மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 15 · 15 / 57
(இரவு மனோகரனின் பாடிவீடு.)
தூங்கிக் கொண்டிருக்கும் மனோகரனைக் கொல்வதற்கு பெளத்தாயன் கட்டாரி ஓங்குகிறான்.
அப்போது சிப்பாய் உடையில் யாருக்கும் தெரியாதபடி உருவிய வாளோடு நுழைந்த விஜயா தன்னை அறியாமல் ‘ஓ’ வென அலறுகிறாள்.
மனோகரன் விழித்தெழுந்து விஜயாவின் கையைப்பிடித்துக்கொண்டு
மனோ : யாரடா நீ
விஜயா : நீர் உண்டாக்கிய சுடுகாட்டிலே மறு உயிர் பெற்ற பேயுமல்ல, பிணமுமல்ல! உனது பார்வையில்
தட்டுப்படாமல்போன பகைவர்களில் ஒருவன்—பாண்டிய நாட்டு வீரன்!
மனோ : பாண்டிய நாட்டு வீரன்! உம்...பாதி ராத்திரியிலே பதுங்கிப் பாயும் பட்டாளப் பயிற்சிக்கு முத்து விஜயன் ஆட்சியிலே முதல் இடம் போலும், முதுகெலும்பில்லாதவனே. கையிலே வாளும், நெஞ்சிலே கோழைத்தனமும் கொண்டவர்களில் ஒருவன் மிச்சமா? ஓடிப்போ...உயிரைக் காப்பாற்றிக்கொள்...
ராஜப்பிரியன் : மனோகரா!...இவனை விடக்கூடாது...
மனோ : போகட்டும் பாவம்...மன்னித்துவிட்டேன்
விஜ : மன்னிப்பு கேட்கும் மரபல்ல...
மனோ : மறைந்திருந்து தாக்கும் மரபு...மாவீரன்!
ராஜ : தூங்குபவன் தலையைத் துண்டாடுபவர்களும் வீரர்கள்தான், பாண்டியநாட்டுப் பள்ளிக்கூடத்திலே! போடா போக்கற்ற கோழையே!
விஜ : கோழை...நானா கோழை! இதோ பார்...இப்பொழுதே நேராகவே பழிதீர்த்துக்கொள்கிறேன்....
[வாளை உருவுகிறாள். மனோகரன் அவளைத் தடுக்க அப்போது அவள் தலைப்பாகை நழுவுகிறது.]
மனோ : ஆ! பெண்!
விஜ : உன் பகைவரின் பெண்... பழிவாங்க வந்தவள்...
ராஜ : இளவரசி!
மனோ : அற்புதமான காட்சி, வளையல் ஏந்தும் கைகளிலே வாள்!
விஜ : பேசாதீர்!... நீர் வீரனெனில் என்னை ஜெயித்த பிறகு பேசும்!
மனோ : வேல்விழி மாதர்களிடம் வீரர்கள் ஜெயித்தார்கள் என்பதற்கு சரித்திரமே கிடையாது, இளவரசி!
விஜ : கேலி தேவையில்ல...எடும் வாளை,
மனோ : என் வாள் களத்திலேதான் விளையாடும்... கனிகளைக் காயப்படுத்தாது!
விஜ : துணிவிருந்தால் - வீரர் லக்ஷணத்தைப்பற்றி பேசியதெல்லாம் வாய்வீச்சாக இல்லாமல் இருந்தால் வாளை வீசும்... நல்ல தீர்ப்பு கிடைக்கட்டும்....
மனோ : நல்ல தீர்ப்பு...வாள்முனை வழங்காது இனிமேல் வழக்கு மன்றத்திலே தான் பெறவேண்டும்! பாண்டியன் பெற்ற பைங்கொடியே நீ இப்போது கைதி - பாதுகாப்புக் கைதி! ராஜப்பிரியா! அழைத்துச் செல்!
ராஜப் : அதோ கோட்டை வாசலிலே எங்கள் கொடி! ராஜகுமாரி மனோகரனின் அடிமை என்பதை அறிவிக்கும் கொடி!
விஜயா : பேசாதே! அரசிளங் குமரியாக வாழ்ந்தேன் - அடிமையாக வாழமாட்டேன். வானம்பாடியாகத் திரிந்தேன் - வல்லூறுகளின் கோரப் பிடியிலே சிக்க மாட்டேன். சுதந்திரத் தென்றலிலே மிதந்தேன் - அடிமைச் சூறாவளியிலே அகப்பட்டுக் கொள்ளமாட்டேன் - மாற்றானின் காலடியைவிட மரணத்தின் மடி எவ்வளவோ மேல்.
