உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3707

இவையெல்லாம் பாராட்டாகத் தெரிகிறதா?

2013-02-22

உடன்பிறப்பே,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 65வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட 65 திருமண விழாவில் குட்டிக் கதைகளைச் சொன்னதன்னியில்; ஜெயலலிதா அரசியல் பேசியபோது, விவசாயிகளுக்குப் பயிர் இழப்புக்காக ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறோம் என்றும், அதனை எதிர்க்கட்சிகளே பாராட்டியுள்ளன என்றும் பெருமிதத்தோடு, அவர் எடுத்த முடிவை அவரே புகழ்ந்து கூறியுள்ளார்.

ஆனால் உண்மையில், எந்தெந்த எதிர்க் கட்சிகள் எவ்வாறு பாராட்டியுள்ளன தெரியுமா?

தமிழகச் சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் விடுத்த அறிக்கையில் “சம்பா சாகுபடியை இழந்து பல லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெறும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீட்டு நிவாரணம் பொருந்தும் என முதல்வர் அறிவித்துள்ளது யானைப் பசிக்குச் சோளப்பொரி போல் உள்ளது. சம்பா சாகுபடியை இழந்து வாடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரமும், விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று தே.மு.தி.க.வினர் வற்புறுத்தி வந்தோம். ஆனால் ஜெயலலிதா இழப்பீட்டுத் தொகையாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் என்று அறிவித்துள்ளார். இந்த இழப்பீடு போதுமானதல்ல” என்று கூறியிருக்கிறார்.

அம்மையாருக்கு இது தே.மு.தி.க.வின் பாராட்டாகத் தெரிகிறதா?

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 9-2-2013 அன்று விடுத்த அறிக்கையில், “ஒரு ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ள நிலையில் ஏக்கருக்கு அரசு 15 ஆயிரம் ரூபாய் மட்டும் அளிப்பது போதுமானது இல்லை. 1.75 லட்சம் விவசாயிகளின் 3.61 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு மட்டுமே இழப்பீடு தரப்படும் என்பதும் நியாயமானது இல்லை. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாயாவது இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறினார்.

அம்மையாருக்கு இது பா.ம.க.வின் பாராட்டாகத் தெரிகிறதா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விடுத்த அறிக்கையில் முதலில் வறட்சி நிவாரண அறிவிப்புக்கு வரவேற்பு என்று கூறிய போதிலும், “விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. குறுவைச் சாகுபடி பொய்த்துப் போய், சம்பா சாகுபடியும் கருகிப்போன நிலையில், வேலை இல்லாமல் வறுமையில் வாடும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று மாநிலச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்மையாருக்கு அளித்திருக்கும் பாராட்டா?

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுங் கட்சிக்கு ஆதரவான கட்சி என்ற முறையில் முதல்வரின் அறிவிப்புகளை வரவேற்ற போதிலும், “பயிர்க்கடன்களை ரத்து செய்க” என்ற தலைப்பில் “ஜனசக்தி”யில் எழுதிய தலையங்கத்தில், “விவசாயிகள் தங்களது இடுபொருள் செலவுகள் உயர்ந்துள்ள நிலையில், தங்களுக்கேற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபட ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரமும், வேலையின்றி வாடும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் கோரியிருந்தனர். இயலுமாயின் தமிழக அரசு இக்கோரிக்கைகள் குறித்து மீண்டும் பரிசீலித்திடலாம்” என்று எழுதியிருக்கிறார்கள்.

இது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அம்மையாருக்குத் தந்திருக்கும் நற்சான்றிதழா?

