உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

டி.என். இராஜரத்தினம் பிள்ளை நூற்றாண்டு விழா

பகுதி 2 · 2 / 2

நாம் பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறோம், ஒரு கச்சேரியைக் கேட்டுவிட்டு வந்து மறுநாள் இந்த

கச்சேரியைப் பற்றி பேசுகின்ற பொழுது, நல்லா பாடினார், கடைசில இரண்டு மூன்று உருப்படி பாடினார், அதுவும் நல்லா இருந்தது என்பார்கள். ‘உருப்படி’ என்றால் என்ன? சலவைத் தொழிலாளிகள் இடத்திலே எண்ணிப் போடுகிறோமே அப்படி எண்ணிப் போடுகிற பொழுது அவர்களுக்கு எத்தனை உருப்படி போட்டோம் என்று பத்து உருப்படி போட்டேன். பத்து உருப்படி ஒழுங்காகக் கொண்டு வந்து கொடு என்று சலவைத் தொழிலாளியிடத்தில் சொல்கிறோமே அதுமாதிரி உருப்படி என்கிற பெயர்தான் தமிழ்ப்பாட்டிற்கு இருந்தது.

ஒருவேளை இதுதான் உருப்படியானது என்பதற்காகத்தான் தமிழ்ப் பாட்டிற்கு அந்தப் பெயர் அமைந்ததோ என்னவோ எனக்குத் தெரியாது. அன்றைக்கு அதைச் சீற்றத்தோடு எதிர்த்தவர் அதை திருத்தியே தீரவேண்டும் என்று கருதிச் செயல்பட்டவர் - அதை நடைமுறைப்படுத்தியவர் மறைந்த திருவாவடுதுறையார் என்பதை நான் எண்ணிப் பார்த்து பெருமை அடைகிறேன்.

ஒருமுறை அவரோடு சிதம்பரத்திலே இருந்து காஞ்சிபுரம் வரையிலே பயணம் செய்கின்ற பேறு எனக்குக் கிடைத்தது. சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் இசைச்சித்தர், என்னுடைய மைத்துனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். 1944-ஆம் ஆண்டு அவருடைய தங்கை பத்மாவதியை நான் மணந்தவன். 45-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா அவர்களும், பொன்னப்பர் என்ற நண்பரும் சேர்ந்து இசை விழா நடத்தினார்கள். திராவிட இசை விழா என்று அந்த

நிகழ்ச்சிக்குப் பெயர். ஒரு பத்து நாள் அந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்ள டி.என்.ஆரும் அழைக்கப்பட்டிருந்தார். சி.எஸ்.ஜெயராமன் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். நானும் அந்த நிகழ்ச்சிக்கு அவரோடு செல்ல நேரிட்டது. வழியெல்லாம் அவர்கள் இருவரும் பேசிய இசை பற்றிய அந்த விவாதங்களில் முழுமையாக என்னால் கலந்து கொள்ளக்கூடிய ஆற்றல் எனக்கு இல்லா விட்டாலும் கூட அதைக் கேட்டு கேட்டு நான் இன்புற்றேன்.

அந்த ஒரு நாள் பயணத்தில் காஞ்சிபுரம் வரையில் டி.என்.ஆர். அவர்களோடு செல்கின்ற அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர் சென்னைக்குக் குடி வந்தார்கள். சென்னையிலே அடையாறு பகுதியிலே குடியிருந்தபொழுது அடிக்கடி சந்திக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டது. இங்கே நம்முடைய பெரியவர்கள் எல்லாம் எடுத்துக் காட்டியதைப் போல சுதந்திர தின விழா அவர்களுடைய மங்கல இசையோடுதான் தொடங்கியது என்பதையும் அதைப் போலவே திருச்சியிலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முதல் மாநில மாநாடு அவருடைய நாயன இசையுடன்தான் தொடங்கியது என்பதையும் எண்ணிப் பார்க்கின்றபோது நம்முடைய நல்லி குப்புசாமி எடுத்துக் காட்டியதைப் போல இந்த ஐம்பது ஆண்டுக்கால சுதந்திர நாட்டில் இரண்டு பெரிய நிகழ்ச்சிகளிலே டி.என்.ஆர்.

அவர்களுடைய நாயன இசை, தொடக்கத்திற்கு பயன் பட்டிருக்கின்றது என்பதை நம்மால் அறிய முடிகின்றது.

