உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3706

ஐ.நா.வின் பட்டியலில் இணைவதா? வேண்டாமா?

2013-02-20

உடன்பிறப்பே,

தூக்குத் தண்டனை பற்றிய கருத்துகள், ஆதரவாகவும் - நேர் எதிராகவும் கூறப்பட்டு - அந்தத் தண்டனை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது; இன்று நேற்றல்ல; பல ஆண்டு காலத்திற்கு முன்பு குறிப்பாக வரலாற்றுக் காலத்திலேயே குற்றம் புரிந்தவர்களில் யார் யாருக்கு என்னென்ன குற்றத்திற்கு, என்னென்ன தண்டனை என்பதை வகுத்து வைத்திருந்தார்கள்.

அந்தத் தண்டனைகளை வரிசைப்படுத்தி ஒவ்வொரு தண்டனையையும், ஆய்வு செய்திடும்போது அவை அந்தந்தக் காலத்திற்கேற்றதாகவும், கடுமையான தண்டனைகளாகவும் குற்றம் சாற்றப்பட்டவர்களை, துடிக்கவிடாத அல்லது துன்பத்திற்கு உள்ளாக்காத தண்டனைகளாகவும் இருந்தன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு சில தண்டனைகள் குற்றம் சாற்றப்பட்டவர்களின் உடலை வருத்துவதாகவும், மற்றும் சில தண்டனைகள் அவர்களுடைய உள்ளத்தை வாட வைத்து அவர்கள்தம் உறவினர் முன்னால் அல்லது ஊரார் முன்னால், வெட்கித் தலை குனிய வேண்டிய நிலைக்கு ஆளாகிற அளவுக்கு அவமானம் தரத்தக்கதாகவும் அமைந்தன.

போர்க்களங்களில் தலையைத் துண்டிப்பது, கைகால்களை அறுத்தெறிவது போன்ற ஆயுதத் தாக்குதல்களை அரசர்களே நேர் நின்று நடத்திய நிகழ்ச்சிகளும் வரலாற்று ஏடுகளில் வர்ணிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுதும் உள்ள எல்லா நாடுகளுக்கும் மன்னிக்க முடியாத பெரும் குற்றங்களில் மரண தண்டனை என்பது பொதுவாக இருந்த தண்டனையாகும்.

சிறைச்சாலையிலே பூட்டி கரங்களிலே மதுக்கிண்ணத்தைத் தருவதைப்போல் விஷக் கிண்ணத்தைத் தந்து, அதில் நஞ்சினை நிரப்பி, “இந்த நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்குரிய தண்டனையை நிறைவேற்றிடுக” என்று ஏதென்ஸ் நகரத்தில் இருந்த நீதிமன்றத்தில் கட்டளையிடப்பட்டு, அதனையேற்று சாக்ரடீஸ் எனும் தத்துவ ஞானி, அந்த விஷத்தை அருந்தி வீழ்ந்த வரலாறு நாம் படித்ததுதான்! இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், மரண தண்டனையை மகுடபதிகள், விஷத்தைக் கொடுத்தும் நிறைவேற்றினார்கள்; வேல், வாள் போன்ற போர்க் கருவிகளைக் கொண்டும் நிறைவேற்றினார்கள்; யானையின் காலால் தலையை இடறச் சொல்லி, மரண தண்டனைகளை நிறைவேற்றி மகிழ்ந்த மாமன்னர்களும் உண்டு வரலாற்றில்!

அண்மைக் கால உலகயுத்தங்களின் வரலாறுகளில் இரு அணியிலும் எத்தனையோ லட்சம் பேர், கொல்லப்பட்டுப் பிணக் குவியலிலே அந்த நாடுகளின் வெற்றிப்பதாகை விண்முட்ட ஏற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.

அவை, போர்க் களங்களில் வென்ற அணியினர் வீழ்ந்த அணியினருக்கு வழங்கிய மரணப் பரிசு எனலாம்.

கால மாறுதல்களால் - சரித்திர மாற்றங்களால் - வரலாற்று நிகழ்வுகள் அடுக்கடுக்காகத் தோன்றி, தனிப்பட்ட மரண தண்டனைகள் அல்லாமல்; எதிர்ப்பட்ட பகைவர்களின் உயிர்களைச் சூறையாடும் வீர விளையாட்டுகளாக அவை கருதப்பட்டதும் உண்டு.

