உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

திரு.வி.க. - கல்கி நூல்களுக்குப் பரிவுத்தொகை வழங்கும் விழா

பகுதி 1 · 1 / 2

திரு.வி.க. - கல்கி நூல்களுக்குப் பரிவுத்தொகை வழங்கும் விழா

நம்முடைய அன்பிற்குரிய சாவி அவர்கள் இங்கே உரையாற்றியபோது இங்கு இந்த நிகழ்ச்சிக்கான சிறப்புரையாற்றுகிறாரா? அல்லது ஒரு பட்டிமன்றத்திலே உரையாற்றுகிறாரா? என்ற ஐயப்பாடு எழுகின்ற அளவிற்கு - மாவட்டங்களில் சிறந்தது எது? தஞ்சாவூரா? வட ஆற்காடா? செங்கல்பட்டா? என்ற வாதத்தை இங்கே எடுத்து வைத்தார்.

கடைசியாக வட ஆற்காட்டையும் தஞ்சாவூரையும் மோதவிட்டு - தஞ்சாவூரில் என்ன இருக்கிறது? காவிரி இருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் அந்தக் காவிரிக்குத் தண்ணீர் வருவது நிச்சயமில்லை என்று குறிப்பிட்டார். காவிரிக்காகவாவது தண்ணீர் வருவது நிச்சயமில்லை என்றாலும் - போராடி வழக்குத் தொடர்ந்து அதைப் பெறுகின்ற முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். ஆனால் உங்கள் மாவட்டத்தினுடைய பாலாறு (கைத்தட்டல்) என்னவாயிற்று என்பதை, சாவி அவர்கள் மறந்துவிடக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

கலைவாணர் தஞ்சாவூரிலா பிறந்தார்? கன்னியாகுமரியிலே அல்லவா பிறந்தார்! என்று சாவி குறிப்பிட்டார். கன்னியாகுமரியில் பிறந்திருந்தாலும்

அந்தக் கலைவாணருக்கு அவர் பெயரால் ‘கலைவாணர் அரங்கம்’ அமைத்து தஞ்சாவூர்க்காரன்தான் என்பதை சாவி அவர்கள் இங்கே எடுத்துக்காட்டியிருக்கிறார் என்று நான் திடமாக நம்புகிறேன்.

மாவட்டங்களுக்கிடையே இத்தகைய போட்டிகள் தேவையானதுதான். அந்தப் போட்டி தமிழை எப்படி வளர்ப்பது, தமிழுக்காக எப்படிப் பணியாற்றுவது, தொண்டு புரிவது என்ற வகையிலே அமைகின்ற போட்டியாக இருக்குமேயானால் நான் அதை வரவேற்கின்றேன். அந்த வகையான போட்டியைத்தான் சாவி அவர்கள் இங்கே எடுத்துக்காட்டியிருக்கிறார் என்று நான் திடமாக நம்புகிறேன்.

இன்று இரண்டு பெரியவர்களுடைய நினைவைப் போற்றி அவர்களுக்கு நாம் செலுத்தவேண்டிய காணிக்கையைச் செலுத்திக்கொண்டிருக்கிறோம். அவர்கள் நாட்டிற்கு - சமுதாயத்திற்கு - மொழிக்கு ஆற்றி உள்ள அரும்பணிக்கு நாம் இங்கே நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் மாத்திரமல்ல; நம்முடைய வருங்கால சமுதாயம் அவர்களை நினைவுகூர்ந்து அவர்கள் வழிநின்று, நாட்டிற்கு மொழிக்கு உழைத்திட வேண்டும் என்ற அந்த நோக்கத்தோடு இந்த விழாவை இங்கே நடத்திக்கொண்டிருக்கிறோம்.

இந்த நூல்களை அரசுடைமை ஆக்கியதன் வாயிலாக இந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பரிவுத்தொகை ரூ.20 இலட்சம் என்பதை மிகுந்த வியப்போடு நம்முடைய சாவி அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். நான் 20 இலட்ச ரூபாயை அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்குவதைப் பெரிதாக கருதவில்லை. ஏனென்றால், அவர்கள் வழங்கி இருக்கின்ற சாதனைகளுக்கு, அவர்கள் புரிந்திருக்கின்ற தொண்டுக்கு, அவர்கள் ஆற்றியிருக்கின்ற தமிழ்ப் பணிக்கு இந்த 20 இலட்சம் மிக மிகச்

சாதாரணமான தொகை என்றுதான் நான் கருதுகின்றேன்.

எனவேதான் இதைப் பரிவுத்தொகை என்று குறிப்பிட்டு வழங்கியிருக்கின்றோம். ஒரு பரிவோடு - அவர்களுக்கு இது போதுமானது என்ற எண்ணத்தோடு அல்ல. கல்கி ராஜேந்திரன் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல, அங்கீகாரம் வழங்குவது போலக்கூட அல்ல; அரசின் சார்பிலே வழங்கப்படுகிற காரணத்தால், ராஜேந்திரன் இங்கே குறிப்பிட்ட ‘அங்கீகாரம்’ என்ற அந்த சொல் ஒருவேளை பொருத்தமாக இருக்கலாம். ஆனால், அவர்களே இங்கே படித்துக் காட்டினார்கள்.

மனோகரா படத்திற்கு நான் எழுதிய வசனம் குறித்து கல்கி அவர்கள் எழுதிய விமர்சனத்தை இங்கே படித்துக் காட்டினார்கள்.

