திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
பகுதி 2 · 2 / 2
அந்த வகையிலே பொறியியல் கல்லூரியிலே பயின்று இன்று பட்டம் பெற்றுச் செல்கின்றவர்கள் - தம்பி துரைமுருகன் இங்கே குறிப்பிட்டதைப்போல தங்களுடைய வழித்தோன்றல்களையும் பயிற்சி பெறுவதற்கு இதே கல்லூரிக்கு அனுப்பவும் கூடும். அல்லது வேறு பல கல்லூரிகளுக்கு அனுப்பவும் கூடும். யாராக இருந்தாலும் இந்தப் பட்டங்களைப் பெறுகின்ற பொறியாளர்களாக இருந்தாலும் அடுத்துத் தொடர்ந்து
பெறவிருக்கின்ற பொறியாளர்களாக இருந்தாலும் அவர்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்வது, இந்த அருமையான, திறமையான-நீங்கள் பெற்றுள்ள ஆற்றலை உங்களுடைய நல்வாழ்வுக்காக-இல்வாழ்வுக்காக பயன்படுத்துவது என்பது தவிர்க்க முடியாதது என்றாலும்கூட சமுதாய வாழ்வுக்காக, சமுதாய ஏற்றத்துக்காக, சமுதாய முன்னேற்றத்துக்காக, நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
பொறியியல் துறை இந்த அளவிற்கு இன்றைக்கு உயர்ந்திருக்கிறது. கணினி என்கிற அளவிற்கு சாப்ட்வேர் மென்பொருள் என்கிற அளவிற்கெல்லாம் இந்தத் துறை இன்றைக்கு உயர்ந்திருக்கிறது. இது வளராத கால கட்டத்தில் கல்லணை கரிகால் சோழனால் எழுந்தது. தஞ்சையில் பிரகதீஸ்வரர் ஆலயம் இராஜராஜசோழனால் தோன்றியது. அப்போதெல்லாம் இந்த விஞ்ஞானப் புதுமை இல்லை. இத்தகைய வாய்ப்பு வசதிகள் இல்லை. இவைகள் இல்லாத காலத்திலேயே அவைகளை எல்லாம் திறம்பட கட்டி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இவைகள் எல்லாம் அழுத்தம் திருத்தமாக இன்றைக்கும் நின்று உலகத்திலுள்ள மக்களுக்கெல்லாம் சுற்றுலா இடங்களாகப் பயன்படுகின்றன.
அதிசயிக்கத்தக்க வகையிலே அவைகள் இன்றைக்கு ஒளிவிட்டுக் கொண்டிருக்கின்றதென்றால் அந்தக் காலத்திலேயே பொறியியல் துறை எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்று இருந்தது என்பதை நாம் காண முடியும்.
பொறியியல் துறையிலே உள்ளவர்களை நான் ஒன்று கேட்டுக்கொள்வேன். நீங்கள் தவறாகக் கருதக் கூடாது. எந்த ஒரு கட்டிடமானாலும், அணையானாலும் அல்லது ஓர் ஆற்றுப்படுகையானாலும், ஆற்றங்கரையை உயர்த்துவதானாலும் ஒரு கண்மாயை ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல் ஆனாலும் ஒரு கல்லூரியைக் கட்டுவதானாலும், ஏன் ஒரு கோபுரத்தை அமைப்பதானாலும்
எல்லாவற்றிலும் நாம் நம்முடைய திறமையைக் காட்டுவது மாத்திரமல்ல; வாய்மையையும் காட்ட வேண்டும்.
என்னதான் திறமை இருந்தாலும்கூட வாய்மை இல்லாவிட்டால் பொறியியல் துறையில் கற்ற பாடத்தை நாம் மறந்தவர்கள் ஆவோம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால், ஒரு மருத்துவர் பொய் சொன்னால், தவறு இழைத்தால் ஒன்றிரண்டு உயிர்கள்தாம் போகும். ஒரு பொறியாளர் தவறிழைத்தால், பொய் சொன்னால் நூற்றுக்கணக்கான உயிர்கள் போகும்.
உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் மருத்துவர் இரண்டு மூன்று பேருக்கு நோய்க்கான சிகிச்சை செய்து அதிலே தவறிழைத்தால் - அதிலே இறுதியாக முடிவுறுகிறவர்களின் எண்ணிக்கை ஒன்றாக இரண்டாக அல்லது ஐந்து ஆறாக இருக்கும். ஆனால் ஒரு பெரிய மண்டபத்தைக் கட்டி தாம் அதை கெட்டியாகக் கட்டியிருக்கிறோம் என்று கூறி ஒப்பந்தக்காரரோ ஒருவர் ஒப்பந்தம் செய்துகொண்டு கலக்க வேண்டிய மண்ணையும், சிமெண்டையும் கலக்காமல்; அளவுக்கு மீறி மண்ணையும் குறைவாக சிமெண்டையும் கலந்து கட்டினால் அந்த மண்டபம் இடிந்து விழுகிற நேரத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு அந்தப் பொறியாளர் பொறுப்பாக வேண்டியிருக்கும்.
எனவேதான் இந்தத் துறையிலே மிக முக்கியமாக நான் சொல்ல வேண்டியது நன்றாகக் கட்டியிருக்கிறோம் என்று பொய் சொல்லக் கூடாது.
பொய் சொல்லக்கூடாது என்பதற்கு எத்தனையோ கதைகள் உண்டு. அரிச்சந்திர புராணமே இருக்கிறது. அவ்வளவு ஏன்; திருவண்ணாமலை புராணமே இருக்கிறது. திருவண்ணாமலையில் ஒருநாள் பிரம்ம தேவனுக்கும் விஷ்ணு பெருமாளுக்கும் சண்டை வந்தது, யார் பெரியவர் என்று. விஷ்ணு சொன்னார், “நான்தான் பெரியவர்”, என்று. பிரம்மா சொன்னார், “நான்தான்
பெரியவர்”, என்று. இவர்கள் சண்டை போடுவதைப் பார்த்த பரமசிவன் அவர்களிடத்தில் வந்து, “என்ன சண்டை போடுகிறீர்கள்?” என்று கேட்டார். “யார் பெரியவர் என்பதிலே சண்டை” என்றார்கள். “இதற்கு ஏன் சண்டை போடுகிறீர்கள். நான் உபாயம் சொல்கிறேன் அதை நீங்கள் செய்வீர்களா?”
என்று கேட்டார். அதற்கு இவர்கள் “என்ன?” என்று கேட்டார்கள். “என்னுடைய தலை முடியையும் காலடியையும் யார் முதலில் பார்த்துவிட்டு வந்து முதலில் என்னிடத்திலே சொல்கிறார்களோ அவர்கள்தான் பெரியவர், உயர்ந்தவர்,” என்று பரமசிவன் சொன்னார்.
உடனடியாக மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து சிவனுடைய காலடியை பார்ப்பதற்காகப் பூமியைக் குடைந்து கொண்டு சென்றார். காரணம் பரமசிவன் வானத்திற்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்து நின்றார்.
பிரம்மதேவன் சிவனுடைய தலைமுடியைப் பார்ப்பதற்காக அன்னபட்சி உருவமெடுத்து மேலே பறந்தார். ஒருவர் மேலே பறக்கிறார், தலையைக் காண. இன்னொருவர் கீழே குடைகிறார் பன்றி உருவத்தில் காலடியைக் காண.
இப்படி இருவரும் முயற்சித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் பரமசிவன் தலையில் இருந்து ஒரு தாழம்பூ மேலே இருந்து கீழே விழுகிறது. அதை அன்னபட்சி உருவத்தில் இருந்த பிரம்மா பார்த்துவிட்டு, “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அதற்கு “பரமசிவன் தலையிலிருந்து வருகிறேன்” என்று சொன்னது தாழம்பூ.
