மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 50 · 50 / 57
[குகையருகிலுள்ள கல் தூணில் கட்டப்பட்டிருந்த உண்மை அக்ஷயன் கஷ்டப்பட்டு கயிறுகளை அறுக்கிறான்.]
அரண்மனை
வசந்தசேனை : நாளை ஆகவேண்டிய காரியத்தை ஆலோசிப்போம்.
உக்ரசேனன் : இனியும் என்ன ஆகவேண்டியது?
சேனா : நாளை வசந்தனின் பட்டாபிஷேகம்.
உக் : நிச்சயமாக ஆனால் அதற்குள் நாடு நம் வசமானதை அறிவிக்க வேண்டும்.
சேனா : அறிவிப்பதால் எதாவது ஆபத்து?
உக் : ஆபத்து!... யாரால்? என்னை எதிர்க்கக் கூடியவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா?
சேனா : உற்சாக வெள்ளத்தில் உயிரோடு இருக்கும் மனோகரனை! மறந்துவிடக் கூடாது.
* *
சிறைச்சாலை. முத்திரை மோதிரத்தைக் காட்டி உள்ளே நுழைகிறான் மனோகரன்.
மனோ : அம்மா
பத்மாவதி : நீ யார்!
மனோ : மனோகரன்...என்னை அனுப்பினான்!
பத் : மனோகரன்...என் கண்மணி சுகமாக இருக்கிறானா?
விஜயா : அத்தே! அவர் எங்கிருக்கிறாராம்?
மனோ : சதா உங்கள் இருதயத்திலே இருக்கும் அவர் வேறு எங்கு இருப்பார்.
பத் : யாரப்பா நீ?
மனோ : அதைப் பிறகு சொல்லுகிறேன். இப்போது நீங்கள் இருவரும் இதை விட்டு தப்பிவிடவேண்டும்.
பத் : என்ன?
மனோ : ஆமாம்! மனோகரனின் ரகசிய ஏற்பாடு. இதோ முத்திரை மோதிரம் பயமின்றி யாருடைய தடையுமின்றி வெளியேறலாம். புறப்படுங்கள்
பத் , தந்திரமாக தப்பிவிடுவது—கூடாது, முடியாது. மகாராஜாவின் உத்திரவை மீற முடியாது. மனோகரனிடம் சொல்லிவிடு.
விஜ : அத்தே!
: தம்பி மனோகரனிடம் சொல்—எனக்கு ஒரு செல்வப் பேரன் பிறந்திருக்கிறான், சிறைச்சாலையில் என்று!
மனோ : இந்தப் பேரனுக்கு வரும் பேராபத்தை நீக்கத்தான் நீங்கள் வெளியேற வேண்டும் என்கிறேன்.
பத் : அரசன் கட்டளையை... அரசியே மீறுவதா? முறையல்ல.
மனோ : அப்படியானால்... ராஜகுமாரி! அந்த குழந்தையையாவது கொடுங்கள் நான் கொண்டுபோய்விடுகிறேன்.
விஜ : ஆ! குழந்தையா?
மனோ : குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால்......?
விஜ : அத்தே இவனை நம்பாதீர்கள்...... குழந்தையைக் கொல்லுவதற்கு ஏதோ சூழ்ச்சி நடக்கிறது.
மனோ : இல்ல! இல்ல!......
விஜ : முடியாது... முடியாது... நீ போய்விடு.