எனவே நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்கி எனக்கு அங்கீகாரம் அளித்திருக்கின்றார் (கைத்தட்டல்) என்பது தான் அதிலே உண்மை. அந்த அங்கீகாரத்தை நண்பர் ராஜேந்திரன் அவர்கள் இங்கே நினைவூட்டி இருக்கின்றார். நான் அந்த அங்கீகாரத்தை எண்ணி எண்ணி பூரிப்புக் கொள்கின்றேன். அந்த விமர்சனத்தை அந்தக் காலத்திலே நானும் படித்திருக்கின்றேன். மனோகரா படத்திற்கு உரையாடல் தீட்டி அந்தப் படம் வெற்றிகரமாக நடைபெற்றபோது இந்த விமர்சனம் கல்கி அவர்களால் தீட்டப்பட்டு வெளிவந்த நேரத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்க முடியாது.

மனோகராவுக்கு மாத்திரமல்ல; திராவிட இயக்கத்தின் எழுத்தாளர்கள் - அதிலும் குறிப்பாக எங்களையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘வேலைக்காரி’ படத்திற்கும் கல்கி அவர்கள் விமர்சனம் எழுதி பெரிதும் பாராட்டி

இருக்கிறார். இன்னும் உங்களுக்கு நினைவூட்ட வேண்டுமேயானால்; தஞ்சையில் நடைபெற்ற அண்ணா அவர்கள் எழுதிய ‘ஓர் இரவு’ நாடகத்திற்கு கல்கி அவர்கள் தலைமைதாங்கி, அங்கே அவர் ஆற்றிய அந்த உரையிலேதான் அறிஞர் அண்ணா அவர்களை “தென்னாட்டுப் பெர்னாட்ஷா”, என்று பேராசிரியர் கல்கி அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அத்தகைய பேராசிரியர் கல்கி அவர்கள் பெருமனதோடு மாத்திரமல்ல; பெருந்தன்மையோடும், யார் நல்ல ஆற்றல்மிக்க எழுத்தாளரோ, பேச்சாளரோ, தமிழ் அறிஞரோ, அவர்கள் எங்கே இருந்தாலும், எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவர்களைப் பாராட்டத் தவறாதவர்; மறவாதவர். அதனால்தான் அவர்கள் மறைந்தபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் 12-12-1954 தேதியிட்ட ‘திராவிட நாடு’ வார இதழில் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

“அமரதாரா போயிற்று” என்பது அதன் தலைப்பு.

தமிழ் நடையில் ஒரு நகைச்சுவையையும், சரித்திர நிகழ்ச்சிகளின் மீது சமையல் கட்டுக்குக் கூட ஒரு ஆவலையும், தூண்டிவிட்ட எழுத்தாளர் அவர். அவரது எழுத்து, செயல் பற்றி, கருத்து வேறுபாடுகள் நிறைய உண்டு. ஆனால், அவரது திறமை, செயல்வன்மை நிச்சயம் பாராட்டுக்குரியதாகும்.

தேசீயக் கூடாரம் முழுவதும் எரிச்சல் கணைகளைப் பூட்டினாலும், சில சமயங்களில் நமது சேவைகளை அவர் புகழ்ந்ததும் உண்டு. எழுத்துத் துறையில் நமது இயக்கம் உண்டாக்கியிருக்கும் மறுமலர்ச்சி, பல தேசீய எழுத்தாளருக்கு எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்கியிருக்கிறது. ஆனால், கல்கி வரவேற்றார், மகிழ்ந்தார். அதே போல, மாற்றாரிடம்

இருக்கும் சில நற்பண்புகளை அவர் பாராட்டத் தயங்கியதில்லை! வாழ்த்தப் பயந்ததில்லை! இதனால்தான் அவருடைய மறைவு இன்று பலருக்கும் வருத்தத்தைக் கொடுக்கிறது. அதிலும் நமக்கு, அவரது மறைவு உண்மையில் வேதனையைத் தருகிறது!” என்று பேரறிஞர் அண்ணா, பேராசிரியர் கல்கி மறைந்த நேரத்திலே திராவிட நாடு இதழிலே எழுதினார். கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்றுப் புதினங்களை மாத்திரமல்ல; வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய புதினங்களை உருவாக்கித் தந்தவர்.

அவருக்குத் தமிழ் மொழியின்மீது மாத்திரமல்ல; தமிழர்கள் மீதும், தமிழ் இனத்தின் மீதும் அளவற்ற பற்று உண்டு. அதிலும் குறிப்பாக சோழர் சாம்ராஜ்யத்திலே பிறந்தவர் என்ற காரணத்தால் சோழ மன்னர்கள் மீது எந்த அளவிற்கு அவருக்கு அன்பு உண்டு என்பதற்கு அடையாளமாகத்தான் தன்னுடைய மகனுக்கு ராஜேந்திரன் என்ற பெயரையே சூட்டியிருக்கிறார் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணி மண்டபம் கண்டவர் பேராசிரியர் கல்கி அவர்கள். அவருடைய சிறப்புகளைப் பற்றி இங்கே நம்முடைய தமிழ்க்குடிமகன் அவர்கள் சுட்டிக்காட்டியபோது சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்டவர் என்பதையும் பலமுறை சிறைச் சாலைக்குச் சென்றவர் என்பதையும் இங்கே எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.

சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்களை இந்த அரசு என்றைக்கும் பாராட்டத் தவறியதில்லை. அந்தச் சுதந்திரப் போராட்ட வீரர்களிலே ஒரு பெருமைக்குரிய வீரராகத் திகழ்ந்தவர்தான் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வைப் பற்றி இங்கே நம்முடைய

விழாத் தலைவர் தமிழ்க்குடிமகன் உரையாற்றும் போது அவர் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு ஆதரவாகச் சொன்ன கருத்துக்களை இங்கே குறிப்பிட்டார். ஆனால் அது உண்மை என்றாலும்கூட, வகுப்புவாரிக் கொள்கையை எதிர்த்தவரும் திரு.வி.க.தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அது சரித்திரம்.

முதல் பதிப்பு 2000