உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

வசதியுள்ளோர் வழி விடுக!

பகுதி 1 · 1 / 2

வசதியுள்ளோர் வழி விடுக!

பல்கலைக்கழக வேந்தர்களே! இணை வேந்தர்களே! துணை வேந்தர்களே! பேராசிரியப் பெருமக்களே! பட்டம் பெறும் பாசமிகு நண்பர்களே!

கயலெழுதிய இமயநெற்றியின் அயலெழுதிய புலியும் வில்லும் நாவலந் தண் பொழின்மன்னர் ஏவல் கேட்பப் பாரர சாண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் மதுரையில்

பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தும் பெருமை மிகு வாய்ப்பு. கல்லூரி கண்டிலேன். ஆயினும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த தமிழின் வளம் சிறிது கண்ட பேற்றினன் என்ற நிலையில் எனக்குக் கிடைத்தது எனும் ஒரு பெரும் நம்பிக்கையில் உம்முன்னால் நிற்கின்றேன். உவகை பூக்கின்றேன்.

சங்கம் கண்டு தமிழ்த் தங்கம் தோண்டிக் கொடுத்த புலவர் உலவிய மண் இது. சிறியெழுந்த புலியானாள் பசுவனைப் பத்தினியாள் கண்ணகி தேவி. செங்கோல் வளைந்ததென்று வேங்கைப் பாண்டியனும் வேட்டையில் சிக்கிய சிறு முயல்போல் ஆனான். அந்தச் சிறப்புமிகு சிலப்பதிகாரக் கதையின் உச்சக்கட்டம் நிகழ்வுற்ற கூடல் மாநகரதனிலே கூடியிருக்கின்றோம். தலையாலங்

கானத்தான் - ஆரியப்படை கடந்தான் - என்றெல்லாம் பட்டம் சுமந்த பாண்டியர்களின் சீமையிலே பல்கலைக் கழகம் வழங்குகின்ற பட்டம் பெறக் குழுமியுள்ள உங்கள் அன்பு நெஞ்சங்களோடு உறவாட வந்திருக்கும், இந்த உடன்பிறப்பின் வாழ்த்துக்களை முதலில் ஏற்றிடுவீர்! பின்னர் ஏற்றிடுவீர் எட்டுத் திக்கும் நமது வெற்றிக் கொடி! ஏற்றிடுவீர் எத்தனையோ பொறுப்புக்களை! எனினும் எத்தகு பொறுப்பினை நீவிர் போற்றிடுவீர் என அறியும் திறனோ எனக்கில்லை.

பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்கள் உணர்வார். உமது உள்ளங்கள் அந்த உண்மையினை உரைத்திடத் தவறா.

உலகின் ஒரு சிறு பகுதியைச் சுற்றிவிட்டு வந்தேன். நான் சென்ற இடமெல்லாம் எனக்கு முன்னே என் தமிழ்த் தாயின் பெருமை சென்றிருப்பதை உணர்ந்தேன். அதனை உரைத்து மகிழ்ந்தனர் ஒரு சில அறிஞர்! மதித்து வரவேற்றனர் தமிழர் மாண்பினைப் புரிந்தோர்! இசை நயமிக்க மொழி என்றனர் - இனிக்கும் தேனமுது இதுவன்றோ எனப் புகழ்ந்தனர்; என் உரை கேட்டல்ல; இன் தமிழாம் பொன்னுவின் மென்மணம் சுமந்த தென்றலை நுகர்ந்து! நமது மொழியின் பெருமை நானிலம் அறிகிறது...

நாற்றிசை நாடோறும் நாகரிக நகரம் பாரிசில்கூட நம் மொழியை உயர்தனிச் செம்மொழி எனக் கூறிக் களித்தனர். நேரிலே கண்டேன். நிறைவினை மனத்தினில் கொண்டேன்.

