திரு.வி.க. - கல்கி நூல்களுக்குப் பரிவுத்தொகை வழங்கும் விழா
பகுதி 2 · 2 / 2
தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசிலே இருந்து வெளியேறினார். 1925-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திலே நடைபெற்ற மாநாட்டிலேயிருந்துதான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேறினார். அந்த மாநாடு தமிழ்த் தென்றல் திரு.வி.க. தலைமையில் நடைபெற்ற மாநாடு. அந்த மாநாட்டிலே பெரியார் கொண்டுவந்த தீர்மானம்தான் வகுப்புவாரி உரிமையை வலியுறுத்துகின்ற தீர்மானம். அதை அந்த மாநாடு ஏற்றுக் கொள்ளவில்லை. மாநாட்டுத் தலைவர் திரு.வி.க.
அவர்களும் ஏற்றுக் கொள்ள தயங்கிய காரணத்தால் அப்போதுதான் தந்தை பெரியார் அவர்கள் காஞ்சிபுரம் மாநாட்டிலிருந்து வெளியேறினார். காங்கிரசில் இருந்து வெளியேறினார். அது ஒரு காலம்.
ஆனால், திராவிட இயக்கத்தினுடைய வெற்றிக்குச் சான்று வேண்டுமானால் அந்த மாநாட்டிற்குத் தலைமையேற்று பெரியாருடைய வகுப்புவாரி உரிமையை ஏற்றுக் கொள்ளாத அதே தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் பெரியாருடைய வகுப்புவாரி கொள்கையை ஏற்று அது தேசீயப் பாட்டோடு சேர்க்கப்பட வேண்டிய ஒன்று என்ற அளவிற்கு வந்தார் என்றால் அதுதான் பெரியாரின் வெற்றி. (கைத்தட்டல்) திராவிட இயக்கத்தினுடைய வெற்றி என்பதை நான் எடுத்துக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
அதுமாத்திரமல்ல; இராஜாஜி, திரு.வி.க. இவர்கள் எல்லாம் அந்தக் காலத்தில் பெரியாரும், அறிஞர்
அண்ணாவும் எடுத்துச் சொன்ன ‘திராவிட நாடு’ என்ற சொற்றொடரையே ஏற்றுக் கொள்ளாதவர்கள்.
இராஜேந்திரன் அவர்களுக்கு நினைவு இருக்கும் என்று கருதுகிறேன். அதே ராஜாஜிதான் கல்கியிலே எழுதினார். ‘திராவிடநாடு’ கிடைத்தால்கூட நான் அதற்காக சந்தோஷப்படுவேன். திராவிட நாட்டிற்காக நான் சண்டைபோடுவேன் என்று எழுதுகிற நிலை மூதறிஞர் ராஜாஜிக்கு ஏற்பட்டது. திராவிட நாடு என்ற சொற்றொடரை ஏற்றுக் கொள்ளாத திரு.வி.க. அவர்கள் கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய போது ஒலித்த முழக்கம் இன்னமும் என்னுடைய காதுகளிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
திராவிட-நாடு, திராவிட நாடு, திராவிட நாடு என்று மூன்று முறை சொன்னார். எதையும் திரு.வி.க. அவர்கள் சொற்பொழிவில் மூன்று முறை சொல்வார். அப்படியே அன்றைக்கும் சொல்லி அதைப் பெற்றே தீருவோம் என்று சொன்னார்.
திரு.வி.க. இன்றைக்கு நம்மிடத்திலே இல்லை; திராவிட நாடு கொள்கையும் இன்றைக்கு நம்மிடத்திலே இல்லை. அதை நாட்டின் நலன் கருதி இந்தியாவின் பாதுகாப்புக் கருதி, இறையாண்மை கருதி, இந்தியாவின் ஒருமைப்பாடு கருதி பேரறிஞர் அண்ணா அவர்கள் கழகத்தின் பொதுக் குழுவைக் கூட்டி தீர்மானமே நிறைவேற்றி அதைக் கைவிட்டுவிட்ட நிகழ்ச்சி எல்லாம் உங்களுக்குத் தெரியும்.
ஆனாலும்கூட ஒரு காலத்திலே திராவிட இயக்கத்தின் சார்பாக சொல்லப்பட்ட கொள்கைகளுக்கு மாறான கருத்துக்களைத் தெரிவித்தவர்கள்கூட பிறகு அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு நாட்டின் நிலை உருவானது. அதற்காகத்தான் அதை நான் இங்கே குறிப்பிட விரும்பினேன்.