இதுதான் சரி என்று அந்தத் தாழம்பூவை அன்னபட்சி வடிவத்தில் உள்ள பிரம்ம தேவன், “நீ தலையிலேதானே இருந்தாய்?” என்று கேட்க; அதற்கு “ஆமாம்” என்று தாழம்பூ சொன்னது. “அப்படியானால் சிவனிடத்திலே ஒரு பொய் சொல்லிவிடு. நான் உன்னை தலையிலே பார்த்ததாகச் சொல்லிவிடு” என்று பிரம்மா சொன்னார்.
“சரி” என்று சொல்லிவிட்டு தாழம்பூ சிவனிடத்திலே வந்து “நான்தான் தங்கள் தலையில் இருந்தேன் பிரபு. அப்போது பிரம்மா வந்தார். என்னைப் பார்த்தார்” என்று தாழம்பூ சாட்சியம் சொன்னது.
ஆனால் சிவன் அந்த உண்மையைக் கண்டுபிடித்து விட்டார். உண்மையைக் கண்டுபிடித்து விட்ட காரணத்தால் பொய் சொன்ன பிரம்மாவுக்கு பரமசிவன் விட்ட சாபத்தால் இன்னும் அவருக்கு எங்கும் கோயிலே கிடையாது. இப்போது கூட பாருங்கள், எல்லா சாமிக்கும் கோயில் இருக்கும். பிரம்மாவுக்குக் கோயில் இருக்காது.
அதைப்போல தாழம்பூவுக்கு ஒரு பூஜைக்கு உரிய பூவாக இனிமேல் இருக்கக்கூடாது என்று சாபம் விட்டார். எல்லாப் பூவும் பூஜைக்கு உரிய பூவாக இருந்தாலும் தாழம்பூவுக்கு அவ்வளவு மணம் இருந்தாலும்கூட அது பூஜைக்கு உரிய பூவாக இல்லை. பொய் சொன்ன காரணத்தினால் பிரம்மாவுக்கும் இப்படிப்பட்ட சாபம் அன்றைக்கே கிடைத்தது. இப்படியொரு கதை!
எனவே பொய் சொன்னால் என்ன தண்டனை என்பதை உணர்த்துகின்ற இந்தப் பூமி திருவண்ணாமலை பூமி. அந்தப் பூமியிலிருந்து பொறியாளர்களாகச் செல்கின்ற நீங்கள் பொய் என்பதை கனவும் நினைக்காமல், சிந்திக்காமல் பொய்யின் காரணமாக என்னென்ன ஆபத்துக்கள் நிகழும் என்பதை எல்லாம் எண்ணிப் பார்த்து உங்கள் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால் பொறுப்பான ஒரு பணி உங்களிடத்திலே இன்றைக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நான் வழங்கியது பட்டம் மாத்திரமல்ல; பரிசு மாத்திரமல்ல; நான் வழங்கியது இந்த நாட்டு மக்களின்
தலை எழுத்தை உங்களின் கைகளிலே ஒப்படைத்திருக்கிறேன் என்ற அளவிலேதான் இது வழங்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்து அந்த வகையில் செயலாற்ற வேண்டும்.
அப்படிச் செயலாற்றுகின்ற காரணத்தால் அருணை பொறியியல் கல்லூரிக்கு மேலும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும். “எந்தக் கல்லூரியில் படித்தாய்?” என்றால் தம்பி வேலு உருவாக்கி நடத்துகின்ற அருணை பொறியியல் கல்லூரியிலே படித்தேன் என்று சொல்வீர்களேயானால் அது உங்களுக்கும் புகழ், வேலுவுக்கும் புகழ். அதன் காரணமாக எனக்கும் புகழ் என்று கூறி உங்களையெல்லாம் வாழ்த்துகிறேன்.
14-7-98 அன்று திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரை
