திரைப்பட விருது வழங்கும் விழா
பகுதி 2 · 2 / 2
உங்களோடு சேர்ந்து நானும் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கிறேன்.
சிறந்த இயக்குநராக அகத்தியன் விருது பெற்றிருக்கிறார். நான் கேள்விப்பட்டேன் - அவருடைய இயற்பெயர் கருணாநிதி என்பதாக. (கைத்தட்டல்) அவர் ஒருவேளை இரண்டாவது கருணாநிதி வேண்டாம் என்பதற்காகப் பெயரை மாற்றிக் கொண்டாரோ என்னவோ தெரியாது. அவர் சிறந்த இயக்குநர் என்பதற்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.
சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதினை விக்ரமன் பெற்றிருக்கிறார். அவருடைய உரையாடல்கள் பலவற்றை நான் சுவைத்து மகிழ்ந்தவன் என்ற முறையில் அவருக்கு என்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த நடிகையாக செல்வி சுருதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த நடிகை என்பதற்கான சிறப்புப் பரிசை செல்வி தேவயானி பெற்றிருக்கின்றார். அவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த கதாசிரியர் என்பதற்கான விருதை களஞ்சியம் பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்தும் பாராட்டும் உரியதாகுக.
திரைப்படங்களிலே நல்ல பாடல்கள் எழுதியவர் என்பதற்காக தம்பி பிறைசூடன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். என்னுடைய வாழ்த்துக்கள்.
சிறந்த வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் - அவர் இங்கே விருது வாங்கும்போது இந்த அரங்கத்திலே ஒரு ஆனந்தம் - ஒரு மகிழ்ச்சி - ஒரு குதூகலம். காரணம் எனக்குத் தெரியும். எங்கள் இருவருக்கும் தெரியும். ஆம், ‘இருவர்’க்குத் தெரியும். (பலத்த கைதட்டல்)
சிறந்த நகைச்சுவை நடிகராக வடிவேலு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வடிவேலு நகைச்சுவையாக நடிக்கத் தேவையில்லை. வந்து நின்றாலே போதும் - நகைச்சுவை தானாகவே கிடைக்கும். ஒவ்வொரு அசைவிலும் நகைச்சுவையை வெளிப்படுத்தக் கூடிய நல்ல நடிகர். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைப்பட உலகத்தில் வெற்றி என்பது அதிலே பங்கு பெறுகிற ஒருவரால் மாத்திரம் கிடைத்து விடுவதல்ல. ஒரு இயக்குநராலோ அல்லது ஒரு நடிகராலோ, ஒரு நடிகையாலோ, அல்லது ஒரு வசனகர்த்தாவாலோ அல்லது ஒரு இசை அமைப்பாளராலோ அல்லது ஒரு பின்னணிப் பாடகராலோ யாராலும் தனிப்பட்ட ஒருவரால் ஒரு வெற்றியைப் பெற்றுவிட முடியாது.
உதாரணமாக ஒரு சிலையை ஒரு சிற்பி வடிப்பதற்கு ஒருவரே போதும். அந்தச் சிற்பிக்கு ஓர் உளி; ஒரு கல் இருந்தால் போதும் - ஒரு சிலையை அந்தச் சிற்பி வடிவமைத்துக் கொடுக்க முடியும். அதுபோல ஓர் ஓவியன் கொஞ்சம் சாந்து, வண்ணம், தூரிகை மாத்திரம் இருந்தால் போதும் - ஓர் ஓவியத்தைத் தீட்டித் தர முடியும். ஆனால், திரைப்படம் என்பது பலருடைய முயற்சியினால், பலருடைய உழைப்பினால் வெளிவர வேண்டியது; வெற்றியினை வழங்க வேண்டியது.
அப்படிப்பட்ட அந்தப் பெரும் முயற்சியிலே எல்லோரும் கூடி ஒன்றாக இணைந்து ஒத்துழைப்புத் தந்தால்தான் ஒப்பற்ற வெற்றியைப் பெற முடியும் என்பதை அனுபவ ரீதியாக நாம் பெற்று வருகிறோம்.
