தொகுதி 48 · கடிதம் 3709
புரிந்துகொள்வதுதான் எப்போது?
2013-02-24
உடன்பிறப்பே,
முதலமைச்சர் ஜெயலலிதா பெயரால் 21-2-2013 அன்று ஏடுகளுக்குத் தரப்பட்ட அறிக்கையில், “இந்த ஆண்டு ஜூலைத் திங்களில் தமிழகத்தில் நடப்பதாக இருந்த இருபதாவது ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கையும் பங்கேற்கும் என்பதால் தமிழக அரசினால் நடத்தப்படமாட்டாது என்றும்; அதற்கு முக்கிய காரணம், இலங்கை அரசு இலங்கை வாழ் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதுதான் என்றும்; இலங்கை வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்ற தமிழக அரசின் கடிதத்திற்குத் தடகளக் கழகத்திடமிருந்து எவ்வித பதிலும் வராததும் ஒரு காரணம் என்றும்; ” தெரிவித்திருக்கிறார்.
தமிழகச் சட்டப்பேரவையில் 10-5-2012 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் அறிக்கை படித்தபோது, “ஆசிய தடகளப் போட்டிகளை 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் நடத்திட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டிகளில் 44 நாடுகளைச் சார்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று மகிழ்ச்சியுடன் அறிவித்து, அது அனைத்து நாளேடுகளிலும் “புரட்சித் தலைவி அம்மா அறிவிப்பு” என்று கொட்டை எழுத்துக்களில் வெளிவந்தது.
சட்டப்பேரவையில் கடந்த மே திங்களில் ஜெயலலிதா செய்த அறிவிப்பினை, இந்தப் பிப்ரவரித் திங்களில், அதே ஜெயலலிதா ரத்து செய்திருக்கிறார். மே திங்களில் முதல் அமைச்சர் இந்த அறிவிப்பினைச் செய்தபோது, இலங்கை விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டிகளில் கலந்துகொள்வார்கள் என்பது முதல் அமைச்சருக்குத் தெரியாதா? அவரே 44 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்திருக்கிறார். அந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பதை அப்போது அவர் அறிந்திருக்க வில்லையா? அம்மையார் முதலில் அறிவித்தபோது இலங்கை அரசு இலங்கை வாழ் தமிழர்களுக்கெல்லாம் நன்மைகளைச் செய்து, அதற்குப் பிறகு இப்போதுதான் கொடுமைகளைச் செய்யத் தொடங்கிவிட்டதா? முதல் அமைச்சர் நினைத்தால் தடகளப் போட்டிகளை நடத்துவதாக அறிவிப்பார்; நினைப்பு மாறினால் அதை ரத்து செய்து விடுவாரா?
மேலும் முதலமைச்சர் தனது அறிக்கையில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொலை செய்தது பற்றியும் குறிப்பிட்டு, “அது மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றம்” என்று கூறியிருக்கிறார். ஆனால் இதே ஜெயலலிதா, பாலச்சந்திரனின் தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி, 16- 4-2002 அன்று அ.தி.மு.க. ஆட்சியிலே, தமிழகச் சட்டப்பேரவை யிலே நிறைவேற்றிய தீர்மானம் என்ன?
● இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது.
● தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.
● இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும், இந்திய மண்ணில் காலூன்றுவது ஒருபோதும் ஏற்கப்பட மாட்டாது; அனுமதிக்கப்பட மாட்டாது.
● பிரபாகரனை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா அரசோடு சட்டப்படியாகவும், தூதரக நடைமுறைப்படியும், அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரபாகரனை அவர் புரிந்த குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் உரிய விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்றும் தமிழகச் சட்டமன்றப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
● ஸ்ரீலங்கா அரசினால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பிடித்து நாடு கடத்த இயல வில்லை என்றால்; ஸ்ரீலங்கா அரசின் அனுமதியோடு, இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனைச் சிறைப் பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்றும் மத்திய அரசைத் தமிழகச் சட்ட மன்றப்பேரவை கேட்டுக் கொள்கிறது.
இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்; சாட்சாத் இதே ஜெயலலிதாதான்! அன்றைக்குப் பிரபாகரனுக்கு எதிராக இப்படியெல்லாம் வீராவேசத்தோடும், ஆத்திரத்தோடும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு; இன்றைக்கு அதே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனைக் கொலை செய்ததற்காகக் கண்ணீர் வடிக்கிறார் என்றால், “கேழ்வரகில் நெய் வடிகிறது!” என்று தானே கூறத் தோன்றும்!
