உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

பகுதி 1 · 1 / 2

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

அருணை பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிலும் இங்கே இன்று அண்ணா கணிப்பொறி ஆராய்ச்சி மையக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதிலும் உங்களில் 130க்கும் மேற்பட்டவர்கள் இன்று பட்டம் பெறுகிறார்கள் என்றாலும் அவர்களில் அடையாளமாகச் சிலருக்குப் பட்டங்களை வழங்கியதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.

நான் நீண்ட நேரம் இங்கே உரையாற்றுகின்ற அளவிற்குச் சூழ்நிலை இல்லை. காரணம் இன்னொரு நிகழ்ச்சி எனக்கு இருப்பது உங்களுக்குத் தெரியும். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பவர் கு.பிச்சாண்டி என்பதும் உங்களுக்குத் தெரியும். அதனால்தான் மற்றவர்கள் எல்லாம் பத்து நிமிடம் பேசியபோது, அவர் மாத்திரம் விரைவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, தலைவர் வரவேண்டும் என்பதற்காக ஓரிரு நிமிடங்களில் தன்னுடைய உரையை இங்கே நிறைவு செய்தார்.

இங்கே அமர்ந்திருக்கின்ற உங்களையெல்லாம் காணும் போது எதிர்காலத் தமிழகத்தை, சமுதாயத்தைப் பற்றிய என்னுடைய நம்பிக்கை வலுவாகிறது. அந்த மன

ஆறுதலோடு உங்களையெல்லாம் பாராட்டவும், வாழ்த்தவும், நான் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுடைய தேவை அதிகமாகிக் கொண்டிருக்கிற கால கட்டத்தில் என்னுடைய அருமைத் தம்பி வேலு அவர்கள் இந்தப் பொறியியல் கல்லூரியைத் தொடங்கி, தொடங்கியதோடு மாத்திரமல்ல; ஆறேழு ஆண்டுக்காலத்தில் அற்புதமான வளர்ச்சிகளைக் காட்டி புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாக இதனை இன்று சிறந்தோங்கச் செய்திருக்கிறார் என்பதை எண்ணி எண்ணி அவரைத் தம்பியாகப் பெற்றிருப்பதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.

இன்றைய நிகழ்ச்சிக்கு நான் வரவேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தினார். முதலில் தவிர்க்க எண்ணினேன். வந்து உங்களையெல்லாம் பார்த்த பிறகுதான், இந்த விழாக் கோலம் கண்டபிறகுதான் ஒளி பொருந்திய உங்களுடைய முகங்களையெல்லாம் கண்ட பிறகுதான், முதலில் தவிர்க்க நினைத்தது தவறு என்பதை இன்றைக்கு உணர்கிறேன். அந்த அளவிற்கு நான் பூரிப்பும், புளகாங்கிதமும் கொள்கின்ற நிலையில் மிக அற்புதமான விழாவை இங்கே நடத்தியிருப்பது மாத்திரமல்ல; இந்தக் கல்லூரி எல்லா வகையிலும் இன்றைக்கு வளர்ந்து வருகிற பல்வேறு கல்லூரிகளோடு போட்டி போட்டு வெற்றிக்கொள்ளத்தக்க அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதை எண்ணி எண்ணி நான் மனநிறைவு கொண்டு, அந்த நிறைவோடு இந்தக் கல்லூரியை இந்த ஏழாண்டுக் காலமாக நடத்திக் கொண்டிருக்கின்ற தம்பி வேலுவையும் அவருக்குத் துணையாக இருந்து இங்கே பணியாற்றுகின்ற ஆசிரியப் பெருமக்கள், மாணவச் செல்வங்களாகிய உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

கல்லூரிகளிலே மாணவர்கள் அமைதியாக இருந்து கட்டுப்பாட்டோடு இருந்து, தங்களது குறிக்கோளை வெற்றிகரமாக எய்துவது என்பது மிக மிக பொறுப்பான காரியமாகும். அந்தப் பொறுப்பான காரியத்தை இந்தப் பொறியியல் கல்லூரியில் உள்ள நீங்கள் எல்லாம் ஆற்றி வருகிறீர்கள் என்பது எனக்கு மெத்த மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு செய்தியாகும்.

