உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 43
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 43 · 43 / 57

[குகை]

மனோகரன் : காஷாய உடை! அதற்குள்ளே கத்தி ஏந்திய படை, மடை திறந்தாற்போல் நுழைந்துவிட்டார்கள்... தடை எதுவுமின்றி தபோதனர் வேடத்தில்! இனி அரைக்கணம் தாமதித்தால் சோழ மண்டலம் அடிமையாகிவிடும். உடன்புறப்படுங்கள்.

ராஜப்பிரியன் : ஆமாம், அதுதான் சரி! விடக்கூடாது, உடனே புறப்படுங்கள்.

சத்யசீலர் : பொறுங்கள். மன வலிமை இருக்கிறது. நமக்கு தாயகத்தை விடுவிக்க! அதே நேரத்தில் மாற்றாரின் படை வலிமையைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கவேண்டும். இதோ ராஜப்பிரியனை உடனே பாண்டிய நாட்டுக்கு அனுப்புவோம். பாண்டிய நாட்டுப் படைகள் வந்துவிட்டால் நமது போராட்டத்தைத் துவங்குவோம்!

கேசரிவர்மன் : நல்ல யோசனை! இளவரசே! நீங்கள் உடனே அரண்மனைக்குள் செல்லுங்கள். அப்போதுதான் அன்னை, தந்தை, மனைவி ஆகியோருக்கு எந்த வித ஆபத்தும் அணுகாமல் கண்காணித்துக்கொள்ள முடியும். மற்றவைகளை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்!

சத் : மனோகரா! நீ உடனே புறப்படு. ராஜப்பிரியா நீ உடனே பாண்டிய நாட்டுக்குப் புறப்படு!