அதே தீர்மானத்தில், இந்திய ராணுவத்தையே இலங்கை அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனைச் சிறைப் பிடிக்க வேண்டுமென்று முன்மொழிந்தவர், நேற்றைய தினம் விடுத்த அறிக்கையில், “இலங்கை ராணுவ வீரர்களுக்குத் தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது” என்று இந்தியப் பிரதமருக்கு பல கடிதங்கள் எழுதியதாகவும், அவை அனைத்தும் “செவிடன் காதில் ஊதிய சங்கு” போல் கிடப்பில் போடப்பட்டது என்றும் சொல்லியிருக்கிறார் என்றால், எப்படிப் பட்ட இரட்டை வேடத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதலமைச்சர் ஜெயலலிதா போடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?
16-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் ஜெயலலிதா பேசும்போது “நான் (ஜெயலலிதா) தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்புகொண்டு பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டில் இருந்து இங்கு கொண்டு வந்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டது, பேரவை அவைக் குறிப்பிலே இன்றளவும் உள்ளதே! அன்று விடுதலைப் புலிகளின் “ஜென்ம விரோதி” யைப் போல வெளி உலகுக்குக் காட்டிக்கொண்ட அதே ஜெயலலிதாதான்; இன்றைக்கு இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பதைப் போலப் பேசுகிறார், அறிக்கை விடுகிறார். அதற்கு “ஜால்ரா” போடவும் ஆட்கள் இருக்கிறார்களே?
அது மாத்திரமல்ல; ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தபோது இதே ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா?
17-1-2009 அன்று அவர் விடுத்த அறிக்கையில், “இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான். இலங்கையில் இப்போது என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல், விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று விடுதலைப் புலிகளைப் “பயங்கரவாதிகளைப் போல” உருவகப்படுத்தி, அவர்கள் மீது பழியைப் போட்டவர்தான் தற்போது அதே விடுதலைப் புலிகளுக்கு, இலங்கை ராஜபக்ஷே அரசை எதிர்ப்பதைப் போலவும், ஈழத்தமிழர்களை ஆதரிப்பதைப் போலவும் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்.
மேலும் கழகம் ஆட்சியில் இருந்தபோது, இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14-10-2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை ஐந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது” என்றே மத்திய அரசுக்கு அப்போது வக்காலத்து வாங்கினார்.
1997ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோது விடுதலைப் புலிகளை ஆதரித்தோம் என்பதற்காக, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயற்சி செய்கிறார். விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கி விட்டார்கள்” என்று விடுதலைப் புலிகள் இந்தியாவின் எதிரிகள் என்பதைப் போலச் சொன்னவர் என்பதை மறக்க முடியுமா? அந்த விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் மகன் மறைவுக்காகத்தான் ஜெயலலிதா கண்ணீர் வடிக்கிறாராம்!
ஆனால் ஜெயலலிதாவே கண்ணீர் வடிக்கின்ற அளவிற்கு இலங்கையில் நிலைமைகள் முற்றிய போதிலும்; வாழ்வாதாரத்தை இழந்து - வாழ்வுரிமைகளைப் பறிகொடுத்த ஈழத் தமிழர்களின் வரலாறு காணாத தொடர் இன்னல்களை, இந்திய அரசு இன்னமும் முழுமையாகப் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. குறிப்பாக நேற்றைய தினம் இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு பிரணாப் முகர்ஜி அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் கூடப் பூசி மெழுகத்தான் பார்த்திருக்கிறார்கள். அதிலே, “இலங்கையுடனான உறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது; அங்கு இடம் பெயர்ந்த மக்களை மீண்டும் குடியேற்றம் செய்வது, புனர் வாழ்வு அளிப்பது போன்ற நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு அமைதியான கவுரவமான சம அந்தஸ்துடன் கூடிய வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதில், இந்தியா உறுதியாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது” என்று கூறப்பட்டிருப்பதனைத்தும் வெறும் சொற்றொடர்களே தவிர, தமிழர்களின் இதய வேதனையை எதிரொலிக்கும் கருத்துகளாக இல்லை.