91-ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழகத்தில் இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 38. அவற்றில் அரசுக் கல்லூரிகள் 5. அரசு உதவிபெறும் தனியார் பொறியியல் கல்லூரிகள் 3. சுயநிதிக் கல்லூரிகள் 30 என்று இருந்தது. கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் 33. ஐந்தாண்டுக் காலத்தில் 33 கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த 27 மாத காலங்களில் இந்த அரசு அனுமதித்து வழங்கியுள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 87 என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுயநிதிக் கல்லூரிகள் இன்றைக்கு விரிவாகவும் அதிகமாகவும் எண்ணற்ற அளவிலும் தமிழகத்தில் அனுமதிப்பதற்குக் காரணம், நாங்கள் இந்தக் கல்லூரிகளையெல்லாம் ‘சும்மாதான்’ கொடுக்கிறோம். சும்மா என்பதற்குப் பொருள் என்ன என்பது வேலுவுக்குத் தெரியும். (பலத்த கைதட்டல்)

பல சுயநிதிக்கல்லூரிகளுக்கும் தெரியும். ஆனால் நாங்கள் தந்த 87 சுயநிதிக் கல்லூரிகளும் சும்மா கொடுத்தவைதாம். இப்படி சும்மா கொடுத்ததற்குக் காரணம், சுயநிதிக் கல்லூரிகளிலே மாணவர்களிடத்திலே அதிகமாக பணம் கேட்கிறார்கள். ஆனால் அதிகமான கல்லூரிகள் வந்து விட்டால், கிராக்கி குறையும். எந்த அளவிற்குச் சுயநிதிக் கல்லூரிகள் மலிவாக-ஏராளமாக

தமிழகத்தில் மலிந்து தோன்றுகிறதோ அதன் காரணமாக ஏழை-எளிய மாணவர்கள் கூட அந்தத் தொழில் கல்வியை எளிதாகப் பெற முடியும் என்பதற்காகத்தான், 87 பொறியியல் கல்லூரிகளுக்கு இந்த 27 மாதங்களில் நாங்கள் இந்த ஆட்சியில் அனுமதி வழங்கியிருக்கிறோம். அதைப்போலவே பாலி டெக்னிக்கை எடுத்துக் கொண்டாலும்கூட தமிழகத்திலே 91க்கு முன்பு இயங்கி வந்த பாலிடெக்னிக்குகளின் எண்ணிக்கை 128. அந்த 128-இல் அரசு பாலிடெக்னிக்குகள் 21.

அரசு உதவிபெற்ற பாலிடெக்னிக்குகள் 35. சுயநிதி பாலிடெக்னிக்குகள் 72.

முந்தைய ஐந்தாண்டுக்கால ஆட்சியில் சுயநிதி பாலிடெக்னிக்குகளுக்கு அனுமதி கொடுத்து பதினான்கு. 96-இல் நாங்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில் இந்த 27 மாதத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக்குகளின் எண்ணிக்கை 97 என்பதையும், நான் மகிழ்வோடு உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். சுயநிதி அடிப்படையில் கலை அறிவியல் கல்லூரிகள் அதிக அளவில் தொடங்க அனுமதிகள் வழங்கி சாதனைகள் படைத்துள்ளது இந்த அரசுதான்.

1991 முதல் 95 முடிய ஐந்தாண்டுக் காலத்தில் அனுமதிக்கப்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 67. ஆனால் இந்த 27 மாதங்களில் மாத்திரம் அந்த எண்ணிக்கை 74.

உயர் கல்விக்குத் தனி முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காகவே ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வித்துறையை பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை என இரண்டாகப் பிரித்து உயர் கல்விக்கு ஒரு புதிய துறையை 1997-98-ஆம் ஆண்டு இந்த அரசு உருவாக்கியது. 1996 முதல் இதுவரை 87 பொறியியல் கல்லூரிகளை அனுமதித்ததாக நான் குறிப்பிட்டேன்.

இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு மாத்திரம் இடம் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரம் பேர். இந்த 17 ஆயிரம் பேர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடங்களை விரும்பிய கல்லூரிகளில் வழங்கி சாதனை படைத்திருக்கிறது இந்த அரசு என்பதை நான் உங்களுக்கு அறிவிப்பதில் மிகுந்த பெருமைப்படுகின்றேன்.

பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் அனைத்திந்தியாவிற்கும் வழிகாட்டும் வகையில் ஒரே விண்ணப்பத்தைப் பயன்படுத்தி, மாணவ, மாணவிகள் தாம் விரும்பும் பாடப் பிரிவில் தமிழகத்தில் உள்ள எந்தக் கல்லூரியிலும் சேர வழி வகுக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் கணினி இயந்திரத் தகவல் பலகை ஒன்றை அமைத்து அதன்மூலம் ஒற்றைச் சாளர முறைத் திட்டத்தை 97-98-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது இந்த அரசு. அதுமாத்திரமல்ல; பட்டதாரி இல்லாத குடும்ப மாணவர்களுக்கு இந்த அரசு எவ்வளவு பரிவு காட்டுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மருத்துவக் கல்வி - பல் மருத்துவக் கல்வி - பொறியியல் கல்வி - கால்நடை மருத்துவக் கல்வி, வேளாண்மைக் கல்வி - வேளாண்மை பொறியியல் கல்வி, ஆகியவற்றில் ஒவ்வொரு வகை தொழில் கல்விக்கும் தேர்வு செய்யப்படும் மாணவ - மாணவிகள் பட்டியலில், பட்டதாரிகள் யாருமே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த பத்து முதல் நிலை மாணவ - மாணவிகளுக்கு உயர் கல்விக்குரிய செலவை 96-ஆம் ஆண்டு முதல் இந்த அரசு ஏற்றுக்கொள்கிறது என்பதையும் இந்தியாவிலேயே எங்குமில்லாத ஒரு புதுமையாக நீங்கள் காணமுடிகிறது.

இங்கே பேசிய நண்பர்கள் குறிப்பிட்டதைப் போல பொறியியல் கல்லூரிகளில் 97-98-ஆம் ஆண்டு முதல் கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு 15 சதவிகித இடங்களை ஒதுக்கீடு செய்து கிராமப்புறங்களிலும் தொழில் கல்வி வாய்ப்பினைப் பெற்று முன்னேற்றம் காணத்தக்க வகையிலே ஓர் அமைதிப் புரட்சியை உருவாக்கியிருப்பதும் இந்த அரசுதான் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இராணுவ சேவையில் ஈடுபட்டு இன்னுயிர் நீத்த வீரர்களை மதிக்கும் வகையில் அவர்களுடைய குழந்தைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அவர்களுக்குப் பொறியியல் கல்லூரியில் இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த மூன்று இடங்களை இப்போது பத்து இடங்களாக உயர்த்தி இருப்பதும் இந்த அரசுதான் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபரங்களை எல்லாம் சொல்வதற்குக் காரணம் பொறியியல் துறையிலே - வேறு பல தொழில் கல்வியினைப் பெறுகின்ற துறைகளிலே இந்த அரசு எந்த அளவிற்குச் சாதாரண சாமான்ய ஏழை - எளிய கிராமப்புற மாணவர்களும் பயன்பெறக் கூடிய வகையிலே பல புதுமைகளைச் செய்திருக்கிறது, திட்டங்களைத் தீட்டியிருக்கிறது என்பதற்காகத்தான் சொல்கிறேன்.

முதல் பதிப்பு 2000