எதிரெதிரே நின்று ஒருவரையொருவர் வெல்லவும், அல்லது கொல்லவும், மனிதாபிமானத்திற்கு - மனித நேயத்திற்கு அப்பாற்பட்ட விரோதச் செயல் என்ற நிலை, அசோகன் நடத்திய கலிங்கப் போர் முடிவுவரை இருந்தது என்பதையும்; அதன்பின்னர் “புத்தம்” பரவிய காரணத்தால் போர்க்களே கூடாது என்ற புதிய நிலை போதனைகளாக மாறின என்பதையும் மறந்து விட இயலாது. ஒரு போரினால் இரு தரப்பிலே உள்ள நாடு நகரங்கள் அழிவது மாத்திரமல்ல; எதிர்பாராத கொடும் சாவுகளாலும் எதிர்பார்த்த வீர மரணங்களாலும், வரலாற்று ஏடுகளில் செதுக்கப்பட்டுள்ள, மனிதர்களின் பெயர்கள் என்றைக்கும் அழிக்க முடியாதவை யெனினும், அவர்களும் மரணத்தைச் சந்தித்தவர்கள்தான் என்பதை மறந்து விடுவதற்கில்லை.

கட்டபொம்மனும், பூலித்தேவனும் தூக்கிலிடப்பட்டார்கள். போர் முனையில் அல்ல; போர் முனையில் அவர்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, தூக்கு மேடைகளில் அவர்கள் ஏற நேரிட்டது.

உத்தமர் காந்தியடிகள் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்.

வீரன் பகத் சிங் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

இவர்களும் சரி; இவர்களுக்கு முன்பு நான் குறிப்பிட்ட போர்களில் உயிர்களைப் பறி கொடுத்த மாமன்னர்களாயினும், மாவீரர்களாயினும் சரி - அவர்களும்; மரணத்தில் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டவர்கள்தான்.

எனவே, மனித சமுதாயத்திற்குப் பொதுவாக அமைகிற மரணம் என்பது, சில நேரங்களில் வெற்றிப் பரிசாகவும், சில நேரங்களில் விரோதிகளால் தரப்படுகின்ற தண்டனையாகவும் ஆகிவிடுகிறது. இந்த நீண்ட விளக்கங்களை - வரலாற்றுச் சான்றுகளை நான் குறிப்பிடுவதற்குக் காரணமே; மனித நேயம் எனும் அளவுகோலால் இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்ற காரணத்தினால்தான்!

இந்தப் பின்னணியில் இன்றையதினம் ஒரு கேள்விக்கு நாம் விடை காண வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மிகப் பயங்கரமான குற்றச்சாட்டுக்கு உரியவர்கள் என்படுவோரை, எப்படித் தண்டிப்பது; எவ்விதம் தண்டிப்பது; எந்த வகையில் தண்டிப்பது; என்பது பெரிய பிரச்சினையாக உலகில் உருவெடுத்திருக்கிறது. சில நாடுகளில், இறுதி முடிவுக்கே வந்து விட்டிருக்கிறார்கள். இந்தியாவில் பயங்கரக் குற்றங்களுக்கு - அவை நிரூபிக்கப்படுமானால் - என்ன தண்டனை அளிக்கலாம் என்பதும் இன்னமும் விவாதப் பொருளாகவே இருந்து கொண்டிருக்கிறது.

தண்டனைகள் பலவற்றில் மரண தண்டனை - ஆயுள் தண்டனை - சிறைத் தண்டனை போன்றவை பல நீதிமன்றங்களில் தீர்ப்புகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

அத்தகைய தீர்ப்புகள் வழங்கப்படும்போது, அந்தத் தண்டனைகளின் பட்டியலில் உள்ள மரண தண்டனை மனித நேயத்திற்குப் பொருத்தமானதா என்பதைப் பல அறிஞர் பெருமக்களும், நீதிமான்களும், ஆய்வு செய்து அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக, குற்றவாளி என்று நீதிமன்றத்தின் முடிவாக இறுதித் தீர்ப்பு பெற்றவருக்கு;

இத்தனை ஆண்டுக் காலச் சிறைவாசம்;

அல்லது சாகும்வரை தூக்குத் தண்டனை;

என்று தீர்ப்பு வழங்கப்படுமேயானால் - குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் அல்லது குற்றம் சாற்றப் பெற்ற ஒருவர் அந்தத் தண்டனையை எந்த வகையில் ஏற்றுக்கொள்வது என்பதுதான் இப்போதுள்ள அய்யப்பாடு.

