பட்ட குறைந்தபட்ச செயல்திட்டத்தில், , “Long Pending Schemes in specific States that have national significance, like the Sethu Samuthiram Project....will be completed expeditiously” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.

மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கையிலும் சேர்க்கப்பட்டு, மதுரையில் நடந்த சேது சமுத்திரத் திட்டத்தின் பிரமாண்டமான தொடக்க விழாவில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களும், நானும், மற்ற தோழமைக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டோம்.

2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில்,

“தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்றவிருக்கும் சேதுசமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க, மைய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்து ஆண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., கட்சிகள் தவறிவிட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று அமைய இருக்கும் மைய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்”

என்று சொல்லியிருந்தார்கள்.

இப்படிச் சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமென்று தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்ட ஜெயலலிதாதான், தற்போது அதற்கு முட்டுக்கட்டை போடப்படாத பாடுபடுகிறார்.

1955ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நடத்தப்பட்ட எல்லா ஆய்வுகளும்; தொழில் நுட்பரீதியாக இந்தத் திட்டம் சாத்தியமானதுதான் என்றே நிரூபித்திருக்கின்றன. இதில் எள்ளளவு ஐயமும் யாருக்கும் இருந்தது இல்லை.

புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர், பா.ஜ.க.வைச் சேர்ந்த திரு. அருண் ஜேட்லி, 9-3-2001 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஆய்வுப் பொறுப்பு, 2001 அக்டோபரில் ‘நீரி’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நாகபுரியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘நீரி’ (NEERI) என்ற சுற்றுச்சூழல் ஆய்வு மையம் அதனை ஆய்வு செய்து, எந்தக் கேடும் வராத- குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற - சிறந்த தடம்; ஆறாம் வழித்தடமான, “ஆதாம் பாலம்” பகுதியில் அமைவதுதான் என்று கூறிவிட்டது.

இவ்வாறு கால்வாய் அமைய வேண்டிய வழித்தடம் மற்றும் விரிவான செயல்முறைகள் வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசினால் பரிசீலிக்கப்பட்டு, 6வது எண் பாதை - அதாவது ஆதாம் பாலம் வழியிலான பாதை என முடிவுசெய்யப்பட்டது. இப்படி பா.ஜ.க.வினரே இந்தப் பாதைக்கு அன்றே ஒப்புதல் தந்துவிட்டு, தற்போது “ராமர் பாலம்” என்று; எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அவர்களை நான் கேட்க விரும்புவது, பா.ஜ.க.வின் மத்திய அரசு 2002ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு உரிய பின்னணி ஆய்வுகளையெல்லாம் பரிசீலனை செய்து, ஒப்புதல் வழங்கியபோது, இது ராமர் பாலம் உள்ள இடம், இங்கே திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று ஏன் சொல்லவில்லை? அவர்கள் ஆட்சியிலேயே இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், அப்போது இது “ராமர் பாலம்” இல்லை என்று சொல்லியிருப்பார்களா?

சேது சமுத்திரத் திட்டத்திற்குச் சுற்றுச் சூழல் ஒப்புதல் பெறுவதற்காக, 2004 செப்டம்பர் முதல் 2005 பிப்ரவரி வரை 6 கடலோர மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டன; இக்கூட்டங்கள் 3 சுற்றுகளாக 14 இடங்களில் நடைபெற்றன. இந்தக் கூட்டங்கள் எதிலும் ஒரு முறைகூட யார் ஒருவராலும் “ராமர் பாலம்” என்ற பெயர்கூட உச்சரிக்கப்படவில்லை.

இறுதியாக 31.3.2005 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சகம் தனது முறையான நடைமுறைகளுக்கும், விரிவான ஆய்வுகளுக்கும் பிறகு, இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் ஒப்புதலை வழங்கியது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள், விசாரணைகள் ஆகியவற்றின் மூலம் இந்த “ஆதாம் பாலம்” கடல் பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு கட்டுமான அமைப்பும் இருப்பதற்கான உருப்படியான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்பது தெளிவாகி இருக்கிறது.

தொல்பொருள் துறை ஆய்வுகள் வெளிப்படுத்தும் விவரங்களின்படி, இப்பகுதியில் தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த எந்த ஒரு கட்டுமான அமைப்பும் இல்லை என்பதும் தெளிவாகி இருக்கிறது. உறுதியான ஆதாரம் எதுவும் இல்லாத காரணத்தால்தான், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உட்பட அடுத்தடுத்து வந்த எந்த ஒரு அரசும் இத்திட்டப் பகுதியைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கவும் இல்லை; அதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவும் இல்லை.

