டி.என். இராஜரத்தினம் பிள்ளை நூற்றாண்டு விழா
பகுதி 1 · 1 / 2
டி.என். இராஜரத்தினம் பிள்ளை நூற்றாண்டு விழா
நம்முடைய சங்கீத கலாநிதி செம்மங்குடி அவர்கள் உரையாற்றி விட்டு தன்னுடைய உரையின் இறுதிப் பகுதியில் முத்தையா பாகவதர், சங்கர நாராயணர் இருவரையும் ஒப்பிட்டு ஒரு சிறுகதையை, நிகழ்ச்சியை சொன்னார்கள். பேச்சுக்கலையிலே வேண்டுமானால் அவர்கள் சங்கரநாராயணனாக இருக்கலாம். ஆனால் இசைக் கலையில் அவர் முத்தையா பாகவதர், நான் சங்கர நாராயணர் என்பதை அவருக்கு, நான் நினைவூட்ட கடமைப் பட்டிருக்கிறேன். (கைத்தட்டல்)
1898-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 27-ஆம் நாள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகில் உதித்த இசை மேதை நாதஸ்வரச் சக்கரவர்த்தி, டி.என். இராஜரத்தினம் அவர்கள் தம்முடைய 58-வது வயதிலே நம்மை விட்டுப் பிரிந்திருக்கின்றார்கள். 1956-ஆம் ஆண்டு அவர்கள் இயற்கை எய்தினார்கள். நூறாண்டுகளுக்கு முன்பு பிறந்த அவருடைய நூற்றாண்டு விழாவை அதே குறிப்பிட்ட தேதியில் நடத்தியதாக வேண்டும் என்று நம்முடைய ‘ஹம்ஸத்வனி’ செயலாளர் இராமச்சந்திரன் அவர்கள் முனைந்து முயற்சி எடுத்து அவர்
என்னிடத்திலே தேதி கேட்க வந்தபோது, இதையே குறிப்பாகச் சொல்லி, இதே நாளில் இந்த விழாவை நடத்த வேண்டும் என்று எடுத்துக்காட்டி அவருடைய அந்த ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது மாத்திரம் அல்ல; எனக்கும் அந்த ஆசை இருந்த காரணத்தினால் இந்த நிகழ்ச்சியை இதே நாளில் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன்.
இப்பொழுது கூட வள்ளுவர் கோட்டத்தில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களுடைய நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. ஆனால் 95-ஆம் ஆண்டு நடைபெறிருக்க வேண்டிய நூற்றாண்டு விழா 98-இல், மூன்று ஆண்டுகாலம் கழித்துத்தான் நடைபெறுகிறது. இப்படி ஆண்டுக் கணக்கிலேயே காலங்கடந்து விழாக்கள் நடைபெறும்போது, நாள் கணக்கிலேகூட காலம் கடக்கக் கூடாது, அதே நாளில் இந்த விழா நடைபெற வேண்டுமென்று அவருடைய குடும்பத்தார் கூட எண்ணியிருக்கமாட்டார்கள்.
அந்த இசைக் குடும்பத்தைச் சேர்ந்த நம்முடைய செயலாளர் இராமச்சந்திரன் அவர்கள் செய்திருப்பது பாராட்டுக் குரியது.
டி.என். இராஜரத்தினம் அவர்களை எல்லோரும் அறிந்ததைப்போல அல்ல, மிகவும் நெருங்கி அறிந்தவர்களிலே நான் ஒருவன். நம்முடைய செம்மங்குடி அவர்கள் இசைத்துறையிலே டி.என்.ஆர். அவர்களோடு கொண்டிருந்த நட்பு, உறவு, தொடர்பு இவைகளைப் பற்றியெல்லாம் இங்கே மிக விரிவாக எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். அவர் நிகழ்ச்சிகளுக்கு வந்து சேருகிற வரையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பவர்களுக்குச் சந்தேகம்தான் என்று குறிப்பிட்டார்கள்.
