உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 21
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 21 · 21 / 57

பத்மாவதி அந்தப்புரம்.

தோழி 1. உம்...போரிலே ஏற்பட்ட களைப்பு - புது மனைவியுடன் களிப்பு - எப்படியம்மா சீக்கிரம் வருவார்...!

பத்மா : எனக்கு விஜயாவைக் காண வேண்டுமென்று ஆசை துடிக்கிறதடி!...

தோழி 2. அம்மா...யாரோ ஒரு துறவி, உங்களைப் பார்க்க வேண்டுமாம், அவசரமாக!

(துறவி வேடத்தில் பெளத்தாயனன் வருகிறான்.)

பத்மா : வணக்கம்...

துறவி : வாழிய நலம்...மகாராணி...முதலில் இருதயத்தை இரும்பாக்கிக் கொள்...

பத்மா : என்ன?...

துறவி : கரும்பல்ல நான் கழறப்போகும் செய்தி! உம்... கடலில் துரும்பம்மா மனித வாழ்க்கை!

பத்மா : என்ன சாமி; தொடர்பில்லாமல் பேசுகிறீர்கள்.

துறவி : தொடர்பற்றவன்தானே துறவி!... உன் மகன் வெற்றியடைந்த செய்திகேட்டு எவ்வளவு மகிழ்ந்திருப்பாய்...

பத்மா : ஆமாம் ஸ்வாமி!...

துறவி : சந்தோஷத்தை அணைத்துக் கொள்ளும் அதே உள்ளம், சங்கடத்தை ஏன் சந்திக்க மறுக்கிறது?

பத்மா : ஸ்வாமி...என்ன நேர்ந்தது...சொல்லுங்கள்!

துறவி : இதோ...இந்தப் போர்வாள் சொல்லும்...

பத்மா : ஆ!...

துறவி : போய் விட்டான் உன் புதல்வன்...புண்ணியலோகத்துக்கு!...

பத்மா : ஆ...மனோகரா!...

வந்துவிட்டேனம்மா

[என்ற குரல் கேட்கிறது. தோழியின் மீது சாய்ந்தவள் திடுக்கிட்டு கண்களை நம்பாமல் திரும்பிப் பார்க்கிறாள்]

“மனோகரா!”

மனோகரனைத் தழுவிக் கொண்டு—ஆச்சரியத்துடன் பார்க்கிறாள்...

மனோகரன் : ஏனம்மா இப்படிப் பார்க்கிறீர்கள்...என்ன நடந்தது...? யார் இந்த சாமியார்?...

(கையிலுள்ள போர்வாளைக் கண்டு)

ஆ...என் போர்வாள்...காணாமற் போனது...எப்படி இங்கே வந்தது...?

பத்மா : மனோகரா! நீ என்னைப் பிரிந்துவிட்டதாக இந்தப் பாவி சொன்னான்...

ராஜப்பிரியன் : திருட்டுப் பயல்!...வாளைத் திருடியதுமல்லாமல்...வாலை வேறு நீட்டுகிறானோ. தாடியைப் பார், தாடியை!

[தாடியைப் பிடிக்க தாடி கையுடன் வருகிறது]

மனோகரன் : பெளத்தாயனன்...

ராஜ : சதியிலே புது அத்யாயம் - போர்வாளை திருடி வந்து காட்டினால்... மகாராணி இறந்துவிடுவார்கள். சரியான சூழ்ச்சி...

மனோகரன் : தேளின் கொடுக்கே!...யாருடைய திட்டமடா இது!...சொல்...

பத்மா : மனோகரா, பாவம்...அவனை விட்டுவிடு...

மனோகரன் : விடக் கூடாதம்மா...ராஜப்ரியா...இவனை சிறையிலே பூட்டி வை!

பெளத் : எல்லாவற்றுக்கும் வசந்தசேனை தான் காரணம்!

மனோகரன் : வசந்தசேனை! இனியும் அவள் உயிரோடு விடக்கூடாது!

(போகிறான்)

பத்மா : மனோகரா! நில் - எங்கே ஓடுகிறாய்?...

மனோகரன் : அம்மா இன்னும் என்ன - உங்கள் சபதத்தை நிறைவேற்றி விட்டபிறகு!...

பத்மா : சொல்கிறேன், முதலில் “வாளை உறையில் போடு!...மகாராஜாவுக்கோ வசந்தசேனைக்கோ - என் அனுமதியின்றி, எந்தவிதமான தீங்கும் செய்வதில்லையென்று ஆணையிடு!...என்மேல் ஆணையிடு...

மனோ : அம்மா!

பத்மா : தாயின்மேல் ஆணையிடு!...

மனோ : அரசரை ஒன்றும் செய்வதில்லையம்மா.

பத்மா : கூடாது! வசந்தசேனைக்கும் சேர்த்துத்தான்!

மனோ : வசந்தசேனை...வட்டமிடும் கழுகு!...வாய் பிளந்து நிற்கும் ஓநாய்!...நம்மை வளைத்துவிட்ட மலைப்பாம்பு அவளுக்கு இரக்கம் - ??? முடியாது! கூடாது!...

பத்மா : உன்னிஷ்டம்...ஊரார் நகைக்கட்டும் தாய் சொற் கேளாத தனயனென்று!...நாடு சிரிக்கட்டும் - அடங்காத மகனைப்பெற்ற அன்னையென்று!...

மனோ : அய்யோ... அப்படியொன்றுமில்லையம்மா... இதோ ஆணையிட்டு விடுகிறேன்.

பத்மா : செல்வா!...