உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

வசதியுள்ளோர் வழி விடுக!

பகுதி 2 · 2 / 2

பணம் படைத்தோர் தாம் பெற்ற கல்வி அறிவை வாழ்க்கையை நகர்த்தப் பயன்படுத்திடும் நிலையினர் அல்லர்! அவர் தம் அறிவுச் செல்வம் நாட்டில் பல்வகைத் தொழில் துறை வளரப் பயன்படல் நலமாம். சமுதாயப் பணிகள் - பொதுப் பணிகள் - பட்டம் பெற்ற பணக்கார இளைஞர்களின் பார்வையில் படுதல் வேண்டும். அலுவலக வேலைக்கு அவர்களும் மனுப் போட்டால் அன்றாடம் வாழ்வில் அவதிப்படும் பட்டதாரிகள் படுந்துயருக்கு முடிவே இல்லாமல் போகும்.

இந்தக்

கொள்கையில் அரசுடன் ஒத்துழைக்க, வசதியுள்ள பட்டதாரிகள் வருதல் வேண்டும். தினம் தினம் தீயில் கருகும் ஏழை எளிய பட்டதாரிகளுக்காக அவர்கள் செய்திடும் தியாகம் என அதனைக் கருதிட வேண்டும். இந்த நிலை முழுப்பயனை அளிக்கவல்லதல்ல, எனினும் அழும் குழந்தைக்குப் பால் தர முடியாமல் தவிக்கும் தாய்; அதனைக் கோவிலே போட்டு துடிக்கக் கொடுத்துத் தூங்கவைக்கும் அளவுதான் வேலை வாய்ப்பு வழங்குவதன் அளவும் அமையும் எனினும் அதையாவது செய்ய மாநில அரசு முனையாவிடில் அழுது அழுது குழந்தையின் வெறும் வயிறு வீங்கிவிடும்.

காய்ச்சல் பற்றும். கடும் பிணி தாவிடும். முடிவு, கண்ணீர்க் கதையாகும்.

வாழ்வில் அல்லற்படுவோர் - வயிற்றைக் கட்டி வாயைக் கட்டிப் பொருளீட்டித் தம் பிள்ளைகளைப் படிக்க வைத்த வயதான காலத்தில் நாலுகாசு சம்பாதித்துத் தமக்குச் சோறு போடுவான் என நம்பியிருக்கும் ஏழைத் தெய்வங்களுக்கு ஏமாற்றத்தைப் பூசை நைவேத்யமாகாமல் ஏதோ நம்மால் முடிந்த ஊதுவத்தியை கொளுத்தி வைக்க எண்ணுகிறோம், மாநில அளவில் அதன் அதிகாரங்களுக்கு உட்பட்டு வேலை வாய்ப்புகளைப் பெருக்கும் வகையில்!

வசதி படைத்த குடும்பத்திலிருந்து வந்து பட்டம் பெறுவோருக்கு நாட்டில் பணிகளா இல்லை? -

“தமிழன் என்றோர் இனமுண்டு - தனியே அவற்கொரு குணமுண்டு.”

என்பதனை அறியாத தமிழர்கள் நாட்டிலே இருக்கிறார்கள். அவர்தம் உள்ளங்களில் தமிழ் விளக்கு ஏற்றி வைக்கும் பணியினைச் செய்தல் எத்துணைப் பெருமை மிக்கது! எத்துணை இன்பமூட்டுவது!

அறிவியல் துறை! ஆராய்ச்சித் துறை! அழைக்கிறது வா வா என! வந்து புகுந்திடு! ‘வையகம் புகழ்ந்திடத் தமிழசத்தின் மேன்மையை நிலைநாட்டு’ என அழைக்கிறது. வந்திடத் தயங்குவது எதற்காக?

தோல்வியால் துவண்டு, தாளாற்றி எழவும் முடியாமல் வீழ்ந்து கிடந்த மேற்கு ஜெர்மானிய நாடு வெகு விரைவில் சுடர் முகம் தாக்கி எழுந்து நிற்பது அங்கு வளர்ந்த தொழில் துறையால்!