தமிழ் உயர்ந்தது. தலை சிறந்தது. ஒளிமிக்கது. உயிரானது. எல்லாம் சரி. ஆனால் என் நெஞ்சில் ஏக்கப் பெருமூச்சு ஏன் எழுந்தது? அந்தத் தமிழன்னை ஈன்றெடுத்த செல்வங்கள்; வாழ்வில் வறுமையின் சின்னங்களன்றோ? முகில் முட்டும் மாடங்கள், கூடங்கள் அங்கே கண்டேன்; முழு நிறைவான வாழ்வு என் தமிழர்கள் எல்லார்க்கும் எப்போது கிடைக்கும் என்ற கேள்வியால் எழுந்த நீர்த்துளிகள் அந்த மாட கூடங்களைப் பார்க்கவொட்டாமல் என் விழிகளைத்

தடுத்து விட்டன. வாழ்வின் இனிமையைத் துய்ப்போர் வெளிநாடுகளில்! இதுவும் ஒளிநாடாய் ஆனால் அன்றோ அத்தகையோரை இங்கும் காண இயலும்! அதற்குத் தனியொருவனின் முயற்சி போதுமா? அவனது உழைப்பு, தியாகம், ஆற்றல், அறிவு பயன்படுத்தப்பட்டால் மட்டும் வெற்றி கிட்டுமா? தனி மனிதர்கள் தத்துவங்களைப் போதிப்பர். அறிவுரைகளை வழங்குவர். உலகச் சந்தையில் மலிவாகக் கிடைக்கும் பொருள்கள் தத்துவம் - வேதாந்தம் - அறிவுரைகள்தான்!

தனி மனிதன் வாழ்வின் இத்தீப்புக்காகவே சமுதாயம் உழைப்பதுதான் தர்மம் எனில் அந்தப் பெருங்கூட்டத்தில் கசப்பு எழுதல் இயற்கை. தனி மனிதனும் தன்னைச் சமுதாயத்தில் ஓர் அங்கம் எனக் கருதிடல் வேண்டும். சமுதாயம் என்பது தனி மனிதர்களின் சங்கமே என்பதிலும் தெளிவு தேவை. அந்தத் தெளிவுடன் துணிவையும் கலந்து பணியாற்ற அனைவரும் பயிற்சி பெறின் பொது வாழ்வுப் பல்கலைக் கழகத்தின் ஏற்றமிக்கது! எம்மவர் வாழ்வு எழில்மிக்கது!

எனப் பீடு நடை போட்டு உலா வரலாம்.

உழைப்பு! உழைப்பு! என்கிறீர்களே; அதோ விலா எலும்பு உடைய வண்டியிழுக்கிறானே; இதோ வியர்வை மழையெனக் கொட்ட வேலை செய்கிறானே; கழனியில்! - இவையெல்லாம் உழைப்பன்றோ? இது போதாதோ? இன்னுமா வேண்டும் உழைப்பு? இப்படி நம் உள்ளம் கேட்கின்றது. போதாதுதான்! அவன் உழைப்பைக் குறைக்க நாம் உழைத்தாக வேண்டும்.

அப்படியென்றால்; ஆலையில் மாடெனப் பாடுபடும் தொழிலாளித் தோழனுடன் நாமும் சென்று இணைந்து கொள்வதல்ல; உழைப்பின் அளவை அவனுக்குக் குறைக்கும் வழி!

வேறென்ன செய்திடல் வேண்டும் - தனி மனிதனின் ஒத்துழைப்பால் அதனைச் செய்திடல் இயலாது. நாடே வளமாகிட வேண்டும். அதற்கு

அனைவரும் வெவ்வேறு முனைகளில் உழைத்திடல் வேண்டும். மறுபடியும் உழைக்கத்தானே சொல்லுகிறாய்? கேட்கத் தோன்றும்! ஆனால் சற்று ஆழமாகச் சிந்தித்தால் அனைத்தும் விளங்கும். பலர் பல முனைகளில் உழைப்பதால் - பல வகைகளில் உழைப்பதால் - உழைப்பதற்கு ஒரு சிலரே பிறந்துள்ளனர் என்ற “தலை எழுத்துத் தத்துவம்” தலைமறைவாகிவிடும். கழனியில் இருப்பவனுக்கும்; கடலை வெட்டுபவனுக்கும் வேலை செய்யும் நேரம் போக மிச்சமுள்ள களைப்பாறும் நேரம், களியாட்ட நேரமாகிறது.