அவர்களுடைய பெயரால் ‘இராஜரத்தினா’ என்கிற விருது இன்றைக்கு முத்தமிழ் பேரவையிலே

ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. அவர்கள் மறைந்த ஆண்டில் நம்முடைய அன்பிற்குரிய சி. சுப்பிரமணியம் அவர்களுடைய தலைமையில் அவருடைய படத்திறப்பு விழா ஆர்.ஆர்.சபாவில் நடைபெற்றது. நான் அன்றைக்கு எதிர்க்கட்சி வரிசையிலே இருக்கின்றவன். அமைச்சராக இருந்தவர் சி. சுப்பிரமணியம் அவர்கள். அந்த விழாவிலே நான் அவரைக் கேட்டுக் கொண்டேன். விழா நடத்தியவர்களையும் கேட்டுக் கொண்டேன். பாரத ரத்னா விருது மேதைகளுக்கு வழங்கப்படுவதைப் போல, இசை மேதைகளுக்கு ‘இராஜரத்தினா’ விருது வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

ஆனால் என்னுடைய கோரிக்கை அப்பொழுது புறக்கணிக்கப்படவில்லை, ஆனால் செயல்படுத்தப்படவில்லை. நானே முதலமைச்சராக வந்த பொழுதுதான் முத்தமிழ்ப்பேரவை சார்பாக இராஜரத்னா விருது சிறந்த இசை வேந்தர்களுக்கு வழங்குவது என்று முடிவெடுத்து அது வழங்கப்பட்டு வருகின்றது என்பதை நீங்களெல்லாம் மிக நன்றாக அறிவீர்கள்.

இப்பொழுதும் கூட முத்தமிழ்ப் பேரவைக்கான கட்டிடம் ஒன்று சென்னையிலே அமைய இருக்கின்றது. அந்தக் கட்டிடத்திற்கு “இராஜரத்தினம் நினைவு மாளிகை” என்று பெயர் சூட்டப்படும் என்று முத்தமிழ்ப் பேரவை விழா நிகழ்ச்சியிலே நான் குறிப்பிட்டு இருக்கின்றேன்.

அது நிறைவேற்றப்படும் என்பதையும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன (பலத்த கைத்தட்டல்) என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம்முடைய ‘ஹம்ஸத்வனி’ செயலாளர் இராமச்சந்திரன் அவர்கள் ஒரு கோரிக்கை வைத்தார். தன்னுடைய வரவேற்பு முடிவுரையில் தரமணியிலே ஒரு 40 மனை அவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்று கேட்டார்கள். ஒரு வேளை அதற்குப் பெயரே தர மணி என்று இருப்பதால் தருவார்கள் என்று எண்ணிக் கொண்டு கேட்டார்களோ என்னவோ எனக்குத் தெரியாது.

தரமணி பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள நிலமெல்லாம் அரசின் சார்பிலோ கூட்டு முயற்சியிலோ நடத்தப்பட இருக்கின்ற பல தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதைப்பற்றி நான் பரிசீலிக்கின்றேன். தொழிற்துறை செயலாளரிடத்திலும் மற்றும் தலைமைச் செயலாளரிடத்திலும் அதைப் பற்றி பரிசீலிக்கின்றேன். மேடையிலே உறுதி அளிக்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். மேடையிலே அளிக்கக்கூடிய உறுதி நிச்சயமாகப் பரிசீலிப்பேன் என்கிற அந்த உறுதியைத்தான் அளிக்க முடியும்.

ஏனென்றால் என்னவென்று தெரியாமலே உறுதி அளித்து விட்டு பிறகு உறுதியை நிறைவேற்றாவிட்டால் சிலரது தேர்தல் நேரத்து வாக்குறுதியாக ஆகிவிடும் என்பதால் நான் அந்த உறுதியை அளிக்க இப்பொழுது துணியவில்லை.

நம்முடைய நண்பர் நல்லி குப்புசாமிச் செட்டியார் அவர்கள் “இசைக்காக ஒரு பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். இசைக்கென்று தனி பல்கலைக் கழகம் தேவையா? என்பது கேள்விக்குரியது. ஏனென்றால், இப்பொழுதே சில பல்கலைக்கழகங்களில் இசைக்காக தனித் துறைகள் இருக்கின்றன.

குறிப்பாக நம்முடைய எம்.ஏ.எம். அவர்கள் பொறுப்பேற்று நடத்துகின்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அங்கே இசைத்துறை ஒன்று இருக்கின்றது. அதிலே நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த இசைத்துறையில் ஏற்கனவே தண்டபாணி தேசிகர் அதற்குத் தலைவராக இருந்திருக்கிறார். சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளை தலைவராக இருந்திருக்கிறார். எம்.எல். வசந்தகுமாரி அவர்கள் அதற்குத் தலைவியாக இருந்திருக்கின்றார். சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தலைவராக இருந்திருக்கின்றார். எனவே தொடர்ந்து அது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஒரு பல்கலைக் கழகம் அதற்குத் தனியாக இப்பொழுது தேவையா என்பதும் - அந்தப் பல்கலைக் கழகத்தை உருவாக்குகின்ற வசதி வாய்ப்புகள் ஒரு வேளை வழங்கப்பட்டாலும் கூட, அது எப்படி செயல்படும் என்பதெல்லாம் ஆராயத்தக்க ஒன்றாகும். இல்லை அமைத்துத்தான் தீரவேண்டும் என்றால் கொடை வள்ளல் நல்லி செட்டியார் அவர்கள் அவரே ஒரு பல்கலைக் கழகத்தை அமைத்தால் (கைத்தட்டல் - சிரிப்பு) அதனுடைய அடிக்கல் நாட்டு விழாவிற்கும், தொடக்க விழாவிற்கும் நான் வரத் தயாராக இருக்கின்றேன் என்பதை இங்கே குறிப்பிட்டு, டி.என்.ஆர்.

