தொகுதி 48 · கடிதம் 3708
வென்றவர் சொல்வதெல்லாம் “வேதம் ஆகுமா?”
2013-02-23
உடன்பிறப்பே,
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிட்டது பற்றி அதற்காக உச்ச நீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் நன்றி கூறி அறிக்கை விடுத்துள்ளேன். காவிரிப் பிரச்சினையில் தி.மு.கழகமும், கழக அரசும் ஆரம்ப காலம் முதலே தொடர்ந்து இடைவிடாது என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டது என்பது பற்றியும் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். ஆனால் இதுபற்றி முதலமைச்சர் ஜெயலலிதா தனது 30 ஆண்டுக் கால அரசியல் வாழ்வில் கிடைத்த மகத்தான வெற்றி என்றும், 22 ஆண்டு காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது என்றும் செய்தியாளர்களை அழைத்துச் சொல்லியிருப்பதும், அவரது இந்தக் கூற்றினை ஒருசில ஏடுகள் இதற்காகவே முதலமைச்சரைப் பலபடப் பாராட்டியும், கேலிச்சித்திரம் வரைந்தும் இருப்பது பற்றிச் சில விளக்கங்களை அளிப்பதை, காவிரிப் பிரச்சினையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன் என்ற முறையில், என்னுடைய கடமையாகக் கருதுகிறேன்.
முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பாராட்டித் தலையங்கம் எழுதியுள்ள “தினமணி” நாளிதழிலேயே “இந்த நடவடிக்கையை வைத்துக் கொண்டு மட்டும் காவிரியில் இருந்து உடனடியாகத் தண்ணீர் பெற்றுவிட முடியாது. இது தொடர்பாக நிலவும் சட்டப் பிரச்சினைகளுக்கும் நடைமுறைச் சிக்கல்களுக்கும் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் தீர்வு கண்டால்தான் காவிரி நதி நீர்ப் பங்கீட்டு உரிமையைக் கோரும் அடுத்த கட்ட நகர்வைத் தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மேற்கொள்ள முடியும்” என்று எழுதியிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே “தினமணி” நாளிதழில் மேலும் சில அய்யப்பாடுகளையும் எழுப்பியுள்ளனர். அதாவது; 1) இறுதித் தீர்ப்பு 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்துக் கர்நாடகமும், தீர்ப்பு தொடர்பாக விளக்கம் கேட்டுத் தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநில அரசுகளும் காவிரி நடுவர் மன்றத்தில் முறையிட்டுள்ளன. உச்சநீதி மன்றத்திலும் இது தொடர்பாக வழக்குகள் 2007ஆம் ஆண்டில் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஆரம்பத்திலேயே விசாரித்து நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று மத்திய அரசுக்கு ஏன் உத்தரவிடவில்லை?
2) நான்கு மாநில அரசுகளும் நடுவர்மன்றத்திடம் சில விளக்கங்களைக் கேட்டு 2007ஆம் ஆண்டில் முறையிட்டன. 11-4-2012இல் நடுவர்மன்றத் தலைவர், பதவி விலகிய பிறகு, புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. நடுவர்மன்றத்திடம் நான்கு மாநில அரசுகளும் கேட்ட விளக்கங்களுக்கு என்ன பதில்?
3) உச்ச நீதிமன்றம் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை, பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு இறுதிக் கெடு விதித்திருந்தது. அதனால் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்குமா? அல்லது காவிரி நடுவர் மன்றமே விசாரிக்குமா?
4) காவிரி நதி நீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். மத்திய அரசு அதை எப்போது அமைக்கும்?
இதுபோன்ற கேள்விகளை “தினமணி” 21-2-2013 அன்று
எழுப்பியிருக்கின்றது. இதையும் நாம் மனதிலே கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்; “தினமணி” எழுப்பியிருக்கும் கேள்விகளை அலட்சியப்படுத்துவதற்கில்லை.
முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றையதினம் அளித்த
பேட்டியையொட்டியும் நான் சில விளக்கங்களை அளிக்க வேண்டியவனாக இருக்கிறேன். முதலில் அவர் 1991ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அன்று முதல் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதாகவும், அதற்கடுத்த நாளான 25-6-1991 அன்று நடுவர்மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். இதிலிருந்தே, நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பிருந்த தி.மு. கழக ஆட்சியினரின் இடைவிடா முயற்சியினால்தான் வெளிவந்தது என்பதை ஜெயலலிதாவே ஏற்றுக்கொள்கிறார் என்றுதானே பொருள்!
காவேரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடுவதை தனக்கு முப்பது ஆண்டு காலத்தில் கிடைத்த மகத்தான வெற்றி என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால் அந்த நடுவர்மன்றம் என்ற ஒரு அமைப்பு உருவாவதற்கும், அந்த அமைப்பு இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு என்றெல்லாம் அறிவித்ததற்கும், இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கும் உண்மையாகப் பாடுபட்டது யார் என்பதை, பத்திரிகைகள் மறைத்தாலும், நடுநிலையாளர்கள் ஒருசிலராவது எண்ணிப்பார்க்க மாட்டார்களா?
5-2-2007 அன்று நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானதற்கு மறுநாள் 6-2-2007 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “கருணாநிதியின் தொடர் துரோகச் செயலால் தான் காவேரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு, தமிழகத்திற்குப் பாதகமாக வந்துள்ளது; இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று மைனாரிட்டி தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும்” என்றே சொன்னார்.
அந்தப் பாதகமான தீர்ப்பு, தற்போது மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதைத்தான் முப்பது ஆண்டு காலத்தில் கிடைத்த மகத்தான வெற்றி என்று ஜெயலலிதா சொல்கிறார். அன்று “பாதகமான தீர்ப்பு” என்று சொன்ன அதே நாவால், தற்போது “மகத்தான வெற்றி” என்று சொல்வது இரட்டை நாக்கா? இரட்டை நிலையா? தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகத் தரித்திடும் கபட வேடமா?
“நடுவர்மன்றத் தீர்ப்பு வந்தால்கூட, கர்நாடகாவில் அவர்களாகவே அணையைத் திறந்தால்தான் காவேரி நீர் தமிழ்நாட்டிற்கு வரும். கர்நாடகம் சம்மதித்து ஒரு நியாயமான அனுகூலமான முடிவை மேற்கொண்டால்தான், நடுவர் மன்றத் தீர்ப்பு பயனுள்ளதாக அமைய முடியும்” என்று 21-3-1991இல் கூறிய ஜெயலலிதா; நடுவர்மன்றம் இடைக்காலத் தீர்ப்பினை வழங்கிய பிறகும், “நடுவர்மன்றம் தீர்ப்பு வழங்கினால்கூட, அதை நிறைவேற்ற வேண்டுமென்ற கட்டாயம்; கர்நாடக முதலமைச்சர் பங்காரப்பாவுக்குக் கிடையாது” என்று கூறியவர்தான் தற்போது மகத்தான வெற்றி தனக்குக் கிடைத்திருப்பதாகக் கூறிக் கொள்கிறார் என்றால்; மக்களெல்லாம் மறதிக்குப் பேர் போனவர்கள் என்ற வழக்கமான அவரது எண்ணத்தால்தானே!
முதலமைச்சர் ஜெயலலிதா 20ஆம் தேதி அளித்த பேட்டியில், “எனது உத்தரவின்படி திரும்பத் திரும்ப சுப்ரீம் கோர்ட்டை அணுகி, பல்வேறு வழக்குகளைத் தமிழக அரசு தாக்கல் செய்து, அதனுடைய விளைவாகத்தான் காவிரி ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்புக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன. இதற்கு முழுக் காரணம் எனது முயற்சிகளும், எனது அரசின் முயற்சிகளும்தான்” என்று கூறியிருக்கிறார். இதைப் படித்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. காவிரிப் பிரச்சினை பற்றிய நிகழ்வுகளைத் தொடர்ச்சியாகக் கண்டு வருபவர்கள் அதிர்ச்சி அடையமாட்டார்களா? ஜெயலலிதா சொல்லியிருப்பது உண்மையா?
7-8-1998 அன்றுதான் தி.மு.கழக ஆட்சியிலே தான் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் முன்னிலையிலே டெல்லியில் ஒன்பது மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்று, மத்திய அமைச்சர்களும், நான்கு மாநில முதல்வர்களும் கலந்து பேசி அதன் பின்னர்தான் காவிரி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது முதன் முதலாக கர்நாடக அரசு நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான் காவிரி நதி நீர் ஆணையம், காவிரி கண்காணிப்புக் குழு ஆகியவற்றை அமைப்பது என்பதாகும். அதன்படி 11-8-1998 அன்று காவிரி நதி நீர் ஆணையமும், கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டன. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றைய பேட்டியிலே அவர் பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததின் காரணமாகத்தான் இவை அமைக்கப்பட்டன என்று கொஞ்சமும் கூசாமல் உண்மைக்கு மாறாகச் சொல்லியிருக்கிறார். அதையும் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் வெளியிடத்தான் செய்துள்ளன.