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே அவர்கள் ஈழத் தமிழர்கள்பால் அக்கறை கொண்டவரைப் போல இந்திய அரசிடம் காட்டிக் கொள்வதும், இந்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்வதும், அதே நேரத்தில் அந்த உதவிகளை ஈழத் தமிழர்களுக்குப் பயன்படுத்தாமல், சிங்களவர்களுக்கே பயன் படுத்துவதும், தமிழ்ப் பெயரிலே உள்ள ஊர்களை எல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றுவதும், தமிழர்க்குரிய கோயில்களை எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்குவதும், தமிழர்களின் நிலம், வீடு மற்றும் பாரம்பரிய உடைமைகளையெல்லாம் பறித்துக் கொள்ளும் சிங்களவர் ஆக்கிரமிப்பையும் - வெறித்தனமான சிங்களமயமாக்கலையும் ஊக்குவிப்பதும் போன்ற இனவெறிச் செயல்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் உள்ளன. பெரிய புராணத்தில் மெய்ப்பொருள் நாயனார் பற்றி ஒரு கதை உண்டு. அதில் மெய்ப்பொருள் நாயனாரைக் கொலை செய்வதற்காக முத்தநாதன் என்ற குறுநில மன்னன் வருவதை, சேக்கிழார் வர்ணிக்கும்போது, “மெய்யெலாம் நீறுபூசி வேணிகள் முடித்துக் கட்டிக் கையினில் படைகரந்த புத்தகக் கவளி ஏந்தி மைபொதி விளக்கே யென்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப் பொய்தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்தநாதன்” என்று பொருத்தமாகக் குறிப்பிடுகிறார். அதாவது மெய்ப்பொருள் நாயனார் எனும் மன்னரைக் கொலை செய்ய வேண்டுமென்று சதித் திட்டம் தீட்டிய முத்தநாதன் என்ற குறுநில மன்னன், உடம்பெல்லாம் திருநீறு பூசிக் கொண்டு, முனிவர்களைப் போல முடியை இழுத்து மாற்றிக் கட்டிக்கொண்டு, தவ வேடமணிந்து கையில் புத்தகங்களும், புத்தகங்களுக்கு இடையே கத்தியையும் வைத்துக்கொண்டு, அரண்மனைக்குள் நுழைகிறான்; அப்படி நுழையும்போது மனத்தில் கொலை செய்ய வேண்டுமென்ற தீய எண்ணத்துடன் நுழைந்தான் என்பதைச் சேக்கிழார், விளக்கு எரியும்போது திரியின் நுனியில் ஒளியும், திரியின் அடியில் கரியும் இருப்பதைப் போல வெளியிலே தவ வேடமும், உள்ளே கொலை செய்யும் கெட்ட நோக்கமும் கொண்டு நுழைந்தான் என்கிறார்.
போரில் எதிர்த்து நின்று வெல்ல முடியாது என்ற நிலையில், தவ முனிவர் வேடமணிந்து ஏமாற்றிக் கொல்ல முற்பட்ட முத்தநாதனைப் போல, சிங்கள அதிபர் ராஜபக்ஷே அவர்கள் இந்திய அரசுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக நடித்து, தனக்குத் தேவையானதையெல்லாம் சாதித்துக்கொண்டு; அதே நேரத்தில் ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடிக் கொண்டிருக்கிறார். மனித நேயத்திற்கு எதிரான - மனித உரிமைகளுக்குப் புறம்பான அவரது கொடுங்கோன்மைச் செயல்பாடுகளை உலக நாடுகள் எல்லாம் புரிந்துகொண்டு “ராஜபக்ஷே ஒரு சர்வதேசப் போர்க் குற்றவாளி” என்று கடுமையாகக் கண்டிக்கவும் தண்டிக்கவும் முற்படுகின்ற வேளையில், இந்திய அரசு மட்டும் அவரைப் பற்றிய உண்மை விகாரங்களை இன்னமும் புரிந்து கொள்ளாமல், “இலங்கையுடனான உறவு மேம்பட்டு வருகிறது” என்று குடியரசுத் தலைவரின் உரையிலே குறிப்பிட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை. உலக நாடுகள் எல்லாம் சர்வாதிகாரச் சதிகாரரை உணர்ந்துள்ள சூழலில், நெஞ்சில் நஞ்சும் முகத்தில் நட்பு வேடமும் பூண்டுள்ள, இலங்கையின் “மைபொதி விளக்கை” மத்திய அரசு எப்போதுதான் புரிந்துகொள்ளுமோ?
அன்புள்ள, மு.க. 24-2-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