அரசியலிலே கூட எங்கள் தலைவர் அண்ணா அவர்கள் அப்படித்தான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு
செய்தவர்களைக் காக்க வைத்துவிடுவார். வருவாரா? வரமாட்டாரா? என்று நாங்கள் எல்லாம் எண்ணித் தவித்துக் கொண்டிருக்கும் போது, காலம் தாழ்ந்து வந்து சேருவார். சில நேரங்களில் வராமலே கூட இருந்து விடுவார். எப்படி அரசியலிலே அண்ணா அவர்கள் ஆரம்பக் காலத்தில் இருந்தார்களோ அதைப் போல இசைத் துறையிலே இராஜரத்தினம் அவர்களும் இருந்தார்கள் என்பதை நான் எண்ணி எண்ணிப் பார்த்து நண்பர்களிடத்திலே பேசியதுண்டு.
ஆனால் செம்மங்குடி அவர்கள் எடுத்துக் காட்டியதைப் போல எத்தனைப் பேர் காத்திருந்து ஏமாந்திருந்தாலும் கூட அடுத்து வரும் நிகழ்ச்சியிலே வந்து ஒரு ஐந்து நிமிட நேரம் தன்னுடைய இசைத் திறமையைக் காட்டினால் அனைத்தையும் மறந்து விடுவதைப்போலத்தான் அண்ணா அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வராமல் இருந்து அடுத்தொரு நிகழ்ச்சிக்கு வந்து ஒரு ஐந்து நிமிடம் பேசினால், அவர் வராமல் அவர் மீது ஏற்பட்டிருந்தக் கோபத்தை எல்லாம் அவருடைய தம்பிமார்கள் மறந்து விடுவார்கள்.
அந்த அண்ணா அவர்கள், டி.என். இராஜரத்தினம் அவர்களைப் பற்றி பாராட்டியதை நாங்கள் எல்லாம் செவி குளிரக் கேட்டு சிந்தை மகிழ்ந்திருக்கின்றோம். சென்னை மாநகரத்தில் எஸ்.எஸ்.பி. லிங்கம் என்கிற அண்ணா அவர்களுக்கு மிக நெருங்கிய நண்பர், எங்கள் இயக்கத்திலே பற்றுக் கொண்டவர். அவர் இல்லத்திலே நடைபெற்ற ஒரு காதணி விழா. அந்த விழாவில் இராஜரத்தினம் அவர்கள் நாயனம் வாசித்தார்கள். ஒருமணி நேரம்தான் வாசிக்கப் போகிறேன் என்று சொன்னார்கள், மூன்று மணி நேரத்திற்கு மேலாக
நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலே அண்ணா அவர்கள் அந்தக் குழந்தைகளை வாழ்த்தி விட்டு டி.என்.ஆர். அவர்களுடைய நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது சொன்னார்கள் -
“மேல் நாட்டுக்காரர்கள் ஆர்க்கெஸ்ட்ரா ஒவ்வொரு வாத்தியங்களில் வாசிக்கும் பொழுது கேட்கின்ற அந்த இசை இன்பம் வேறு; அவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வாசிக்கும் பொழுது கேட்கின்ற இசை இன்பம் வேறு; அதைப்போல தொலைவிலே இருந்து கேட்டால் இராஜரத்தினம் வாசிப்பது சில நேரங்களில் குழலோசை போல இருக்கும். சில நேரங்களில் நாயனமாகத் தெரியும். சில நேரங்களில் ஆர்க்கெஸ்ட்ரா குழுவினுடைய இசையாகத் தெரியும். இந்தத் திறமை உலகத்திலே வேறு எந்த சங்கீத மேதைக்கும் கிடையாது, இராஜரத்தினம் ஒருவருக்குத்தான் உண்டு”
என்று அண்ணா அவர்கள் அன்றைக்கு நிகழ்ச்சியிலே குறிப்பிட்டார்கள்.