தண்டனை என்பதே ஒருவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதற்காக அவர் இத்தனை ஆண்டுக் காலம் சிறையிலே கழிக்கவேண்டும் என்று நீதிபதியால் விசாரணைக்குப் பிறகு வழங்கப்படும் தீர்ப்பிலே சொல்லப்படுவதுதான்! மிகக் கொடிய குற்றம் ஒன்றினைச் செய்தவருக்கு, ஆயுள் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை தரப்படுகிறது. இதிலே எது பெரிய தண்டனை? தூக்குத் தண்டனை! ஆனால் தூக்குத் தண்டனை பெற்றவர், தான் செய்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்படுகின்ற நேரத்தில், அவர் இந்த உலகத்திலிருந்தே விடுவிக்கப்படுகிறார். ஒரு சில மணித் துளிகளில் அவர் செய்த குற்றங்களுக்கெல்லாம் முடிவு காணப்பட்டு விடுகிறது. குற்றம் செய்தவரைப் பொறுத்த வரை அவருக்கு எந்தத் துன்பமும் இல்லை. ஒரேயடியாக இந்த உலகத்தின் துன்ப துயரங்களிலிருந்து விடுபட்டு ஓய்வு பெற்று விடுகிறார். அதே நேரத்தில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை என்றால், எத்தனை ஆண்டுக் காலம் அவர் சிறையிலே இருக்கிறாரோ, அத்தனை ஆண்டுக் காலமும் அவர்; தான் செய்த குற்றங்களை நினைத்து நினைத்து நெஞ்சைப் பிசைந்து வருந்தியாகவேண்டும். இப்போதுநினைத்துப் பாருங்கள். ஒருவன் தான் செய்த குற்றத்திற்காக உடனடியாக இந்த உலகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு எந்தத் துயரும் அடையாமல் விடுதலை பெற்றுச் சென்று விடுவதா? அல்லது பல ஆண்டுக் காலம் அதே குற்றத்திற்காகச் சிறையிலே இருந்து வாடி வதங்குவதா?

தற்போது பேசப்பட்டு வரும் வழக்கிலேகூட வீரப்பனின் நண்பர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வருக்கும் மைசூர் தடா நீதிமன்ற நீதிபதி முதலில் ஆயுள் தண்டனைதான் விதித்திருக்கிறார். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துகொண்ட போதுதான், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனையை, தூக்குத் தண்டனை என்று மாற்றியிருக்கிறார். மேல்முறையீடு செய்யப்படாமல் இருந்திருக்குமேயானால் அவர்கள் ஆயுள் தண்டனையோடு இருந்திருப்பார்கள்.

அது மாத்திரமல்ல; தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு ஒன்பதாண்டுகள் ஓடிவிட்டன. அந்தத் தண்டனை உடனடியாக அப்போதே நிறைவேற்றப்பட்டிருந்தால் அவர்கள் கடந்த ஒன்பதாண்டுக் காலமாகச் சிறையிலே உழன்று உருக்குலைய வேண்டியிருந்திருக்காது. அவர்கள் ஒன்பதாண்டு காலம் சிறைத் தண்டனையையும் அனுபவித்துவிட்டு, தற்போது மேலும் தூக்குத் தண்டனை என்றால் ஒரே குற்றத்திற்காக இரண்டு கடும் தண்டனைகள் என்று ஆகிவிடாதா என்பதையும்; அதை நமது சட்டம் அனுமதிக்கிறதா என்பதையும்; எண்ணிப் பார்க்க வேண்டும்.

2011 நவம்பர் 21ஆம் தேதியன்று அஜ்மல் கசாப்கான் தூக்கிலிடப்பட்டார். 9-2-2013 அன்று அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். இதுபற்றி பலவிதமான சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், மேலும் நான்கு பேர்களைத் தூக்கிலிட நடவடிக்கை எடுப்பதின் காரணமாக, தூக்குத் தண்டனை என்ற பயங்கரவாதத்திற்கு, ஒரு “தூக்குத் தண்டனை” அளித்திட அதாவது தூக்குத் தண்டனை என்பதையே அழித்தொழித்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற கருத்து மிக வேகமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோது, ஏற்கனவே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தோழர் தியாகு, பெண்ணாடம் புலவர் கலியபெருமாள் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்ட வரலாறும் நமக்கு உண்டு. அதைப்பற்றி தியாகுவும், புலவர் கலியபெருமாள் அவர்களின் இளைய மகன் சோழநம்பியாரும் தெரிவித்திருக்கிறார்கள்.

2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மன்றம் தூக்குத் தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன்வைத்தபோது அதை 104 நாடுகள் ஆதரித்துக் கையெழுத்திட்டன; இந்தியா உட்பட 39 நாடுகள்தான் எதிர்த்து வாக்களித்தன; ஐ.நா. தீர்மானத்தையொட்டி உலகின் 90 சதவிகித நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்துவிட்டன. அந்தப் பெரும்பான்மை நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைய வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. என் மனிதாபிமான முள்ள பலருடைய கருத்தும் அதுதான்!

அன்புள்ள, மு.க. 20-2-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