மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 44 · 44 / 57
[பூஜை அறை]
உக் : யாரது ஓ... ராணி வசந்தா தேவியா?
வசந் : ஸ்வாமிகளுக்கு ஆண்டவன் நினைவோ?
உக் : ஆண்டவனைப்பற்றியல்ல. ஆண்டு கொண்டிருப்பவனைப்பற்றி... உட்கார். உல்லாசி.
வ. சே. : பழரசம் அருந்துங்களேன்.
உக் : முதலில் உன் பார்வை ரசம் அருந்துகிறேன் கண்ணே!
சேனா : உங்களைப்பார்த்து எவ்வளவு நாட்களாகின்றன.
தோழி : கூப்பிட்டீர்களா அம்மா.
சேனா : இல்லை போடி.
உக் : (கூந்தலைக் கோதியபடி) ஆகா! முகில் கூட்டம். (பல்லைக்காட்டி) முல்லைத் தோட்டம். (கன்னத்தைத் தடவி) ரோஜாக் கொல்லை!
சேனா : ஸ்வாமி!
உக் : மொத்தத்தில் இன்பத்தின் எல்லை!
சேனா : ஆமாம்... திட்டங்கள் எல்லாம் எப்படி திட்டியிருக்கிறீர்கள்?
உக் : திவ்யமாக! அரண்மனையின் முக்கிய பகுதிகள் எல்லாம் நமது ஆண்டி வேடந்தரித்த வீரர்கள் ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறார்கள், நாம் ஆணையிட்டால் போதும், போர்! புருஷோத்தமன் கைது!
சேனா : போர்கூட தேவைப்படாது. புருஷோத்தமனின் படை வீரர்களை என் கைக்குள் போட்டு வைத்திருக்கிறேன்.
உக் : சபாஷ்! போர் வந்தால்தான் என்ன? எதிரிப் படைகள் அரண்மனைக்குள் வந்த பிறகு யாரால்தான் எதிர்த்து ஜெயிக்க முடியும்?
சேனா : எதிரிப் படை அரண்மனைக்குள் மட்டுமா வந்திருக்கிறது?
உக் : அந்தப்புரத்திற்கே வந்துவிட்டது என்கிறாயா? இது சண்டையிட அல்ல. சரணாகதி அடைய.
சேனா : இரவு வருகிறேன்.