திரு.வி.க. அவர்கள் தமிழ்த் தென்றல் என்று போற்றப்படுகிறார். இங்கே உரையாற்றியவர்கள் எடுத்துக் காட்டியதைப் போல அவர் புயலாகவும் விளங்கினார். தொழிலாளர்களுடைய தலைவராக விளங்கினார். பக்கிங்ஹாம் கர்நாடிக் மில்லிலே பணியாற்றிக் கொண்டிருந்த பதிமூன்றாயிரம் தொழிலாளர்களுடைய யூனியன் திரு.வி.க. தலைமையிலேதான் அன்றைக்கு இயங்கியது. இந்தியாவிலேயே முதன் முதலாகத் தொழிற்சங்கம் உருவானது சென்னையிலேதான். அதற்கு தலைமை ஏற்றிருந்தவர் திரு.வி.
கலியாண சுந்தரனார். அவர் தலைமை ஏற்று அந்தத் தொழிற்சங்கத்தை நடத்தியபோது அன்றைக்குச் சென்னை மாகாணத்தினுடைய கவர்னராக இருந்தவர் வெலிங்டன் பிரபு, அப்போது பக்கிங்ஹாம் கர்நாடிக் மில்லில் பெரும் போராட்டம் நடைபெறுகிறது. தொழிலாளர்கள் போராட்டம், அந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக பல்வேறு அடக்குமுறைகளை அன்றைக்கு இருந்த வெலிங்டன் ஏவி விட்டார். அதற்கெல்லாம் தலை தாழாமல் தோள் உயர்த்தி நின்று தொகை தொகையாகத் தொழிலாளர்களை அணி வகுக்கச் செய்து போர்க் களத்திலே நின்றார் திரு.வி.
கலியாணசுந்தரனார்.
அடங்காத ஆத்திரம் கொண்ட அன்றைய ஆங்கிலேய பிரபு வெலிங்டன் திரு.வி.க.வை நாடு கடத்த ஆணை பிறப்பித்தார். அப்பொழுது நீதிக் கட்சியினுடைய ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பனகல் அரசர் அன்றைய சென்னை மாகாணத்தினுடைய முதலமைச்சர். அதாவது அப்போது பிரிமியர் - பிரதமர் என்று பெயர். திரு.வி.க. நாடு கடத்தப்பட உத்தரவிடப்பட்டது என்ற செய்தி கேள்விப்பட்டவுடன், திராவிட இயக்கத்தினுடைய முன்னோடியான தியாகராயர், நடேசனார், இவர்கள் எல்லாம் சேர்ந்து பனகல் அரசரை
சந்தித்து நீங்கள் உடனடியாக கவர்னரை போய் பார்த்து திரு.வி.க.வை நாடு கடத்துவதைத் திரும்பப் பெறச் செய்யுங்கள். அதற்கு வெலிங்டன் பிரபு செவிசாய்க்க மறுத்தால் அமைச்சரவையிலிருந்து அனைவரும் வெளியே வந்துவிடுங்கள். ஆட்சிப் பொறுப்பு நமக்கு வேண்டாம் என்று தியாகராயர் சொல்லி அனுப்ப அதனைக்கேட்டு அன்றையதினம் உடனடியாக பனகல் அரசரும் அவருடைய அமைச்சரவையில் இருந்த அமைச்சர் பெருமக்களும் வெலிங்டனைச் சந்தித்து திரு.வி.க.வை நாடுகடத்தக் கூடாது என்று கண்டிப்பாக சொல்ல, திரு.வி.க.
நாடு கடத்தப்படக் கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? நாடு கடத்தியே தீருவேன் என்று வெலிங்டன் வேகமாகப் பேச - அப்படியானால் இதோ எங்களுடைய பதவியின் இராஜினாமா கடிதங்கள் என்று இராஜினாமா கடிதங்களைக் தூக்கி எறிந்த காரணத்தால் வெலிங்டன் அதற்கு அடிபணிந்து வேறு வழியில்லாமல் அன்றைக்கு நாடுகடத்தப்பட இருந்த அந்த உத்தரவைத் திரும்பப்பெற்றார் என்பது தமிழ்நாட்டினுடைய சரித்திரம். (கைத்தட்டல்)
நீதிக்கட்சி என்றால், ஏதோ வெள்ளைக்காரனுக்கு வால்பிடித்த கட்சி என்றெல்லாம் சொல்லப்படுகின்ற அந்த விமர்சனத்தை அன்றைக்கே இந்த நிகழ்ச்சியின் மூலமாக முறியடித்துக் காட்டிய கட்சிதான் நீதிக்கட்சி. அந்தக் கட்சியினுடைய பேருதான் திராவிட இயக்கம். அந்தத் திராவிட இயக்கம் இன்றைக்குத் தேசிய தலைவர்களை, சுதந்திர வீரர்களை மறக்கத் தவறியதே இல்லை என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை நான் கூற முடியும்.