அப்படி எல்லா வாத்திய ஒலிகளையும் ஒழுங்காக இணைத்து, மகிழத்தக்க அளவிற்கு, இரசிக்கத்தக்க அளவிற்கு வழங்கிய பெருமை இராஜரத்தினம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் ஒரு நடுத்தர சாதாரண குடும்பத்திலே பிறந்தார்கள். இசைக் குடும்பம் என்பது அந்தக் காலத்திலே சாதாரண எளிய குடும்பங்கள்தாம். பெரும் பணக்காரக் குடும்பங்கள் அல்ல. அது மாத்திரம் அல்ல. அந்தச் சமுதாயத்திற்குப் பெரிய மதிப்பு மரியாதை இவைகள் எல்லாம் கூட இல்லாத காலகட்டம்; மற்றவர்கள் பேசினால் தவறாகப்படும், நானே பேசுவதால் அது தவறாக இருக்காது என்பதால் நானே பேசுகின்றேன்.
எவ்வளவு பெரிய வித்துவானாக இருந்தாலும் கூட சட்டை அணிந்து அவர்கள் நிகழ்ச்சியிலே கலந்து கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால் மேல் துண்டு கூட அணிந்து நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்ள இயலாது. பெரிய நாயன வித்துவான்களாக இருந்தாலும், தவில்வித்துவான்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர்களெல்லாம் அந்தக் காலத்து வழக்கப்படி குடுமி வைத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.
இவைகள் அத்தனையையும் மாற்றி ‘குடுமி வைத்துக் கொண்டால்தான் நாயனம் வாசிக்க முடியுமா? கிராப்பு வைத்துக் கொண்டு வாசிக்கிறேன் பார்’ என்று கிராப்பு வைத்துக் கொண்டு நாயனம் வாசித்தார். சட்டை போட்டுக் கொண்டு நாயனம் வாசித்தால் ஏன் அந்த நாதம் நாயனத்தில் வராதா, ஆலாபனம் செய்ய முடியாதா? ஆடைகளில் தானா இருக்கிறது ஆலாபனம் என்று கேட்டு சட்டை போட்டுக் கொண்டு நாயனம் வாசித்தார். காலணிகூட அணிந்து கொள்ளக் கூடாது என்று இருந்த அந்தக் கால கட்டத்தில் அவர் கால்களில் பூட்ஸ்களே போட்டுக் கொண்டு நாயனம் வாசித்தார்.
அது மாத்திரம் அல்ல; மகாராஜாக்கள் தர்பாரிலே அவர் நாயனம் வாசிக்கிற போது மகாராஜாவைப் போலவே உடை அணிந்து அவர்களைப் போலவே தலைப்பாகை அணிந்து, அவர்களைப் போலவே ஷேர்வானி அணிந்து, உயர்ந்த அலங்கார ஆடைகளை அணிந்து அவர்களுக்கு நிகராக மேடையிலே அமர்ந்து வாசித்த பெருமை டி.என். இராஜரத்தினம் அவர்களுக்கே உண்டு என்பதை நான் மிகுந்த பெருமையோடும், பெருமிதத்தோடும் இங்கே கூறிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
இந்த ஏற்றத் தாழ்வு எனக்கு எப்படித் தெரியும் என்றால், நானே ஒருமுறை மியூசிக் அகடாமியில் பேசும் போது குறிப்பிட்டிருக்கின்றேன். நம்முடைய பெரியவர் செம்மங்குடி அவர்கள் எடுத்துக் காட்டியதைப் போல இளம் வயதில் நான்கூட பாடல் கற்றுக் கொண்டு அதைத் தொடர்ந்து நாயன வித்துவானாக ஆக வேண்டுமென்று என்னுடைய தந்தையாரால் என்னுடைய உறவினர் வீட்டிலே ஒப்படைக்கப்பட்டேன்.