பி.ஜே.பி. கட்சியினர், இன்று “ராமர் பாலம்” என்று கூச்சல் கிளப்பி, இத்திட்டத்தைக் கிடப்பில் போட முயற்சி செய்கின்றனர். இதே பி.ஜே.பி., ஆட்சியில் இருந்த கப்பல் துறை அமைச்சர்கள் கையொப்பமிட்டுத்தான், நன்கு ஆராய்ந்த பின்னரே, மற்ற வழித் தடங்களைவிட இதுவே எளிதானது-சிக்கனமானது - விரைந்து செய்யக் கூடியது - என்று உறுதி செய்துள்ளனர். இதை பி.ஜே.பி.யினர் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. 9.3.2001 இல் அமைச்சர் அருண் ஜேட்லி; 25.10.2002இல் அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர்; 29.10.2002 இல் அமைச்சர் வி.வி.கோயல்; அதற்கு முன் அமைச்சர் சத்ருகன் சின்கா ஆகியோர் “ஆதாம் பாலம்” வழியிலான 6-வது எண் வழித்தடத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இராமர் பாலம் என்று கூறி அ.தி.மு.க. இன்று இத்திட்டத்தை எதிர்க்கிறது. ஆனால் 2001 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பக்கம் 83-84 இல் ஜெயலலிதா கூறியுள்ளது என்ன?

“இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமானால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான், சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றி ஆழப்படுத்திக் கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்”

- என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் “ஆடம்ஸ் பிரிட்ஜ்” என்றும், “மணல் மேடுகள்” என்றும் அன்று கூறிய ஜெயலலிதா இன்று திடீரென்று “ராமர் பாலம்” எனக் கூறுவது எப்படி? ஏன்?

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுக்களில் இராமர், இராமாயணம் பற்றி உண்மைக்கு மாறான எத்தகவலும் யாரையும் புண்படுத்தும் வகையில் சொல்லப்படவில்லை.

“ராமாயணம் என்பது ஒரு காவியமல்ல. அது திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தைப் பற்றி மிகைப்படுத்தி, பல அறிவிற்குப் பொருந்தாத பல கதைகளைப் புகுத்தி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை” என்று பண்டித நேரு அவர்கள் இந்திரா காந்தி அம்மையாருக்கு எழுதிய கடிதங்களில் (டிஸ்கவரி ஆப் இண்டியா) குறிப்பிட்டுள்ளார்.

“The Ramayana is not history or biography. It is a part of Hindu mythology” என்று ஆழ்ந்த ராமபக்தரான மூதறிஞர் இராஜாஜி அவர்களே குறிப்பிட்டுள்ளார்.

1963ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, பண்டித நேரு அவர்களின் அமைச்சரவைக் கூட்டத்தில், சேது திட்டத்தை நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தின்முன் நடவடிக்கைப் பட்டியலில் சேர்த்துக்கொள்வதென்று முடிவு செய்யப்பட்டது.

1972ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் வ.உ.சி. சிலையைத் திருமதி இந்திரா காந்தி அம்மையார், முதல்வராக இருந்த என் தலைமையில் திறந்து வைத்தார். அப்போதும் நான் தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் வளர, சேதுக் கால்வாய் திட்டம் மிக மிக அவசியம் என்று பேசினேன்.

10-5-1986 அன்று எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, ஒரு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

15-9-1998 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் வாஜ்பாய் “அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவில், நான் அறிவிக்க விரும்புகிறேன்; சேது சமுத்திரத் திட்டத்தை இந்த அரசு விரைவில் நிறைவேற்றும்” என்று பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய் அவர்கள் அளித்த வாக்குறுதியையே மீறுகின்ற வகையில், பா.ஜ.க. தேசிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, வாஜ்பாய் அவர்களுக்கே செய்கின்ற துரோகம் அல்லவா?

நான் குறிப்பிட்டுள்ள இந்தக் கால கட்டங்களில் “ஆடம்ஸ் பாலம்” என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர “ராமர் பாலம்” என்று எந்தக் குறிப்பும் கிடையாது. மேலும் அந்த “ஆடம்ஸ் பாலத்தை” அகற்றிவிட்டு, சேதுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் வலியுறுத்தப்பட்டிருக்கிறதே தவிர, புதிய பிரச்சினை எதுவும் பகுத்தறிவு பூர்வமான நிலையிலே எழுப்பப்படவில்லை.

பண்டித நேரு - பெருந்தலைவர் காமராஜர் காலத்திலிருந்தே பரிசீலனையில் இருந்த இந்தச் சேதுக் கால்வாய்த் திட்டத்தை இப்போது கேள்விக்குறியாக ஆக்கியிருப்பது ராமர்பாலம் பிரச்சினைதான்.

2005ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், சேதுக் கால்வாய்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு, பெருமளவுப் பணிகள் முடிவுற்ற நிலையில் திடீரென்று புதியதாக ஒரு காரணத்தைக்கூறிச் செந்தமிழ் நாட்டுக்குச் செழிப்பும் சிறப்பும் தரவல்ல ஒரு மாபெரும் திட்டத்தை மனம் போன போக்கில் சீரழிக்க நினைக்கிறார்களே, இது நியாயமா என்பதுதான்!

அன்புள்ள, மு.க. 8-3-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