அந்த வகையிலே திரைப்படத் துறையிலே இருக்கின்ற உங்களையெல்லாம் இந்த மண்டபத்திலே காணுகின்ற நேரத்தில் எனக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சி,
தம்பி கமல் குறிப்பிட்டதைப் போல - நான் இருந்த வீடு என்று கமல் சொன்னார் - நான் இருக்கின்ற வீடுதான் - ஏனென்றால் அதற்குள் எனக்குக் கலையுலகத்திலிருந்து ஓய்வு கொடுத்து விடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். (கைத்தட்டல்) ஏனென்றால் நாள்தோறும் எழுதிக் கொண்டிருப்பவன் நான். நான் எழுதாத நாளே இல்லை. நான் எழுதுவதே எனக்கு ஏற்படுகின்ற களைப்பைப் போக்கிக் கொள்ளத்தான். அரசியல் துறையிலே எனக்கு ஏற்படுகின்ற கஷ்டங்கள், துன்ப துயரங்கள், களைப்பு, சோர்வு இவற்றையெல்லாம் போக்கிக் கொள்ள காலையிலே உலாவி முடித்த பிறகு நான் கைக்கொள்கிற முதல் முயற்சி எழுதுவதுதான்.
ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். எனவே இருந்த வீடு என்று சொல்லாதீர்கள் - இருக்கின்ற வீடு - இதுவும் ஒன்றுதான் என்பதை நீங்கள் தயவு செய்து மறந்துவிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் துறையிலே இருக்கின்ற பிரச்சினைகளைப் பற்றி என்னிடம் தனியாகவும் கூறியிருக்கிறார்கள். தனியாகச் சொன்னால் ஊருக்குத் தெரியாமல் போய்விடும் என்பதற்காக உங்களையெல்லாம் கூட்டி வைத்தும் சொல்லியிருக்கிறார்கள். இந்தத் திரையுலகப் பிரச்சினையை இங்கே பக்கத்திலே அமர்ந்திருப்பவர்களே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு தீர்த்து விடலாம் (கைத்தட்டல்) தம்பி கலைஞானி கமலும், நம்முடைய புரட்சிக் கலைஞர் தம்பி விஜயகாந்தும் இங்கே நான் பேசிக் கொண்டிருக்கின்ற இதே நேரத்திலேயே இருவரும் - ஒருவர் காதிலே ஒருவர் பேசி - இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டிட முடியும்.
(கைத்தட்டல்) இருந்தாலும் அவர்கள் கருணாநிதி தீர்த்து வைத்தார் என்ற பெருமை தங்களுடைய அண்ணனுக்குக் கிடைக்க வேண்டுமே என்பதற்காக இதைத் தூக்கி என் தலையிலே போட்டிருக்கிறார்களே அல்லாமல் வேறல்ல.
இருந்தாலும் கூட நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வேன். இங்கே பஞ்சு அருணாசலம் குறிப்பிட்டார். இந்தத் தேர்தல் முடிந்தபிறகு இந்தப் பணியை நான் கவனிக்க வேண்டுமென்று சுட்டிக்காட்டினார். நிச்சயமாக தேர்தல் முடிந்த பிறகு பிப்ரவரி மாத இறுதிக் கட்டத்தில் இந்தப் பிரச்சினைக்கு ஓர் இறுதித் தீர்ப்பை - நல்ல தீர்ப்பை நாம் காண்போம் என்ற நம்பிக்கையை இந்த விழாவிலே நான் தெரிவித்து - தொடர்ந்து வழக்கம் போல் கலையுலகத்திற்கு இந்த அரசு பாடுபடும் - சாதனைகளை நிகழ்த்தும் - ஏனென்றால் கலையுலகம் வேறு, அரசு வேறு என்றில்லாமல் நடைபெறுகின்ற அரசு இது.
கலையுலகத்திலிருந்து வருகின்ற வருமானம் - அரசின் சார்பில் நிறைவேற்றப்படுகின்ற பல திட்டங்களுக்கு இன்று பயன்படுகின்றது. கலையுலகத்தின் மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாயாக வருகிறது என்பதை நான் மறந்துவிடவில்லை.
எனவே அந்த நன்றி உணர்வோடு நானும் அங்கும் இருப்பவன், இங்கும் இருப்பவன், என்ற முறையிலே நிச்சயமாக உங்களோடு ஒத்துழைப்பேன், உங்களுடைய பிரச்சினைகளுக்கு நல்ல பரிகாரம் காண்பேன் என்ற உறுதிமொழியை இங்கே தெரிவித்து இங்கே வழங்கப்பட்ட விருதுகளை விட பரிசுகளை விட, இந்த உறுதிமொழி சிறந்தது என்று நீங்கள் கருதுவீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.
30-1-98 அன்று திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஆற்றிய உரை
