உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 11
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 11 · 11 / 57

(தெருவில் முரசறையப்படுகிறது.)

முரசறைவோன் : போர்! பயங்கரமான போர்! நமது நாட்டின் மானத்தை - எதிர் காலத்தை நிர்ணயிக்கும் போர்! வீரர்களே தயாராகுங்கள்! வீட்டுக்கொருவர் புறப்படுங்கள் - வீணர் எலும்புடைப்போம் - வெற்றிக் கொடி பிடிப்போம். வாரீர்! வாரீர்! போருக்கு!... போர்! போர்! போர்! டம டம டம!

* * *

வசந்தன் : போர்! போர்! வீராதி வீரர்களே! கிளம்புங்கள் போருக்கு! போரிலே இரண்டு வகை உண்டு. ஒரு போரிலே மாடுகள் மேயும். அது வைக்கோற் போர்! இன்னொரு போர் வெறும் அக்கப் போர்! நான் சொல்லும் போர், மண்டைகள் உடையும் சண்டையைப் பற்றி! புலிக்கண் வீரர்களே! சிங்கங்களே! சிறுத்தைகளே! செம்மறி ஆடுகளே! சீறிக் கிளம்புங்கள்! உம், புறப்படுங்கள். ஏன் நிற்கிறீர்கள்! வெட்டுங்கள்! வீழ்த்துங்கள்! கொல்லுங்கள்...குடலைக் கிழியுங்கள்......

[வீரர் பொம்மைகள் இப்போது காட்சியாகின்றன.]

விகடன் : சபாஷ்! வசந்தன்—நீ வீரனே தான்.

வசந்தன் : சந்தேகமில்லே...சந்தேகமில்லே......

(என்று வாளை உருவுகிறான். கையில் வாளின் பிடி மட்டும் இருக்கிறது......

வசந்த சேனை வருகிறாள் அம்பு போடுகிறான்)

வ. சே : வசந்தா, என்ன இது?

விக : போர்க்களத்துக்கு போவதாம்...அதுக்கு......

வசந்தி : போர்க்களமா?...... நீ எண்டா கண்ணு போகணும்?......

விகடன் : அதெல்லாம் வீரர்கள் போகவேண்டிய இடம்...

வசந்தன் : உம்!...விடைகொடம்மா...

வசந்தி : உடம்பு கெட்டுவிடும்...... உனக்கு வேண்டாம் திமிர் பிடித்த வேலை......

வசந்தன் : தாயே! நீயா இப்படிப் பேசுவது யுத்த களத்தில் மார்பிலே காயம்பட்டான் மகன் என்ற செய்தி கேட்டு மனங்கலங்கி அவன் பால்குடித்த கெண்டியை உடைத்துவிடுகிறேன் என்று சபதம் செய்து—மகன் முதுகிலே காயம் பட்டு மடிந்ததைப் பார்த்து மகிழ்ச்சியடைக்க வீரத் தாயின் வம்சத்தில் வந்த நீயா இப்படிப் பேசுவது—கோழை! கோழை!... கோழை!...

வசந்தி : அய்யோ...தலைவிதி!......... விகடா! வைத்தியரை வரச்சொல்லி யிருக்கிறேன்—வசந்தனுக்கு சிகிச்சைகள் ஆரம்பமாகட்டும்...... சிம்மாசனம் காத்திருக்கிறது......

* * *

மனோகரன் : தந்தையே!... விடை கொடுங்கள்!...

அரசன் : மனோகரா! மறக் குலத்தின் மகிமையை மாற்றார் உணரச்செய்! எதிரியின் மமதையை மண்ணோடு மண்ணாக்கு!

வசந்தி : வெற்றிமாலை எடுத்து வா!

வசந்தி மாலையை எடுத்து வந்து.

வசந்தி : என் கண்மணிக்கு நான்தான் சூட்டுவேன்...

மனோ : ராஜப்பிரியா வெற்றி பெறுவதற்கு முன் வெற்றி மாலை-சூடுவது வீரர்க்கு வழக்கமில்லை

(வசந்திக்கு முகம் மாறுகிறது......)

மனோகரன் : வருகிறேன்—

அரசன் : வெல்க! வாழ்க!

இருவரும் போய்விடுதல்......

அரசன் : வசந்தி!......கோபமா கண்ணே— மனோகரன் சிறுவன்—மன்னித்துவிடு!

வசந்தி : அவன்மீது எனக்கு கோபம் ஏற்பட்டதேயில்லே— அவன் என் ஆசைச் செல்வன்—அன்புத் திருமகன்—என்னை அவன் வெறுக்கலாம்—ஆனால் அவன் எனக்கு வெண்ணிலா—விண்மீன்! கன்னல் சாறு!

அரசன் : வசந்தி!......

பத்மாவதியின் அந்தப்புரத்தின் வெளிப்புறம்.

மனோகரன் : அம்மா......

பத்மா : செல்வா...

தோழியிடமுள்ள தாம்பாளத்தை வாங்கி மனோகரனுக்குத் திலகமிடுகிறாள்...

பத்மாவதி : பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் மகிழ வெற்றி வீரனாக வா, மனோகரா!

மனோகரன் : அம்மா! வெற்றி பெற்றால் ரத்தின சிம்மாசனம் வரும்! இல்லையேல் ரத்தம் தோய்ந்த இந்த வீரவாள் வரும் என் செய்தி கூறும்!

[ரதத்தில் புறப்படுதல்]