அவர்களுடைய அருமை, பெருமைகளையும், அவருடைய நற்பண்புகளையும், அதே நேரத்தில் அவருடைய வாழ்க்கையின் இரு பக்கங்களையும் நம்முடைய செம்மங்குடி அவர்கள் இங்கே எடுத்துக்காட்டினார்கள்.

தமிழ்க்குடிமகன் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள். செம்மங்குடி அவர்களுக்கு 90 வயது. அவர்கள் ஒரு தந்தை நிலையில், பாட்டனார் நிலையில்

இருந்து இவைகளையெல்லாம் இங்கே எடுத்துக் கூற முடியும். எனக்கும் 75 வயது. இருந்தாலும்கூட என்னை விட இளையவர்களுக்கு எடுத்துக் கூறிக்கொண்டு தான் இருக்கின்றேன். இதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

டி.என்.ஆர். அவர்கள் இன்னும் பல ஆண்டுக் காலம் வாழ்ந்து மறைந்து இருக்க வேண்டியவர். 58-ஆம் வயதில் ஒரு மணி விழா கூட நடத்தாமல் அவர் மறைந்து போய் இருக்கின்றார் என்றால் என்ன காரணம்? அதேபோன்று கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் எப்பொழுது மறைந்தார் என்று கருதுகின்றீர்கள்? - பொன்விழா கூட நடைபெறாமல் 49-ஆவது வயதிலேயே கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் மறைந்தார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நாம் இசையை வளர்க்கிறோம், மேதைகளாக இருக்கின்றோம், எல்லோரையும் மகிழ்விக்கின்றோம். ஆனால் அதற்கான வலிமை நம்முடைய உடலிலே தேடிக் கொள்ள வேண்டும். நம்மை நாமே அழித்துக் கொள்ளக் கூடாது. நம்மை நாமே அழித்துக் கொள்வது என்பது கலையை அழிப்பது, சமுதாயத்தை அழிப்பது, இந்த சமுதாயத்துக்குச் செய்ய வேண்டிய சேவையை நாமே குறைத்துக் கொள்கிறோம் என்பதை உணர்ந்தால் நம்மை நாமே அழித்துக் கொள்கின்ற காரியத்திலே யாரும் ஈடுபட மாட்டார்கள்.

அதுவும் குறிப்பாக இசை உலகத்தில் - அதிலும் குறிப்பாக நாயனக் கலைஞர்கள் அதிகம் சிரமப்பட்டு அந்த இசைப் பயிற்சியைப் பெற வேண்டி இருக்கின்றது. அதிகச் சிரமப்பட்டு அந்த இசை நிகழ்ச்சியிலே கலந்து கொள்ளவேண்டி இருக்கின்றது.

எனவே அவர்களுக்கு அந்த களைப்பு ஆற வேறு ஏதோ தேவைப்படுகின்றது. அதை டாக்டர்கள் சொல்லப்படி ஒரு மருந்தாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அதை விருந்தாக பயன்படுத்தினால் (கைத்தட்டல்) இதே போன்ற முடிவுகளைத்தான் நாம் காணநேரிடும்.

நான் சொல்ல எண்ணிக் கொண்டிருந்தேன். சொல்லலாமா என்று யோசித்து உட்கார்ந்து இருந்தேன். ஆனால் எனக்குத் தைரியம் ஊட்டுகின்ற வகையில் நம்முடைய பெரியவர் செம்மங்குடி அவர்கள் அந்த அறிவுரையை இசை மேதைகளுக்கெல்லாம் வழங்கி இருக்கின்றார். இதை, வளர்ந்துகொண்டு இருக்கின்ற இசைவாணர்களும் இசைக் கலைஞர்களும், வளர்ந்து விட்ட இசைக் கலைஞர்களும் தங்களுக்காக அல்ல சமுதாயத்திற்காக, நாட்டிற்காகப் பின்பற்ற வேண்டும்.

இந்த வகையில் டி.என்.ஆர். அவர்களின் படம் நமக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வாழ்க டி.என். இராஜரத்தினம் அவர்களின் புகழ் என்று கூறி விடைபெறுகிறேன்.

27-8-98 அன்று டி.என். இராஜரத்தினம் பிள்ளை நூற்றாண்டு விழாவில் ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000