அறிவுச் செல்வம் பெற்றோர்; தம் கையில் உள்ள அழியும் செல்வத்தை அழியாச் செல்வமாக்க அரசுடன் இணைந்து தொழில் துறை வளர்ச்சியில் நாட்டம் செலுத்திடின் அத்தோர் நற்பணி ஆகாதோ! நாடு வளம் தரும் பூங்காவென மாறாதோ?

“சாதிகள் இல்லையடி பாப்பா” எனப் பாடிய பாரதி தன் ஆயுளைப் பாதியில் முடித்துவிட்டான். மீதியைச் செலவாக்கிச் சாதிசமயச் சமூக அழுக்கிடக் துணிந்து பணியாற்றலாமே!

“இனிமைத் தமிழ் மொழி எமது; எமக்கின்பத் தரும்படி வாய்த்த நல் அமுது” எனப் பாரதிதாசன் பாடியதை ஏட்டோடு நிறுத்தி விடாமல் அந்த அமுதினை நாட்டுக்குப் பாட்டு மொழியாக மட்டும் தராமல், பாட மொழியாக்கவும் அரசு மேற்கொண்ட செயலுக்கு உறுதுணையாக இருந்திடலாமே. இன்று தமிழில் பயின்று மொழியென்பதைத் தடுத்திடும் இயல்பினரும் இருக்கின்றாரே! அதனைத் தகர்த்திடும் வகையில் எதிர்காலம் அமைந்தால்தானே ‘தமிழன் என்றோர் இனமுண்டு’ என்று நாமக்கல்லார் பாடற்குப் பொருள் புரிந்தவர் களாவோம்.

உத்தமர் காந்தியடிகள் உரைத்த மொழியொன்றினை இவன் குறிப்பிடல் பொருத்தமாகும்.

“தாய்ப் பாலிடம் இருக்கும் பற்றுதலைப் போலவே எனக்குத் தாய் மொழியின் பாலும், அதில் எவ்வளவுதான் குறையாடுகள் இருந்தாலும், பற்றுதல் இருக்க வேண்டும். அது ஒன்றுதான் எனக்கு வாழ்வளிக்கும் பால் தரமுடியும். தாய் மொழியில்லாத பிற மொழியைப் பாட மொழியாகக் கொண்டுள்ள ஒரு நாட்டின் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்பவர்கள் ஆவார்கள் என்று

நான் உறுதியாக நம்புகிறேன். குழந்தைகளின் எல்லாத் தன்னாற்றலையும் அது பறித்துக் கொள்கிறது. அவர்களின் வளர்ச்சியை அது தடுக்கிறது மட்டுமல்லாமல் அவர்களைக் குடும்பச் சூழ்நிலையிலிருந்து தனித்து நிற்கச் செய்கிறது. ஆகவே இப்படிப்பட்ட ஒரு செய்கையானது இந்த நாட்டின் முதல் தரமான சோக நிகழ்ச்சி என்றே நான் கருதுகிறேன். உடனடியாக பயிற்றுமொழி மாற்றப்பட்டு மாநில மொழிகள் உரிய இடத்தைப் பெறுவதற்கு எப்பாடு பட்டாவது தகுந்த முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உயர்கல்வி நிலையில் பெருகிடும் மொத்த விரயத்திற்குப் பதிலாகத் தற்பாலிகக் குழப்பங்கள் மேலானது என்று ஏற்றுக் கொள்கிறேன்.”

அண்ணல் காந்தியின் அறிவுரை இது! இதற்கு முரண்பட்டுப் பேசுவோரும் தமிழ்நாட்டில் உண்டு; சொல்லித் தெரிவதில்லை. சொல்லாமலே புரியும் உமக்கு. முத்துப் பட்டமளிப்பு விழாவினை இங்கு நிகழ்த்தி, இன்று மூதாராம் மதுரையிலே சிலையாக நிற்கின்ற நம் அண்ணன் ‘தாய்மொழி என்னும் தகுதிக்கு ஈடாக வேறு எந்தத் தகுதியையும் ஒரு மொழி பெற்றிடத் தேவையில்லை!’