அது மாத்திரமல்ல; காவேரி ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, 2-4-2002 அன்று சட்டப் பேரவையில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஜெயலலிதா கூறும்போது, “செயல்படாத ஆணையம் காவேரி ஆணையம். அந்த ஆணையத்தை நாங்கள் ஏற்காமல், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறினோம். மத்திய அரசு சொன்னதை ஏற்றுக் கொண்டு காவேரிப் பிரச்சினையில் துரோகம் விளைவித்தது தி.மு.க. அரசுதான்” என்று வசை பாடினார். காவேரி ஆணையத்தை “பல் இல்லாத ஆணையம்”, “செயல்படாத ஆணையம்” என்றெல்லாம் குறிப்பிட்ட ஜெயலலிதா, அதே 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று டெல்லியிலே நடைபெற்ற காவேரி ஆணையக் கூட்டத்திலே அவரே கலந்துகொண்டார்; ஆனால் கூட்டம் நிறைவடையும்வரை கலந்துகொள்ளாமல், பாதியிலேயே வெளிநடப்புச் செய்வதாகக் கூறிவிட்டு வெளியே வந்துவிட்டார். மீண்டும் 29-11-2002 அன்று பிரதமர் தலைமையில் காவேரி ஆணையக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. கடைசி நிமிடம் வரை அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதாகக் கூறிய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, பிறகு தன் பயணத்தையே ரத்து செய்துவிட்டார். காவேரி ஆணையத்தின் தலைவரான பிரதமர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி, உச்ச நீதிமன்றம் அவ்வாறு ஜெயலலிதா கூறியதைக் கடுமையாகக் கண்டித்து, முதலமைச்சர் ஜெயலலிதா அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்றே அறிவித்து, அதன்படி வருத்தம் தெரிவித்த ஜெயலலிதாதான், ஆணையம் வருவதற்கே தான்தான் காரணம் என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை ஓங்கி அடித்துச் சொல்கிறோமே என்ற நெருடல் எதுவுமின்றிச் செய்தியாளர்களிடம் சொல்லியிருக்கிறார். 20ஆம் தேதிய பேட்டியில், காவேரி ஆணையக் கூட்டத்தைக் கடந்த ஒன்பதாண்டு காலமாகக் கூட்டவே மத்திய அரசு விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். கடந்த ஒன்பதாண்டுகளில் கூட்டப்படவில்லை என்றாலும், 7-10-1998 முதல் 6-9-2001 வரையில் கண்காணிப்புக்குழு ஒன்பது முறைகள் கூட்டப்பட்டிருக்கின்றன. 21-6-2002 அன்று அ.தி.மு.க. அரசின் சார்பில் விடுத்த அறிக்கையில், காவிரி நதி ஆணையம் 28-10- 1998, 14-7-2000 மற்றும் 10-10-2001 ஆகிய நாட்களில் மூன்று முறை மட்டுமே கூடியது. காவிரி கண்காணிப்புக்குழு 12 முறை கூடியது என்று சொல்லப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் 21-6-2002 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் காவேரி நதி ஆணையத்தின் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்து அறிவித்து விட்டார்கள். காவேரி ஆணையத்தைக் கூட்டவில்லை என்று குறைபடுகிற ஜெயலலிதா 21-9-1998 அன்று ஆங்கிலத்தில் விடுத்த அறிக்கையில்,“The Cauvery River Authority headed by the Prime Minister is a very big fraud perpetrated on the farmers of the Cauvery Delta in Tamil Nadu. This Authority headed by the Prime Minister has no such authority or power to order or implement anything regarding the release of Cauvery Water. I categorically state that the new Authority headed by the Prime Minister will not benefit Tamil Nadu even by an iota” என்று பிரதமர் தலைமையிலான ஆணையத்தை இழிவுபடுத்திச் சொன்னார்.