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ஆர்.சிவசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் சாகுபடி மேற்கொண்டதில் 3 லட்சத்து 61 ஆயிரம் ஏக்கருக்கு மட்டும் தான் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. காவிரி டெல்டாவில் நெல் உற்பத்தி செய்ய ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு ஆகிறது. அதில் பாதி 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீடும் 3 லட்சத்து 61 ஆயிரம் ஏக்கருக்குத் தான் எனக் கூறப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் 20 ஆயிரம் ரூபாய் வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டுமென்று கோரி பிப்ரவரி மாத இறுதியில் ஒரத்த நாட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க. அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் என்ற அறிவிப்புகூட அம்மையாருக்கான பாராட்டுதானா?

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்த அறிக்கையில், “உற்பத்தி பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில் பயிர்க் காப்பீடு உட்பட ஏக்கருக்கு ரூ. 15,000 என்பது போதுமானதல்ல. இந்த ஆண்டு முழுவதும் வேலையின்றி விவசாயத் தொழிலாளர்கள் கடன் வாங்கியும், வறுமையிலும் வாழ்ந்து கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித நிவாரணமும் அறிவிக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

விவசாயிகளின் ஏமாற்றம் என்பதும் அம்மையார் மனம் மகிழும் பாராட்டுதானா?

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் வெளியிட்ட அறிக்கையில், “50 சதத்திற்கும் மேல் பயிர்கள் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதுபோதுமானதல்ல. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு 3 லட்ச ரூபாய் என்று அறிவித்திருப்பதும் போதுமானதல்ல. விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் பற்றிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது” என்று சொல்லியிருக்கிறார்.

போதுமானதல்ல என்பதும் அம்மையாருக்கு நிறைவளித்திடும் புகழுரைதானா?

ஜெயலலிதா பேரவையில் அறிவித்த நிவாரணங்கள் குறித்து நான் விடுத்த அறிக்கையில்,

“குறுவைப் பயிரையும், சம்பாப் பயிரையும் இழந்து நிற்கும் விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு முதலில் 40 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண உதவி கேட்டு, குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாயாவது கொடுத்தே ஆக வேண்டுமென்று கோரிக்கைகளைத் தொடர்ந்து வைத்ததுடன், பல்வேறு வகையான போராட்டங்களையும் நடத்தினார்கள். தமிழகத்திலே உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தக் கோரிக்கையை வழிமொழிந்து, வலியுறுத்தின. ஆனால் நிவாரணமாக என்ன அறிவிக்கப்பட்டுள்ளது? 50 சதவிகிதத்திற்கு மேல் மகசூல் பாதித்துள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளின், 3 லட்சத்து 61 ஆயிரம் ஏக்கர் பயிர்களுக்கு மட்டுமே; ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா படித்திருக்கிறார். அப்படியானால், 50 சதவிகிதத்திற்குக் குறைவாக மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கதி என்ன? 50 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டவர்களுக்குக்கூட 15 ஆயிரம் ரூபாய் என்பது முழுவதையும் தமிழக அரசே தரப்போகின்ற நிவாரணமா? பேரிடர் நிவாரணம், வேளாண் பயிர்க் காப்பீட்டுத் தொகை ஆகியவை எல்லாம் சேர்ந்ததுதானே! அப்படியானால், தமிழக அரசு நிவாரணத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு அளிக்கப் போகின்ற தொகைதான் எவ்வளவு? தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தொகை போதவே போதாது என்று விவசாயிகள் எல்லாம் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் இல்லாத காரணத்தால், சாகுபடியே செய்யாமல் வாழ்வாதாரத்தை அடியோடு இழந்த பல லட்சம் விவசாயிகளுக்கு என்ன நிவாரணம் என்பதும் முதல் அமைச்சரின் அறிக்கையிலே படிக்கப்படவில்லை. விவசாயிகளின் கூட்டுறவுக் கடனை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கை குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.