ஆலையில், சாலையில், அலுவலகத்தில் பாடுபடுவோர் அனைவருக்கும் உழைப்பின் அளவுக்கு உற்சாகத்தின் அளவும் உயர்கிறது. இதுதான் நாடு வளமாயுள்ளது என அறிவிக்கும் கண்ணாடி. இந்தக் கண்ணாடியில் முகம் தெரிந்தால் போதாது. அனைவர்க்கும் சுகம் வேண்டும் என்ற சமதர்ம அகம்தெரிந்தாக வேண்டும்.

“பயின்றோம் பலகாலம்! பட்டம் பெற்றோம்; இன்று!” இட்டமுடன் கற்றோரும் உண்டு - பெற்றோர்க்குப் பொருள் நட்டமுடன் கற்ற மற்றோரும் உண்டு - எமை நோக்கி ‘உழைப்புத் தேவை!’ என்கிறீர் - ‘தியாகம் புரிந்திடுக’ என அடுத்து மொழிந்திடுவீர் - ஏனய்யா; இதனைக் கேட்கவா யாம் இங்கே கூடியுள்ளோம்? - உம் கூற்றுப்படி உழைக்கின்றோம் - அதற்காகவே பட்டம் பெற்றுள்ளோம் - எல்லாம் சரிதான் எங்கே யாம் பணிபுரிய வாய்ப்பு? வேலை வாய்ப்பு?

தருவீரோ அந்த வாய்ப்புதனை?” என நீவிர் கேட்பீர்; எனக்கு நன்றாகத் தெரியும். கேள்விக்கு நான் விடையளிக்குமுன் சிந்தனைக்குச் சிலவற்றை வைக்கின்றேன்.

விடுதலைபெற்று இருபத்துமூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. திட்டங்கள் மூன்றும் தீட்டிச் செயல்பட்டோம். இடையில் இரண்டொரு ஆண்டுகள் நான்காம் திட்டம் நகரவே இல்லை. ஓரிரு திங்கட்கு முன்பே உயிர் பெற்றுள்ளது. திட்டமிடாக் காலத்தில்

தீயெனப் பரவிய வேலைவாய்ப்பின்மை வறுமையை விதைத்தது. வாட்டமே மிகுந்தது, வான்முட்டப் பேருருக் கொண்டு நிற்கும் வேலையில்லாத் திண்டாட்டப் பேயினை வாள்கொண்டு வீழ்த்திட இந்தியப் பேரரசு இன்றே முனைதல் நன்றாம் என்போம்! அதுவரை பொறுமையாக இருந்திடுக எனச் சொல்வதுதான் பீடிகையோ என எண்ணாதீர்! மாநில அளவில் வேலையின்மையை வீழ்த்திடச் சீரான திட்டங்கள் சிலவற்றை வகுத்திடச் செயல்முறை தொகுத்துள்ளோம். ஆதலின் பட்டம் பெறுவோர் நம்பிக்கை கொள்க!

உயர் கல்வி கற்பது எதற்காக? உடனடிப் பதவியொன்று பெறுவதற்காக! கேள்விக்குப் பதில் இப்படி இருந்தால் நலமன்று. கல்வி அறிவினைப் பெருக்க! ஆற்றலை வளர்க்க! உண்மைதான்; எம் வயிற்றினை - எம் இல்லத்தார் வயிற்றினை வளர்க்க வேண்டாமோ? வினா புறப்படும், வில்லிவிட்டுக் கிளம்பும் கணைபோல! நான் மறுக்கவில்லை. அவர்களுக்குத்தான் நான் சொன்னேன்; மாநில அரசின் முயற்சியால் வேலை வாய்ப்புக்கு வழி உண்டு. நம்பிக்கை கொள்க என்று!

பதவிகள் பெற்று வாழ்வினை நகர்த்திடப் படிப்போர் தொகை பெரிதென்போம்! தொகை சிறிதெனினும் செல்வர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பது வயிற்றுப் பிழைப்புக்கு அல்லவே!

முதற் பதிப்பு : மே 2000