மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 13 · 13 / 57
(முத்துவிஜயன் அரண்மனை)
சிப்பாய் 1 : அரசே! ஆபத்து...ஆபத்து...மதில்களுக்கு நாசம்!
சிப்பாய் 2 : பூரண கும்பம் முறிந்தது.
சிப்பாய் 3 : எதிரிகள் முன்னேறுகிறார்கள்.
விஜயா : அப்பா! இந்த ரத்ன சிம்மாசனத்துக்காக இவ்வளவு ரத்தமா ஓடவேண்டும்?
முத்து விஜயன் : ரத்தம்...ரத்தம் எனக்கு நீச்சல் குளம். யுத்தம் எனக்கு ஒரு பொழுது போக்கு! இதையறியாமல் மோதுகிறான் இந்த முத்து விஜயனிடம், மூர்க்கன்!
சிப்பாய் : ஆபத்து! ஆபத்து! அணிகள் சிதறிவிட்டன
மு. வி : எங்கே சேனாதிபதி? எங்கே அந்த சிங்கநெஞ்சன்?
சிப்பாய் : புகழுடம்பு பெற்றுவிட்டார், வேந்தே! போர்க்களத்தில் மடிந்துவிட்டார்,
சிப்பாய் 2 - மீன் கொடி சாய்ந்துவிட்டது.
மு. வி : ஆ!...இதோ புறப்பட்டு விட்டேன்...எங்கே என் படைகள்...
மனோகரன் படைகள் கோட்டைச் சுவரில் ஏறுகின்றன. பலத்த எதிர்ப்பு—
முத்து : வாடா தம்பி!... வாள் பிடிக்கத் தெரியாத வாலிபனே! வளைத்துவிட்டோம் கோட்டையை என்று எண்ணிவிடாதே
மனோகரன் : கேள்விப்பட்டிருக்கிறேன்- நீர் வீரர்...வாய் வீச்சிலே என்று!
[முத்துவிஜயன் கோபா வேசத்துடன் வாளை வீசிக்கொண்டே...]
முத்து : வாள் வீச்சிலும் கூடத்தான்!...
இருவரிடையே உக்கிரமான வாட்போர் நடக்கிறது...... கோட்டை வாயிலில் இரு படைக்கும் பயங்கரமாகப் போரிட்டு இறுதியில் மனோகரன் படைகள் உள்ளே நுழைய ஆரம்பிக்கின்றன.
முத்து விஜயன் மனோகரன் வாளுக்கு பலியாகிறான்......
கோட்டை வாசலில் மனோகரன் படைகள் வெற்றி முழக்கத்தோடு நுழைகின்றன...
கோட்டை முகப்பில் பாண்டியனின் மீனக்கொடி இறக்கப்பட்டு புலிக் கொடியைப் ராஜப்ரியன் ஏற்றுவிக்கிறான்......
