உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 10
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 10 · 10 / 57

மாளிகையின் வேறு பகுதியில்/

சத்யசீலர் : நாடகத்திலே வந்த வாள், போலி வாள்! நான் சொல்வது போர் வாள்! மனோகரனின் பாட்டனார் - மகாராணியின் தந்தை - அதிவீர சேரருடையது அந்த வாள்!

ராஜப்பிரியன் : அதிவீர சேரன்......நாடகப் பெயர்...அதி தீர சூரர்......உம்...அப்புறம்?......

சத்யசீலர் : பாண்டியன் முத்துவிஜயன்...எதிர்பாராத முறையில் மனோகரனின் பாட்டனாரை ஜெயித்து ரத்ன சிம்மாசனத்தையும் கைப்பற்றினான்...போர் முனையில் காயப்பட்ட பாட்டனார் சாகும்போது முத்து விஜயனைப் பழிவாங்கும் பொறுப்பை குழந்தை மனோகரனிடம் ஒப்புவித்து உயிர் நீத்தார்...... தாத்தாவின் விருப்பத்தை மனோகரனின் தடந்தோள்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும்.

* * *

பத்மாவதி : ஆமாம் மனோகரா! முத்து விஜய பாண்டியன் முறியடிக்கப்பட வேண்டும். செத்துப் போன தாத்தாவின் சமாதியின் மீது வெற்றி மலர்கள் தூவவேண்டும். நம்முடைய பரம்பரை ரத்ன சிம்மாசனம் விடுதலை பெற வேண்டும்......

மனோ : விடை கொடுங்கள். வெற்றி மழை பொழிய வைக்கிறேன். வீணன் முத்து விஜயனின் விலா எலும்பை நொறுக்குகிறேன். சூது செய்து பிறர் நாட்டை சுருட்டிக் கொள்பவர்கள் இப்படித்தான் சுருண்டு போவார்கள் என்பதற்கு அவனை உதாரணமாக காட்டுகிறேன்.

பத் : செல்வா! சிந்தை குளிர்ந்ததடா கண்ணே... நம் பரம்பரைக்கேற்பட்ட களங்கத்தை நீதான் கழுவ வேண்டும்......

மனோ : பரம்பரைக்கேற்பட்ட களங்கம் பாண்டியன் முத்துவிஜயனால் மட்டுமல்ல - பாதகி வசந்த சேனையாலுந்தான்! ஏமாந்த காலத்தில் வெற்றி முரசு கொட்டிய வெறியனை மட்டுமல்ல உங்கள் இன்ப வாழ்வில் குறுக்கிட்ட வஞ்சகியையும் விட்டுவைக்காது இந்த வாள்!

பத் : முதலில் நான் சொன்னதைச் செய்! மனோகரா! அப்பாவிடம் அனுமதி பெற்றுவா!