முதலமைச்சர் 20ஆம் தேதி அளித்த பேட்டியில், நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையைச் செயல்படுத்த மத்திய அரசு எந்தவிதமான ஏற்பாட்டையும் செய்யவில்லை என்றும், அதற்காக 1993ஆம் ஆண்டு சாகும்வரை தான் உண்ணாவிரதம் இருந்ததாகவும், அப்போது மத்திய அமைச்சர் சுக்லா அவர்கள் சந்தித்து, காவிரி நடுவர் மன்றத்தின் இடைக் கால ஆணையைச் செயல்படுத்த மத்திய அரசு தேவையான குழுக்களை அமைக்கும் என்று உத்தரவாதம் அளித்த பிறகுதான் உண்ணா விரதத்தைக் கை விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது 9-6-1992 அன்று மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் திரு.சுக்லா அவர்கள் நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை நடை முறைப்படுத்துவது பற்றித் தமிழக முதல் அமைச்சருக்கு ஒப்புதல் வேண்டிக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திற்கு ஒப்புதல் அளித்து 6 மாதங்கள் கழித்துத்தான், அதாவது 14-12-1992 அன்று ஜெயலலிதா வரைவுப் பதிலிலே கையெழுத்திடுகிறார். அந்தக் கடிதம் தட்டச்சு செய்யப்பட்டு முதலமைச்சர் கையெழுத்திட்ட தேதி என்ன தெரியுமா? 30-3-1993. காவிரிப் பிரச்சினையில் எந்த அளவிற்கு அம்மையாருக்கு அக்கறை என்பதற்கு இந்த ஒரு சான்று போதாதா? அவர்தான் தற்போது நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையைச் செயல்படுத்த தான்தான் பாடுபட்டதாகச் சொல்கிறார். 22 ஆண்டுக் காலப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்கிறார். நம்புகிறவர்கள் இருந்தால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எதை வேண்டுமென்றாலும் சொல்லலாம் அல்லவா?
ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தது பற்றியும் கூறியிருக்கிறார். 18-7-1993 அன்று குழுவினை ஏன் அமைக்கவில்லை என்று கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்தார். கர்நாடக முதல்வருக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்கப் பிரதமர் கட்டளையிட்டால் தான் உண்ணா விரதத்தை நிறுத்துவேன் என்றார். ஆனால் இவரைச் சமாதானப்படுத்த வந்த மத்திய அமைச்சர் சுக்லா, அதிகாரிகளைக் கொண்டு இரண்டு குழுக்கள் அமைக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து, அதுவே வெற்றி, வெற்றி என்று கூறி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
நடுவர் மன்ற இடைக்கால ஆணை 1991இல் பிறப்பிக்கப்பட்ட பிறகு 1996 வரை ஜெயலலிதா தான் முதல்வராக இருந்தார். ஆனால் ஒரு ஆண்டு கூட, இடைக்கால உத்தரவுப்படி 205 டி.எம்.சி., தண்ணீரைப் பெற்றுத் தரவில்லை. ஆனால் 1996க்குப் பிறகு தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பின்னர்தான், 1998இல் ஒப்பந்தம் ஏற்பட்டு, கர்நாடகமே முதல் முறையாக நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை ஏற்றுக்கொண்டு 205 டி.எம்.சி., தண்ணீர் வழங்க ஒப்புக்கொண்டது. காவிரி நதிநீர் ஆணையத்தையும், கண்காணிப்புக் குழுவையும் அமைக்கவும் கர்நாடகா ஒப்புக் கொண்டதும் அப்போதுதான். 2007ஆம் ஆண்டு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும் கழக ஆட்சியிலேதான் வந்தது. எனவே ஜெயலலிதா ஆட்சியில் காவிரிப் பிரச்சினையில் எந்த முக்கிய முன்னேற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
7-11-2003 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் காவிரிப் பிரச்சினை குறித்துப் பேசும்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா என்ன சொன்னார்? “அடுத்த சட்டமன்றம் கூடும்போது, கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை நானே கொண்டு வருவேன். மீண்டும் ஜனவரி மாதம் சட்டமன்றம் கூடுகிறது. அதற்குள் கர்நாடக அரசு நமக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் திறந்து விடவில்லை என்றால் அப்போது அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் நான் சொன்னபடி தீர்மானம் கொண்டு வரப்படும்” என்றார். ஒரு முதலமைச்சர் சட்டப் பேரவையிலே பேசியது இது. என்னவாயிற்று? “பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற தமிழ்ப் பாடலைக் கேட்ட தமிழ் நாட்டு மக்கள், “பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யையே பேட்டியாக அளிக்கும் முதல் அமைச்சரைப்” பெற்றிருப்பதைப் பற்றிப் பெரும்பேறு ஆயிற்றே என்று பெருமைப்படத் தான் வேண்டும். ஆனால் பொய்யையே சொல்லி நலம் பெற்றவர்களும் இல்லை; மெய்யைச் சொல்லிக் கெட்டவர்களும் இல்லை என்பதைத் தமிழ்நாடு ஒரு நாள் புரிந்துகொண்டே தீரும்! வென்றவர் சொல்வதெல்லாம் “வேதம்” ஆகுமா?
அன்புள்ள, மு.க. 23-2-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