தற்கொலை செய்துகொண்டு இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்குப் பத்து இலட்சம் ரூபாய் வீதம் நிவாரணத் தொகை வழங்கிட வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மேலும் இறந்த விவசாயிகளின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிட வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப் பட்டது. அதிலே இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்குத் தலா 3 லட்சம் ரூபாய் என்பது மிகவும் குறைவான தொகையாகும். அந்தத் தொகையை அதிகப்படுத்த வேண்டுமென்றும், தற்கொலை செய்து கொண்டு இறந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிட வேண்டுமென்றும் மீண்டும் வலியுறுத்துகிறேன்” - என்றெல்லாம் விரிவாக எழுதியிருந்தேன். என்னுடைய அறிக்கையையும் தி.மு.க. சார்பில் அம்மையாருக்கு அளிக்கப்பட்ட பாராட்டாகக் கருதுகிறாரா? தமிழகத்தின் முக்கிய எதிர்க் கட்சிகளும், விவசாயிகளின் அமைப்புகளும் ஒரே குரலில், அம்மையார் அறிவித்த நிவாரணம் போதுமானதல்ல; ஏமாற்றமளிக்கிறது; நிறைவளிக்கவில்லை; விவசாயிகளிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தி இருக்கிறது; என்று ஓங்கி ஒலித்த கருத்துரைகளையெல்லாம் அப்படியே மறைத்துவிட்டு; ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதில் உரையில் முதலமைச்சர் செய்த அறிவிப்புகளை எல்லாம் எதிர்க்கட்சிகள் வரவேற்றிருப்பதாக திருமண விழாவில் முதலமைச்சர் கூறியிருப்பது எத்தகைய உண்மைக்கு மாறான தகவல் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பலரும் தெரிவித்த கருத்துக்களை இங்கே தொகுத்துத் தந்துள்ளேன். நீறு பூத்திருக்கும் நெருப்பைப் பட்டுத் துணியால் மூடி மறைக்க முயற்சிக்கிறார் முதலமைச்சர்; எப்படிப்பட்ட முதலமைச்சர் தமிழகத்திற்குக் கிடைத்திருக்கிறார் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள்!

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு, எதிர்க்கட்சியினரும் விவசாயிகளும்தான் அளித்த நிவாரணத்தை ஏற்றுக்கொண்டு பாராட்டுகிறார்கள் என்று முதலமைச்சர் அறிவித்ததற்குப் பிறகு இன்று (21-2- 2013) “தினமலர்” நாளேடு “டெல்டாவை விட்டு வெளியேறும் விவசாயத் தொழிலாளர்கள் - எதிர்பார்த்து ஏமாந்ததால் கேரளாவிற்குப் படையெடுப்பு” என்ற தலைப்பின்கீழ் - “அரசிடம் இருந்து வறட்சி நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்த டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள், வேலை தேடிக் கேரள மாநிலத்திற்குப் படையெடுத்து வருகின்றனர். அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய்; விவசாயத் தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கோரப்பட்டது. இந்த பணத்தை போக்குவரத்து, உணவுச் செலவிற்குப் பயன்படுத்தி, வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லலாம் என விவசாயத் தொழிலாளர்கள் காத்திருந்தனர். ஆனால் விவசாயிகளுக்கு மட்டும் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக முதல்வர் ஜெ.அறிவித்துள்ளார். விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசிடம் இருந்து நிவாரணம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்” என்றெல்லாம் எழுதியுள்ளது. ஆனால் ஜெயலலிதா தமிழகத்திலே என்ன நிலைமை என்பதே தெரியாமல், “வீடியோ-கான்பரன்சிங்” மூலமாகவே அனைத்தையும் நடத்திக் கொண்டிருப்பதால் ஐந்து லட்சத் திற்கும் மேற்பட்ட விவசாயிகள், ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் இன்னல்களைப் புரிந்து கொள்ளாமல் அனைவரும் பாராட்டுவதாகக் கூறிக் கொண்டிருக்கிறார். அவர் கொஞ்சம் கீழே இறங்கி வந்து நிலைமைகளைப் பார்த்து உண்மைகளைப் புரிந்துகொண்டு, விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணங்களை அளித்திட வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள, மு.க. 22-2-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