இப்பொழுது நடைபெறுவது இந்தியாவினுடைய சுதந்திரப் பொன்விழா. சுதந்திரப் பொன்விழா ஆண்டில் நாம் இருக்கின்றோம்.
சுதந்திரப் பொன்விழா ஆண்டில்தான் உலகமே இன்றைக்கு விமர்சிக்கின்ற அளவிற்கு அணுகுண்டுச் சோதனை இந்தியாவிலே நடத்தப்பட்டிருக்கின்றது.
நான் அதைப்பற்றிய ஆராய்ச்சிக்கு செல்ல விரும்பவில்லை. அணுகுண்டு இன்றைக்கு வெடித்திருக்கிற தென்றால்; அதைக் தயாரித்த இந்திய நாட்டு விஞ்ஞானிகள், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் அதிலே இடம் பெற்றிருக்கிறார்கள் என்கிற போது (பலத்த கைத்தட்டல்) நாமெல்லாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
இதனுடைய எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நாலாபுறமிருந்தும் எதிர்ப்புக்கணைகள் பல்வேறு நாடுகளிலே இருந்து இன்றைக்கு வந்து கொண்டிருக்கின்றன. பாய்ந்து கொண்டிருக்கின்றன.
இறுதிக் கட்டத்திலே அவைகளை எல்லாம் தாங்கித்தான் தீர வேண்டுமென்றால் அப்போது அணுகுண்டு சோதனை செய்தது சரியா? இல்லையா? என்ற விமர்சனம் நமக்குத் தேவை இருக்காது.
அப்போது இந்தியாவா? மற்ற வெளி நாடுகளா? என்ற அந்தக் கேள்விதான் நமது மனதிலே நிற்கும்.
செய்தது சரியா? அல்லவா? என்பது இப்போது பேசக்கூடியதாக இருக்கலாம். நாளைக்கு இந்தியாவிற்கு மற்ற நாடுகளால் ஓர் ஆபத்து வந்தால் - இந்தியா எல்லா அரசியல் மாச்சர்யங்களையும் மறந்து ஒன்றாக நிற்கும், நிற்போம் என்பதை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். (பலத்த கைத்தட்டல்)
ஏனென்றால், இந்த விழா திரு.வி.க. பேராசிரியர் கல்கி ஆகிய இந்த நாட்டின் பற்றாளர்கள் - தேச
பக்தர்கள் - தமிழ் பக்தர்கள், இன்றைய சமுதாயத்திற்காகப் பணியாற்றியவர்கள். உலக ஒற்றுமைக்காக பாடுபட்டவர்கள், அதற்காக எழுதியவர்கள், பேசியவர்கள் தொண்டாற்றியவர்கள் அவர்களுடைய விழா நிகழ்ச்சி என்கிற காரணத்தால் - இதை நான் இந்த நேரத்திலே சொல்லுவது சாலப் பொருத்தமானது என்று கருதுகிறேன்.
திரு.வி.க.வினுடைய பேரும் புகழும் - பேராசிரியர் கல்கி அவர்களுடைய பேரும் புகழும் இன்றைக்கு நாம் நடத்துகின்ற இந்த நிகழ்ச்சியின் மூலமாக மாத்திரம் நிலைபெறக் கூடியதல்ல. இவைகளையெல்லாம் கடந்து நிற்கின்ற பெயர்கள், அந்தப் பெயர்கள் - நம்மையெல்லாம் இன்றைக்கு ஆளாக்குகின்ற அளவிற்கு உயர்ந்து நிற்கின்ற பெயர்கள் அந்தப் பெயர்கள். அந்தப் பெயர்களுக்குரிய பெருமக்கள் இருவரையும் மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம்!
வணங்குவோம்!! அவர்கள் வழி நடப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்.
15-5-98 அன்று திரு.வி.க. - கல்கி நூல்களுக்குப் பரிவுத் தொகை வழங்கும் விழாவில் ஆற்றிய உரை