என உரைத்து, ‘உலகுடன் ஒட்டி வாழ்ந்திட உலகின் அறிவுக் களஞ்சியத்தின் துணைபெற ஆங்கில மொழியறிவு இன்றியமையாததாகிறது. இந்தியாவின் பல பகுதிகளுக்கு இணைப்பு மொழியாகவும், இந்தியாவுக்கும், வெளிநாடுகளுக்கும் இணைப்பு மொழியாகவும் ஆங்கிலம் இருந்திடட்டும்’ எனத் தெளிவாக்கித் தமிழ் பயிற்று மொழியின் இன்றியமையாமையைக் கோடிட்டுக் குறிப்பிட்டுள்ளார். அவரை மறவாது போலவே அவர்தம் சீரிய கருத்தினையும் மறந்திடவில்லை...

நாம். தாய்மொழியில் அறிவியல், மருத்துவ இயல் கலைச் சொற்களைப் பயின்று, செழிப்பையும் சிறப்பையும் காணுகிற நாடுகள் சிலவற்றைக் கண்டு வந்தேன் நான். பயிற்று மொழியில் காட்டும் பற்று மட்டுமின்றித் தமிழ் மொழியானது அகம், புறம் எனும் கருவூலங்களை வெளிப்படுத்தும் சிந்தனைக் கருவியாக மாத்திரம் இராமல், அணுவின் இரகசியங்

களையும் நிலவின் பயணங்களையும் விளக்கிக் கூறத்தக்கதிறன் மிக்க புதுயுக மொழியாகவும் விளங்கிடப் பொறுப்பேற்றுப் பணியாற்றிடல் வேண்டும்.

பட்டம் பெறும் அத்துணைப் பேருமா வேலை கிடைக்கும் திக்கு நோக்கி விழி திருப்பப் போகின்றீர்! உம்மில் எத்தனை பேர் இங்கர்சாலோ? எத்தனை பேர் ரூசோவோ? எத்தனை பேர் வால்டரோ? எத்தனை பேர் வள்ளுவரோ? இளங்கோவோ? கம்பரோ? காந்தியோ? நேருவோ? அண்ணாவோ? அவரளவு ஈடு இல்லை எனினும் அவர்தம் வழி நின்று முடிவாற்றும் திறனுடையோர் திரண்டிருக்கக் காணுகிறேன். அதனால்தான் உமது ஆற்றலை நாடு செழித்திடக் கேட்கிறேன். உலக மிசை உணர்வெழுப்பி உதித்தெழும் கதிரோனிடம்தான் ஒளி கேட்கிறேன்.

நீடுதுயில் நீக்கப் பாடிவரும் நிலாவிடம்தான் குளுமை கேட்கிறேன். வெண்சங்கு நிறங்காட்டி வேலியோரத்தில் படர்ந்து கிடக்கும் முல்லையிடம்தான் மணம் கேட்கிறேன். தென்றலிடம்தான் இனிமை கேட்கிறேன். தென்பொதிகை மலையிடம்தான் அகில் கேட்கிறேன். அன்புறு நண்பர்கள்! உம்மிடம்தான் ஆற்றல் கேட்கிறேன்; அன்பான ஒத்துழைப்புக் கேட்கிறேன்.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்றே.”

எனப் புறப்பாடல் எழுதிய முடியுடை வேந்தன் நெடுஞ்செழியப் பாண்டியனின் மண்ணில் வளர்ந்த குளிர் தருக்கள் நீங்கள்! உங்களிடம் கோடையிலே இளைப்பாற நிழல் கேட்கிறாள் தமிழகம் அன்னை. தந்திடுவீர்! அந்த உறுதியுடன் உரைவிட்டெழுந்த உடைவாள் போலப் புறப்படுவீர்! நீதிக்குப் புறம்பானவை எங்கிருந்தாலும் களைந்திடுவீர்! நிழல் தரும் தருவென வளர்ந்திடுவீர்!

1970-ஆம் ஆண்டு ஆகஸ்டு 23-ஆம் நாள் மதுரைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவு.

முதற் பதிப்பு : மே 2000