ஆனால் நான் அந்தப் பயிற்சியை ஒரு மூன்று மாத காலத்திற்குப் பின்பு தொடரவில்லை. திரும்பி வீட்டிற்கு வந்து இனி நான் இந்தப் பயிற்சி பெற முடியாது என்று சொன்னேன், திருக்குவளை கிராமத்தில். என் தந்தை ஆத்திரத்தோடு ஏன் என்று கேட்டார்? நான் சொன்னேன் “எனக்குப் பயிற்சி கொடுக்கின்ற வித்துவான் இந்த ஊரில் உங்களைப் போல இன்னொரு பெரிய வித்துவான், அவர் இந்த ஊரிலே மடாலயத்திலே கார்வார் வேலை பார்க்கின்ற ஒருவர் தெருவிலே வந்தால் தன்னுடைய தோளிலே போட்டிருக்கின்ற துண்டை எடுத்து இடுப்பிலே கட்டிக் கொள்கிறார்.
காலில் மாட்டி இருக்கின்ற செருப்பைக் கழற்றி வைத்து விட்டு நின்று வணங்குகிறார். நானும் பெரிய வித்துவானாக வந்தால் இதைத்தானே செய்ய வேண்டியிருக்கும், எனவே என்னால் இந்தப் பயிற்சியைத் தொடர முடியாது” என்று கூறினேன். அதற்குப் பிறகுதான் என்னைத் திருவாரூருக்குப் படிப்பதற்கு அனுப்பி வைத்தார்கள்.
இல்லாவிட்டால் நானும் இன்றைக்கு நம்முடைய செம்மங்குடி அவர்களால் நல்ல சிறந்த நாயன வித்துவான் என்கிற அந்தப் பாராட்டுரையைப் பெற்றிருக்க முடியுமோ என்னவோ எனக்குத் தெரியாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்படிப்பட்ட சுயமரியாதையை
உணர்வு எனக்கு ஏற்பட்டது இளமைக் காலத்திலே. அந்த உணர்வுக்கு பட்டை தீட்டி அதைச் செயல்படுத்தி நடத்திக் காட்டி தன் வழியிலே மற்ற வித்துவான்கள் இருக்க வேண்டும் என்று எல்லோரையும் அப்படி இருக்குமாறு செய்த அந்தப் பெருமை திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம் அவர்களுக்கு உண்டு என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேனேயல்லாமல் வேறல்ல.
அவர்கள் மகா வித்துவானாக தமிழகத்திலே உலவிய அந்த காலகட்டத்திலேதான் இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், பேராசிரியர் கல்கி, மூதறிஞர் இராஜாஜி, தந்தை பெரியார், திரு.வி.கல்யாண சுந்தரனார், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் எல்லாம் தமிழ் இசைக்குத் தமிழகத்திலே மதிப்புத் தர வேண்டும், தமிழ் இசையைப் பரப்ப வேண்டும் என்கிற ஒரு முடிவை எடுத்து அதற்கான பிரச்சாரத்திலே ஈடுபட்டார்கள்.
அந்தக் காலத்திலே அதற்கு மிக உதவியாக இருந்து உறுதுணையாக இருந்தவர்களில் மறைந்த எம்.கே. தியாகராஜ பாகவதர், தண்டபாணி தேசிகர், டி.என். இராஜரத்தினம் பிள்ளை இவர்களெல்லாம் தலை சிறந்தவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
டி.என்.ஆர். அவர்கள் பலமுறை சொல்லியிருக்கின்றார்கள்: “ஒரு கச்சேரியில் ஒரு இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாட்டுப் பாடு என்று சொல்வதை விட்டுவிட்டு ‘ஒரு உருப்படி பாடு, ஒரு சில்லறை பாடு’ என்று சொல்கின்ற அளவிற்கு தமிழ்ப் பாடல்களுடைய தமிழ்ச் சாகித்தியங்களுடைய தரம் தாழ்ந்து விடலாமா” என்று வேதனையோடு கேட்டவர் டி.என்.
இராஜரத்தினம் அவர்கள் ஆவார்கள்.
